27 November 2009

மீள் குடியேற்றத்தை அடுத்து அரசியல் தீர்வு



இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் பணி துரிதகதியில் நடைபெறுகின்றது. இப்பணியை இயன்றளவு விரைவில் பூர்த்தி செய்ய வேண்டுமென ஜனாதிபதி விடுத்த பணிப்புரைக்கமைய, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ மிகுந்த செயலீடுபாட்டுடன் இவ்விடயத்தை முன்னெடுக்கின்றார்.

இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் தஞ்சமடைந்த மக்களில் அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் தங்கள் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டு விட்டனர். மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த இடம்பெயர்ந்தவர்கள் அனைவரும் ஏற்கனவே மீளக்குடியமர்த்தப்பட்டு விட்டனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை மீளக்குடியமர்த்தும் பணி நேற்றுடன் பூர்த்தியடைந்து விட்டது. மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களில் ஒரு பகுதியினர் மீளக் குடியேற்றப்பட்டுவிட்டனர்.

புலிகளால் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளே எஞ்சியுள்ளோரைக் குடியேற்று வதற்குத் தடையாக உள்ளன. கண்ணிவெடிகளை அகற்றும் பணி முன்னுரிமை அடிப்படையில் முன்னெடுக்கப்படுவதால் இம் மக்களும் விரைவில் மீளக்குடியமர்த்தப்படுவார்களென நம்பலாம்.

மக்களை மீளக் குடியமர்த்துவதுடன் தனது பொறுப்பு முடிந்துவிட்டது என அரசாங்கம் கருதவில்லை. இம் மக்கள் தங்கள் நாளாந்த வாழ்க்கையை நடத்திச் செல்வதற்குத் தேவையான சகல உதவிகளையும் அரசாங்கம் வழங்குகின்றது. பண உதவியும் இதில் அடங்கும்.

இடம் பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றுவதில் அரசாங்கம் காட்டுகின்ற அக்கறையும் அடைந்துள்ள முன்னேற்றமும் எதிரணியினர் ஆரம்ப நாட்களில் மேற்கொண்ட பிரச்சாரத்தைப் பொய்யாக்கிவிட்டன. புலிகளின் பிடியில் சிக்கியிருந்த மக்களை அரசாங்கம் விடுவித்து நிவாரணக் கிராமங்களில் தங்கவைத்த காலத்தில் எதிரணியினர் வாய்க்கு வந்தபடியெல்லாம் பிரசாரம் செய்தார்கள்.

சர்வதேச மட்டத்துக்கும் இப்பிரசாரத்தை எடுத்துச் சென்றதன் மூலம் தேசத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் இவர்கள் செயற்பட்டார்கள். இப்படியெல்லாம் பொறுப்பற்ற விதமாகப் பிரசாரம் செய்தவர்கள் இன்று மௌனம் சாதிக்கின்றார்கள்.

தமிழ் மக்களின் நலன் மீது கொண்டுள்ள அக்கறையினால் அன்று அப்பிரசாரத்தை மேற்கொண்டதாக இவர்கள் கூறுவார்களேயானால் அதே அக்கறையை இன்றும் வெளிப்படுத்த வேண்டும். மீள்குடியேற்றம் துரிதமாகவும் திருப்திகரமாகவும் நடைபெறுவதை வரவேற்க வேண்டும்.

இடம்பெயர்ந்த மக்களின் அவல நிலையைத் தங்கள் சுயலாபத்துக்காக அரசியலாக்கினார்கள் என்பதையே இவர்களின் இன்றைய மௌனம் புலப்படுத்துகின்றது. அன்று இவர்கள் வடித்தது நீலிக்கண்ணீர் என்பது இன்று தெளிவாகிவிட்டது. இடம்பெயர்ந்தவர்கள் மாத்திரமன்றி, சிறுபான்மையினர் அனைவரும் இவர்களின் வெளிவேடத்தை விளங்கிக் கொள்ள வேண்டும்.

தமிழ்பேசும் மக்கள் தொடர்பான அரசாங்கத்தின் வேலைத் திட்டம் மீள்குடியேற்றத்துடன் நின்றுவிடப் போவதில்லை. மீள் குடியேற்றம் பூர்த்தியடைந்ததும் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சி முன்னெடுக்கப்படவுள்ளது.

நிலையான சமாதானத்துக்காக வடக்கு, கிழக்கு மக்கள் உட்பட அனைத்து மக்களினதும் அங்கீகாரத்தைப் பெறுவதற்காகவே ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டி நடத்துவதாக ஜனாதிபதி கூறியிருப்பதை இங்கு நினைவூட்டலாம். அரசியல் தீர்வையும் சமாதானத்தையும் நாடி நிற்பவர்களுக்கு இத்தேர்தல் நல்ல சந்தர்ப்பம்.

தினகரன்

No comments:

Post a Comment