10 August 2018

மரணத்தை கொண்டாடும் மனநோயாளிகள்

07.08.2018 மாலை 6.40 அளவில் கிளிநொச்சி நகரத்தில் பட்டாசுகள் வெடித்தன. அந்த நேரம் எதற்காக இப்படித் திடீரென வெடி கொழுத்தப்படுகிறது என்று பக்கத்தில் நின்ற கடைக்காரரைக் கேட்டேன். அவருக்கும் விவரம் தெரியவில்லை. சற்று நேரத்தில் வெடிச்சத்தம் கேட்ட திசையிலிருந்து வந்தவர்களிடம் விசாரித்தோம். அது கருணாநிதி இறந்த சேதி அறிந்து வெடி கொழுத்துகிறார்கள் என்று சொல்லிக்கொண்டு போனார்கள்.

மனதில் கவலை ஏறியது.

சைக்கிளை எடுத்துக் கொண்டு வெடிச்சத்தம் வந்த திசையை நோக்கிப் போனேன். அங்கே ஒரு கூட்டம் அமர்க்களமாக நின்றது. இரண்டாவது தடவையும் வெடியைக் கொழுத்தினார்கள். இது மேலும் கூட்டம் சேர்ந்ததால் நடந்தது. இங்கே பதிவிட விரும்பாத சில வார்த்தைகளைச் சொல்லி கருணாநிதியைத் திட்டினார்கள். திட்டித்திட்டிப் பாடினார்கள்.

கிட்ட நெருங்கி, யாராக இருக்கும் என்று பார்த்தேன். பலரையும் தெரியவில்லை. ஆனால் பெரும்பாலும் இளைஞர்கள். ஒரு இருபது பேர் வரையில் இருந்தார்கள். என்ன நடக்கிறது என்று அறிவதற்காக கொஞ்ச நேரம் அந்த இடத்திலேயே நின்றேன். அப்பொழுது இரண்டு தெரிந்த முகங்கள் அங்கே நின்றன. அதில் ஒன்று, ஒரு காலம் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்று இவற்றோடு அல்லும் பகலும் அரசியலாகவே திரிந்த கந்தையரின் மகன் நகுலன்.

நகுலனைக் கண்டதும் எனக்குச் சிரிப்பும் கவலையும் ஒன்றாகவே வந்தன.

அந்த நாட்களில் கந்தையர் தமிழரசுக்கட்சியின் துண்களில் ஒருவர். தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர் என்றாலும் அவருடைய வீட்டில் அண்ணாத்துரை, கருணாநிதி இருவரின் படங்களும் முன் விறாந்தையில் இருந்தன. தமிழரசுக் கட்சியைப் பற்றிக் கதைப்பதை விட தி.மு.கவைப் பற்றியும் அதனுடைய தமிழைப்பற்றியுமே கதைப்பார் கந்தையர். அண்ணாத்துரை மீதும் கருணாநிதி மேலும் பெரிய மரியாதையும் பற்றுமிருந்தன கந்தையருக்கு. இருவரைப்பற்றியும் இருவருடைய பேச்சுகளைப் பற்றியும் எனக்கே பல தடவை சிலிக்கக் கதைகள் சொல்லியிருக்கிறார்.

அப்படியான கந்தையரின் வழி வந்த அவருடைய மகன் இப்பொழுது  கருணாநிதியின் மரணத்தை வெடி கொழுத்திக் கொண்டாடுகிறார். நகுலன் மட்டுமல்ல ஒரு தலைமுறையைச் சேர்ந்தவர்களில் குறிப்பிட்டளவானவர்கள் கருணாநிதியின் மரணத்தைக் கொண்டாடுகின்றனர். கிளிநொச்சிக்கு அப்பால் யாழ்ப்பாணம், வவுனியா போன்ற இடங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் இதைப் பார்க்கிறோம்.

இந்த நிலைக்குக் காரணமென்ன? எங்கே நடந்தது தவறு? யார் தவறிழைத்தார்கள்? அதாவது யார் குற்றவாளிகள்?

கருணாநிதியின் அரசியற் பங்களிப்புப் பெரியது. ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு மேலாக அவர் தமிழக அரசியலிலும் இந்திய அரசியலிலும் செல்வாக்குச் செலுத்தியிருக்கிறார். இதில் சாதனைகளும் உண்டு. பலவீனங்களும் உண்டு. அவை பற்றிய  விமர்சனங்களும் மதிப்பீடுகளும் கருணாநிதி உயிரோடு இருந்த காலத்திலேயே – பதவி, அதிகாரத்தில் இருந்த போதெல்லாம் முன்வைக்கப்பட்டுள்ளன. மிச்சம் மீதியும் இப்பொழுது அவருடைய மரணத்தைத் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன. எதிர்காலத்திலும் அவை தொடரும்.

வேறு எவரையும் விட மிக நீண்ட காலம் தமிழக – இந்திய அரசியலில் செல்வாக்குச் செலுத்தியவர் என்ற வகையில் இந்த விமர்சனங்களின் நீட்சி நிச்சயமாக இருந்தே தீரும். வரலாறு எல்லாவற்றையும் தன்னுடைய தராசில் வைத்து மதிப்பீட்டு உரிய அடையாளத்தைத் தரும்.

இதற்கப்பால் கருணாநிதியின் இன்னொரு அரசியல் பங்களிப்பும் உண்டு. அது ஈழவிடுதலை அரசியலில். இதிலும் கருணாநிதியின் வரலாறு சிறப்படையக்கூடிய பங்களிப்புகளும் உண்டு. அதேவேளை சிறுமைக்குரிய விசயங்களும் உள்ளன. இதையும் சேர்த்தே வரலாறு கருணாநிதியை மதிப்பிடும்.

ஆகவே அதற்கிடையில் யாரும் அவசரப்பட்டு, தங்களின் சொந்த விருப்பு வெறுப்புகளை முதன்மைப்படுத்தி, தி.மு.கவையோ கருணாநிதியையோ முழுதாகக் குற்றம் சாட்ட முடியாது. அதுவும் அவருடைய மரணச் சேதியறிந்து  வெடிகொழுத்திக் கொண்டாடும் அளவுக்கு.

அப்படிச் செய்தால் அது அரசியல் மூடத்தனமன்றி வேறில்லை. ஒன்று, கடந்த கால வரலாற்றுச் சம்பவங்களை – அதில் தி.மு.கவும் கருணாநிதியும் செய்த பங்களிப்புகளை அறிந்திராத மடத்தனம். அறியாமை.

இரண்டாவது, எதிர்காலத்தில் ஈழத்தமிழரின் அரசியலுக்கு தி.மு.கவும் புதிய தலைமையும் செய்ய வேண்டிய பங்களிப்புகளுக்கு இடைஞ்சலை ஏற்படுத்துவது.

இந்தத் தவறு, இத்தகைய மூடத்தனம் ஈழத்தமிழரின் அரசியலில் பல வகையிலும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இதுவே ஈழத்தமிழரின் தொடர்ச்சியான அரசியல் பின்னடைவுகளுக்கான காரணங்களுமாகும்.

கருணாநிதியை நோக்கி குற்றம் சாட்ட நீளும் விரலுக்கு நிகரானது ஈழத்தமிழர்களின் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்பட்ட தவறுகளை நோக்கி நீள வேண்டிய விரல்கள்.

இதற்கு யார் பொறுப்பேற்பது?

ஆனால், 1958 இல் இலங்கையில் தனிச்சிங்களச் சட்டத்தை பண்டாரநாயக்கா அறிவித்ததைக் கண்டித்து தி.மு.கவின் சிதம்பரம் மாநாட்டில் கண்டனத்தீர்மானம் நிறைவேற்றியவர் கருணாநிதி. அப்பொழுது கருணாநிதிக்கு வயது 34.

பிறகு 1961 இல் இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் விடுதலையை வலியுறுத்திப் பேரணி ஒன்றை நடத்தியது. இவ்வளக்கும் அப்பொழுது கருணாநிதியோ தி.மு.கவோ ஆட்சி அதிகாரத்தைக் கொண்ட பெருந்தரப்பல்ல.

தொடர்ந்து 1983 இல் இலங்கையில் நடத்தப்பட்ட இன வன்முறையைக் கண்டித்து கருணாநிதியும் அன்பழகனும் தங்களுடைய பதவிகளை ராஜினமாச் செய்திருந்தனர்.

தொடர்ந்து ஈழ ஆதரவு நிலைப்பாட்டுடன் இயக்கங்களுக்கான ஆதரவை வழங்கினார் கருணாநிதி. இதனை அன்று பல வழிகளிலும் தொடர்பாக இருந்தவர்களின் பதிவுகள் கருணாநிதியின் மரணத்தையொட்டி சாட்சியமாகப் பகிரங்கத்தளத்தில் பகிரங்கப்பட்டுள்ளன.

இதேவேளை துரதிருஷ்டவசமாக ஆயுதப்போராட்டத்துக்கு முழுமையான ஆதரவை வழங்கி வந்த தமிழகச் சூழல் அப்பொழுதிருந்த தி.மு.க – அ.தி.மு.க (கருணாநிதி – எம்.ஜி. ஆர் ) என்ற போட்டி அரசியலின் விளைவால் கெடுத்துக் கொண்டது.

எம்.ஜி. ஆர் விடுதலைப் புலிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டார். கருணாநிதி ரெலோவை அரவணைத்தார். ரெலோவுக்கு ஆதரவாக ஈழப்போராட்ட ஆதவு என்ற பேரில் டெஸோ என்ற மாநாட்டை மதுரையில் நடத்தினார் கருணாநிதி. இந்த மாநாட்டில் வாஜ்பேய், தேவகௌடா, என். டி.ராமராவ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இதனால் அன்று இலங்கை இனப்பிரச்சினையும் ஈழப்போராட்டத்தின் அவசியமும் இந்திய அளவில் உணர்ந்து கொள்வதற்கு வாய்ப்புண்டானது.

இதற்கிடையில் 1981 இல் பாண்டிபஜாரில் உமா மகேஸ்வரனும் பிரபாகரனும் சுடுபட்ட சம்பவம் தொடக்கம், சூளைமேட்டில் டக்ளஸ் தேவானந்தா சம்மந்தப்பட்டதாகக் குற்றம் சாட்டப்படும் சூட்டுச் சம்பவம் தொடர்ந்து பத்மநாபா அணியின் படுகொலை, ராஜீவ் காந்தியின் படுகொலை என ஏராளம் நெருக்கடிகள் ஈழத்தமிழ்த்தரப்பிலிருந்து உண்டாக்கப்பட்டது.

தமிழகத்தை முழுதான அளவில் இந்தச் சம்பவங்கள் நெருக்கடிக்குள்ளாக்கின. இதனால் ஒரு கட்டத்தில் தி.மு.கவும் கருணாநிதியும் பதவியை இழந்தன. பின்னாளில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகக் கருணாநிதி நடந்து கொள்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டு, ஆட்சிக் கவிழ்ப்பு நடந்தது.

இதற்குப் பிறகு கருணாநிதியின் ஈழ விடுதலைப் போராட்ட ஆதரவு – அணுகுமுறை போன்றவற்றில் தளம்பல்களும் தவறுகளும் நிகழத்தொடங்கின.

இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று தமிழக மற்றும் இந்தியச் சூழலில் அவர் செய்யத் தொடங்கியிருந்த அரசியல் சமரசங்களும் புதிய பொருத்தமற்ற கூட்டுகளுமாகும். இதனால் இந்தச் சக்திகளை மீறி, அவரால் தனித்துச் சுயமாக எந்த முடிவுகளையும் எடுக்க முடியவில்லை. மற்றவர்களின் முகத்தைப் பார்த்து எதையும் தீர்மானிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்.

இரண்டாவது, ஈழவிடுதலை ஆதரவினால் அவருக்குண்டான நெருக்கடிகளும் விடுதலை இயக்கங்களுக்குள் ஏற்பட்ட மோதல்கள், அரசியல் முரண்பாடுகள், இயக்கங்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் போன்றவற்றினால் எழுந்த வெறுப்பும் நம்பிக்கையீனமும் அவரை ஈழ அரசியலில் இருந்து இரண்டாம் பட்சமாக்கியது.

இதனால் பின்னாளில் கருணாநிதியின் ஈழ ஆதரவு நிலைப்பாடும் ஈழ விடுதலைக்கான பங்களிப்பும் ஏதோ என்ற அளவில் சம்பிரதாயமானதாக மாறியது. விசுவாசத்தன்மை குறைந்தது.

ஆனாலும் ஒருபோதுமே அவர் ஈழப்போராட்டத்துக்கு எதிர்த்திசையில் நின்றதாக இல்லை என்பது வரலாற்று ஆதாரம். அந்தளவுக்கு தெளிவான அரசியல் புரிதலும் உச்ச சகிப்புத்தன்மையும் கொண்டிருந்தவர்.

இருந்தாலும் மத்தியில் வைத்திருக்கும் கூட்டுக்கு ஏற்பவும் மாநிலத்தில் அவருடைய நிலைக்கேற்பவும் ஈழப்போராட்டத்தைப் பயன்படுத்த விளைந்தது உண்மை. பின்னாளில் இதைத் தன்னுடைய ஒட்டுமொத்த அரசியலுக்குமாகப் பயன்படுத்தினார்.

இதனால் 1995 இல் நடத்திய ஈழ ஆதரவுப் பேரணி, 2009 இல் அவர் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் போன்றவற்றையெல்லாம் பலரும் கேள்வியோடும் கேலியோடும் நோக்கத் தொடங்கினர். இன்று கருணாநிதியைப் பற்றி ஈழத்தமிழ் இளைய தலைமுறையினரிடத்தில் எழுந்துள்ள வெறுப்புணர்வும் தவறான புரிதலும் கருணாநிதி உண்டாக்கிய பின்கால அரசியலின் பாற்பட்டது.

ஆனால், இதில் கருணாநிதி ஒரு போதுமே முழுக்குற்றவாளி கிடையாது. அவரை கேள்வி கேட்கும் அளவுக்கும் எதிரி – துரோகி என்று கூறும் அளவுக்கும் அவர் எதிரியும் அல்ல. துரோகியும் அல்ல. ஆனால், சிலவற்றை அவர் செய்திருக்க முடியும். அதுவொன்றும் தமிழீழத்தைப் பெறுவதாக இல்லை.

