11 August 2016

என்று தீரும் அரசியல் கைதிகள் விவகாரம்

தமிழ் அரசியற் கைதிகளின் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. தங்களின் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள். சிறைச்சாலைக் கூரையின் மீதேறிக் கலகம் விளைவித்திருக்கிறார்கள். ஜனாதிபதிக்கும் சர்வதேச சமூகத்துக்கும் தமிழ் அரசியற் தலைமைக்கும் என்று தங்களுடைய நிலைமையைச் சொல்லியும் தமது நியாயங்களைக் குறிப்பிட்டும் கடிதங்களை எழுதியிருக்கிறார்கள். கைதிகளின் பெற்றொரும் உறவினர்களும் கூட ஜனாதிபதிக்கும் தமிழ்த்தலைவர்களுக்கும் கடிதம் எழுதியிருக்கிறார்கள். பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் முன்னே கைதிகளைப்பற்றி, அவர்களுடைய விடுதலையைப்பற்றிக் கண்ணீர் மல்க எடுத்துக் கூறியிருக்கிறார்கள். இப்படியெல்லாம் செய்த போதும் கைதிகளின் விடுதலைக்கான சாத்தியங்கள் தென்படவில்லை. மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் கடைப்பிடித்த அதே அணுகுமுறையத்தான் மைத்திரி – ரணில் கூட்டரசாங்கமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மீட்சியில்லை. எந்த மீட்பருமில்லை என்ற நிலையில்.

அப்படியென்றால் தமிழ் அரசியற் கைதிகளின் எதிர்காலம் எப்படி அமையப்போகிறது?

முதலில் அரசியற் கைதிகள் என்றால் என்ன என்று பார்க்க வேண்டும். ஏனைய குற்றச்செயல்களில் ஈடுபடும் கைதிகளுக்கும் அரசியற்கைதிகளுக்குமிடையில் பாரிய வேறுபாடுண்டு. அதனால்தான் இவர்கள் அரசியற் கைதிகள் என்று அடையாளப்படுத்தப்படுகிறார்கள். ஏனைய கைதிகள் தனிப்பட்ட ரீதியில் அல்லது குழுவாகக் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள். அதற்கான தண்டனை முறையும் விடுதலைக்கான நியாயங்களும் வேறு. அரசியற்கைதிகள் அப்படியல்ல. அவர்கள், ஒரு கொள்கையின் அடிப்படையில் அல்லது ஒரு செயற்பாட்டமைப்பின் நோக்குநிலையில் செயற்படுவோர். இவர்கள் குற்றச்செயல்களில் சம்மந்தப்பட்டவர்கள் என்ற சொல்லப்பட்டாலும் அந்தச் செயல்கள் ஒரு அரசியல் வடிவத்தைக் கொண்டிருப்பவை. ஆகவே, இவர்களுடைய விவகாரத்தை அணுகும்போது அவற்றின் அரசியல் தன்மையையும் அதனோடிணைந்த மக்கள் நலனையும் இணைத்துப் பார்க்க வேண்டும்.

சிறைகளில் இருக்கும் தமிழ் அரசியற் கைதிகள், பெரும்பாலும் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள். அல்லது அந்த அமைப்புடன் தொடர்புள்ளவர்கள் என்று சந்தேகிக்கப்படுகின்றவர்கள். அல்லது அந்த அமைப்புக்கு உதவியவர்கள் என்ற பேரில் கைது செய்யப்பட்டவர்கள் அல்லது அப்படிக் குற்றம் சாட்டப்பட்டவர்கள். இதைத் தவிர்த்து, பிற கட்சிகள், இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லக்கூடிய அளவில் யாரும் இல்லை.

விடுதலைப்புலிகள் அமைப்பு போரிலே தோற்கடிக்கப்பட்டு விட்டது. அதனுடைய செயற்பாடுகள் இப்போது இல்லை. விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து இறுதிப்போரின் பிறகு சரணடைந்தவர்களும் கைது செய்யப்பட்டவர்களும் விசாரணை செய்யப்பட்டு, புனர்வாழ்வு நடவடிக்கைக்குள்ளாக்கி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதில் விடுலைப்புலிகள் அமைப்புக்கு உதவியவர்கள், அந்த அமைப்பை ஆதரித்தவர்கள் என்றவகையினரும் அடக்கம். சிலர் மீதான வழக்குகள் நிலுவையிலிருப்பதால் அவர்களுடைய விடுதலை தாமதமாகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. மற்றும்படி அனைவருக்கும் ஒரு பொதுமன்னிப்புக்கு நிகரான ஏற்பாட்டில் விடுதலையளிக்கப்பட்டுள்ளது. மட்டுமல்ல, விடுதலையளிக்கப்பட்டவர்கள் சமூகத்துடன் இணைந்து வாழ வேண்டும் என்ற அடிப்படையில் அரசாங்கம் விரும்புவதாகவும் சொல்லப்படுகிறது. அதற்கான சிறிய அளவிலான ஏற்பாடுகளிலும் அரசாங்க உதவிகள் செய்யப்படுகின்றன.

