11 January 2010

நான் இந்திய அரசின் கைப்பாவையா?முன்னாள் வடக்கு கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் அ. வரதராஜபெருமாள்

நீங்கள் மீண்டும் இலங்கை செல்ல விரும்புகிறீர்களா?

நிச்சயமாக! ஆனால், எப்போது என்பதை இன்னமும் நான் தீர்மானிக்கவில்லை. மிக விரைவில் செல்ல வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.

நடக்கவிருக்கும் தேர்தலில் பொன்சேகா வெற்றி பெறுவது நல்லதா? மஹிந்தா வெற்றி பெறுவது நல்லதா?யார் வெற்றி பெற்றால் தமிழர்களுக்கு நல்லது?

இரண்டு பேரும் சிங்களஇனம்சார் அரசியல் அபிப்பிராயங்களுக்கே கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதேவேளை மஹிந்தாவின் அரசியல் நிலைப்பாடுகள் பற்றி கடந்த நான்கு ஆண்டுகளாக அனைவருக்கும் ஏற்கனவே தெரியும். இந்தியாவுக்கும் மஹிந்தா அரசாங்கத்துக்கும் உள்ள நல்லுறவும் வெளிப்படையான ஒன்றாகும். ஆனால் சரத் பொன்சேகாவின் அரசியல் நிலைப்பாடுகள் எப்படி இருக்கப் போகின்றது என்பது இன்னமும் மர்மமான ஒரு விடயமே. அவர் அதிமுரண்பாடானவர்களின் ஆதரவிலேயே தேர்தல் களத்தில் நிற்கிறார். தேர்தலின் பின்னர் பொன்சேகா எங்கே சாருவார் என்பது இன்னமும் புரியாத ஒன்றாகவே உள்ளது. ரணில் விக்கிரமசிங்கா அவரின் வெற்றியில் ஏறி அதிகாரத்தைப் பிடிக்கக் காத்துக் கொண்டிருக்கிறார். ஜேவிபி அவரைக் கொண்டு தனது சிங்களபேரினவாத சாதனைகளை நிகழ்த்தி விடும் எண்ணத்தில் இருக்கிறது. பொன்சேகாவோ தமிழ் மக்களின் அபிலாஷைகளை ஏற்பார் என்பதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை. தமிழர் சிங்களவர்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் என அவர் கூறிய கருத்தை அவர் இன்னமும் மாற்றிக் கொண்டதாக இல்லை. சரத் பொன்சேகா மீது இந்தியாவுக்கு அப்பாற்பட்ட நாடுகளின் செல்வாக்கு மிக அதிகமாக இருக்கப் போகின்றது என்பதை இப்போதே புரிந்து கொள்ள முடிகின்றது. இவ்வாறான ஒரு நிலைமையில் தமிழர்கள் மீண்டும் ஒருமுறை ஜனாதிபதிப் பதவில் வெறுமனே ஓர் ஆள் மாற்றம் செய்யும் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டுமா? ஏன்ற கேள்வியே எனது பதிலாகும்.

தமிழர்களின் எதிர்கால நன்மை பெரும்பாலும் தமிழர்களின் அரசியற் தலைவர்கள் யார்? தமிழர்களிற் பெரும்பான்மையானவர்கள் எவ்வகையான அரசியற் கோரிக்கைகளுக்கு ஆதரவு கொடுத்து அதற்கான இயக்கத்தில் பங்குதாரர்களாக ஆகப் போகிறார்கள்? என்பவற்றைப் பொறுத்ததே தவிர ஜனாதிபதி யார் என்பதைத் தீர்மானிப்பதில் தமிழர்களின் எதிர்கால நன்மைகள் பற்றிய விடயம் ஒரு சிறிதளவே தங்கியுள்ளது.

இதுநாள் வரை எங்கே இருந்தீர்கள்? என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? இலங்கையில் போர் நடந்த போது நீங்கள் இங்கே இருந்திருக்கிறீர்கள்… மீண்டும் இலங்கை அரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் உண்டா?