அதற்கு எளிய உதாரணம் வடக்குக் கிழக்கு மாகாணசபையை அவர் 1990 இல் கலைக்கச் சொன்னது. அந்தக் கட்டளை புலிகளினால் முன்மொழியப்பட்டது. அதை கருணாநிதி ஈ.பி.ஆர்.எல்.எவ்விடம் சொல்லி அதை நிறைவேற்ற முயற்சித்தார். அப்பொழுது வடக்குக் கிழக்கு மாகாணசபையின் பொறுப்பிலிருந்தது ஈ.பி.ஆர்.எல்.எவ். இது ஈ.பி.ஆர்.எல. எவ்வுக்கும் இடையில் சிறுமுரணையே உண்டாக்கியது. ஆனாலும் கருணாநிதியின் இயல்புப் படி அவர் தான் நினைத்ததைச் செய்து முடித்தார்.

ஆனால் ஒட்டு மொத்தத்தில் ஈழப்போராட்டமும் ஈழத்தமிழரின் அரசியலும் கொண்டிருக்கும் அத்தனை குழறுபடிகளும் கருணாநிதியையும் ஒரு வகையில் பலவீனப்படுத்தின. இதனால் அவர் ஒரு எல்லைக்குட்படுத்தியே தன்னுடைய பிற்காலத்தைய அரசியலை மேற்கொண்டார். அல்லது அந்த நிலைக்கு ஈழத்தமிழர்களால் – இயக்கங்களால் தள்ளப்பட்டார்.

இந்த நிலையில் எப்படி அவருடைய மரணத்தை நாம் கொண்டாட முடியும்? அதற்காக நாம் வெட்கப்பட வேண்டுமே தவிர, ஒரு போதுமே மகிழ முடியாது.

தி.மு.க என்பது மாபெரும் மக்கள் அமைப்பு. அது ஒரு காலத்தில் செய்த காத்திரமான பங்களிப்பை இத்தகைய அபத்துவமான கொண்டாட்டங்கள் கேலிப்படுத்தும் போது அவ்வளவு மக்கள் திரளையும் நாம் அவமதிக்கிறோம். அவர்களுடைய பங்களிப்பை நிராகரிக்கிறோம். மறந்து விடுகிறோம்.

இது எதிர்கால ஈழத்தமிழர்களின் அரசியலுக்கு ஒரு போதுமே நல்லதல்ல.

இந்தத் தவறுக்கு அடிப்படையாக சில காரணங்களுண்டு. மாதிரிக்கு அவற்றில் ஒன்றிரண்டைப் பார்த்தால் இது இலகுவில் புரியும்.

திராவிட இயக்கப்பாரம்பரியத்திலிருந்து வந்த கருணாநிதி, பெரியார், அண்ணாத்துரை ஆகியோரின் அரசியல் சித்தாந்தங்களையும் செயற்பாட்டுத்திட்டங்களையும் தொடர்ந்து கடைப்பிடித்தவர். தேர்தல் அரசியல் நிர்ப்பந்திக்கும் சமரசங்களை முடிந்தவரை ஒதுக்கி விட்டு திராவிடச் சிந்தனையை செயல்வடிவமாக்க முயன்றவர். கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட – வலுவூட்டப்பட்ட திட்டங்களின் பட்டியலைப் பார்த்தால் இது சுலமாகப் புரியும்.

ஈழத்தமிழர்களின் பெரும்போக்கு அரசியல் ஈழ விடுதலை அரசியலின் குறைபாடுகளை அல்லது அதன் மாற்றுச் சிந்தனையை புரிந்து கொண்டவர்கள் கருணாநிதியின் மீது மதிப்பையே கொண்டுள்ளனர். அவர்களிடத்திலும் விமர்சனங்கள் இருந்தாலும் கருணாநிதியை மறுப்பதோ நிராகரிப்பதோ அவர்களிடம் இல்லை.

ஈழத்தமிழர்களின் பொதுப்போக்கு அரசியல் எப்போதும் சமூக அக்கறை கொண்டதாக இல்லை. சமூக மாற்றத்தைக் குறித்ததாக இருந்ததில்லை. இனவாதத்தைக் கட்டமைத்ததாக – அதில் உயிர்வாழ்வதாகவே இருந்திருக்கிறது. இதனால் அது எப்போதும் உட்சுருங்கியதாகவே இருந்துள்ளது. இன்றைய நிலையும் அதுவே.

ஆனால் கருணாநிதியின் திராவிட இயக்க அரசியலில் முற்போக்கான கூறுகளே அடிப்படையாக இருந்தன. அது சமூக நீதி , மாநிலத்தின் உரிமைகள், பால் சமத்துவம்,  மத மூட நம்பிக்கைகள் தொடர்பான கரிசனை, மொழிவளர்ச்சி போன்றவற்றை  வலுவாகக் கொண்டது. 

திராவிட இயக்கப்பாரம்பரியத்தை – அந்தச் சிந்தனையை வலுப்படுத்துவதற்குரிய அரசியல் அறிவுப் பண்பாட்டை உருவாக்கியதில் பெரியார், அண்ணாத்துரை, கருணாநிதி ஆகியோருக்குப் பெரும் பங்குண்டு. அவர்கள் அதைச் செய்தே தமது அரசியலை முன்னெடுத்தனர். இன்றைய தமிழகத்தின் அடையாளம் என்பது அவர்கள் உருவாக்கியதே. இதற்காக அவர்கள் வரலாற்றையும் பண்பாட்டையும் சமூகவியலையும் படித்து தமக்கான அரசியல் சிந்தனையையும் செயற்பாட்டு வடிவத்தையும் உருவாக்கிக் கொண்டனர்.

பெரியாரும் அண்ணாத்துரையும் கருணாநிதியும் இதற்காக எழுதிய பக்கங்கள் ஏராளம். படித்தது ஏராளம். இந்தளவுக்கு ஈழ அரசியலில் எவருமே செய்யவில்லை. உருப்படியாக இரண்டு புத்தகங்களைக் கூட இலங்கைத்தமிழ் அரசியல் வாதிகள் எழுதியிருக்க மாட்டார்கள். மட்டுமல்ல, அரசியலுக்கு அப்பால் அவர்கள் நாடகத்துறையிலும் சினிமாவிலும் ஊடகத்திலும் இலக்கியத்திலும் மொழி மற்றும் பண்பாட்டுத்துறையிலும் பெரும் ஆளுமைகளாக இருந்தனர்.

தவிர, சமூக எற்றத்தாழ்வுக்கு எதிரான நிலைப்பாடு,  பகுத்தறிவு போன்றவற்றைத் தன்னுடைய அரசியலில் உள்ளடக்கமாகக் கொண்ட தி.மு.க, இடதுசாரிகளை ஒரு போதுமே எதிரிகளாகப் பார்த்ததில்லை.

ஆனால், ஈழத்தில் இதற்கு எதிர்மாறாகவே நிலைமை இன்னும் இருக்கிறது.  மூட நம்பிக்கைகள் பற்றி வாயே திறக்காத நிலை. சமூக மாற்றம் பற்றியோ அதற்கான கலைவடிவங்களைப் பற்றியோ தமிழ்த்தேசியத்தை வலயுறுத்துவோர் பொருட்படுத்துவதே இல்லை.

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சுகு சிறிதரன் குறிப்பிடுவதைப்போல தி.முகவினர், பொது உடைமை வாதிகளுடன் பல சந்தர்ப்பங்களில் இணைந்து செயற்பட்டார்கள். இவர்கள் (ஈழ அரசியல் தலைமைகள்) தீண்டாமை பாராட்டினார்கள். 


அவர்கள் தமிழக மக்களுக்கென சாதித்திருக்கிறார்கள். இங்கு தொடர் வாய்ச்சவாடல். இவர்கள் நாவலர், இராமனாதன் பாரம்பரியம் என்ற பாரம்பரியத்தினராகவும்  இன்னும் சிலர் பிரேமாநந்தாவின் சீடப்பிள்ளைகள் என்பதிலும் பெருமை கொள்பவர்கள். அவர்கள் பெரியாரின் வாரிசுகள் என்பதில் பெருமிதம் கொள்பவர்கள்.

எனவே இத்தகைய அரசியல் வேறுபாடுகளே கருணாநிதியின் மரணத்தின்போதும் பிரதிபலித்துள்ளன. தவறாகக் கணக்கைச் செய்தால் தவறாகவே விடையும் கிடைக்கும். ஆனால், இதைக் கடந்தே வரலாறு நிற்கும்.

கருணாநிதி விட்ட தவறை விட பலமான தவறுகளை ஈழத்தமிழ்ச்சமூகம் விட்டுக்கொண்டிருக்கிறது. வடமாகாணசபையின் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கருணாநிதியின் மறைவைக் குறித்து விட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் கருணாநிதியையும்  அவருடைய தி.மு.கவையும் நேரடியாகக் குற்றம் சுமத்துகின்றன. இதாவது பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு ஏனைய தமிழ்த்தலைவர்களோ கட்சிகளோ கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததாக இல்லை. சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பும் வேறு ஒன்றிண்டு தரப்புளும் மட்டும் அஞ்சலி செலுத்தியிருக்கின்றன. மற்றும்படி கருணாநிதி எதிர்ப்புள்ளியிலேயே நிறுத்தப்பட்டுள்ளார்.

கருணாநிதி என்பது தனிப்பட்ட ஒரு மனிதர் அல்ல. அவர் ஒரு இயக்கம். அதை நாம் எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்பதே கவனிக்க வேண்டியது. இந்தப் பத்தியாளருக்கும் அவருடைய அரசியலில் பல விடயங்கள் ஏற்புடையவை அல்ல. ஆனால்,  அதற்காக அவரை எதிர்ப்புள்ளியில் நிறுத்துவதற்கு இடமளிக்க முடியாது.

நகுலன் கொளுத்திய வெடி நம் தலைக்கு நாமே வைத்த வெடியே தவிர வேறொன்றில்லை. ஆம் அவர் தன் தந்தை கந்தையிருக்கும் அவருடைய நம்பிக்கைகளுக்கும் அதற்கான மாண்புக்கும் வைத்த வெடியாகும்.

ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வனின் வார்த்தைகளில் கேட்டால், 2009 புலிகளின் வீழ்ச்சியை பாற்சோறு கொடுத்துக் கொண்டாடிய சிங்கள மனநிலைக்கும் கருணாநிதியின் இழப்புச் சேதியறிந்து வெடி கொளுத்திய மனநிலைக்கும் இடையில் என்ன வேறுபாடு?