அப்படியென்றால், மீதியாக இருப்பவர்களை எதற்காகத் தடுத்து வைத்திருக்க வேண்டும்? இதுதான் கைதிகள் கேட்கின்ற கேள்வி. கைதிகள் மட்டுமல்ல, அவர்களுடைய உறவினரும் இந்தக் கைதிகளைக் குறித்துச் சிந்திப்போரும் கேட்கின்ற கேள்வியாகும்.

ஆனால், இதற்குச் சரியான பதிலை யாரும் சொல்லவில்லை. அரசியற்கைதிகள் விவகாரம் என்பது சட்டரீதியான ஒரு பிரச்சினை என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பிரமுகரும் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்துறையாளருமான ஒருவர் சொன்னார். இது சட்டரீதியான பிரச்சினையாக இருந்தாலும் அடிப்படையில் இது ஒரு அரசியற் பிரச்சினையே என்று அவரிடம் சொன்னேன். சிறிது நேர யோசனைக்குப்பிறகு, உண்மைதான். அதை ஏற்றுக்கொள்கிறேன் என்றார். அப்படிச் சொன்னவர், அடுத்த கட்டமாக இந்த விவகாரத்தை சட்டத்தின் பிடியில் இருந்து மீட்டு, அரசியல் விவகாரமாக்கிக் கையாண்டிருக்க வேணும். அப்படிச் செய்யவில்லை. இது வருத்தமளிக்கும் ஒரு செயல். கூடவே ஏமாற்றத்தையும் தருகின்றது.

புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்ட பின்னர், அந்த அமைப்பைச சேர்ந்தவர்களை அரசாங்கம் கையாண்ட விதம் வேறானது. அவர்களைச் சமூகத்துடன் இணைக்கும் நடவடிக்கை இதில் முக்கியமானது. இதைப் பெருமையோடு அரசாங்கம் சொல்லியும் வருகிறது. அப்படியானால், அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுவோரையும் அதற்கு உதவியதாகக் கருதப்படுவோரையும் எதற்காகத் தடுத்து வைத்திருக்க வேண்டும்? அவர்களையும் விடுதலைச் செய்து சமூகத்துடன் இணைத்து விடலாமே. அச்சுறுத்தலுக்கான அமைப்பே இல்லை என்றபிறகு அதனுடைய எச்சங்கள் என்று சொல்லப்படுவோரைத் தடுத்து வைத்திருப்பதனால் பயனென்ன?

கடந்த காலத்தில் நடந்த சில சம்பவங்களோடும் குற்றச்செயல்களோடும் இவர்கள் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள். ஆகவே அவற்றை விசாரிப்பதற்காகவும் அந்தச் செயல்கள் உண்டாக்கிய சேதங்களின் தாக்கத்தைக் கணக்கில் கொண்டும் இவர்கள் தடுக்கப்பட்டு வைத்திருக்கலாம் என்று கூறலாம். அப்படியானால், எதற்காக, யாரால் அவர்கள் அப்படிச் செயற்படுத்தப்பட்டனர்? என்ற கேள்வியை நாம் திருப்பிக் கேட்கமுடியும். ஏற்கனவே விடுதலை செய்யப்பட்ட புலிகளின் முன்ளாள் உறுப்பினர்களில் பலரும் இப்படிச் செயற்பட்டவர்கள்தானே. அப்படியிருந்தும் அவர்களெல்லாம் விடுவிக்கப்பட்டிருக்கின்றனரே. ஒரு வித்தியாசம் உண்டு. என்னவென்றால் அவர்களி்ல பலரும் இறுதிப்போரை அடுத்துச் சரணடைந்தவர்கள். ஆனால், கைதிகளாக இருப்போர் யுத்தம் நடந்தவேளையில் அங்குமிங்குமாகக் கைது செய்யப்பட்டவர்கள்.

தவிர, இவர்கள் புலிகளால் இயக்கப்பட்டவர்கள், புலிகளுடைய செயற்பாடுகளுக்குத் துணையிருந்தவர்கள் என்றால், அந்தப்புலிகள் இல்லாத நிலையில் ஏனைய புலிகள் இயக்க உறுப்பினர்ளுக்கு வழங்கப்பட்ட நியாயத்தை இவர்களுக்கும் வழங்கி விடுவிக்க வேண்டியதுதானே. இவர்களுக்கு மட்டும் ஏன் விதிவிலக்காக இந்த வஞ்சம் தீர்ப்பு?