1990ல் பிரேமதாசா – பிரபாகரன் உறவு எங்களை இலங்கையில் இருக்க முடியாமல் செய்தது. 1998 வரையான எட்டு ஆண்டுகள் இந்தியாவில் இருந்தேன். சந்திரிகா அவர்கள் 1994ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த போதும் 1998ன் இறுதிக் கட்டத்திலேயே. நான் மீண்டும் இலங்கை செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. 2002ம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கா – பிரபாகரன் உறவு ஆரம்பமானதைத் தொடர்ந்து நான் இலங்கையில் இருக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. அதனால் 2003ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் இருந்து மீண்டும் இந்தியாவிலேயே இருக்க வேண்டியாயிற்று.

எனது நிலையை நீங்கள் புரிந்த கொள்ள வேண்டுமானால், இந்தியாவில் உங்களுடைய மாநிலத்தில் புலிகள் போன்ற ஒரு பயங்கரவாத ஆயுதக் குழுவுக்கு நீங்கள் ஆதரவு கொடுத்து, உங்கள் நாட்டு மத்திய அரசாங்கமும் இராணுவமும் உங்கள் மாநில ஆட்சிக்கு எதிராகச் செயற்படுவதற்கு அந்த ஆயுதக் குழுவுக்கு ஆயுதங்களை அள்ளிக் கொடுத்து நட்பாகவும் துணையாகவும் இருந்தால் உங்கள் மாநில முதலமைச்சர் என்ன செய்ய வேண்டியேற்பட்டிருக்கும் எனக் கற்பனை பண்ணிப் பார்த்தீர்களேயானால் எனது நிலைமையை உங்களால் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி ஆனபின் இலங்கையில் யுத்தநிலைமை வீரியம் கொண்டது. தமிழ்க் கட்சிகள் ஒன்றில் புலிகளுக்கு எடுபிடிகளாக இருக்க வேண்டும் அல்லது சிறீ லங்கா அரசாங்கத்துக்கு அனுசரணையாக இருக்க வேண்டும். வேறுவகையாக அங்கு எந்தத் தமிழரும் சுதந்திரமாக அரசியலில் இருக்க முடியாது என்ற நிலைமை இருந்ததால் புலிகள் இருக்கும் வரை நான் மீண்டும் செல்லும் நிலைமை ஏற்படவில்லை.

இப்பொழுது நிலைமைகள் மிகவும் பாரிய அளவில் மாற்றத்துக்கு உள்ளாகியுள்ளது. புலிகளால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட இப்பொழுதுதான் தங்களது சொந்தக் கருத்துக்களை வெளியிடுகிறார்கள். அவர்கள் இப்போது அரசை மட்டுமல்ல புலிகளையும் கண்டித்து விமர்சனம் செய்கிறார்கள். இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் இப்பொழுதுதான் தமிழ்மக்கள் சுதந்திரமாக பேசுகிறார்கள்;, பயமில்லாது நடமாடுகிறார்கள். சட்டபூர்வமான கட்சிக்காரர்களை உயிர்ப்பயமின்றி சந்திக்கவும் கலந்துரையாடவும் தயாராக இருக்கிறார்கள். எனவே மிகவிரைவில் மீண்டும் இலங்கை செல்வேன். ஆனால் தேர்தல் அரசியலில் பங்குபற்றும் எண்ணம் எதுவும் என்னிடம் நிச்சயமாகக் கிடையாது.

இன்றைய நிலையில் எந்தமாதிரியான தமிழர் இயக்கங்கள் இலங்கைத் தமிழர்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என்று கருதுகிறீர்கள்?