-கருணாகரன் -

நன்றி தேனீ

03 August 2018

இலங்கை - இந்திய ஒப்பந்தம், இலங்கையின் தலையெழுத்தை மாற்றியது

ஜூலை மாதத்துக்குள் இலங்கையின் இனப் பிரச்சினையின் வரலாற்றில், திருப்புமுனைகளாகக் கருதப்பட வேண்டிய இரண்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.   
1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் திகதி தொடக்கம், சுமார் ஒரு வார காலமாக நாட்டின் பல பகுதிகளில், தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்செயல்கள் அதில் ஒன்றாகும்.   
1987 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி, அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவுக்கும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தம் எனப் பரவலாக அழைக்கப்படும் ஒப்பந்தம் மற்றையதாகும்.   
மூன்று நாள்களுக்கு முன்னர், அதாவது கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த ஒப்பந்தத்துக்கு 31 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன.  
இவற்றை, இலங்கையின் இனப்பிரச்சினையின் வரலாற்றில் மட்டுமல்லாது, முழு நாட்டினது வரலாற்றிலும் திருப்பு முனைகளாகவே கருத வேண்டியுள்ளது. அவை அன்று இடம்பெறாவிட்டால், இன்று நாட்டின் நிலைமை என்னவாக இருக்கும் என்று ஊகித்துப் பார்த்தால், அவை உண்மையாகவே திருப்புமுனைகள் என்பது புலனாகும்.   
கறுப்பு ஜூலை என்றழைக்கப்படும், 1983 ஆம் ஆண்டு ஜூலைக் கலவரமானது, இலங்கை விவகாரங்களில் இந்தியாவின் நேரடித் தலையீட்டை வரவழைத்தது.   
இந்தச் சம்பவம் இடம்பெறாவிட்டாலும், அன்றைய இலங்கை அரசாங்கத்தின் சில கொள்கைகளால் இந்தியத் தலையீடு ஏற்படும் அபாயம் இருந்து வந்துள்ளது.   
ஏனெனில், அப்போதைய ஜனாதிபதி ஜெயவர்தன, அமெரிக்க, பாகிஸ்தான் சார்பான கொள்கைகளைக் கடைப்பிடித்து வந்தார். அமெரிக்காவுடன் பனிப்போரில் ஈடுபட்டிருந்த சோவியத் ஒன்றியத்துடன் அப்போது, இந்தியா இணைந்து செயற்பட்டு வந்தது.   
இந்த நிலையில்,ஜெயவர்தனவின் கொள்கை, பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தது. இதனால் இந்தியா, ஜெயவர்தனவுக்கு பாடமொன்றைக் கற்பிக்கத் தருணம் பார்த்துக் கொண்டு இருந்தது.   
ஜூலை இனக் கலவரம், இந்தியாவுக்கு அதற்கான வாய்ப்பை வெகுவாக ஏற்படுத்திக் கொடுத்தது. அன்று அந்தக் கலவரம் இடம்பெறாதிருந்தால், இந்தியத் தலையீடு சிலவேளை வேறு விதமாகத் தான் அமைந்திருக்கும். அது நாட்டின் வரலாற்றுப் பயணத்தை வேறு திசையில் திருப்பியிருக்கும்.   
இரண்டாவது, திருப்புமுனைச் சம்பவமான இலங்கை - இந்திய ஒப்பந்தம், நேரடியாகவே இந்தியாவுடன் தொடர்புடையது என்பது, அதன் பெயரிலேயே தெளிவாகிறது.   
ஒருவகையில், இதுவும் அமெரிக்கா - சோவியத் ஒன்றியம் ஆகிய நாடுகளிடையே, நிலவி வந்த பனிப்போரின் விளைவு என்றும் கூறலாம்.   
அதேவேளை, இலங்கையின் இனப்பிரச்சினை, இந்தியாவுக்கும் ஒரு பிரச்சினையாக மாறி வந்ததன் விளைவு என்றும் கூறலாம்.   
தமிழ்த் தலைவர்கள், குறிப்பாக தமிழ் ஆயுதக் குழுக்கள், அதிலும் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளால் இனப்பிரச்சினையைத் தீர்க்கும் விடயத்தில், நழுவவிடப்பட்ட ஒரு முக்கியமான சந்தர்ப்பம் என்றும் கூறலாம்.  
இலங்கை - இந்திய ஒப்பந்தமானது, பல தமிழ்த் தலைவர்கள் அன்று நினைத்ததைப் போல் இந்தியா, இலங்கைத் தமிழ் மக்கள் மீது கொண்ட பரிவின் காரணமாக, மேற்கொண்ட ஒரு நடவடிக்கையல்ல. அது, இந்தியா, தமது நலனைக் கருத்தில் கொண்டு மேற்கொண்ட நடவடிக்கையாகும்.   
மேலே கூறப்பட்டதைப் போல், ஒரு புறம் இந்தியாவுக்குத் தமது அணியான சோவியத் அணியின் சார்பில், இலங்கை அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தவும் தண்டிக்கவும் அவசியம் ஏற்பட்டு இருந்தது.   
மறுபுறத்தில் வடக்கு, கிழக்கில் அரச படைகளுக்கும் தமிழ் ஆயுதக் குழுக்களுக்கும் இடையே இடம்பெற்று வந்த மோதல்கள் காரணமாக, சுமார் ஓர் இலட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள், இந்தியாவுக்குச் சென்றிருந்தனர். இதன் காரணமாகத் தமிழ்நாடு, இலங்கையில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் கொதித்துக் கொண்டிருந்தது.    
இதனால், தமிழ்நாட்டின் தமிழ் உணர்வுகள், இந்திய மத்திய அரசாங்கத்துக்கு எதிராகத் திரும்பும் அபாயமும் அப்போது ஏற்பட்டு இருந்தது. இந்த இரண்டும்தான், இந்திய அரசாங்கம் அன்று, இலங்கை விவகாரத்தில் தலையிடுவதற்கான காரணங்களாக அமைந்தன.   
அதற்கு, இலங்கை அரசாங்கமும் துணை போனதாகவே கூற வேண்டும். இலங்கை மீதான தமது கட்டுப்பாட்டை, இந்தியா வைத்துக் கொண்டு, இலங்கையின் இனப்பிரச்சினை விடயத்தில், இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ் ஆயுதக் குழுக்களுக்கும் இடையே, ஓர் இணக்கப்பாட்டை ஏற்படுத்தவும் முயற்சி செய்தது. அதற்காகத் தான் இந்திய அரசாங்கம் 1985 ஆம் ஆண்டு, இரு சாராருக்கும் இடையே முதல் முதலில், பூட்டான் தலைநகர் திம்புவில் பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்தது.  
ஆனால், பேச்சுவார்த்தையின் போது, இலங்கை அரசாங்கமோ தமிழ்க் குழுக்களோ நேர்மையாக நடந்து கொள்ளவில்லை. அப்போது பெரும்பாலான தமிழ் ஆயுதக் குழுக்கள், மாக்ஸியத்தை ஏற்றுக் கொண்டு இருந்தமையால், மாக்ஸியத்தின்படி, தமிழ் மக்கள் ஒரு தனியான தேசிய இனம் என்பதையும் அந்த இனத்துக்குப் பிரிந்து செல்லும் உரிமை இருக்கிறது என்பதையும் நிரூபிப்பதே தமிழ்க் குழுக்களின் நோக்கமாக இருந்தது. அதனால்,  இலங்கை அரசாங்கத்தோடு எவ்வித இணக்கப்பாட்டையும் ஏற்படுத்திக் கொள்ள, அவை விரும்பவில்லை.  
ஜெயவர்தனவின் தலைமையிலான இலங்கை அரசாங்கமும், இந்திய நெருக்குவாரத்தின் காரணமாகப் பேச்சுவார்த்தைக்கு சென்றதேயல்லாமல், பேச்சுவார்த்தையின்போது, எவ்வித இணக்கப்பாட்டையும் அடைய வேண்டும் என்ற நோக்கம் அதற்கு இருக்கவில்லை.   
எனவே, ஆயுதக் குழுக்கள் ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டும் என்பதிலேயே, அரசாங்கப் பிரதிநிதிகள் உறுதியாக இருந்தனர். இந்த நிலைமை காரணமாகத் திம்புப் பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறவில்லை.  
ஆனால், இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தின் மீது செலுத்திய நெருக்குவாரத்தின் காரணமாக, 1986 ஆம் ஆண்டு அரசாங்கம், அரசியல் கட்சி மாநாடு என்ற பெயரில் சர்வகட்சி மாநாடொன்றைக் கூட்டியது.  
அதன்போதுதான், முதன்முதலில் இலங்கை அரசாங்கம் அதிகாரப் பரவலாக்கல் என்ற எண்ணக்கருவைக் கொள்கை ரீதியாக ஏற்றுக் கொண்டது.   
ஆனால், வடபகுதியில் போரும் தொடர்ந்தது. இதனால் தமிழ்நாடு கொந்தளித்துக் கொண்டே இருந்தது. எனவே, போரை நிறுத்த அல்லது தணிக்க, இந்தியா ஏதாவது செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. 
அதன்படி, போரை நிறுத்துமாறு அரசாங்கத்தை வற்புறுத்தும் வகையில், 1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நான்காம் திகதி, இந்தியா, இலங்கை அரசாங்கத்தின் அனுமதியின்றியே தமது கடற்படையினர் முலம், வடபகுதிக்கு உணவுப் பொருட்களை அனுப்பியது.   
இது இரண்டு நோக்கங்களைக் கொண்டதாக அமைந்தது. முதலாவதாக, இலங்கை அரசாங்கத்துக்கு விடுத்த எச்சரிக்கையாகும். மறுபுறத்தில், தமிழ்நாட்டைத் திருப்திப்படுத்தும் வகையிலான அச்சுறுத்தலாகவும் இருந்தது. எனினும், இலங்கைக் கடற்படையினர் அந்தக் கப்பல்களை, இலங்கைக் கடற்பிரதேசத்துக்குள் நுழைய இடமளிக்கவிலைலை. அவை திரும்பிச் சென்றன.  
ஆனால், ஓரிரு நாள்களில் இந்திய விமானங்கள், திடீரென யாழ்ப்பாண வான்பரப்பில்த் தோன்றி, உணவுப் பொட்டலங்களை ஆங்காங்கே போட்டுவிட்டுத் திரும்பிச் சென்றன. இது, தமிழ் மக்களுக்கு உணவு வழங்கும் தேவைக்காக செய்த காரியமல்ல; இலங்கை அரசாங்கத்துக்குச் சவால் விடுப்பதும், இலங்கை அரசாங்கத்தை மிரட்டுவதுமே அதன் நோக்கமாகியது.   
அது பலன் தந்தது. மாகாண சபைகளை உருவாக்கவும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் ‘தற்காலிகமாக’ இணைக்கவும் அந்த விடயங்கள் அடங்கிய ஓர் ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடவும் இலங்கை அரசாங்கம் இணங்கியது. 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட அந்த ஒப்பந்தம் தான் இலங்கை-இந்திய ஒப்பந்தம் ஆகும்.  
சுமார் 40 நாள்களுக்கு முன்னர், இந்திய உணவுக் கப்பல்கள் வடபகுதிக்கு வந்த போது, தமது கட்டுப்பாட்டில் இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர்களைக் கொண்டு, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தச் செய்த, அப்போதைய அமைச்சர் காமினி திஸாநாயக்கவே, இந்த ஒப்பந்தத்தை நியாயப்படுத்துவதில் முன்னணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  
வேலுபிள்ளை பிரபாகரனின் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, நிர்ப்பந்தத்தின் காரணமாக இந்த ஒப்பந்தத்தை ஆரம்பத்தில் ஏற்றுக் கொள்வதாகக் கூறினாலும், ஓரிரு வாரங்களிலேயே அவ்வமைப்பு அதற்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடத் தொடங்கியது.   
ஆனால், அதுவரை தனித் தமிழ் நாடொன்றுக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய ஏனைய தமிழ்க் குழுக்கள், இந்திய அதிகாரிகளின் முன்னிலையில் ஆயுதங்களை இலங்கை அரச அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டு, தனி நாட்டுக்கான போராட்டத்தையும் கைவிட்டன. அதன்படி, தமிழீழத்துக்கான போராட்டமும் ஆயுதப் போராட்டமும் புலிகளின் ஏகபோக உரிமையாக மாறியது.   
இந்த ஒப்பந்தத்தோடு, இலங்கையில் தனித்தமிழ் நாட்டுக்கான, இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் நின்றுவிட்டது. உண்மையிலேயே, அதற்கு முன்னரும் இந்தியா, இலங்கை அரசாங்கத்தை அச்சுறுத்தவும் கட்டுப்படுத்தவும் தமிழ் ஆயுதக் குழுக்களை பாவித்ததேயல்லாமல், இலங்கையில் பிரிவினையை ஆதரிக்கவில்லை.   
தாம் தொடர்ந்தும் இலங்கையில் தனித் தமிழ் நாட்டுக்கான போராட்டத்தை ஏற்றுக் கொள்வதில்லை என்பதை இந்தியா, அதற்கு அடுத்த ஆண்டில் வெளிப்படையாகவும் மிகத் தெளிவாகவும் கூறியது. அப்போதைய இந்திய வெளிவிவகாரச் செயலாளர் எஸ்.கே. சிங், இதை உத்தியோகபூர்வமாக வெளியிட்டார்.   
1988 ஆம் ஆண்டு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற சார்க் உச்சி மாநாட்டுக்காக சென்றிருந்த எஸ்.கே. சிங், அங்கு ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, இதைத் தெரிவித்தார்.   
தமிழ்நாட்டில் மற்றொரு தமிழ் ஈழத்தைக் காண விரும்பாததால், தமது அரசாங்கம் இலங்கையில் தனித் தமிழ்நாடு உருவாவதை ஏற்றுக் கொள்வதில்லை என அவர் கூறினார். புலிகளும் இந்தியாவைப் பகைத்துக் கொண்டு இருந்த நிலையில், இந்தியாவுக்கு மிக எளிதில் இந்த முடிவை அறிவிக்க முடியுமாக இருந்தது.   
இப்போது இந்தியா, அந்த ஒப்பந்தத்தைத் தொடர்நதும் வலியுறுத்துகிறதா என்ற கேள்வி எழுகிறது. ஒப்பந்தத்துக்கு 30 வருடங்கள் பூர்த்தியாகிய கடந்த வருடம், “தொடர்ந்தும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பை வலியுறுத்தவில்லை” என இந்தியா அறிவித்தமை அதையே சுட்டிக் காட்டுகிறது.   
கடந்த வருடம் பெப்ரவரி 18 ஆம் திகதி, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ். ஜெயசங்கர், அம்மாதம் 20 ஆம் திகதி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரனுடன் நடாத்திய பேச்சுவார்த்தையின் போதே, இக்கருத்தைத் தெரிவித்து இருந்தார். ‘இன்டியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை இச் செய்தியை வெளியிட்டு இருந்தது.  
இந்தியாவின் அதிகாரப் படிநிலைகளின் பிரகாரம், வெளியுறவுச் செயலாளரே வெளிநாட்டுக் கொள்கைக்குப் பொறுப்பான மிகவும் உயர்ந்த அதிகாரியாவார். அவர் ஒரு விடயத்தைப் பற்றிக் கொள்கை ரீதியான கருத்தொன்றை வெளியிடுவதாக இருந்தால், அதுவே இந்திய அரசாங்கத்தின் கொள்கையாக இருக்கும்.  
உண்மையிலேயே, ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்ட மூன்று தரப்பினராகிய, இந்திய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் தமிழ் ஆயுதக் குழுக்களும் ஒப்பந்தத்தில் அவரவருக்குரிய கடமைகளை நிறைவேற்றவில்லை.   
இந்தியா, தமிழ் ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களைக் களையத் தவறிவிட்டது. தமிழ் ஆயுதக் குழுக்களில் புலிகளும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. இலங்கை அரசாங்கம், சட்டத்தில் உள்ள அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்கவில்லை. எனவே, எவரும் எவரையும் எந்த விடயம் தொடர்பிலும் தார்மீக ரீதியில் வற்புறுத்த முடியாதநிலைமை பிற்காலத்தில் உருவாகியது.   
இலங்கையின் தலையெழுத்தை மாற்றிய போதிலும் உலக வல்லரசுகளிடையே பனிப்போர் மறைந்துள்ள நிலையில், இலங்கை - இந்திய ஒப்பந்தம் இப்போது ஏறத்தாழ செல்லுபடியற்றதாகி உள்ளது.  
-எம்.எஸ்.எம். ஐயூப்-
நன்றி- தமிழ் மிரர்

25 July 2018

சுரேஸ் பிரேமச்சந்திரன் : தவறிப்போன வாய்ப்புகள் - கருணாகரன்

“மாற்று அரசியல் தலைமையைப் பற்றி உங்கட தீர்மானம் என்ன?” என்று ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் கேட்டிருக்கிறார் புலம்பெயர்ந்த நாடொன்றில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த அவருடைய நீண்டநாள் ஆதரவாளர்.

“நாங்கள் விக்கினேஸ்வரனையே நம்பியிருக்கிறம். அவரைத் தவிர்த்து வேறு யாரையும் இப்போதைக்கு யோசிக்க முடியாது” என்று சட்டெனப் பதில் சொல்லியிருக்கிறார் சுரேஸ்.

கேட்டவருக்கு அதிர்ச்சி.

ஒன்று, கொஞ்சமும் யோசிக்காமல் சுரேஸ் சட்டென்று பதில் சொன்ன விதம். அல்லது இதற்கு மேல் அவரால் தற்போது யோசிக்க முடியாமலிருக்கலாம் என்பது.

இரண்டாவது, சுரேஸின் பதில். அதாவது விக்கினேஸ்வரனைத் தவிர்த்து வேறு தெரிவுகள் இல்லை என்றும் தாங்கள் விக்கினேஸ்வரனையே நம்பியிருக்கிறோம் என்பதும்.

நீண்டகாலமாகச் சுரேஸோடும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வுடனும்  பழகியிருந்தாலும் ஆதரவை வழங்கியிருந்தாலும் நேரிலே சந்தித்து உரையாடும்போது இப்படியான ஒரு பதிலோடு – நம்பிக்கையோடு(?) - சுரேஸ் காத்துக் கொண்டிருப்பது அதிர்ச்சியையும் எரிச்சலையும் ஏற்படுத்தியிருக்கிறது இந்தப் புலம்பெயர் நண்பருக்கு.

