13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் இந்தியா ஆரம்பத்தில் உறுதியாக இருந்தது. இச்சட்டத்திருத்தம் என்பது ஓர் ஆரோக்கியமான ஆலோசனைதானே தவிர, இது திணிக்கப்பட்ட விடயமல்ல. அன்றைய காலத்தில் இருநாட்டு அரசாங்கமும் இணங்கியதாலேயே இச்சட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது. இணக்கமில்லாமல் அதனை நாங்கள் இலங்கை அரசிடம் திணிக்கவில்லை. நாங்கள் எதனைச் செய்தாலும் அது இருநாட்டு உறவினையும் பாதிக்காமலே செய்வோம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான்குர்ஷித் இந்திய அரசின் அழைப்பின் பேரில் இந்தியா வந்திருந்த உயர்மட்ட ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.
அவர் ஊடகவியலாளர்களிடம் மேலும் தெரிவிக்கையில் 1987களில் இலங்கை அரசின் வேண்டுகோளுக்கிணங்க இந்திய அமைதி காக்கும் படையினரை நாங்கள் வழங்கினோம். மறுபடியும் அமைதி காக்கும் படையினரை திருப்பி அழைக்குமாறு பணித்தவேளை எந்தவித மறுப்புமின்றி நாங்கள் அதனைச் செய்தோம்.
எமது இழப்புகளை காரணம்காட்டி, தீர்வொன்று காணும்வரை அமைதிகாக்கும் படை இலங்கையில்தான் இருக்குமென நாங்கள் அடம்பிடிக்கவில்லை. அவர்கள் விருப்பத்திற்கு நாங்கள் வரவேற்பளித்தோம். அதேபோல், இப்போது வீட்டுத் திட்டம் போன்றனவும் அப்படித்தான்.
ஆகையினால் 13ஆவது திருத்தச்சட்டம் பற்றி எம்மீது பழிபோடக் கூடாது. அச்சட்டமூலத்தினை ஆராய்ந்து பார்க்கும் உரிமை இலங்கை அரசுக்கு இருக்கிறது. ஆனாலும் சிலர் 13 பிளஸ், 13 மைனஸ் என்று பலவிதமாக பேசிவருகிறார்கள். நடைமுறை சாத்தியங்களுக்கு இணங்க, எந்தவொரு அரசாங்கமும் தமது சட்டமூலத்தை மாற்றியமைக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. ஆகையினால், 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் இலங்கை அரசுக்கு பரிசீலிக்கும் உரிமை இருக்கிறது என்றார் அமைச்சர் சல்மான் குர்ஷித்
பாராளுமன்ற தெரிவுக்குழு பற்றி தெரிவிக்கையில் அரசியல் தீர்வு மற்றும் 13ஆவது திருத்தம் பற்றி நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் ஆலோசித்து முடிவெடுக்கப்படவேண்டும் என தெரிவிப்பதானது நல்ல விடயம்தான். ஆனாலும், சிலர் அதில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று கூறிவருகிறார்கள். எம்மைப் பொறுத்தவரையில், நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இணைந்து, அனைவரது ஒத்துழைப்புடனும் சிறந்த தீர்வொன்றை அடையமுனைவதே சிறந்தவழி எனத் தோன்றுகிறது.
இலங்கைக்கு எதிராக மனித உரிமை பேரவையில் கொண்டுவரவுள்ளதாகக் கூறப்படும் பிரேரணை பற்று தெரிவிக்கையில் அதனை ஆதரிப்பதா இல்லையா என்பது பற்றி நாம் இன்னும் தீர்மானிக்கவில்லை. மனிதஉரிமை பேரவை என்பது தனியொரு நாட்டுக்குரியதல்ல. இதில் பல நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஆகையினால் அனைத்து நாடுகளின் இராஜதந்திர நகர்வுகளைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்.உயிரிழப்பு, மனிதஉரிமை மீறல்கள் என்பன சாதாரண விடயமல்ல. இதனை தாங்கிக்கொள்ளும் சக்தி எல்லோருக்கும் இருக்காது. ஆகையினால், அதற்குரிய நடைமுறைகள் இருப்பது அவசியம் தான். ஆனாலும், ஒரு நாட்டின் இறைமைக்கு பாதகம் இல்லாமல் அந்த நகர்வு இருக்க வேண்டும். இலங்கைக்குள் குழப்பம் நீடிப்பதை இந்தியா ஒருபோதும் விரும்பாது என்றார்.
30 வருடகால யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. இன்னமும் அந்த வரலாறு பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதைப் பின்னொட்டியே போர்க்குற்ற விசாரணை பற்றியும் பேசப்படுகிறது.
பயங்கரவாதத்தினை இல்லாதொழிக்க நீண்டகாலம் எடுத்தது உண்மைதான். அதற்காக, மனிதஉரிமை விவகாரங்களையும் நீண்டகாலம் இழுத்தடித்து, பதிலளிக்காமல் இருக்கலாம் என நினைப்பதும் சாத்தியமாகாது. அவ்வளவு காலத்திற்கு இந்த விவகாரத்தினை இழுத்தடிக்க முடியாது. ஆகையினால், உரியகாலத்தில், அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியவாறான தீர்வொன்று கண்டிப்பாக கிடைக்க வேண்டும். பல நாடுகளை அணுகி, தமக்கான ஆதரவினைபெற இலங்கை முயற்சிக்கலாம். அது அவர்களின் உரிமை. அதுமட்டுமல்லாமல், அனைத்து நாடுகளுடனும் நெருங்கிய உறவினை பேணமுயல்வதே இலங்கை அரசுக்கு நல்வழியாக அமையும் என்றார்.
இந்திய விசா நடைமுறையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் பற்றி கூறுகையில் இது குறித்து விரிவாக விவாதித்து வருகிறோம். அதில் இலங்கை வர்த்தகர்கள், பயணிகள் வந்தவுடன் விசா
(ழn யசசiஎயட எளைய) நடைமுறை பற்றி சங்கடப்படுகிறார்கள். ஆகையினால், இதுபற்றி நாங்கள் தொடர்ந்தும் நல்ல முடிவினை வழங்க விவாதித்து வருகிறோம். சில பாதுகாப்பு சிக்கல்கள் காரணமாக, இவ்;வாறான விசா நடைமுறையினை இலங்கைக்கு வழங்குவது பற்றி சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஆனாலும், மிக விரைவில் இந்தப் பிரச்சினைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்றார்.

No comments:
Post a Comment