இன்னுமொருதடவை தமிழர்களின் உரிமைகள் குறித்து ஆயுதம் தாங்கிய இயக்கமொன்று எந்தவொரு அளவிலும் எந்தவொரு வடிவிலும் தலைதூக்கிவிடக் கூடாது. அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும். சிங்கள மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் அன்பையும் ஆதரவையும் திரட்டும் நோக்கம் வேண்டும். தமிழருக்கு ஜனநாயக உரிமைகளைக் கோரும் போது தமிழர்களின் சமூகத்துக்குள் தமிழர்களின் இயக்கங்களுக்குள் ஜனநாயகம் இருக்க வேண்டும். தமிழர்கள் சுதந்திரமாக வாழவேண்டும் எனக் கோரும் ஒரு இயக்கம் முதலில் தமிழர்களின் தனிமனித சுதந்திரங்களை அங்கீகரிக்க வேண்டும். தமிழ்மக்கள்; இரண்டாம் பிரஜைகளாக இருக்கக்கூடாது என்று கோரும் போது தமிழர்களுக்குள் சாதிரீதியாக இரண்டாம் பிரஜைகள் இருக்கும் நிலை மாற வேண்டும். தமிழர்களிடமிருந்து எப்படியாவது என்ன சொல்லியாவது வாக்குகளை வாங்கிவிட வேண்டும் என செயற்படும் அரசியல் வாதிகளால் பயனில்லை. அதேபோல கொலைகளையும் சாவுகளையும் குவிக்கின்ற மாவீரர்களின் இயக்கத்தாலும் தமிழர்களுக்கு அழிவே. ஒரு உழவன் எவ்வளவு உழுதான் எவ்வளவு விதைத்தான் என்பதல்ல பிரதானம் எவ்வளவை அவன் அறுவடை செய்தான் என்பதை வைத்தே அந்த உழவனின் திறமையை எவரும் அளவிடுவர். எனவே தமிழர்களுக்கு உரிய அரசியல் பொருளாதார வாழ்வைப் பெற்றுக் கொடுக்கும் இயக்கமே வேண்டும். மக்களை உண்மையாகவும் நேர்மையாகவும் நல்ல எதிர்காலத்தை நோக்கி வழி நடத்தும் தலைவர்கள் தமிழர்களுக்கு வேண்டும்.

பிரபாகரன் இறந்து விட்டார் என்பதை நம்புகிறீர்களை? இங்குள்ள அரசியல் தலைவர்கள் பலரும் இறக்கவில்லை…. அவர் மீண்டும் தோன்றுவார் என்று கூறுகிறார்களே. அவரது இறப்புச் செய்தி கேட்டபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

பிரபாகரன் கொல்லப்பட்டார் என நம்புவதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. அவை உங்களுக்கும் தெரியும். பிரபாகரன் கொல்லப்படவில்லை என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லையே. கணணியில் வெட்டி ஒட்டும் தொழில் நுட்பம் ஓர் ஆதாரமாகாது. உருவெடுத்தாடி வாக்கு சொல்லும் பூசாரிகளின் நாக்குகளும் நம்பத்தகாதவை. பிரபாகரன் கொல்லப்படவில்லை இன்னமும் உயிரோடுதான் இருக்கிறார் என்று பிடிவாதமாதச் சொல்லுபவர்களுக்கு தனிப்பட்ட சுயநல உள்நோக்கங்கள் இருக்கின்றன என்றே கருதவேண்டும்.

