31 October 2009

அடித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞனின் சடலம் மீட்பு

கொழும்பு, பம்பலப்பிட்டி கடலில் அடித்துக் கொலை செய்யப்பட்டவர் இரத்மலானைப் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (26) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது சடலம் நேற்று பம்பலப்பிட்டி கடற் பகுதியில் கரையொதுங்கியது. சடலத்தை மீட்டெடுத்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இவர் தாக்கிக் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக பொலிஸ் உத்தியோகத்தரான திமுது சொம்னத் என்பவர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

இறந்தவரின் சகோதரர் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம் அளித்துள்ளார். இறந்த தனது சகோதரர் அங்கொடை மனநோயாளர் மருத்துவ நிலையத்தில் மூன்று தடவைகள் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

உண்மையில் இளைஞன் பொதுமக்களினால் கரையில் வைத்து தாக்கப்படும் போது தவறி கடலுக்குள் விழுந்தானா? அல்லது சம்பவ இடத்துக்கு விரைந்த பம்பலப்பிட்டி பொலிஸார் அவனை கைது செய்ய முற்பட்டவேளை தான் தப்புவதற்காக கடலுக்குள் குதித்தானா? என்பது குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக மெத்திவக்க தெரிவித்தார்.

உயிரிழந்த இளைஞன் புத்தி சுவாதீனமற்றவன் எனத் தகவல்கள் கிடைத்துள்ளமையால் அது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனக் கூறிய பொலிஸ் பேச்சாளர், இளைஞன் பொல்லினால் தாக்குண்டதினால் தான் கொல்லப்பட்டானா என்பது குறித்தும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்

No comments:

Post a Comment