இந்தக் கைதிகளை அரசாங்கம் விடுதலை செய்வதற்குத் தயக்கம் காட்டினால், அதைச் சட்டரீதியாக அணுகுவதற்குப் பொருத்தமான சட்ட அணுகுமுறைகள் இல்லையா? அதைச் செய்யயக்கூடிய வல்லமையுள்ள சட்டத்தரணிகள் தமிழ்ச்சமூகத்தில் கிடையாதா?

அடுத்தது, இந்தக் கைதிகள் அரசியற் கைதிகள். அதுவும் கடந்த காலச் செயற்பாடுகளின் நிமித்தமாகக் கைது செய்யப்பட்ட, குற்றம்சாட்டப்பட்ட கைதிகள். அந்தக் கடந்த காலத்தின் அமைப்பான விடுதலைப்புலிகள் இன்றில்லை. எனவே அந்த அமைப்புக்குப் பின்னான அரசியலை முன்னிறுத்தி அவர்களுடைய பிரச்சினை அணுகப்பட வேண்டும். ஆகவே இதை அரசியல் ரீதியாக அணுக வேணும். அப்படி அரசியல் ரீதியாக அணுகுவதாக இருந்தால், அதற்கு அரசியற் தரப்புகள் முன்வருவது அவசியம். இதில் தனியே தமிழ் அரசியற்தரப்புகள்தான் முன்வரவேணும், செயற்பட வேணும் என்றில்லை. சகல தரப்பினரும் இந்தக் கைதிகள் விவகாரத்தில் ஈடுபடலாம். ஏனென்றால், இது ஓர் அரசியல் விவகாரம்.

இந்த அரசியல் விவகாரத்தை முன்னெடுப்பதில் தமிழ்த்தரப்பினர் கூடப் பலவீனமாகவே உள்ளனர். இதற்குக்காரணம் இவர்களிடம் உள்ள மாற்றான்தாய் என்ற மனப்பாங்கே. இவர்களுடைய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களோ, ஆதரவாளர்களோ உள்ளே (சிறையில்) இருந்தால் இந்தத் தலைவர்கள் வெளியே இப்படி இருப்பார்களா?

தவிர, தற்போது அரசியற்கைதிகளாக இருப்போர், பெரும்பாலும் மக்களிடத்திலே பெரிய அளவிற்கு அறியப்படாதவர்கள். குறிப்பாக எந்தக் கட்சியினதும் தலைவர்களோ முக்கியஸ்தர்களோ கிடையாது. தமிழ் அரசியற் தலைவர்களும் முக்கியஸ்தர்களும் கைதுக்கும் சிறைக்கும் செல்லாத வகையிலேயே சாதுரியமாக அரசியலைச் செய்யப்பழகியவர்கள். அதில் சாதனை படைத்திருப்பவர்கள். ஆகவே, அவர்கள் தவறியும் இந்தப் பொறிக்குள் – சிறைக்குள் வீழ்ந்து விடமாட்டார்கள். அவர்களுடைய அரச எதிர்ப்பும் போராட்டங்களும் அதற்கு ஏற்றமாதிரியானவையே. கட்டியிருக்கும் வேட்டியும் போட்டிருக்கும் சட்டையும் கசங்காமல் நடத்தும் போராட்டக்காரர்கள். ஆகவே, சிறைவாழ்வு என்பது சரித்திரத்திலேயே இவர்களுக்குக் கிடையாது. ஆகவே, சிறையிருப்போர் வேறு யாரோதானே. அவர்கள் சிறையிருப்பது, விடுதலை செய்யப்படாதிருப்பது என்பது ஒரு அரசியல் முதலீடும் கூட. சிறையிருப்போரைச் சொல்லியே வாக்குகளைப் பெறுவதற்கும் காலத்தை ஓட்டுவதற்கும் உள்ள வாய்ப்பை எப்படி இவர்களால் இழக்க முடியும்? அது தங்களுக்குக் கிடைக்கும் லாபத்தை கையால் இழப்பதற்குச் சமமாகுமே.