இருந்தாலும் வேறு தெரிவுகளைக் குறித்துச் சுரேஸின் அபிப்பிராயம் என்னவாக இருக்கும் என்று அறிய எண்ணி, “ஏன், ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் ஏனைய தரப்புகளை எல்லாம் ஒன்றிணைத்து ஒரு அணியை உருவாக்கலாமே. அதோடு வெளியில் நிற்கின்ற நல்ல சக்திகளையும் சேர்த்து, ஒரு புதிய அணியை உருவாக்கலாமே?” என்று கேட்டிருக்கிறார் நண்பர்.

“அதெல்லாம் சாத்தியப்படாது. எந்தக் காரணம் கொண்டும் ஈ.பி.டி.பியோடும் டக்ளஸ் தேவானந்தாவோடும் கூட்டு வைக்க முடியாது. அவர்களுடைய அரசியல் வேற. எங்கட அரசியல் வேற. நாங்கள் விக்கினேஸ்வரனைத் தவிர்த்து வேற யாரைப்பற்றியும் யோசிக்கவே முடியாது” என்றார் சுரேஸ்.

“அப்படியென்றால், ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் வரதர் – சுகு தரப்பு?”

“அவர்களைப் பற்றி இப்ப ஒன்றும் சொல்றமாதிரி இல்லை”

“சந்திரகுமாரோடு?”

“அதையெல்லாம் கால நேரம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்”

“எதையும் உருப்படியாகச் செய்யவில்லை என்று விக்கினேஸ்வரன் மீது கடுமையான விமர்சனங்கள் இருக்கே!”

“இருக்கலாம். ஆனால், என்னதானிருந்தாலும் அவரைத் தவிர்த்து வேறு யாரையும் நாங்கள் இப்போதைக்கு யோசிக்க முடியாது”

ஏறக்குறைய நாற்பது ஆண்டுகால அரசியல் அனுபவத்தையும் அரசியல் பங்களிப்பையும் கொண்ட சுரேஸ் பிரேமச்சந்திரன், நான்காண்டுகால “அரசியல் பயில்நிலையாளர்” விக்கினேஸ்வரனையே கதியென்று நம்பியிருப்பதை நண்பரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்தக் கவலையை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

“பாருங்கள், பிரமுகர் அரசியலினால் பயனில்லை என்றுதானே அந்த நாளில் (1970 களில்)  ஆயுதப்போராட்ட – அர்ப்பணிப்புமிக்க செயற்பாட்டைக் கொண்ட – அரசியலில் இயக்கங்கள் ஈடுபட்டன. அப்படி ஒரு மாற்று அரசியல் பண்பாட்டில் வந்த சுரேஸ் ஏன் இப்பிடிப்போய்ப் பிரமுகர் அரசியலில், விக்கினேஸ்வரன் என்ற பிம்பத்துக்குப் பின்னால் நிற்கிறார்” என்று கேட்டார் துக்கத்தோடு.

இதையிட்டு நான் எதையும் பேசாமல், அமைதியாகச் சிரித்தேன்.

பிறகு அவருக்குச்சொன்னேன், “அப்பொழுது சுரேஸ் போராளி. இயக்க உறுப்பினர். இப்பொழுது அவர் பிரமுகர். கட்சித்தலைவர். ஆகவே இன்று அவர் பிரமுகருக்குரிய அரசியல் ஒழுக்கத்தின்பாற்பட்டே சிந்திப்பார். அதிலும் தேர்தல் அரசியல் கணக்குகளையே பார்க்கின்ற ஒருவராக மாறிய பிறகு நீங்கள் அவரிடம் புரட்சிகர அரசியலைப் பற்றியெல்லாம் எதிர்பார்க்க முடியாது. கட்சியின் பெயரில் ”புரட்சிகர விடுதலை முன்னணி” என்று இருந்தாலும் தேர்தலில் அந்தப் பெயரை மறந்தும் அவர் பயன்படுத்துவதில்லை என்பதை அவதானித்திருப்பீர்கள். பதிலாக “தமிழ்த்தேசிய”க் கூட்டமைப்பு என்றோ, “தமிழ்த்தேசிய” விடுதலைக் கூட்டமைப்பு என்றோதான் தேர்தலில் இறங்குகிறார்கள். இந்த நிலையில் அவருடைய தெரிவு விக்கினேஸ்வரனாக இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால், சுரேஸ் அரசியலில் மூத்தவர். விக்கினேஸ்வரனோ தத்தும் குழந்தை. இதை எப்படிச் சமன் செய்வது என்பதே இப்பொழுதுள்ள பிரச்சினை” என்றேன்.

நண்பர் ஆழமாக யோசித்தார்.

மேலும் சொன்னேன் “2009 க்குப் பிறகு (அதற்கு முன்பு வேட்பாளர் பட்டியலைத் தீர்மானிப்பது புலிகளே) ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பாக சுரேஸினால் நிறுத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பிரமுகர்கள். உதாரணமாக சிறிதரன், ஐங்கரநேசன், டொக்ரர் சிவமோகன், ரவிகரன் போன்றவர்கள். இதனால் இவர்கள் வெற்றியடைந்த பிறகு சுரேஸின் கட்டுப்பாட்டுக்குள்ளோ ஈ.பி.ஆர்.எல்.எவ்.வின் நடைமுறைகளுக்குள்ளோ நிற்கவில்லை. இதற்குப் பதிலாக ஈ.பி.ஆர்.எல்.எவ்வைச் சேர்ந்தவர்களையோ அல்லது பிற இயக்கங்களில் இருந்த போராளிகளையோ அல்லது நேர்மையான பிற ஆட்களையோ நிறுத்தியிருந்தால் சுரேசும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வும் பலப்பட்டிருக்கும். ஆனால், சுரேஸின் இன்றைய மூளை இதை ஒருபோதுமே ஏற்றுக்கொள்ளாது. இதற்கு இன்னொரு எளிய உதாரணத்தையும் சொல்ல முடியும். விக்கினேஸ்வரனும் ஒரு பிரமுகரே. அதனால்தான் அவர் சம்மந்தன், மாவை போன்ற மூத்தவர்களையும் மீறி நிற்கிறார். அப்படித்தான் சுமந்திரனும். இதற்குப் பிறகும் பிரமுகர்களில் தங்கி நிற்பதே சரியென்றால்....”

1970 களில் விடுதலைப் போராட்டத்தில் இணைந்தவர் சுரேஸ் பிரேமச்சந்திரன். ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பு எனத் தொடர்ந்த போராட்ட அரசியலில் கடந்த நாற்பது ஆண்டுகளாகக் களத்தில் நிற்கும் அரசியற் செயற்பாட்டாளர். இந்த நாற்பது ஆண்டுகளில் தொடர்ந்து ஏராளம் நெருக்கடிகள், உயிராபத்துகளைச் சந்தித்தவர். பதிலாக அவரும் உயிராபத்துகளையும் நெருக்கடிகளையும் உண்டாக்கியவர் என்ற குற்றச்சாட்டும் பகிரங்கமாகவே உண்டு.

ஆனாலும் சளைத்து விடாமல், ஒதுங்கிக் கொள்ளாமல் அரசியல் அரங்கில் நின்று பிடித்தவர். ஆயுதப்போராட்ட அரசியல் பிறகு ஜனநாயக அரசியல் ஆகியவற்றில் பொறுப்பான நிலையில் இருந்தவர்.  விடுதலைப்புலிகள், இலங்கை அரசு, இந்திய அரசு ஆகிய வலுச்சக்திகளோடு இடை ஊடாட்ட அரசியலைச் செய்த அனுபவத்தைக் கொண்டவர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இணைத்தலைவர்களில் ஒருவராக இருந்தவர். பத்மநாபாவின் கொலைக்குப் பிறகு ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்குத் தலைமைப் பொறுப்பேற்றவர். பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.

இப்படி நீண்டதொரு அரசியல் அடையாளத்தைக் கொண்டிருக்கும் சுரேஸ் பிரேமச்சந்திரன், இன்று இப்படித் தடுமாறிக் கொண்டிருப்பது பலருக்கும் கவலையாகவே இருக்கும் என்பது நியாயமே.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இணைந்திருந்தபோது சம்மந்தன், மாவை சேனாதிராஜாவுக்கு நிகரான அரசியற் பங்களிப்பைக் கொண்டவராக இருந்தார் பிரேமச்சந்திரன். உண்மையில் மாவையையும் விட  ஆற்றலும் அறிதிறனும் உள்ளவராகச் சுரேஸே இருந்தார். இது ஒரு வகையில் கூட்டமைப்பின் பேச்சாளராக சுரேஸ் அந்தக் காலத்தில் செயற்படுவதற்குக் காரணமாக இருந்தது. இதையெல்லாம் இந்தப் பத்தியாளர் முன்னரும் குறிப்பிட்டிருந்ததை இங்கே நினைவூட்டலாம்.

ஆனாலும் பிரேமச்சந்திரனால் தன்னுடைய இடத்தை – நிலையை - த் தக்க வைக்கவோ தன்னை வலுப்படுத்தவோ முடியாமல் போய் விட்டது. அதாவது அவருடைய ஆளுமைக் குறைபாடும் அரசியல் விவேகமற்ற தன்மையும் பதற்றங்களும் அவரைத் தனிமைப்படுத்தியது. இன்னொரு வகையில் சொன்னால், அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்தினார் எனலாம்.

சுரேஸ் சரியாகச் செயற்பட்டிருந்தால் கூட்டமைப்பைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கலாம். அல்லது அதில் அங்கத்துவம் வகிக்கும் ஏனைய கட்சிகளான ரெலோவையும் புளொட்டையும் இணைத்துப் புதிய கட்டமைப்பொன்றை உருவாக்கியிருக்க முடியும். அதற்குரிய அத்தனை சாதகமான வாய்ப்புகளும் சுரேசுக்கிருந்தன.

பிரேமச்சந்திரன் கூட்டமைப்பில் இருந்த காலத்தில் அவர் கூட்டமைப்பிற்குள் கொண்டு வந்திருந்த பெரும்பாலான வேட்பாளர்கள் (பாராளுமன்றத் தேர்தலிலும் மாகாணசபைத் தேர்தலிலும்) வெற்றிபெற்றிருந்தனர். கூட்டமைப்பில் தன்னை அல்லது தன்னுடைய தரப்பை மேலும் வலுப்படுத்த வேண்டுமாக இருந்திருந்தால் ஈ.பி.ஆர்.எல்.எவ்விலிருந்து மேலும் பலரை உள்ளீர்த்திருக்க முடியும். இதில் புலம்பெயர்ந்திருக்கும் முன்னாள் உறுப்பினர்கள் தொடக்கம், வரதர் – சுகு தரப்பையும் கூடப் பேசி இணைத்து பெரியதொரு அணியாக்கியிருக்க முடியும்.

இதைச் செய்யாமல் அவர் தமிழரசுக் கட்சியையே பலப்படுத்திக் கொண்டிருக்கிறார். சுமந்திரனை ஒரு பக்கத்திலும் விக்கினேஸ்வரனை இன்னொரு பக்கத்திலுமாக வளர்த்தெடுத்ததில் சுரேஸின் பலவீனத்துக்குப் பெரும் பங்குண்டு. அதைப்போலச் செல்வம் அடைக்கலநாதனுக்கும் சிவாஜிலிங்கம், சிறிகாந்தாவுக்கும் பின்னாளில் புளொட் சித்தார்த்தனுக்கும் இந்தப் பழி சேரும்.

கூட்டமைப்புக்கு எதிராக இன்னொரு அணியை உருவாக்குவதிலும் சுரேஸ் தோல்வியையே கண்டிருக்கிறார். கூட்டமைப்பிலிருந்து வெளியேறும் முடிவை அவர் எடுக்கும்போது மறுஅணிக்கான தயார்ப்படுத்தல் சரியாக இருந்திருக்க வேணும். தமிழ் மக்கள் பேரவையையும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தையும் அவருடைய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியையும் விக்கினேஸ்வரனையும் நம்பிக் கொண்டு கூட்டமைப்பிலிருந்து வெளியே வந்தவரை யாருமே முறையாக அங்கீகரிக்கவில்லை.

ஏறக்குறைய எல்லோரும் கைவிட்ட நிலையில் வேறு வழியின்றி கடந்த உள்ளுராட்சித் தேர்தலின்போது ஆனந்தசங்கரியோடு (தமிழர் விடுதலைக் கூட்டணியோடு) கூட்டு வைக்க வேண்டியதாயிற்று. இந்தக் கூட்டு சுரேசுக்குப் பெரிய வெற்றிகள் எதையும் பெற்றுக் கொடுக்கவில்லை. நன்மைகளையும் உருவாக்கவில்லை. புதிய களச் சூழலுக்கும் உதவவில்லை. போதாக்குறைக்கு உள்ளுராட்சித் தேர்தலில் வெற்றியீட்டிய உறுப்பினர்களுக்குரிய இடத்தைப் பெறுவதிலேயே சுரேசினால் சங்கரியோடு சரியாகப் பேச முடியாமல் போனது என்று சுரேசின் அணிக்குள்ளேயே கவலைகள் உண்டு.

இவ்வளவுக்கும் ஒரு கட்சித்தலைவராகவே இப்பொழும் சுரேஸ் இருக்கிறார். அதிலும் ஒரு காலகட்டத்தில் – ஈழப்போராட்டத்தில் – செல்வாக்குச் செலுத்தியிருந்த இயக்களில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எவ் என்ற இயக்கத்தின் தலைவர்.

அப்படியிருந்தும் இப்படிப் படியிறங்கிக் கொண்டிருப்பதற்கான காரணம் என்ன?

இதுவே சுரேஸை ஆதரிப்போருக்கும் அவர் மீது மதிப்புக் கொண்டிருப்போருக்கும் உள்ள கவலையும் கேள்வியுமாகும்.

இதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று, சுரேஸ் யாருடனும் பொறுப்பான முறையில் உரையாடலை நடத்துவதில்லை. யாருடைய அபிப்பிராயங்களையும் பொருட்படுத்துவதில்லை. இலங்கையின் அரசியற் சூழல், பிராந்திய – சர்வதேச அரசியல் யதார்த்தம் போன்றவற்றை எல்லாம் கணக்கில் எடுப்பதில்லை. தன் மனதறிந்த உண்மையைக் கூட வெளியே சொல்ல விரும்புவதில்லை. குறிப்பாக விடுதலைப்புலிகள் உருவாக்கிய “தீவிர அரசியல் – பிரிவினைக் கோட்பாட்டரசியல்” சட்டகத்திற்குள்ளேயே தானும் நிற்கப்பார்க்கிறார். ஆனால், புலிகள் தமது நிலைப்பாட்டை உறுதியாக்குவதற்கும் வெற்றியடைய வைப்பதற்கும் கடுமையாக உழைத்தனர். அதற்கான வலுமிக்க கட்டமைப்பைக் கொண்டிருந்தனர். உலகமெங்கும் அதற்கான செயற்பாட்டு வலையமைப்பைக் கொண்டிருந்தனர். நடைமுறையில் பல்வேறு வேலைத்திட்டங்களை இதற்கென உருவாக்கியிருந்தனர். போரிட்டடனர். அதில் பெரும் தியாயங்களைச் செய்தனர். பல்லாயிரக்கணக்கானோரை இழந்தனர். இழக்கவும் தயாராக இருந்தனர். அப்படியிருந்தும் அவர்களால் அதில் வெற்றியடைய முடியவில்லை.


சுரேஸோ விக்கினேஸ்வரனோ கஜேந்திரன், கஜேந்திரகுமாரோ இதில் ஒன்றைக் கூடச் செய்யத் தயாருமில்லை. இதைப் பற்றிச் சிந்திக்கவும் இல்லை. இதைப்பற்றி, இதன் சாதக பாதக நிலைமையைப்பற்றிப் பரிசீலிக்கவும் தயாரில்லை. முக்கியமாக கேட்கும் புலனை சுரேஸ்  நிராகரித்து விட்டார் என்று பலரும் குறிப்பிடுகிறார்கள். சுரேஸின் நீண்டகாலத் தோழமையோடுள்ளவர்களே இந்தக் குற்றச்சாட்டைக் கவலையோடு முன் வைக்கிறார்கள்.

இதனால்தான், அரச உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, எதிர்பாராத விதமாக பிரமுகர் அரசியல் கதவின் வழியாக வந்த விக்கினேஸ்வனின் நிழலில் ஒதுங்கும் நிலைக்குச் சுரேஸ் இன்று தள்ளப்பட்டுள்ளார். இது கையறு நிலையன்றி வேறென்ன?

பிரேமச்சந்திரனின் நாற்பதாண்டு கால அரசியல் அனுபவத்துக்கும் பங்களிப்புக்கும் எந்தப் பயனுமில்லாததாகி விட்டது. பதிலாக நான்காண்டுகால – வினைத்திறனற்ற – வெறும் வாய்ப்பல்லக்கு அரசியலைச் செய்யும் விக்கினேஸ்வரனின் தயவுக்காகக் காத்திருக்க  வேண்டியிருக்கிறது. இது மோசமான விதியன்றி வேறென்ன?

 வ்வளவுக்கும் விக்கினேஸ்வரனுக்கு ஒரு கட்சியோ, வேலைத்திட்டமோ, உறுதியான முடிவுகளோ கிடையாது. அரசியற் செயற்பாட்டுப் பாரம்பரியமோ பங்களிப்போ இல்லை. இந்த நிலையில் இப்பொழுதுதான் புதிய அரசியல் பிரவேசம் செய்த ஒருவரைப்போல – முதிரா நிலையினரைப்போல – விக்கினேஸ்வரனைப் பற்றிய “பெரும் பிம்பக் கனவில்” சுரேஸ் இருப்பது (மிதப்பது) மிகப் பெரிய தவறு. மட்டுமல்ல, வெட்கக் கேடுமாகும்.

 இது சுரேசுடன் கூட நின்றோருக்கும் நிற்போருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் பயணிகளுக்கும் இழைக்கப்படும் அநீதியே.

இது சுரேசுக்கும் முக்கியத்துவம் மிக்க ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கும் ஏற்பட்டுள்ள பெரும் வீழ்ச்சியன்றி வேறில்லை.


 சுரரேசுக்கு மட்டுமல்ல, ஒரு வகையில் தமிழ்ச்சமூகத்துக்கும்தான்.

12 June 2018

இந்தியாவிலிருந்து திரும்பியோரின் பிள்ளைகள் வடக்கில் புறக்கணிப்பு

யுத்தம் காரணமாக, பாதுகாப்பு நலன் கருதி, வடக்கில் இருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, பின்னர் யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின் மீண்டும் வடக்குக்கு மீள்குடியமர்ந்த மக்கள் பல்வேறு வகையில் புறக்கணிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து, இந்தியாவிலிருந்து வடக்கில் மீள்குடியமர்ந்த மக்கள் கூறியதாவது,,
இத்தினங்களில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் நாம், குறிப்பாக, தமது பிள்ளைகள் தொடர்பாகவே, அதிகமான நெருக்கடிகளுக்குள்ளாகி வருவதாக, அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எமது பிள்ளைகளை வடக்கிலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்பதற்காக அனுமதிப்பதற்காக முயல்கின்றபோது, பாடசாலை அதிபர்கள், அந்நாட்டு பிறப்புச் சான்றிதழை காரணம் காட்டி, எமது பிள்ளைகளுக்கு கல்வி கற்பதற்கான அனுமதியை மறுத்து வருகின்றனர் என, பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றி- தமிழ் மிரர்

04 June 2018

19வது திருத்தத்தை மீளாய்வு செய்ய வேண்டும்.


ஐதேக மற்றும் தாராளவாத நிறுவனங்கள் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டா வருவதை விரும்பாவிட்டால் அவர்கள் மகிந்த போட்டியிடுவதை அனுமதிக்கும் வகையில் 19வது திருத்தத்தை மீளாய்வு செய்ய வேண்டும்-  தயான் ஜயதிலகா

கடவுள் யாரை அழிக்க விரும்புகிறாரோ முதலில் அவர்களைப் பைத்தியமாக்கி  முட்டாள்தனமாகப் பேச வைக்கிறார்’ என்று பழைய வரி சொல்லியுள்ளது. நான் அதைச் சற்று  புதுப்பித்து ‘கடவுள் யாரை அழிக்க விரும்புகிறாரோ முதலில் அவர்களை முட்டாளாக்கி விடுகிறார்’ என்று சொல்கிறேன்.

ஸ்ரீலங்காவில் முட்டாள்தனமாக பேச முற்படும் இரண்டு வகையான பேர்வழிகள் உள்ளனர். ஒன்று அரசியல்வாதிகள், சித்தாந்தவாதிகள் மற்றும் அறிவு ஜீவிகளைக் கொண்டது, அவர்கள் அரசாங்கம் சார்பானவர்களாகவும் மற்றும் தாராளவாத தூண்டுதலை மேற்கொள்பவர்களாகவும் உள்ளவர்கள். மற்றையது அதே வகையைச் சார்ந்த தமிழ் தேசியவாதத்தைக் கடைப்பிடிக்கும் நபர்கள்.

முதல் ரகத்தைச் சோந்தவர்களைப் பற்றி முதலில் ஆராய்வோம். தாராளவாதிகள், ரணில் மற்றும் மைத்திரியின் அரசியல் விவாக வாக்குறுதிகளை புதப்பிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் மற்றும் எழுச்சி பெறும் ராஜபக்ஸ அலையை ஐதேக மற்றும் ஸ்ரீலசுக ஒன்று சேர்ந்து தோற்கடிக்கலாம் என நம்புகிறார்கள். மேலும் மகிந்த ராஜபக்ஸ 20வது திருத்தம் அல்லது புதிய அரசியலமைப்பை ஆதரிக்க முற்படுவாரோ என்கிற வஞ்சப்புகழ்ச்சியில் ஈடுபட்டிருப்பதுடன மற்றும் அதன் மூலம் கோட்டபாயாவின் எழுச்சி நிறுத்தப்படலாம் எனவும் அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.

இந்த நபர்கள், ஜனாதிபதி சிறிசேனவின் ஆசியுடன் ஸ்ரீலசுகவின் கணிசமான பிரிவினர் பிளவுபட்டுள்ள வேளையில் ஐதேக மற்றும் ஸ்ரீலசுக வாக்குகளை ஒன்றுசேர்த்து கணக்கிடுவதை நிறுத்துவதைப் பற்றி ஏன் தங்களையே கேட்டுக்கொள்வதற்கு மறுக்கிறார்கள். வெளிப்படையாகவே ஸ்ரீலசுகவின் வாக்குகளையோ அல்லது அவற்றில் பெரும்பாலானவற்றையோ அரசாங்கத்தின் வாக்குகளில் இருந்து கழித்து அவற்றை எதிர்க்கட்சியுடன் சேர்க்க வேண்டும், மற்றும் ஸ்ரீலசுகவின் மத்திய குழுக் கூட்டத்தில் தற்போதைய சூழ்நிலை பற்றிய ஜனாதிபதி சிறிசேனவின் சொந்த வாசிப்பையே அவரது கருத்துக்களில் இருந்து விலக்கப்பட வேண்டும். ரணிலின் ஐதேகவுடன் அவர் ஒரு நெருக்கமான தழுவலைத் தொடருகிறார் என்று நிச்சயமாகத் தோன்றவில்லை.

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தாராளவாதிகள் வெறுமனே முட்டாள்கள் அல்ல, அவர்கள் முற்றிலும் நேர்மையற்றவர்கள். உண்மையிலேயே அவர்கள் ஐதேக மற்றும் ஸ்ரீலசுகவை ஒன்றாக வைத்திருக்க வேண்டும் என்று விரும்பினால் அவர்கள் ரணிலின் இராஜினாமாவைக் கோரியிருக்க வேண்டும் மற்றும் அவருக்குப் பதிலாக ஐதேக தலைவராக சஜித் பிரேமதாஸாவை நியமித்திருக்க வேண்டும் அவர் ஒருவரை மட்டும்தான் அமைதியற்றிருக்கும் ஸ்ரீலசுகவினரால் ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் தாராளவாதிகள் அதை விரும்பாதது மட்டுமன்றி அதைக் கோரவும் தயாராக இல்லை. அதற்கு மேலதிகமாக அவர்கள் கோட்டபாயாவை தடுக்க விரும்பினால் அதைச் செய்யக்கூடிய ஒரே மனிதரான மகிந்த ராஜபக்ஜவின் முழு அளவிலான மறுவாழ்வுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு அழைப்பு விடுக்கவேண்டும். ஆனால் அவர்கள் அதைச் செய்கிறார்கள் இல்லை. எனவே அவர்கள் ரணிலை பிரதமராகவும் மற்றம் ஐதேக தலைவராகவும் மற்றும் வேட்பாளராகவும் தக்க வைக்கவே விரும்புகிறார்கள் மற்றும் ஸ்ரீலசுக மற்றும் ஜனாதிபதி சிறிசேன ஆகியோரை அத்தகைய ஒரு ஐதேக வுடன் உறுதியாக நிற்கவேண்டும் என்றும் விரும்புகிறார்கள் அத்துடன் அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை மற்றும் அல்லது புதிய அரசியலமைப்பைப் பெறவேண்டும் என வரும்புகிறார்கள். இவர்கள் எவ்வளவு முட்டாள்களாக உள்ளார்கள் என்பது புரிகிறதா?

நிகழ்ச்சி நிரலில் இரண்டு சீர்திருத்த முன்மொழிவுகள் உள்ளன, இவை இரண்டுமே நிராகரிக்கப்படும் என்பது சரியாகவே உள்ளன. அந்த இரண்டு முன்மொழிவுகளும் ஜேவிபியின் 20வது திருத்தம் மற்றது அரசாங்கத்தின் வரைவு அரசியலமைப்பு. நிராகரிப்பு இடம்பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஒன்று நேரம். வெகுஜனங்களின் மனநிலை மாற்றத்தை நோக்கியே உள்ளது, அரசியலமைப்புச் சீர்திருத்தம் என்பதைப் பற்றியல்ல. மக்களின் மனநிலை அரசாங்கத்தை நிராகரித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதிலேயே உள்ளது. அடுத்த வருடம் வெளியேறுவதற்கான ஒரு வாய்ப்பு வருகிறது என்கிற ஒரு விடயத்தில் மக்கள் நிச்சயமாக உள்ளார்கள் - அதாவது ஜனாதிபதி தேர்தல். அரசியலமைப்பு மாற்றங்களினால் அந்த வெளியேறும் வழியை அபாயத்திற்கு உட்படுத்தும் நோக்கம் நிச்சயமாகக் கிடையாது, அது தேசிய தேர்தல்களை தள்ளி வைப்பதற்கான ஒரு சாளரத்தை திறந்து வைக்கும். நிறைவேற்று ஜனாதிபதி முறை நீக்கப்படுமானால் அடுத்த தேர்தல் 2020ல் வரப்போகும் பாராளுமன்றத் தேர்தலாக இருக்கும் 2019 ஜனாதிபதி தேர்தலாக இருக்காது. வெகுஜனங்கள் அத்தகைய ஒரு இடைநிறுத்தலை வரவேற்பதற்கு எந்த ஒரு வழியும் இல்லை. நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் இந்த அரசாங்கத்துடன் அத்தகைய ஒரு தள்ளிவைப்புக்கு எந்தவொரு எதிர்க்கட்சியும் ஒத்துழைப்பு தருவதாக இருக்காது.

வெகுஜனங்களின் மனப்போக்கு மற்றும் முன்முயற்சிக்கான தவறான நேரம் என்பன தொடர்பான இரண்டாவது காரணி, 20வது திருத்தம் மற்றும் வரைவு அரசியலமைப்பு ஆகிய இரண்டு பிரேரணைகளும் நாட்டிலும் மற்றும் அதிகார மையத்திலும் ஒரு பலவீனத்தை உருவாக்குகின்றன. இந்தப் பிரேரணைகள் நடைமுறைப் படுத்தப்பட்டால் அது 19வது திருத்தம் காரணமாக அமைக்கப்பட்ட பல முனைவாக்கங்களை கடந்து செல்ல வேண்டியதாக இருக்கும். ஒரு வலுவான அரசாங்கம் மற்றும் தலைமை என்பன மூலமாக ஒழுங்கை மீட்டெடுக்கவேண்டும் என்பதே தற்போதைய வெகுஜனங்களின் மனநிலையாக உள்ளது. அடுத்த தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்கிற நம்பிக்கையில் உள்ள எந்தவொரு எதிர்க்கட்சியும் மேலும் பலவீனமடைந்து வரும் ஒரு அரசுக்கு ஆதரவளிப்பதைக் காணமுடியாது.

