22 October 2009

போராளிச் சிறுவர்களுக்கு புனர்வாழ்வு

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள பெற்றோர் தங்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழ்ந்த ஒரு காலம் உண்டு.

பாடசாலைக்குச் சென்ற பிள்ளை பாதுகாப்பாக வீட்டுக்கு வருமா என்ற சந்தேகத்துடனேயே அக் காலத்தில் பெற்றோர் இருந்தனர். அது புலிகள் சிறுவர்களைப் பலவந்தமாகப் பிடித்துத் தங்கள் படையணியில் சேர்த்த காலம்

புலிகளினால் பலவந்தமாகப் பிடிக்கப்பட்டு ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை ஏராளம். இவ்வாறு பிடிக்கப்பட்டவர்களில் ஒரு பகுதியினர் இன்று உயிருடன் இல்லை.

சிறந்த கல்விமான்களாக மிளிர வேண்டிய இளைஞர் சமூகம் புலிகளினால் அநியாயமாக அழிக்கப்பட்டுவிட்டது. தமிழ் மக்களுக்குப் புலிகளினால் ஏற்பட்ட மோசமான பாதிப்புகளுள் இதுவும் ஒன்று.

வன்னிப் பிரதேசத்துக்குள் புலிகள் மட்டுப்பட்டிருந்த இறுதிக் காலத்தில் கூட சிறுவர்களைப் பலவந்தமாகப் பிடித்துச் செல்லும் வழக்கத்தை அவர்கள் கைவிட வில்லை.

பெற்றோர் கதறி அழுவதையும் பொருட்படுத்தாமல் பிள்ளைகளைப் பலவந்தமாக பிடித்துச் சென்று ஆயுதப் பயிற்சி அளித்தார்கள்.யுத்தத்தில் புலிகள் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டதுடன் இப்பிள்ளைகளில் வாழ்வில் சூழ்ந்திருந்த இருள் நீங்கியது எனலாம்.
யுத்தத்தில் புலிகள் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து படைகளிடம் சரணடைந்தவர்களும் படையினரால் கைது செய்யப்பட்டவர்களுமான புலி இயக்க உறுப்பி னர்களுள் பாரிய குற்றச் செயல்கள் புரிந்தவர்களைத் தவிர ஏனையோருக்குப் புனர்வாழ்வு அளிக்கும் நடைமுறை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது. சிறுவர்களுக்குப் புனர்வாழ்வளிப்பது இத்திட்டத்தின் கீழ் முக்கிய இடத்தை வகிக்கின்றது.

புலிகள் இயக்கத்தில் போராளிகளாக இருந்த சிறுவர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கும் செயற்பாடு வவுனியா பூந்தோட்டம் சிறுவர் பாதுகாப்பு மற்றும் புனர்வாழ்வு மையத்தில் மேற்கொள்ளப்படுகின்றது.

இங்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 81 சிறுவர்களும் 63 சிறுமிகளும் கல்வியைத் தொடர்வதற்காக நேற்று முன்தினம் இரத்மலானை இந்துக் கல்லூரியில் சேர்க்கப்பட்டனர்.

இது சிறுவர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் அரசாங்கம் செய்துகொடுத்திருக்கின்றது. மேலும் 114 சிறுவர்கள் இரண்டாவது கட்டமாகப் பாடசாலையில் சேர்க்கப்படவுள்ளனர்.

புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டதாலேயே தங்கள் கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்பு இச் சிறுவர்களுக்குக் கிடைத்திருக் கின்றது.

தொடர்ந்தும் புலிகள் இயக்கத்தில் இருக்கும் நிலை இருந்திருக்குமேயானால் கல்வியைத் தொடர்வது பற்றிய பேச்சுக்கே இடம் இருந்திருக்காது.

இவர்கள் தங்கள் வாழ்க்கையையே இளமையில் முடிந்திருப்பார்கள். இப்போது இவர்க ளுக்குப் பாதை திறந்திருக்கின்றது. எதிர்காலத்தில் இவர்களில் பலர் பலவேறு துறைகளில் நிபுணர்களாக மிளிரலாம்.

புலிகளைத் தோற்கடித்ததுடன் கடமை முடிந்துவிட்டதென அரசாங்கம் கருதவில்லை என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். இடம் பெயர்ந்தவர்களின் மீள் குடியேற்றம், வடக்கில் இடம்பெறும் அபிவிருத்தி நடவடிக்கைகள், சிவில் நிர்வாகத்தையும் ஜனநாயக வாழ்க்கை முறையையும் ஏற்படுத்துவதற்கான துரித நடவடிக்கை என்பன வடக்கில் வசந்தம் வீசச் செய்வதற்கான ஏனைய செயற்பாடுகள்.

தமிழ் மக்களின் நலனில் அக்கறை உள்ளதாகக் காட்டிக் கொள்ளும் சில தலைவர்களுக்கு இவை தெரியாமலிருப்பது வேடிக்கையாக உள்ளது.

-தினகரன்-

No comments:

Post a Comment