25 November 2009

2008ம் ஆண்டு தேர்தல் இடாப்பு
ஒருகோடி 41 இலட்சம் பேர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி

ஜனாதிபதித் தேர்தல், 2008 வாக்காளர் இடாப்பின் பிரகாரம் நடத்தப்படவுள்ளதோடு இத் தேர்தலில் ஒரு கோடி 40 இலட்சத்து 88 ஆயிரத்து 500 பேர் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்தது.

தேர்தலில் வாக்களிக்க அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டிருப்பதால் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு தேர்தல் திணைக்களமும் ஆட்பதிவுத் திணைக்களமும் தற்காலிக அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளன.

இதேவேளை, இடம்பெயர்ந்துள்ள மற்றும் மீள்குடியேற்றப்பட்டு வரும் மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக விசேட ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாகவும் தேர்தல் திணைக்களம் கூறியது.

ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டி நடத்துவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளதையடுத்து தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடி 33 இலட்சத்து 27 ஆயிரத்து 160 பேர் தகுதி பெற்றிருந்தனர். கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இம்முறை தேர்தலில் 7 இலட்சத்து 61 ஆயிரம் பேர் கூடுதலாக வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இம்முறை வாக்களிக்கத்தகுதி பெற்றவர்களில் வடக்கு, கிழக்கு உட்பட சுமார் 26 இலட்சம் பேருக்கு அடையாள அட்டை இல்லையென ஆட்பதிவுத் திணைக்களம் கூறியது. எனவே நடைபெறவுள்ள ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களுக்காக 2010 ஆம் ஆண்டில் மட்டும் செல்லுபடியாகக் கூடியவாறு தற்காலிக அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்பதிவுத் திணைக்கள பிரதி ஆணையாளர் திருமதி அபேசிறி குணவர்தன கூறினார்.

தற்காலிக ஆளடையாள அட்டை வழங்குவதற்காக வடக்கு, கிழக்கு உட்பட நாடுபூராவும் 331 ஓய்வுபெற்ற அதிகாரிகளையும் புகைப்படப் பிடிப்பாளர் களையும் நியமிக்கவும் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இவர்கள் சகல பிரதேச செயலக மட்டத்திலும் நியமிக்கப்பட்டு தேர்தலுக்கு முன் தற்காலிக அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இதேவேளை நிரந்தர தேசிய அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கைகள் வழமைபோல முன்னெடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தேர்தல் திணைக்களமும் கிராம உத்தியோகஸ்தர்களூடாக தற்காலிக அடையாள அட்டைகளை வழங்க ஒழுங்குகள் செய்துள்ளது.

அரசியல் யாப்பின் பிரகாரம் வாக்களிக்கத் தகுதி உள்ள சகலருக்கும் வாக்களிக்க வசதி அளிக்கப்படவேண்டும் எனவும், எனவே அவர்கள் தங்க வைக்கப்பட்ட பிரதேசங்களிலோ மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளிலோ வாக்களிக்க விசேட ஒழுங்குகள் செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.
-தினகரன்-

No comments:

Post a Comment