மகிந்த ராஜபக்ஸ நாட்டை வழிநடத்துவதற்கு திரும்புவதை பார்க்கும் நியாயமான ஆசை கூட இலலாமல் - நான் பெரியளவில் பகிரும் ஒரு உணர்வு - நாட்டைப் பலவீனப்படுததும் ஒரு அரசியலமைப்புச் சீர்திருத்தத் திட்டத்துக்கு ஒரு எதிர்க்கட்சி ஒத்துழைக்கிறது. நிலமையானது பலவீனமடையாமல் இருக்கும் அதேவேளை சிங்கள சமூகம் மகிந்த ராஜபக்ஸவை ஒரு சக்திவாய்ந்த, மிகவும் பிரபலமான மற்றும் மரியாதைக்குரிய பிரதம மந்திரியாகக் காணும் ஒரு வெற்றிகரமான தீர்வை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அந்த வெற்றிகரமான தீர்வானது ஒன்று மகிந்த ராஜபக்ஸவை பிரதமராகவும் அவரது தெரிவான எவரையும் ஜனாதிபதி வேட்பாளராகவும் ஆக்குவது என்பதாகும் ( பலரது விருப்பத்துக்கும் உரிய கோட்டபாயாவை, ஆனால் எல்லா வட்டாரங்களிலும் அல்ல).

கோஷ்டிகளின் போட்டி தெரிவு செய்வதை நிர்ப்பந்திக்கும் என்கிற நம்பிக்கையில் எதிர்க்கட்சி 20வது திருத்தம் அல்லது புதிய அரசியலமைப்பை வழங்குவது முட்டாள்தனத்தின் உச்சக்கட்டம். அதற்கு மாறாக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இருக்கவேண்டும் அரசாங்கத்தின் செல்வாக்கற்ற தன்மை மீதியைச் செய்து முடித்துவிடும். இதன்படி நிலமை தலைகீழாக மாறிவிடும். இதை ஐதேக மற்றும் தாராளவாதிகள்தான் தெரிவு செய்ய வேண்டும்.
குறிப்பாக தாராளவாதிகளுக்கும் மற்றும் பொதுவாக ஐதேகவுக்கும், உள்ள மிக மோசமான காட்சி கோட்டபாயாவை ஜனாதிபதியாகக் காணுவதுதான், இதற்கு மேசை மேல் ஒரு தெரிவு உள்ளது, ஒரே ஒரு தெரிவு மட்டுமே: 19வது திருத்தத்தை இப்போது மீளாய்வு செய்வது, ஆகவே இதன்படி மகிந்த ராஜபக்ஸவை ஜனாதிபதி போட்டிக்கு நிறுத்துவது அல்லது அடுத்த வருடம் கோட்டபாயாவை எதிர்கொள்வது.

இந்த அமைப்புக்கு இரண்டாவதாக ஒரு தெரிவும் உள்ளது, சஜித் பிரேமதாஸவை ஐதேக வேட்பாளராக  போட்டியிட வைத்து. பிரேமதாஸ தளத்தைக் கைப்பற்றி காலதாமதத்தைக் குறைத்து அதை ஒரு வலுவான போட்டியாக மாற்றுவது, அல்லது ரணிலைப் போட்டியிட வைத்து கடந்த கால் நூற்றாண்டு காலமாக நாட்டின் தேசியத் தலைவர் என்கிற உயர்பதவியைக் கட்சி அடையமுடியாமல் இருப்பதை அடுத்த அரை நூற்றாண்டு வரை நீட்டிக்கச் செய்யலாம்.

நியாயமாக எனது கண்ணோட்டத்தில் இப்போது நடைபெறும் உண்மையான விவாதம் எதிர்க்கட்சித் தலைவர்களில் மேற்பரப்புக்கு சற்று கீழே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக பாராளுமன்றச் சமநிலையை மாற்றி; மற்றும் மகிந்தவை  மேடையின் மையப்பகுதிக்கு நகர்த்தவது (இது எனது தனிப்பட்ட அளவுகடந்த அவா) தொடர்பான சாத்தியம் பற்றி அல்லது அது தோல்வியுற்றால் சிறந்த வேட்பாளரை தேர்வு செய்வது. இதுபற்றி அரசாங்கம் என்ன சொல்கிறது, நினைக்கிறது அல்லது செய்கிறது என்பது அதிகம் முக்கியத்துவமானது அல்ல ஏனென்றால் இது தோல்விக்குரிய ஒரு அரசாங்கம்.
அரசாங்கத்துக்குள் ஜனாதிபதி சிறிசேன இன்னும் தெரிவுகளைக் கொண்டுள்ளார், அவர் ஸ்ரீலசுகவின் 16 கிளர்ச்சியாளர்களையும் எதிர்க்கட்சி வரிசைக்கு நகர்த்தி ஐதேகவுக்கு எதிராக இரண்டாவது ஒரு முன்னணியினை தீர்க்கதரிசனமான முறையில் உருவாக்கியுள்ளார். எதிர்க்கட்சி அணிகள் இப்போது அதிகம் விரிவடைந்துள்ளன மற்றும் இது ரணில் தனது தாமதமான அரசியலமைப்பு நகர்வுகளை  முன்னகர்த்ததுவதற்கு தடையாக மகிந்த மற்றும் மைத்திரிக்கு அதிகம் வாய்ப்புகளை வழங்கியுள்ளது.

ஐதேக உண்மைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஸ்ரீலசுக பதவியில் உள்ளது மற்றும் ஆச்சரியமான முறையில் கால் நூற்றாண்டுக்கு மேலாக நாட்டின் அதி உயர் பதவியை வகித்துள்ளது. ஸ்ரீலசுக மூன்று ஜனாதிபதிகளை உற்பத்தி செய்துள்ளது சந்திரிகா, மகிந்த. மற்றும் மைத்திரி. 1988ன் பிற்பகுதியில் பிரேமதாஸ தெரிவு செய்யப்பட்டதிலிருந்து ஐதேக எந்த விளைவையும் தரவில்லை. அப்படியானால் ஸ்ரீலசுக ஏன் இந்த முறையை நீக்கவில்லை? தற்பொழுது அதிகாரபூர்வ ஸ்ரீலசுக 14 வீத வாக்குகளைப் பெற்று கீழிறங்கியுள்ள போதிலும் பொஹொட்டுவ 40 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது, இதற்கு காரணம்; பிளவு நிலைக்குத் தள்ளப்பட்டதினால் ஸ்ரீலசுக அதன் வழக்கமான ஜனரஞ்சகப் போர்வைக்கு மாறாக  போலிவேடம் பூண்டுள்ளது. பொஹொட்டுவ (கூட்டு எதிர்க்கட்சி மற்றும் பொதுஜன பெரமுன) மற்றும் ஸ்ரீலசுக என்பனவற்றை ஒன்று சேர்த்தால் சிறுபான்மை வாக்குகள் இல்லாமலே தேர்தலை வெற்றி கொள்ள முடியும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய பிரமுகரான சரத் அமுனுகமவின் உறுதியான அனுமதி, கோட்டபாய ராஜபக்ஸவின் கொள்கை கோட்பாட்டை ஒப்புக்கொண்டதின் மூலம் கிடைத்துள்ளதினால் ஸ்ரீலசுகவின் வலது சாரியினரும் அவரது வேட்பாளர் நியமனத்துக்கு ஆதரவளிப்பார்கள் என்று சாதாரணமாகவே அனுமானிக்க முடிகிறது. சஜித் ஐதேகவின் வேட்பாளராக இல்லாவிட்டால் அநேகமாக ஐதேக கிளாச்சியாளர்களும் தமது ஆதரவை வழங்குவார்கள்.

ஆய்வு விவாதங்களுக்கு அப்பால், 20வது திருத்தம் மற்றும் புதிய அரசியலமைப்பு என்பனவற்றை நாம் ஏன் ஆதரிக்கக்கூடாது என்பதற்கான காரணங்களையும் மற்றும் எங்களுக்கு ஏன் வலிமையான ஒரு தலைமை தேவை என்பதற்கான காரணங்களையம் சமீபத்தைய செய்தி எங்களுக்குத் தந்துள்ளது - முற்போக்கான “ரீலங்கா மாதிரியான அபிவிருத்தியை”    (கொட்பிரே குணதிலகா) நான் விரும்பியபோதிலும், விசேடமாக ஒரு பில்லியன் ஆட்களுக்கான ஒரு சந்தையை நாங்கள் கொண்டிராதபோதும் மற்றும் ஒரு போட்டிகரமான பலகட்சித் தேர்தல்களை நாங்கள் கொண்டிருப்பதினால், சீனாவின் அல்லது வேறு ஏதாவது ஒரு மாதிரியை பின்தொடருவதற்கான ஒரு முயற்சியை மேற்கொள்ளலாம்.

-தயான் ஜயதிலகா-

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
நன்றி -  தேனீ இணையம்

28 May 2018

மக்களுக்கு எதிர்கால நம்பிக்கையை ஊட்டும் ஐக்கியம் தமிழ் அரசியல் கட்சிகளிடையே அவசியம்.


கடந்த காலப் பகையை மறந்த - சமகாலத் தேவையை உணர்ந்த - மக்களுக்கு எதிர்கால நம்பிக்கையை ஊட்டும் ஐக்கியம் தமிழ் அரசியல் கட்சிகளிடையே அவசியம்.

தற்போதைய தமிழர் அரசியல் தலைமையின் மீது தமிழ் மக்கள் விரக்தியும் - வெறுப்பும் - சலிப்பும் உற்றிருக்கிறார்கள் என்பதைத்தான் நடந்து முடிந்த உள்ளுராட்சி அதிகாரசபைத் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியிருக்கின்றன. சரிபிழைகளுக்கு அப்பால் - பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு அப்பால் இலங்கையின் ஜனநாயகக் கட்டமைப்பிற்குள் வடக்கு கிழக்குத் தமிழர்களால் யுத்த முடிவிற்குப் பின்னர் கடந்த சுமார் பத்துவருட காலமாக தேர்தல்களிலே அங்கீகரிக்கப்பெற்ற அரசியல் தலைமையாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அடையாளம் காணப்பட்டிருந்தது. தலைவர்கள் என்று கருதப்பட்டோர் அல்லது தலைவர்கள் என்று மக்கள் நம்பிக்கை வைத்தவர்கள் தமக்கு வாக்களித்த மக்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் நடந்து கொள்ளாத போதிலும் - தலைவர்கள் என்று நம்பியவர்கள் நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி வஞ்சனை செய்து வாய்ச் சொல்லில் வீரர்களாக வலம் வந்த போதிலும்,தமிழர்களுடைய ‘அரசியல் கட்டுக் கோப்பு’ உடைந்து விடக்கூடாது என்பதற்காகவே ஆட்களைப் பார்க்காமல் கட்சியைப் பார்த்துத் தமிழரசுக் கட்சியின் வார்த்தைகளில் கூறுவதாயின் தும்புக்கட்டை நிறுத்தினாலும் கூட அந்தத் தும்புக்கட்டுக்கு - அது நன்றாகக் கூட்டாது என்று தெரிந்தும் கூட - வாக்களித்து வந்தார்கள்.

தமிழ் அரசியல் தலைவர்களும் ‘ஓடுகிறவனைக் கண்டால் துரத்துபவனுக்கு இலேசு” என்பது போலவும் ‘எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம்’ என்பது போலவும் மக்களின் அறியாமையையும் மக்களின் அவலங்களையும் தங்கள் அரசியலுக்கான முதலீடாகத் கருதித் தங்களை வளர்த்துக் கொண்டார்களே தவிர மக்களையும் அவர்களின் சமூக பொருளாதாரத் தேவைகளையும் அசட்டை செய்தார்கள். சமூகச் செயற்பாட்டுப் பின்னணியோ அல்லது போராட்டப் பின்னணியோ இல்லாது தேர்தலில் நிற்பதற்கென்றே தமிழரசுக்கட்சிக்கு வந்தவர்கள் எல்லாம் தலைவர்களாக வலம் வரத் தொடங்கினர். இப்போக்கினைத் தொடர்ந்தும் பொறுத்துக் கொள்ளமுடியாத  வடக்குகிழக்குத் தமிழர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் குறிப்பாகத் தமிழரசுக் கட்சிக்கு இத்தேர்தல் மூலம் எச்சரிக்கை மணி அடித்துள்ளனர். தமிழர் அரசியல் தலைமை குறிப்பாகத் தமிழரசுக் கட்சி தன்னைத் திருத்திக் கொள்ளவில்லையாயின் எதிர்காலத்தில் வடக்கு கிழக்குத் தமிழர்கள் தமிழ்த் தேசிய அரசியலில் சலிப்புற்று பௌத்த சிங்கள பேரினவாதத் தேசியக் கட்சிகளுக்குப் பின்னால் சென்று விடக்கூடிய சாத்தியப்பாட்டையும் - ஆபத்தையும் இத் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியிருக்கின்றன. ஆனால் தமிழரசுக் கட்சியோ இன்னும் தன் தவறை உணராமல்,தொங்குசபைகளாக விளங்குகின்ற அதாவது எந்தத் தமிழ்க்கட்சியும் ஆட்சியமைக்கக் கூடிய அறுதிப் பெரும்பான்மையைப் பெறமுடியாமற்போன சபைகளில்கூட குறிப்பாகப் பிரச்சினைக்குரிய கிழக்கு மாகாணத்தில் கூட ஏனைய தமிழ்க்கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு நிபந்தனைகள் போட்டது. உள்ளுராட்சிச் சபைகளில் அதாவது அடிமட்டத்தில் தமிழர்களை வலுப்படுத்த வேண்டும் என்ற யதார்த்தத்தைப் புறந்தள்ளிவிட்டு கட்சியினதும் கட்சியிலுள்ள சில தனிநபர்களினதும் நலன்களை நியாயப்படுத்துவதற்காகக் கொள்கை – கோட்பாடு என்று உதட்டளலில் மட்டும் வார்த்தை ஜாலங்களைத் தமிழரசுக் கட்சி நெட்டுருப் பண்ணியது. தமிழர்ளை ஐக்கியப்படுத்த முடியாத வார்த்தைச் சோடிப்புக்களால் தமிழர்களுக்கு என்ன இலாபம் கிடைத்தது.