பிரபாகரனைச் சூரியதேவன் என்று நம்பியவர்கள் அவர் மீண்டும் யேசுநாதர் போல தோன்றுவார் என்று ஏன் நம்பமாட்டார்கள். கடவுள் இருப்பதாகப் பிரச்சாரம் செய்பவன் ஏமாற்றுக்காரன்.. கடவுள் இருப்பதாக நம்புபவன் பைத்தியக்காரன் என கடவுள் நம்பிக்கை பற்றி பெரியார் கூறியதை இங்கு பொருத்தமான முறையில் நாம் மாற்றிப் போட்டுப் பார்ப்பதைத் தவிர வேறொன்றும் கூறுவதற்கில்லை.
  • பிரபாகரனால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சிறந்த தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் -
  • மூவாயிரத்துக்கு மேற்பட்ட ஏனைய இயக்கப் போராளிகள், போராட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள்,
  • இந்திய இராணுவத்துக்கு ஆதரவாகச் செயற்படடார்கள் தொடர்பு வைத்திருந்தாhகள் என மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொடூரமான சித்திரவதைக் கூடங்களில் வைத்துக் கொல்லப்பட்டாhகள்,
  • இலங்கை அரசபடைகளுக்கு தகவல் கொடுத்தவர்கள் குடிக்கத் தண்ணி கொடுத்தவர்கள் மீன் விற்றவர்கள், கோவிலில் பூஜை செய்தவர்கள் எனப்பலவகைப்பட - ஆதரவாக இருந்தார்கள் என்ற பெயரில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டு வீதிகளில் எறியப்பட்டார்கள்,
  • தமக்கு அடங்காதவர்கள் என்பதற்காக அரசியற் தலைவர்கள் அரசாங்க அதிகாரிகள், ஆசிரியர்கள் பல்கலைக் கழக விரிவுரையாளர்கள் சமூக சேவகர்கள் மதகுருமார்கள், வியாபாரிகள் மாணவ தலைவர்கள் என இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
  • முஸ்லிம்கள் என்பதற்காக ஆயிரத்துக்கு மேற்பட்டோர் ஆலய வழிபாடுகளில் இருந்த போது கொல்லப்பட்டார்கள், ஒரே நாளில் ஒரு லட்சம் முஸ்லிம்கள் ஒட்டுத்துணியோடு வடக்கு மாகாணத்தை விட்டே ஓட விரட்டப்பட்டார்கள்
  • ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி உறுப்பினர்களின் பெற்றோர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் என்ற ஒரே காரணத்துக்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள். ஆயிரக்கணக்கானோர் நாடு கடத்தப்பட்டார்கள்
இவைமட்டுமல்ல,
  • முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பிரபாகரனால் ஏமாற்றப்பட்டு கட்டாயமாக ஆயுதபாணிகளாக்கப்பட்டு போர்க்களங்களில் சாக விடப்பட்டிருக்கிறார்கள்.
  • 1987க்குப் பின்னரும் அநியாயமாகப் போரை நடத்தி அப்பாவித் தமிழர்கள் எழுபதாயிரம் பேர் சாக வேண்டி ஏற்பட்டதற்கு பிரபாகரனே பிரதானமான பொறுப்பு.
  • தானும் தன்னைச் சேர்ந்த சிலரும் உயிர்தப்புவதற்காக மூன்று லட்சம் மக்களை போர்க்களத்தில் பிரபாகரன் பயணக்கைதிகளாக வைத்திருந்ததுவும் உலகறியும்.
இவ்வாறு பிரபாகரன் நடத்தியுள்ள போர்க்குற்றங்களுக்கு ஒரு நாகரீகமான நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தால்கூட அவர் குறைந்த பட்சம் ஆயிரம் மரண தண்டனைகளுக்கு உள்ளாக்கப்படவேண்டியவராவார். பிரபாகரனால் அனைத்து தமிழர்களினது மனங்களும்; கல்லாக இறுகிப் போய்விட்டன.

தமிழ்ச் சமூகத்தில் இரக்கம், கருணை, மனிதாபிமானம், மாற்றுக் கருத்துக்களையும் மதித்தல், வேற்றுமைகளிலும் ஒற்றுமை காணுதல் என்பன இனியாவது மலரட்டும். கொலைகள் செய்வது மட்டுமல்ல, கொலைகாரர்களை மாவீரர்களாகப் போற்றுதலும் சமூகக்குற்றமே, கொலைகளைத் தடுத்து நிறுத்தத் தவறுவதுவும் ஒரு சமூக அழிவுக்குப் பங்கு செலுத்தலே.

