17 January 2014

தமிழக மீனவர்கள் விடுதலை

கடந்த 2013 டிசம்பர் மாதம் முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 111 மீனவர்கள் திருகோணமலை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

அதேவேளை இலங்கை கடற்படையி;னரால் கைது செய்யபட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த இராமேஸ்வரம், மண்டபம் பகுதி மீனவர்கள் பத்து பேர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்கள் பத்து பேரையும் இம்மாதம் 31ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து இவர்கள் மீண்டும் வவுனியா சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். 

இலங்கை தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் கோரிக்கை ஏற்க முடியாதது

இலங்கையில் வாழும் வடகிழக்கு பகுதி தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையிலான தமிழக மீனவர்களின் எந்த ஒரு கோரிக்கையையும் ஏற்க முடியாதென  இரு தரப்பு மீனவர்களின் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்துள்ள இலங்கை மீனவர் பிரதிநிதிகள் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளனர். அக்குழு அங்கு தெரிவிக்கையில் 

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் நிறைவடைந்துள்ளதால் அகதிகளாக வாழ்ந்து வந்த மீனவர்கள் நாடு திரும்பியுள்ளதாகவும்,, அவர்களின் வாழ்வாதாரம் இந்திய மீனவர்களின் அத்துமீறல் காரணமாக பாதிப்புக்கு உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இருநாட்டு மீனவர்களுக்கும் இடையே பாரம்பரிய உறவு உள்ளபோதும் தற்போது வாழ்கையை இழந்து வாடும் இலங்கை தமிழ் மீனவர்களின் நலனை காக்க வேண்டிய பொறுப்பு இந்திய தமிழ் மீனவர்களுக்கும் உள்ளதால் அவர்கள் தேவையான ஒத்துழைப்பை எங்களுக்கு வழங்க வேண்டும் என்கின்றனர்.  அத்துடன் இந்திய மீனவர்கள் தடை செய்யப்பட்ட மீன்வலைகளை பயன்படுத்தி இயற்கை வளங்களை சூறையாடி நாச செயல்களில் ஈடுபடுவது சகித்துக் கொள்ள முடியாது என்றனர்.

கச்சத்தீவு பிரச்சனை பற்றி அவர்கள் தெரிவிக்கையில் இது இருநாட்டு விவகாரம் என்றும், இந்தியாவுடன் அப்பகுதி மீண்டும் சேர்க்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானால் அதற்கு தாம் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோமென தெரிவித்த அவர்கள் விரைவில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் போது நிரந்தர தீர்வு எட்டப்படும் என்பதில் நம்பிக்கை உள்ளது என்றனர். ஆனால் தமிழக முதல்வர் இந்த பிரச்சனையில் தீவிரம் காட்டாதது பற்றி வருத்தத்தை தெரிவிக்கின்றனர்.  இந்த விவகாரம் பற்றி தமிழக முதல்வரும், வடக்கு மாகாண முதல்வரும் பேச்சுவார்த்தை நடத்தினால் பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்கின்றனர். 

மன்னார் மீனவர் குழுவினர் இரு தரப்பு மீனவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் போது இந்திய மீனவர்கள் எமது கொரிக்கையை ஏற்க மறுத்தால் அவர்களில் பத்து பேர் கொண்ட குழுவை அமைக்கக் கோரி இலங்கை தமிழ் மீனவர்களின் வாழ்வு நிலை நேரில் பார்ப்பதற்காக அழைத்துச் செல்வோம் என்றனர்.


No comments:

Post a Comment