சரி பிழைகளுக்கு அப்பால் அதாவது ஆயுதப் போராட்டத்தில் இருந்த பலவீனங்களான இயக்க மோதல்கள் - சகோதரப் படுகொலைகள் - ஆட்கடத்தல்கள் - கப்பம் வசூலிப்பு – அரசியல் படுகொலைகள் - அப்பாவித் தமிழ் சிங்கள முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல்கள் - மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளாத ஆயுத நடவடிக்கைகள் போன்ற பின்னடைவு அல்லது மறைக் காரணிகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால் எல்லாத் தமிழ்ப் போராளி இயக்கங்களுமே தமிழ்த் தேசியத்துக்காகப் போராடியவர்கள்தான். அனைத்துப் போராளி இயக்கங்களிலும் இணைந்து கொண்ட அனைத்து இளைஞர்களும் தங்கள் இளமைக்காலக் கனவுகளைப் புதைத்துவிட்டுச் சமூகத்திற்காகப் போராடப் புறப்பட்டவர்கள்தான். ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு இன்று ஜனநாயக அரசியலுக்கு வந்துள்ள எந்த இயக்கமும் உள்ளத்தளவில் தமிழ்த் தேசியத்துக்கு எதிரானவர்கள் அல்ல. தவறுகள் நடந்துள்ளன. அதுவேறு விடயம். ஆனால் சரிபிழைகளுக்கு அப்பால் அவர்களின் போராட்டத்தை - உயிர்த்தியாகத்தை – உறுதியை – துணிச்சலை– ஒர்மத்தை – வைராக்கியத்தை – வீரத்தைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. கொச்சைப்படுத்தவும் கூடாது.

தவறுவிடாத எந்தப் போராளி இயக்கங்களும் இல்லை. தவறுவிடாத எந்த மிதவாதக் கட்சிகளும் இல்லை. எல்லோரும்; சரியும் செய்திருக்கிறார்கள்@ எல்லோரும் பிழையும் செய்திருக்கிறார்கள். முழுமையாகச் சரி என்று எவரும் இல்லை. முழுமையாகப் பிழையென்றும் எவரும் இல்லை. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. அரசியல் என்றாலும் சரிதான்; அல்லது ஆயுதப் போராட்டம் என்றாலும் சரிதான் தமிழர்களைப் பொறுத்தவரை பழையதைக் கிண்டுவது குப்பையைக் கிளறுவதற்குச் சமன். எவரும் ‘புனிதன்’ என்று சொல்வதற்கில்லை. இன்று தமிழினம் வேண்டி நிற்பது பழையதை மறந்து எல்லாத் தமிழ் அரசியல்கட்சிகளும் அது மிதவாதக் கட்சியென்றாலும் சரி அல்லது  போராளி இயக்கமாகவிருந்து ஜனநாயக வழிக்கு மீண்ட அரசியல் கட்சியென்றாலும் சரி எல்லோரும் ஒன்றிணைந்து ஐக்கியப்பட்ட தளத்தில் செயற்பட வேண்டுமென்பதைத்தான். இத்தகைய யதார்த்தப் பின்னணியில்,போராட்ட காலத்தில் ‘புதினம்’ பார்த்திருந்தவர்கள் மற்றும் போராட்ட வலி உணராத புதியவர்கள் பலர் நேற்றுப் பெய்த மழைக்கு இன்று முளைத்த ‘காளான்’களாக அல்லது மாரி வெள்ளத்தில் அடிபட்டுவந்த ‘ஏறுகெழுத்தி’ களாக வந்து தமிழரசுக்கட்சியின் வீட்டுச் சின்னத்திலே தேர்தலில் நின்று குருடனுக்கு ‘வரால்’ அகப்பட்ட மாதிரிப் பதவி நாற்காலிகளைப் பிடித்துக் கொண்டு – அமைதிச் சூழலில் குளிர்காய்ந்து வண்ணம் போராளி இயக்கங்களிலிருந்து பரிணமித்த தமிழ் அரசியல்கட்சிகளைப் பார்த்துக் கைநீட்டித் ‘துரோகிகள்’ என்றும் ‘ஒட்டுண்ணிக் குழுக்கள்’ என்றும் கூறுவது யோக்கியாம்சம் பொருந்தியதாகத் தெரியவில்லை. தாங்கள் மட்டுமே தமிழ்த் தேசியவாதிகள் எனத்தம்பட்டம் அடிக்கும் தமிழரசுக் கட்சியிலுள்ள சில ‘ஆசாடபூதி’ களை –‘போலித் தமிழ்த் தேசிய வாதி’களை மக்கள் அடையாளம் கண்டு ஒதுக்காதவரை - அத்தகையோரை ஓரங்கட்டாதவரை தமிழர்களிடையே – தமிழ்க்கட்சிகளிடையே ஐக்கியம் ஏற்பட்ட மாட்டாது. பதவி சுகத்திற்காக மட்டும் தமிழரசுக்கட்சிக்குள் வந்துள்ள ‘வழிப்போக்கர்’ களால்தான் ஐக்கியத்திற்குப் பிரச்சினை.

உண்மையில் போராளி இயக்கங்களிலிருந்து பரிணமித்த தமிழ் அரசியல் கட்சிகள் எல்லாமே அவர்களுடைய சரிபிழைகளுக்கு அப்பால் ஐக்கியப்படவும் அதற்கான விட்டுக் கொடுப்புகளுக்கும் தயாராகவே உள்ளன. அந்த மனப்போக்கு அவர்களிடம் உள்ளது. ஏனெனில் சரிபிழைகளுக்கு அப்பால் ஒருகாலகட்டத்தில் உயிரைவிடவும் துணிந்து தமிழ்த் தேசியத் தளத்தில் காலூன்றி நின்று போராடியவர்கள் அவர்கள். ஆனால் தமிழரசுக்கட்சிதான் தனது அரசியல் ‘பூர்சுவா’ குணாம்சம் காரணமாகவும் - பாரம்பரியத் தமிழ்க்கட்சி என்ற ‘பண்ணையார்’ (நிலப்பிரபுத்துவ) மனப்பான்மையினாலும் -‘வாக்குவங்கி’ த் திமிரினாலும் ஐக்கியத்திற்கும் அதற்கான விட்டுக் கொடுப்புக்கும் தடையாக உள்ளது. இந்தத் தடை நீங்க வேண்டுமானால் அதாவது தமிழரசுக் கட்சி தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டுமானால், தேர்தல்களிலே போட்டியிடும் நோக்கத்திற்காக மட்டுமே தமிழரசுக்கட்சியில் இணைந்தவர்களும் சில தனிநபர்களின் தேவைகளுக்காகவும் வசதிக்காகவும் கட்சிக்குள் இழுத்துவரப்பட்டு இன்று கூலிக்கு மாரடிப்பவர்களும் கட்சியின் கடைசி வரிக்குத் தள்ளப்பட்டு தமிழரசுக் கட்சியுடன் நீண்டகாலத் தொடர்புடைய நிஜத் தமிழ்த்; தேசியவாதிகள் கட்சியின் முன்வரிசைக்கு நகர்த்தப்பெறல் வேண்டும். இது தாமதப்படுமானால் வடக்குக் கிழக்குத் தமிழர்கள் தமிழ்த்தேசிய அரசியலிலிருந்து அந்நியமாதல் தவிர்க்க முடியாததாகிவிடும். அதற்கான எச்சரிக்கை மணிதான் நடந்த முடிந்த உள்ளுராட்சி அதிகாரசபைத் தேர்தல் முடிவுகள்.

மக்களுக்காகத்தான் கட்சியே தவிர தனிநபர்களுக்காகவும் கட்சிக்காகவும் மக்கள் அல்ல. தமிழ் அரசியல் கட்சிகள் யாவும் பழைய பகைமைகளை மறந்து ஒரணியில் சங்கமித்து ஐக்கியப்பட்டால் மட்டுமே தமிழ் மக்களுக்கு எதிர்காலத்தின் மீது நம்பிக்கை ஏற்படும். இதுவே சமகாலத் தேவையுமாகும். 

-தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்-

நன்றி- தேனீ

14 May 2018

தமிழ்த்தேசியம் பேசும் தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

ஈழத்தமிழ்த்தேசிய இலக்கியத்தின் வளர்ச்சிக்கு அயராது உழைத்த மல்லிகை ஜீவாவை உரியமுறையில் கௌரவிக்க தமிழ்ச்சமூகம் முன்வரல் வேண்டும்

மல்லிகை ஜீவா என பின்னாளில்  அறியப்பட்டிருந்த டொமினிக்ஜீவா,  1966 இல் முதலாவது மல்லிகை இதழை வெளியிட்டார்.
 "ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி
யாதியினைய கலைகளில் உள்ளம்
ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர்
ஈன நிலைகண்டு துள்ளுவார்" 
என்னும் பாரதியின்  கவிதை வரிகளையே தாரக மந்திரமாக ஏற்று நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் வெளியான மல்லிகை மாத இதழ்,  தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தில் கஸ்தூரியார் வீதியில் அமைந்திருந்த ஜோசப் சலூன் என்ற சிகையலங்கார நிலையத்திலிருந்து வெளியாகி பின்னர், மானிப்பாய் வீதிக்கும் கே.கே.எஸ். வீதிக்கும் இடையில் ( ராஜா தியேட்டருக்கு பின்புறமாகச்சென்ற)  சிறிய ஒழுங்கையிலிருந்த சிறு கட்டிடத்தில் அமைந்த  மல்லிகைக்கான பிரத்தியேக அலுவலகத்திலிருந்து வெளியானது.
மல்லிகை முதலாவது இதழ் 1966 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வெளியானபோது  அதன் விலை 30 சதம்தான் என்பதை அறியும்போது ஆச்சரியம்தான்.
ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் ஒரு காலகட்டத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்த மல்லிகையும் எமது மக்களைப்போன்று வடக்கில் உருவான அசாதாரண சூழ்நிலைகளையடுத்து கொழும்பில் ஶ்ரீ கதிரேசன் வீதிக்கு இடம்பெயர்ந்து,  இறுதியில் அங்கிருந்தே சில வருடங்களுக்கு முன்னர்  தனது ஆயுளையும் நிறைவுசெய்துகொண்டது.
ஒரு  சிகையலங்காரத்தொழிலாளியாக வாழ்ந்து, பொதுவுடைமைக்கருத்துக்களினால்  ஈர்க்கப்பட்டு, அரசியல்வாதியாகிவிடாமல், இலக்கியவாதியாக தன்னை வளர்த்துக்கொண்டவர்  ஜீவா.சிறுகதை எழுதிக்கொண்டிருந்தவர் எவ்வாறு ஒரு இலக்கிய இதழை துணிந்து நடத்த முன்வந்தார் என்ற கதையை   தனது சுயசரிதையிலும் விபரித்திருக்கிறார்.  இந்தச்சரிதை  ஆங்கிலத்திலும் வெளியாகியிருக்கிறது.
முழுநேர  எழுத்தாளராக ஈழத்து இலக்கிய உலகில் அறிமுகமான ஜீவா, இதழாசிரியராகவே தனது வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டவர். போர் நெருக்கடி மிக்க, மின்சாரம் தடைப்பட்டிருந்த காலப்பகுதியிலும் அச்சுத்தாளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவிய சூழலிலும் யாழ்ப்பாணத்திலிருந்து மல்லிகை வெளியானது. அப்பியாசக்கொப்பித்தாளிலும் மல்லிகை அச்சாகியதை மறந்துவிடமுடியாது.
இலங்கை கலாசார அமைச்சின் சாகித்திய மண்டலம் உருவானவேளையில்  தமிழில் சிறுகதை இலக்கியத்திற்கான விருதை முதல் முதலில் பெற்றவரும் டொமினிக் ஜீவா என்பதும் முக்கியமான தகவல்.   அவர் குறிப்பிட்ட விருதைப்பெற்றுக்கொண்டு யாழ். ரயில் நிலையத்தில் வந்திறங்கியபொழுது,  அக்காலப்பகுதியில்   யாழ். மேயராக  இருந்த துரைராஜாவின்  தலைமையில் யாழ்நகர மக்களின்  சார்பில் மகத்தான வரவேற்பும்  அளிக்கப்பட்டது. 
அவ்வாறு யாழ். மக்களின் அபிமானத்திற்கு ஆளாகியிருந்த டொமினிக் ஜீவா,  போர் நெருக்கடியாலும்  விமர்சிக்கப்படவேண்டிய  சில  அரசியல்  அழுத்தங்களினாலும் கொழும்புக்கு இடம்பெயர்ந்து மல்லிகையை வெளியிட்டார். 
மல்லிகை பற்றி     இலங்கை பாராளுமன்றத்திலும் விதந்து பேசப்பட்டிருக்கும்  தகவலை   பாராளுமன்ற       குறிப்பேட்டில் ( ஹன்சார்ட்) பார்க்க முடிகிறது.
இலங்கை அரசமட்டத்தில் சாகித்திய விருது மற்றும் தேசத்தின் கண், சாகித்திய ரத்னா முதலான  விருதுகளையும் பெற்றிருக்கும் மல்லிகை ஜீவா, கனடா இலக்கியத்தோட்டத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றவர்.   முழுநேர எழுத்தாளராக, இதழாசிரியராக வாழ்ந்து, தற்பொழுது  கொழும்பின் புறநகரில் ஓய்விலிருந்தவாறு,  தமது எஞ்சிய காலத்தில், முந்திய காலம் பற்றி நனவிடை தோய்ந்துகொண்டிருக்கிறார்.  மல்லிகை ஜீவா அவர்களை பாரதியின் புதிய ஆத்திசூடியின் வெளிச்சத்திலும் அடையாளம் காணமுடியும்.
ஏறு போல் நட  - ஓய்தலொழி - குன்றென நிமிர்ந்து நில் - சிதையா நெஞ்சுகொள் - சுமையினுக்கு இளைத்திடேல் - தூற்றுதல் ஒழி - தோல்வியிற் கலங்கேல் - ரௌத்திரம் பழகு - வெடிப்புறப்பேசு - முதலான  பாரதியின் குணாதிசயங்கள்  ஜீவாவிடமும் நீடித்திருந்தது  என்பது பரகசியம்.
இலக்கிய இதழை யாழ். மண்ணில் மலரவைக்கவேண்டும் என்ற எண்ணக்கரு அவரது மனதில் விதைக்கப்பட்டவேளையில் என்ன பெயர் சூட்டலாம்...? என்று தனது இலக்கிய நண்பர்களுடன் கலந்துரையாடியிருக்கிறார்.
இதயம் - கமலம் - மலர் - செந்தாரகை - கலைஞன் முதலான பெயர்கள் ஆலோசிக்கப்பட்டு,  இறுதியில் ஜீவாவே மல்லிகை என்ற பெயரை தேர்வுசெய்துள்ளார். மல்லிகை வெண்மையானது. வாசம் நிரம்பியது. ஏழை முதல் செல்வந்தன் வரையில் நல்ல நிகழ்வுகளுக்கும் துயர நிகழ்வுகளுக்கும் பயன்படுத்தப்படுவது, அதனால் எளிமையானது முதலான அபிப்பிராயங்களே அவர் மனதில் எழுந்திருக்கின்றன.
மல்லிகை வெளிவரத்தொடங்குவதற்கு முன்பே ஜீவாவும் வெண்ணிற ஆடைகளையே அணியத்தொடங்கிவிட்டார். அவரை வெள்ளை நேஷனல் வெள்ளை வேட்டியுடன்தான் எங்கும் காணலாம். அவர்  சார்ந்திருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடுகள், கூட்டங்களில் மாத்திரம் தோளிலே சிறிய சிவப்பு துண்டை அணிந்திருப்பார்.
இலங்கையிலும் தமிழகத்திலும் பல சிற்றிதழ்கள் சிலரது ஆர்வத்தின் நிமித்தம் கூட்டு முயற்சியாகத்தான் வெளிவந்துள்ளன. இடையில் அவை குழுமோதல்களினால் அற்பாயுளிலும் மறைந்தன. அத்தகைய இதழ்களுக்கென  நீண்ட பெயர்ப்பட்டியல் உண்டு.
பொதுவுடைமையில் நம்பிக்கை வைத்திருந்த மல்லிகை ஜீவா, தமது மல்லிகை விடயத்தில், கூட்டுச்சேர்தல் -  கூட்டுறவு அடிப்படை - குழுவாக செயற்படல் முதலான வழிமுறைகளை பின்பற்றவில்லை.சுமார்  47  வருடகாலமாக  வெளிவந்த  மல்லிகை  கடந்த  சில வருடங்களாக வெளியாகவில்லை.  அதற்கு பலரும் பல காரணங்களைச்சொல்கின்றனர். 
முன்னர்   யாழ். ரயில்  நிலையத்திற்கு  அருகில்  தமது  மனைவி மக்களுடன்    வாழ்ந்த  ஜீவா   தற்பொழுது  கொழும்பில்  மட்டக்குளிய - காக்கை  தீவில்  மகன்  திலீபன்  குடும்பத்துடன்  வசிக்கிறார்.  முன்னர் அவரைச்சுற்றி   மல்லிகை   இதழ்களும்  மல்லிகை   வெளியீடுகளும் நூல்   மதிப்புரைக்கு  வந்த    எழுத்தாளர்களின்  நூல்களும்தான் இருக்கும்.   ஆனால்,  இப்பொழுது  அவரைச்சுற்றி பேரக்குழந்தைகள்தான்  இருக்கிறார்கள்.
சாதாரண குடும்பத்தில்   பிறந்து  தனக்குத்தெரிந்த  தொழிலையே   செய்து வாழ்ந்தவரை -  தோழர்  கார்த்திகேசன்  மாஸ்டர்  இடதுசாரி அரசியலுக்குள்   அழைத்து  வந்தார்.   ராஜகோபாலன்  என்ற  இலக்கிய   ஆர்வலர்  இலக்கியத்தின்பால்   திருப்பினார்.
 கணித வாத்தியாரின்   கணக்கை   திருத்தியதனால் "உனக்கெதற்குப்படிப்பு....போய்   சிரையேன்டா..." -  என்று அவமானப்படுத்தியதும்   பள்ளிப்படிப்புக்கு  முழுக்குப்போட்டார். மல்லிகை   நடத்தியபொழுது  இடதுசாரிச் சிந்தனையாளர்களினதும்  முற்போக்கு  இலக்கியவாதிகளினதும்  சகவாசத்தினால்  தன்னையும் சர்வதேசியவாதியாக்கிக்கொள்ள  முயன்று  பிற  மொழி இலக்கியங்களுக்கும்   மல்லிகையில்  களம்  வழங்கினார்.
பல  வருடங்கள்  மல்லிகை   வெளியானது.  எத்தனையோ அரசியல், சமூக, பொருளாதர நெருக்கடிகளுக்கு மத்தியில்  தொடர்ந்தும்   இலங்கையெங்கும்  அலைந்து  திரிந்து  மல்லிகையை விநியோகித்து   ஈழத்து  தமிழ்த்தேசிய  இலக்கியத்தை  வளர்த்தார். வளம்படுத்தினார்.
"பிறர்    ஈன  நிலைகண்டு  துள்ளுவர்..." என்ற பாரதியின் மந்திரத்தை மல்லிகையில்   உச்சாடனம்  செய்த  ஜீவா   இன்று  எப்படி இருக்கிறார்....?  
இலக்கிய  உலகில்  கனவுகளை   விதைத்தவர்,  இன்று  ஒரு  புதிய கனவுலகில்   வாழ்கிறார்.   47  ஆண்டுகளை   நெருங்கிய  மல்லிகை   50  ஆண்டுகளை நிறைவு  செய்துவிடவேண்டும்  என்றுதான்  மல்லிகையை   நேசித்த  பலரும் எழுதினார்கள்.    பேசினார்கள்.   தமது  முகநூல்களில்  பதிவுசெய்தார்கள். 