நீங்கள் ஆண்டபோது வன்னி எப்படி இருந்தது? இன்று வன்னியின் முகமே மாறிவிட்டது…. இன்றைய வன்னியின் நிலைபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

1983க்கு முன்னர் வன்னியின் அனைத்து மாவட்டங்களும் அரிசியில், மரக்கறி வகைகளில், இறைச்சி வகைகளில், பால் உற்பத்திகளில் சுயதேவைக்கும் மிஞ்சி உற்பத்தி செய்த மாவட்டங்களாக இருந்தன. இலங்கையில் அவ்வாறு தன்னிறைவு கொண்ட பதினொருமாவட்டங்கள் இருந்தன. அவற்றில் ஏழு மாவட்டங்கள் வடக்கு-கிழக்கிலேயே இருந்தன. எனது ஆட்சிக் காலத்தில் வன்னியின் காடுகளே புலிகளின் மறைவிடத் தளங்களாக இருந்தன. பின்னர் புலிகளின் ஆட்சிக்காலத்தில் வன்னி மக்கள் அனைவரும் புலிகளின் யுத்தத் தொழிலின் கருவிகளாகவும் அடிமைத் தொழிலாளர்களாகவும் ஆக்கப்பட்டிருந்தார்கள். இலங்கை அரசாங்கம் அடிக்கடி அனுப்பும் ரேசன் உணவிலேயே புலிகள் தமது தமிழீழ விடுதலைத் தாகத்தைத் தீர்த்துக் கொண்டிருந்தார்கள். கடந்த வருடம் நடந்த கடுமையான யுத்தத்தால் வன்னி சின்னாபின்னமாகி பின்னர் மக்களற்ற மண்ணாயிற்று. இப்போது மக்கள் மீண்டும் குடியேறத் தொடங்கியிருக்கிறார்கள். மிகவிரைவில் வன்னி தன்னிறைவு காணும் பிரதேசமாக மாறும் என்பதில் ஐயமில்லை.

ஒரு வேளை ஜெயவர்த்தனே – ராஜீவ் ஒப்பந்தம் தொடர்ந்திருக்குமானால் இன்றைய மோசமான நிலைமை ஏற்பட்டிருக்காது என்ற கருதுகிறீர்களா?

ராஜீவ் காந்தி –ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் பிரகாரம் அதில் கூறப்பட்டிருக்கும் விடயங்கள் அனைத்தும் உரிய முறையில் நிறைவேற்றப்பட்டிருந்தால் நிச்சயமாக இன்றைய மோசமான நிலைமையை தமிழ் மக்களோ இலங்கையோ எட்டியிருக்கமாட்டா.

நீங்கள் அரசியல்வாதி, போராளி… மகள் நீலாம்பரி இப்போது சினிமாவில் இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

நான் இன்றுவரையும் அரசியல்வாதியல்ல. அரசியற் போராளியாகவே இருந்திருக்கிறேன். இப்போதும் கூட தேர்தல் அரசியல்வாதிக்கு அவசியமான சுபாவமே குணாம்சங்களோ என்னிடம் இருப்பதாகத் தெரியவில்லை. நான் அரசியல் அதிகாரத்தைக் கொண்ட அரசுக்கு முதலமைச்சராக இருக்கவில்லை. மாறாக வடக்கு-கிழக்கு மாகாண அரசுக்கு அதிகாரங்களைப் பெறுவதற்குப் போராடிய ஒரு முதலமைச்சராகவே இருந்தேன். எனவே இந்திய நாட்டிலுள்ள ஒரு முதலமைச்சருக்குச் சமனாக என்னைக் கற்பனை பண்ணிப் பார்க்காதீர்கள்.

எனது மனைவி அங்கயற்கண்ணி பரதநாட்டியம் கற்றவர். எனது மகள் நீலாம்பரி சிறுவயதிலிருந்தே நடனம் பயிலுதல் ஓவியம் வரைதல் நாடகங்களில் நடித்தல் என கலைத்துறையில் ஈடுபாடு காட்டி வளர்ந்தவர். டெல்லியில் பட்டதாரியானார், பின்னர் சட்டத்தரணியானார். எனினும் அவருக்கே இயல்பான கலைத்துறையின் ஈடுபாடு அவரை சினிமாவுக்குள் அறிமுகப்படுத்துகிறது எனக் கருதுகிறேன்.

இலங்கையில் உச்சக்கட்ட போர் நடந்தபோது இந்தியாவில் தேர்தல். இலங்கையில் போர் நிறுத்தம் கேட்டு தமிழக முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதம் கூட இருந்தார். இலங்கைவாழ் தமிழர்களின் முன்னேற்றத்துக்கு தமிழக முதல்வர் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்.?

பிரபாகரனால் தமிழர்களின் தலைமை முற்றாக அழிக்கப்பட்டு இலங்கைத் தமிழர் சமூகம் இன்று பல்வேறு வகையிலும் சீரழிந்து கிடக்கிறது. இலங்கைத் தமிழர்கள் மத்தியில் சரியான ஜனநாயகத் தலைவர்கள் உருவாகி வளர்வதற்கு தமிழக முதல்வரும் மற்றும் தலைவர்களும் நிச்சயம் உதவ முடியும். இப்போதுதான் முதற் தடவையாக சிங்களத் தலைவர்களோடு தமிழகத் தலைவர்கள் நேரடியான ஓர் அரசியல் உறவுகளை மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். அதனை மேலும் நல்ல முறையில் விரிவுபடுத்தி தமிழர்களுக்கு நியாயமான அளவுக்கு அதிகாரப் பரவலாக்கல் கிடைப்பதற்கு தமிழக முதல்வரும் எனைய தமிழகத் தலைவர்களும்; துணைசெய்யவேண்டும். மேலும் முப்பது வருட யுத்தத்தால் அழிந்து கிடக்கும் தமிழ்ப்பிரதேசங்களினது முன்னேற்றங்களுக்கும் தமிழர்களின் பொருளாதார மீளெழுச்சிக்கும் தமிழக அரசு நிதி வகையாகவும் தொழில்நுட்பரீதியாகவும் உதவ வேண்டும். இவையே எனது எதிர்பார்க்கைகள்.

தமிழீழம் அவ்வளவுதானா?

இன்னொரு தடவை அவ்வாறானதொரு கோரிக்கை மேலெழாமற் பார்த்துக் கொள்வதே இலங்கைத் தமிழர்களுக்கு நல்லது முழு இலங்கையர்களுக்கும் நல்லது, தமிழகத்துக்கும் நல்லது, இந்தியாவின் நலன்களுக்கும் அது அவசியமே.

விடுதலைப் புலிகளை ஒழிப்பதற்கு நீங்கள் இந்திய அரசின் கைப்பாவையாகச் செயற்பட்டதாகக் கூறுகிறார்களே…?

இந்தியா என்ன விளையாட்டுப் பிள்ளையா! நான் கைப்பாவையாக இருப்பதற்கு. விடுதலைப் புலிகளை ஒழித்தது இலங்கை இராணுவமே. அதன் தளபதியாக இருந்தவர் ஜெனரல் சரத் பொன்சேகா. அதன் சுப்ரீம் கமாண்டர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அப்படித்தான் உங்கள் கேள்வியின்படி நான் இந்தியாவின் கைப்பாவையென்றால் புலிகளை ஒழித்த மஹிந்தவும் பொன்சேகாவும் எனக்குக் கைப்பாவையாக இருந்து நான் சொன்னபடியாற்தான் புலிகளை ஒழித்தார்களா? அல்லது, இந்தியா எனக்கு ஊடாகத் தான் இலங்கைக்கு உதவி செய்ததா? அப்படி நான் சொல்லிய ஆலோசனைப்படிதான் இந்தியா இலங்கைக்கு உதவி செய்திருந்தால் இந்தியா அல்லவா எனது கைப்பாவையாக இருந்திருக்க வேண்டும்.
உங்கள் கேள்வியில் உள்ளபடி யாராவது கூறுவார்களாக இருந்தால் அவர்கள் ஒரு மோசமான கற்பனைக்காரர்களாக இருக்க வேண்டும். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என ஒரு முதுமொழி உண்டு.

(திருவட்டார் சிந்துகுமார்)
நன்றி- குமுதம்

No comments:

Post a Comment