30 March 2016

புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சி என்ற சொற்பதமே அவசியமில்லை

பிரிக்க முடியாத தேசம் என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில். ஒற்றையாட்சி என்ற பதமே புதிய அரசியலமைப்புக்கு அவசியமில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன பத்தரமுல்லையில் வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்ற புதிய அரசியலமைப்பு தொடர்பான கருத்தரங்கில் உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் உரையாற்றுகையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். அதன்மூலமே ஜனநாயக ஆட்சி உறுதிப்படுத்தப்படும். அந்நிலையில் அரசியல் அமைப்பில் ஒற்றையாட்சி என்ற சொற்பிரயோகத்தை பயன்படுத்துவதில் பிரச்சினைகள் காணப்படுகின்றன.

அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அதேவேளை அதிகாரங்களை வலது கையால் வழங்கி தேசிய கொள்கைகளின் பெயரால் இடது கையால் பறிக்க முடியாது என்பதை சுட்டிக்காட்டினார்.

தனது யோசனைகள் தொடர்பாக முன் வைப்பதாக குறிப்பிட்ட கலாநிதி விக்கரமரத்ன. குறிப்பாக ஒற்றையாட்சி என்ற சொற்பிரயோகத்தை பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. இது போன்ற சர்ச்சைக்குரிய அடையாளங்களை பயன்படுத்த வேண்டிய தேவையில்லை என்றே கருதுகின்றேன்.

பிரிக்கமுடியாத தேசம் என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதைப் பிரதிபலிக்கும் வகையிலான சொற்பிரயோத்தைப் பயன்படுத்துவது சிறந்தது. ஆகவே அதனால் எவ்விதப் பிரச்சினைகளும் ஏற்பட போவதில்லை.

இது தொடர்பாக பிரிவினை ஏற்படப் போகின்றது எனக் கருதுபவர்கள் குறிப்பாக கடும்போக்கர்களை தவிர்த்து ஏனையவர்களுக்கு அவ்வாறான சந்தேகம் ஏற்படுமாயின் அதனை போக்க வேண்டிய கடமை எமக்குள்ளது. இச் செயற்பாடுகளை நாம் முன்னெடுக்க வேண்டியுள்ளது.

13வது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளை எடுத்துக்கொண்டால் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் பிரச்சினைகள் காணப்படுகின்றன. எனினும் மாகாணங்கள் இணங்குகின்ற போது ஒருமித்து இணங்குவதற்கான ஏற்பாடுகள் உள்ளன.

மாகாண சபைகளுக்கு காணப்படும் அதிகாரங்களின் பிரகாரம் காணி அதிகாரத்தைப் பிரயோகிப்பது தொடர்பான பிரச்சினை காணப்படுகின்றது. தேசிய காணி ஆணைக்குழு அமைக்கப்பட்டிருக்குமானால் இந்தப் பிரச்சினை இப்போதே தீர்க்கப்பட்டிருக்கும்.

மாகாண சபைகளின் விருப்பமில்லாது மத்திய அரசினால் தீர்மானங்கள் மேற்கொள்கின்ற போது பிரச்சினைகள் எழுகின்றன. ஆகவே இரண்டாந்தர சபை ஒன்றினை உருவாக்குவது தொடர்பில் நான் யோசனையொன்றை முன்வைக்கின்றேன்.

குறித்த அவையில் அனைத்து மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்த கூடியவகையில் முதலமைச்சர் உள்ளடங்களாக 45 பிரதிநிதிகள் கொண்ட குழு உருவாக்கப்பட வேண்டும்.

அதேபோன்று இந்த நாட்டில் பூர்விகம் இல்லாதவர்களுக்கும் இந்திய வம்சாவளியினர், ஆதிவாசிகள் மற்றும் பறங்கியர் போன்ற இனக்குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்திய குழுவொன்று உருவாக்கப்பட வேண்டும்.

தேசிய கொள்கைகள் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் போது இக்குழுக்களின் யோசனைகள், பரிந்துரைகளை உள்வாங்கி தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன்மூலம் மத்தியரசுடனான பல பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படும்.

மக்களின் விருப்பமின்றி அரசியலமைப்பொன்றை நிறைவேற்ற முடியாது. அதேநேரம் அதிகாரங்களை பகிர்வதாக கூறி வலது கையினால் வழங்கிவிட்டு தேசிய கொள்கை என்ற பெயரினால் இடது கையினால் பெற்றுக் கொள்ள முடியாது. அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு சிறந்த அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment