30 June 2016

சித்திரவதைகள் இடம்பெறுகின்றன

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 32வது அமர்வில் உரையாற்றிய இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர , இலங்கையில் இன்னமும் சித்திரவதைகள் இடம்பெறுகின்றன என்பதை ஏற்றுக்கொண்டார். 

மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகர் ஷெயர் ராட் அல்-ஹ_சைனால் சமாப்பிக்கப்பட்ட இலங்கை, மியான்மார் ஆகிய நாடுகளுக்கான வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதான் பின்னர் உரையாற்றும்போதே மங்கள சமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில் இலங்கையின் தேசிய அரசாங்கம் இவ்வாண்டு ஆகஸ்டில் தனது முதலாவது ஆண்டை பூர்த்தி செய்யும் போது ஒரு வகையான திருப்தியுடன் பல அடைவுகளை பின்னோக்கிப் பார்க்கக்கூடியதாக இருக்கும் எனத் தெரிவித்தார். 

தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட புதிய நடவடிக்கைகளான நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான ஒழுங்குப்படுத்துதல் செயலகத்தின் உருவாக்கம், சிவில் சமூகப் பிரதிநிதிகளை முழுவதுமாக கொண்ட செயலணியொன்றின் உருவாக்கம், தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்கான அலுவலகம், காணாமல் போனோருக்கான நிரந்தரமானதும், சுயாதீனமானதுமான அலுவலகத்தை உருவாக்குவதற்கான வரைவு சட்டமூலத்துக்கு அமைச்சரவையின் அங்கீகாரம், காணாமல் போனமைக்கான சான்றிதழ்களை வழங்குவதற்கான சட்டத்திருத்தம் உள்ளிட்ட விடயங்களை மேற்கோளிட்டு உரையாற்றினார். 
தொடர்ந்து உரையாற்றிய அவர் பயங்கரவாதத் தடுப்புச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதை ஏற்றுக்கொண்டார். மிகவும் விமர்சிக்கப்படுவதும் அதிகமாக தவறாகப் பயன்படுத்தப்படுவதுமான பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்குப் பதிலாக பயங்கரவாதத்துக்கெதிரான புதிய சட்டமொன்றைக் கொண்டுவருவதற்கு முதல் வரைவின் இறுதிக்கட்டத்தில் செயற்குழுவொன்று ஈடுபட்டு வருகிறது என்றார். 

சித்திரவதைகள் தொடர்பாக கருத்துத் தெரிவித்த மங்கள சமரவீர சித்திரவதை தொடர்பாக முழுமையான எதிர்ப்பான கொள்கையை அரசாங்கம் கொண்டுள்ள போதிலும், அது இடம்பெறுவது இல்லாமல் போகவில்லை. ஆனால் குறைவடைந்துள்ளது. இதன் தீவிரத் தன்மையை நாம் உணர்ந்துள்ளோம். பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பொது கலந்துரையாடலை ஏற்படுத்தவும் இலங்கையின் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவினதும் இலங்கை பொலிஸ் ஆணைக்குழுவினதும் உதவியும் பெறப்பட்டுள்ளன என்றார். 

காணிகள் விடுவிப்புத் தொடர்பாக உரையாற்றிய அவர், யாழ்ப்பாணத்திலுள்ள 701 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டு, யாழ்ப்பாண மாவட்ட செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 201.3 ஏக்கர் காணிகள் 25ம் திகதி அவற்றின் உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததோடு பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட காணிகள் அனைத்தையும் 2018ம் ஆண்டுக்குள் விடுவிக்கப்பட வேண்டுமென இராணுவத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். அத்தோடு, தேசிய தேவைகளுக்காகவோ அல்லது அபிவிருத்தித் தேவைகளுக்காகவோ  தேவைப்படும் காணிகளின் உரிமையாளர்களுக்கு முழுமையான இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார். 

உயர் ஸ்தானிகரின் உரையில் இலங்கையின் நீதிப் பொறிமுறையில் சர்வதேசத்தின் பங்களிப்புக் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டிருந்த நிலையில் அது குறித்தும் அமைச்சரின் உரையில் கவனம் செலுத்தப்பட்டது. சர்வதேச உதவியுடன் கூடிய நீதிப் பொறிமுறையை உருவாக்கும் காத்திரமானதும், சர்ச்சைக்குரியதுமான விடயம் தொடர்பாக எங்களிடம் உத்திகளும், திட்டங்களும் உள்ளன. ஏங்களோடு இணைந்து வெளிநாட்டுப் புலனாய்வாளர்களும் தடயவியல் நிபுணர்களும் பணியாற்றியுள்ள நிலையில் சர்வதேச உதவிகளோ அல்லது சர்வதேச பங்கெடுப்போ எங்களுக்குப் புதிதல்ல. சர்வதேசப் பங்கெடுப்பின் தன்மை மட்டம், பங்கு குறித்து பல்வேறு பார்வைகள் காணப்படுகின்றனதான் எனத் தெரிவித்த அமைச்சர் பல்வேறான பார்வைகள் காணப்படுவது ஆரோக்கியமான ஜனநாயகத்தின் ஒரு பண்பு எனவும் குறிப்பிட்டார். 

இலங்கை மீது கரிசனை கொண்டிருக்கின்ற இலங்கை மீது சரியாகவோ அல்லது பிழையாகவோ விமர்சனங்களை முன்வைக்கின்ற நாடுகள் இலங்கைக்கு வருமாறும் தனது உரையில் அழைப்பு விடுத்த அமைச்சர் மங்கள சமரவீர இலங்கையானது உலகத்துக்காகத் திறந்திருப்பதாகவும், இலங்கைக்கு வந்து பார்க்குமாறும் தெரிவித்ததோடு இந்தப் பயணத்தில் உதவுமாறும் கோரினார். இவ்வாண்டு பெப்ரவரியில் அல்-ஹ_சைனை இலங்கையில் வரவேற்க முடிந்தமை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அமைச்சர் இவ்வாண்டு முடிவில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கைக்கு வருவாரென தான் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.  

நன்றி- தமிழ் மிரர்

No comments:

Post a Comment