.நூற்றுக்கணக்கான   தமிழ்,  முஸ்லிம்,  சிங்கள  படைப்பாளிகள் - கல்விமான்கள் , அறிஞர்களின்  வாழ்வையும்  பணிகளையும் சித்திரிக்கும்   கட்டுரைகளையும்  அவர்தம்  படங்களையும்  பதிவுசெய்த   மல்லிகை   இன்று  நூலகம்  இணையத்தில்  மாத்திரமே பதிவாகியிருக்கிறது.   பலரதும்  வீடுகளில்  பல்கலைக்கழகங்களில் நூலகங்களில்   முன்னைய  பிரதிகள் ,   ஆண்டு மலர்கள்  இருக்கின்றன.ஜீவா   இலங்கையர்களை   மட்டும்  மல்லிகையில்  கனம் பண்ணவில்லை.   இந்திய  சோவியத்  உட்பட  பல  சர்வதேச படைப்பாளிகளுக்கும்    உரிய  மரியாதையை   வழங்கினார்.
ஒரு   சமயம் The Island   பத்திரிகை   வெளியிடும்  நிறுவனம் வெளியிட்ட   திவயின  சிங்கள  ஏடு  ஜீவாவை   பேட்டி கண்டு  எழுத விரும்பி   நாள்   குறித்தது.   அவருக்கு  சிங்களம்  தெரியாது.   என்னை உடன்  அழைத்துச்சென்றார்.   அந்த  நேர்காணல்  சந்திப்பை  கொழும்பு கலாபவனத்தில்  (Art Gallery ) ஒழுங்கு செய்து  தந்தவர்  கலாசார திணைக்களத்தில்  செயலாளராக  பணியாற்றிய  தமிழ்  அபிமானி கே.ஜி.அமரதாஸ.
அவ்வேளையில்  குட்டிமணி   தங்கத்துரை  முதலானோர்   சிறையில்  இருந்தனர். அமிர்தலிங்கம்   எதிர்க்கட்சித்தலைவராக  பிரபலமாகியிருந்தார். சிங்கள   வாசகர்களுக்கு  தமிழ்  இலக்கியம்  போதியளவு  அறிமுகம் இல்லாதிருந்த   காலம்.   ஆனால், மார்ட்டின்  விக்கிரமசிங்கா,   டி.பி. இளங்கரத்னா,   குணதாச  அமரசேகர,  கருணாசேன  ஜயலத்,  ஜீ. பி.சேனாநாயக்கா,   குணசேன  வித்தான,   ஆரியரத்தின  வித்தான, கே.ஜயத்திலக்க,   மடவள  எஸ்.  ரத்நாயக்கா  போன்ற இலக்கியவாதிகள்   தமிழ்  வாசகர்களுக்கு  அறிமுகமாகியிருந்தனர்.
ஜீவா,  அந்த  நேர்காணலில்  மேலே   குறிப்பிட்ட  சிங்கள எழுத்தாளர்களின்   பெயர்களைச்சொல்லி,  இவர்களையெல்லாம் எமது   தமிழ்   இலக்கிய  வாசகர்கள்  தெரிந்து  வைத்திருக்கிறார்கள். ஆனால் , சிங்கள  வாசகர்களுக்கு  தெரிந்த  பெயர்கள் அமிர்தலிங்கமும்   குட்டிமணியும்தான்.   எனச்சொன்னதும்,  அந்த சிங்கள  நிருபர்  அசந்துவிட்டார்.  பின்னர்  தன்னை சுதாகரித்துக்கொண்டு,    இந்தக்கருத்தையே   இந்த  நேர்காணலுக்கு தலைப்பாக  எழுதுவேன்   என்றார்.
அந்த  நிருபர்  சொன்னவாறே  அந்தத்தலைப்பு   ஜீவாவின் தர்மாவேசக்குரலாக   அந்தச்சிங்கள  ஏட்டில்  ஒலித்தது.
2001  இல்    நாடாளுமன்றத்தில்    அஸ்வர்  எம்.பி.,  மல்லிகை   பற்றி உரையாற்றியபொழுது    ஜீவாவையும்  அவரது  தேசிய  உடையையும் விதந்து   போற்றியிருந்தார்.   இந்தத்தகவல் அரசின் நாடாளுமன்றப் பதிவேட்டில் (Hansard  - - 04-02-2001)   இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் முதல் தடவையாக 2011 ஜனவரியில் நடந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டிற்கான கனவை விதைத்தவரும் அவர்தான்!
பிரதேச   மொழி வழக்குகள்   ஆய்வுகளில்  பேசுபொருளாவதற்கு தூண்டுகோலாக   இருந்தவர்.   ஐரோப்பிய  நாடுகளில்  நடக்கும் இலக்கியச்சந்திப்பிற்காக   அழைக்கப்பட்டு  பரிஸிலும்  லண்டனிலும் பாரட்டப்பட்டவர்.   சோவியத்தின்  அழைப்பில்  சென்று  திரும்பியவர். தமிழக   முற்போக்கு  எழுத்தாளர்  சங்கம்,  கலை,  இலக்கிய பெருமன்றம் ,   எட்டயபுரம்  பாரதி  மன்றம்,  கிறிஸ்தவ இலக்கியச்சங்கம், (C.L.S)  முதலானவற்றின்  அழைப்பில்  சென்றவர்.
மணிவிழா,  பவள  விழா  முதலானவற்றை   கடந்து  வந்திருக்கும் மல்லிகை ஜீவாவுக்கு இந்த ஆண்டு ஜூன் மாதம் 91 வயது பிறக்கிறது.  கொழும்பின் புறநகரத்தில்  மட்டக்குளியில் , காக்கைதீவில்  தனது மகன் திலீபன் குடும்பத்தினருடன் இளைப்பாறுகிறார்.
ஈழத்தமிழ்த்தேசிய இலக்கியத்தின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டு, ஓய்வு ஒழிச்சலின்றி இலங்கையின் வீதியெங்கும் அலைந்து திரிந்து தமிழ் இலக்கிய இயக்கம் நடத்தியிருக்கும் மல்லிகை ஜீவா தற்போது உடல் நலக்குறைவோடு வீட்டில் ஓய்வுஎடுக்கின்றார்.
தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டிருக்கும் எங்கள் தமிழ்த்தலைவர்கள் அவரைச்சென்று பார்க்கமாட்டார்களா?  என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடே  இந்தப்பதிவு!
அண்மையில் கொழும்பில் மறைந்திருக்கும்,  இலங்கை சிங்களப்படங்களை சர்வதேசமும் விழியுயர்த்திப் பார்க்கவைத்த திரைப்பட மேதை லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் மறைவதற்கு முன்னரே தேசிய மட்டத்திலும் அரசமட்டத்திலும் சிங்களத் தலைவர்கள், பிரதமர், ஜனாதிபதிகளினால் உரிய முறையில் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
லெஸ்டர் இலங்கை சிங்கள மக்களின் ஆத்மாவையும் அவர்களின் பண்பாடு கலாசார விழுமியங்களையும் தான் படித்த சிங்கள படைப்பிலக்கியங்களிலிருந்து தமது திரைப்படங்கள் ஊடாக வெளிக்கொணர்ந்தவர். அந்தவகையில் அவர் வாழும்போதும் கௌரவிக்கப்பட்டு, மறைந்த பின்னரும் அவருக்குரிய அரச மரியாதையும் வழங்கப்பட்டு, துக்க தினமும் அனுட்டிக்கப்பட்டது.
இந்தப்பின்னணிகளுடன் ஈழத்தமிழ்தேசிய இலக்கியத்திற்காக தனது வாழ்வையே அர்ப்பணித்திருக்கும் டொமினிக் ஜீவா என்ற மல்லிகை ஜீவா அவர்களுக்கு இலங்கையில் தமிழ்த்தேசியம் பேசும் தலைவர்கள் என்ன செய்தார்கள்? என்பதே இங்கு முன்வைக்கப்படும் கேள்வியாகும்.
சமூகத்திற்காகவும் அச்சமூகத்தின் கலை, இலக்கிய, பண்பாட்டுக்கோலங்களின் ஆத்மாவை வெளிக்கொணர்வதற்காகவும் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக பாடுபட்டுள்ள ஒருவருக்கு, எமது தமிழ் அரசியல் அரங்கில் கோலோச்சும் தமிழ்த்தலைவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்?
இந்த இடித்துரைப்பு,  அவர்களை சினங்கொள்ளவைப்பதற்காக அல்ல, சிந்திக்கவைப்பதற்காகவே!
தமிழ் சமூகத்திற்காக வாழ்ந்தவர்கள் மறைந்தபின்னர், ஊடகங்களில் ஏட்டிக்குப்போட்டியாக அனுதாப அஞ்சலி உரை வெளியிட்டு,  தமது இருப்பை காண்பிப்பதற்கு முன்னர், அவர்கள் வாழும் காலத்திலேயே அவர்கள் கண்முன்னாலேயே உரிய கௌரவத்தை வழங்குவதற்கு எமது தமிழ்த்தேசியத்தலைவர்கள் முன்வரல் வேண்டும்.
எங்கள் மல்லிகை ஜீவாவை கொண்டாடுவோம்.
நன்றி- தேனீ இணையம்