இப்படித்தான் தமிழ் அரசியற் தலைமைகளும் கட்சிகளும் சிந்திக்கின்றன. ஏதோ சாட்டுக்கு ஒரு அடையாளப்போராட்டத்தை நடத்துவதைப்போலப் படங்காட்டுவதோடு, இந்த விவகாரம் மறக்கடிக்கப்படுகிறது. விடுதலைக்கான சாத்தியங்களை உண்டாக்கும் விதமாக, அரசாங்கத்துக்கு நெருக்கடியை உண்டாக்கும் வகையில் போராட்டங்களை முன்னெடுக்க இவர்களில் யாரும் தயாரில்லை. முறையாக உண்ணாவிரதமிருக்கவோ, கைதிகளின் விடுவிப்புக்காக மக்களை அணிதிரட்டி நடக்கவோ, கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை என்றால், எம்மையும் உள்ளே போடுங்கள் என்றோ இவர்களில் யாரும் துணியவில்லை. அதாவது அந்தளவுக்கு இந்த விசயத்தை இவர்கள் சீரியஸாக எடுக்கவும் இல்லை. அதற்காக றிஸ்க் எடுக்கவும் இல்லை.

இவ்வளவுக்கும் தென்னிலங்கையில் சிங்களத்தரப்பில் ஆட்சி மாற்றத்துக்கும் அதிகார மாற்றத்துக்குமாக பலர் றிஸ்க் எடுத்திருக்கிறார்கள். சரத் பொன்சேகா இதற்கு நல்லதொரு உதாரணம். இதைப்போலப் பலர் உள்ளனர்.

தமிழ் அரசியற் போராட்டமே சிறை வாழ்விலும் சிறைச்சாலைப் படுகொலைகளிலும் சித்திரவதைகளிலும் காணாமற்போதல்களிலும் உயிரை ஈயும் தியாகங்களிலும் உடல் உறுப்புகளை இழப்பதிலும்தான் செழித்தது. உச்சமான அர்ப்பணிப்புகளைச் செய்த பாரம்பரியத்தைக் கொண்டது. ஒரு அரசியல் போராட்டம் என்பது இப்படியெல்லாம் நடக்கத்தான் வேண்டுமா என்று கேட்கலாம். இதெல்லாம் கட்டாயமென்றில்லைத்தான். ஆனால், தமிழ் அரசியற் போராட்டத்தின் உணர்ச்சிகர விசயங்களைத் தங்களுடைய அரசியலுக்குப் பயன்படுத்துவோர், நிச்சயமாகத் தாங்களும் றிஸ்க்கெடுக்க முன்வர வேண்டும்.

உண்மையில் இன்று அரசியற் கைதிகள் விடுதலை பெறாமல் இருப்பதற்கான பிரதான காரணங்களில் ஒன்று, “நாங்கள் இன்னும் புலிகள் விசயத்தில் கவனமாக – இறுக்கமாகவே இருக்கிறோம்“ என்று சிங்கள மக்களுக்குக் காண்பிக்க அரசாங்கம் விரும்புகிறது. “தமிழ் அரசியற்கைதிகளை விடுவிக்காத அரசாங்கத்தை நாம் நம்ப முடியாது. ஆகவே இன ஒடுக்குமுறை இன்னும் நீடிக்கிறது என்பதற்கான சான்றுகளில் இது ஒன்று என்பது நிரூபணம். எனவே, நாம் தொடர்ந்தும் போராடியே தீர வேண்டும்“ என்று கூறுவதற்கு தமிழ் அரசியலுக்கு வசதியாக உள்ளது. இப்படி இரண்டு தரப்பின் நலனுக்காகவும் அரசியற் கைதிகள் சிலுவை சுமந்து கொண்டிருக்கிறார்கள்.

மெய்யாகவே அரசியற் கைதிகளின் விடுதலைக்காகப் போராடுவதாக இந்தத் தலைவர்கள் போராடியிருந்தால், இவர்களில் சிலராவது இன்று கைதிகளாக இருந்திருப்பர். அப்படி நிகழாத வரையில் இவர்களுடைய போராட்டம் என்பது, வெறும் புலுடாவே. அதாவது, அரசாங்கத்துக்கு இவர்களைக் குறித்து சிறிய அச்சமும் கிடையாது. மட்டுமல்ல, இவர்கள் மெய்யாகப் போராடப்போவதில்லை என்றும் அரசுக்குத் தெரியும்.

அதையும் கடந்து, அபுர்வமாக இவர்கள் கைதிகளானால் இவர்களை மீட்பதற்காக சிலவேளை மெய்யான போராட்டங்கள் நிகழக்கூடும். ஆனால், இவர்களில் சிலர் கைதானால், அப்படியே அவர்களைச் சிறையில் விட்டுவிடுவதற்கான சாத்தியங்களும் உண்டு. அந்தளவுக்கு உள்குத்துகள் தமிழ்க்கட்சிகளுக்குள்ளே உண்டென்பதையும் நாம் அறிவோம்.

அரசியற் கைதிகளின் விடுதலை எப்போது என்பது விடை தெரியாத ஒரு கேள்வியே...

-கருணாகரன்-

நன்றி- தேனீ

No comments:

Post a Comment