05 February 2010

இனப்பிரச்சினையின் தீர்வுக்கு சாத்தியமான நடைமுறை

நேற்றைய சுதந்திர தினக் கொண்டாட்டம் இலங்கையின் அண்மைக் கால வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மூன்று தசாப்தங்களுக்குப் பின் பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாது நடைபெற்ற முதலாவது சுதந்திர தினக் கொண்டாட்டம். அதேபோல, நாட்டின் ஆள்புல ஒருமைப்பாடு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டம்.

தமிழ் பேசும் மக்கள் தங்கள் உரிமைக் கோரிக்கைகளை முன்வைக்கும் போது இந்தப் பின்னணியைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. ஆயுதப் போராட்டத்துக்கு இடமில்லை என்பதும் ஐக்கிய இலங்கைக் கோட்பாடு கேள்விக்கு அப்பாற்பட்டது என்பதும் இன்றைய யதார்த்தம்.

சிறுபான்மை இனங்களின் உரிமைக் கோரிக்கைகள் இந்த யதார்த்தத்துக்கு அமைவாக இல்லாதிருக்கும் பட்சத்தில் அவை பலனளிப்பது சாத்தியமில்லை. கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்கள் இதை உணர்த்தி நிற்கின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பாராளுமன்றக் குழுத் தலைவர் சம்பந்தன் கடந்த சில நாட்களாகத் தெரிவித்துவரும் கருத்துகள் தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் பிரதான பிரச்சினையின் தீர் க்குச் சாதகமானதாக இல்லை.
தேசிய இனப்பிரச்சினையே தமிழ் மக்களின் பிரதான பிரச்சினை. தமிழ் மக்கள் அன்றாட வாழ்வில் முகங்கொடுக்கும் நெருக்கடிகளுக்குத் தேசிய இனப் பிரச்சினையே அடிப்படையாக உள்ளது.


தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்குவதாகத் தங்களை இனங்காட்டுபவர்கள் தேசிய இனப் பிரச்சினையின் தீர்வுக்கு நடைமுறைச் சாத்தியமான கொள்கையையும் அணுகுமுறையையும் பின்பற்ற வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட்டாகச் செயற்பட வேண்டும் என்ற கருத்தை அண்மையில் சம்பந்தன் வெளிப்படுத்தியிருந்தார்.

தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் கூட்டாகச் செயற்பட முன்வருவது பாதகமான வளர்ச்சிப்போக்கு என யாரும் கூற முடியாது. ஆனால் இக் கூட்டுச் செயற்பாடு பாராளுமன்ற ஆசனங்களை இலக்குவைப்பதாக அல்லாமல் தமிழ் பேசும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை இலக்காகக் கொண்டதாக அமைய வேண்டும்.

சிறுபான்மையினக் கட்சிகள் கூட்டுச் சேர்வதன் மூலம் மாத்திரம் ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வு காண்பது சாத்தியமாகாது. தென்னிலங்கையில் செயற்படும் அரசியல் சக்திகளின் ஆதரவும் இதற்குத் தேவை.

ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வு நடைமுறைக்கு வருவதற்கு அரசியலமைப்பு மாற்றமும் சர்வசன வாக்கெடுப்பில் மக்களின் அங்கீகாரமும் அத்தியாவசியமானவை. தென்னிலங்கை அரசியல் சக்திகளின் ஆதரவு இல்லாமல் இவை சாத்தியமாகா.
இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதைப் பிரதான இலக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுமேயானால், இரண்டு விடயங்களுக்கு அது முன்னுரிமை அளித்துச் செயற்பட வேண்டும். அரசியல் தீர்வுக்கான கொள்கைத் திட்டமொன்றைத் தயாரித்து வெளியிடுவது முதலாவது விடயம்.

தீர்வுக்குச் சாதகமான தென்னிலங்கை அரசியல் சக்திகளுடன் நட்புரீதியாக இணைந்து செயற்படுவது இரண்டாவது விடயம். இந்த வழியில் சிந்தித்துச் செயற்பட வேண்டியதன் அவசியத்தைக் கூட்டமைப்புத் தலைவர்கள் நிராகரிக்க மாட்டார்களென நம்புகின்றோம்.

நன்றி- தினகரன்

No comments:

Post a Comment