20 July 2016

இனவாதத்தை தூண்டும் தரப்பினரிடம் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் இல்லை

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற சம்பவமானது கடும்போக்குவாதிகள் தமது கருத்துக்களை வலுவாக முன்வைப்பதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளதாக தெரிவித்த வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இந்த சம்பவமானது நாட்டில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஊடகவியலாளர் சந்திப்பில்  சுட்டிக்காட்டினார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற விஞ்ஞான பீடத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் கண்டிய நடனத்தை இணைத்துக்கொள்ள சிங்கள மாணவர்கள் முற்பட்டதால் ஏற்பட்ட முரண்பாடுகள் மாணவர்களிடையே கைகலப்பாக மாறியது.  மோதல்களில் 14 மாணவர்கள் காயமடைந்ததுடன் விஞ்ஞானபீட கட்டடம் ஒன்று சேதமாக்கப்பட்டது. 
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று, இன்று பத்தரமுல்லையில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநரின் இல்லத்தில் நடைபெற்றபோதே, அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 
அவர் மேலும் தெரிவிக்கையில், 'இந்த சம்பவத்தினூடாக நாட்டின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு களங்கமும் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் சில கடும்போக்குவாதிகள் தமது கருத்துக்களை வலுவாக முன்வைப்பதற்கு வாய்ப்பொன்று கிடைத்துள்ளது. அவர்கள் வடக்கிலும், தெற்கிலும் இருக்கின்றார்கள். தமிழர்கள் சிங்களவர்கள் என இரு தரப்பிலும் கடும்போக்குவாதிகள் காணப்படுகின்றனர். 
இதேவேளை, எதிர்ப்பாராத விதமான நடைபெற்ற இந்த சம்பவத்தை சிலர் தவறாக வழிநடத்த முயல்வதாகவும் குறிப்பாக இராணுவத்தினர் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் வடமாகாண ஆளுநர் குற்றம்சாட்டினார்.   
'இராணுவத்தினர் சிங்கள மாணவர்கள் ஊடாக தமிழ் மாணவர்களை தாக்கியதாக வடக்கின் சில சமூக வலைத்தளங்கள் மற்றும் பத்திரிகைகளில் தற்போது செய்திகள் வெளியாகிவருகின்றன. தெற்கில் அதற்கு எதிரான செய்திகள் வெளியாகியுள்ளன. 
எனினும் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண்பது தொடர்பில் எவரும் கதைப்பதில்லை. என்றாலும் இதனை எவ்வாறு பெரிதாக்கலாம் என்ற கோணத்தில் சிந்திக்கின்றனர். கடுத்போக்குவாதிகள் இதனை தேசிய, சர்வதேச செய்தியாக மாற்றியமைக்கும் நோக்குடன் செயற்படுகின்றனர். இராணுவம் சிங்கள மாணவர்கள் ஊடாக தமிழ் மாணவர்களை தாக்கியதாக ஒரு கதையை உருவாக்க முயல்கின்றனர். 
எவ்வாறெனினும் அனைத்து மக்களுக்கும் தமது மதத்தை, கலாசாரத்தை பின்பற்றுவதற்கான உரிமை காணப்படுவதாகவும் அதனை மீறுவோர் எவராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்கள் எனவும் ரெஜினோல்ட் குரே குறிப்பிட்டுள்ளார். 
'சிங்கள மாணவர்களின் கலாசாரத்தை பின்பற்றுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டமை தவறு என்ற வகையிலும் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.  எனினும் இந்த பிரச்சினைக்கு அடிப்படை காரணத்தை கண்டறிய வேண்டும். 
அனைத்து மக்களுக்கும் தத்தமது மதத்தை, கலாசாரத்தை பின்பற்றுவதற்கான உரிமை காணப்படுகின்றது. எனினும் அதனை மீறுவது யாராக இருந்தாலும் அது குற்றமே எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment