19 August 2016

நாகரிகம் மிகுந்த அரசியல் கலாசாரத்தின் தோற்றம்

பாராளுமன்றத் தேர்தல் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றிணைந்து கூட்டரசாங்கமொன்றைத் தோற்றுவித்து ஒரு வருட காலம் நிறைவு பெற்றுள்ளது.
இன்றைய வேளையில் இரு முக்கிய விடயங்களை ஆராய வேண்டியிருக்கிறது. முன்னைய ஆட்சி நிலவிய பத்து வருட காலப் பகுதியையும், ஆட்சி மாற்றத்தின் பின்னரான சுமார் ஒரு வருடமும் எட்டு மாதங்களுமான நல்லாட்சி காலப் பகுதியையும் ஒரு தடவை பின்நோக்கிப் பார்ப்பது இப்போதைய வேளையில் மிகவும் அவசியம்.
தீயனவற்றையும் நல்லனவற்றையும் முடிவு செய்வதற்கு ஒப்பீடுகளே அவசியமாகின்றன. ராஜபக்ஷக்களின் பத்து வருட கால ஆட்சியையும், மைத்திரி – ரணில் தலைமையிலான தற்போதைய ஆட்சியையும் ஆராய்ந்து நல்லதையும் தீயதையும் முடிவு செய்வதற்கும் ஒப்பீடுகள்தான் இங்கு அவசியம்.
இத்தகைய ஆய்வின் போது ராஜபக்ஷக்களின் பத்து வருட கால ஆட்சிக் காலத்தில் நடந்தவற்றை சுருக்கமாகவேனும் இவ்விடத்தில் நினைவுபடுத்திப் பார்ப்பது அவசியமாகின்றது.
அன்றைய பத்து வருட காலப் பகுதியில் நடந்த அத்தனை மீறல்களையும் விரிவாக இங்கே குறிப்பிடுவது இயலாத காரியம்.
ஜனநாயகம் என்பது மிகப் பெறுமதி வாய்ந்தது. அக்கால மன்னராட்சியையும் இக்கால பாராளுமன்ற ஆட்சி முறையையும் வேறுபடுத்தும் சுவராக ஜனநாயகத்தைக் கொள்ளலாம். உலகெங்கும் அக்கால மன்னராட்சி முறைமை படிப்படியாக மறைந்து பரிணாமம் பெற்று, மானுடவாதம் வளர்ச்சியடைந்து உண்மையான ஜனநாயகம் தோற்றம் பெறுவதற்கு பல நூற்றாண்டுகள் சென்றதை வரலாற்றில் நாம் அறிந்திருக்கிறோம். மக்கள் தங்களை நேர்மையாக ஆட்சி செய்வதற்கான அரசாங்கமொன்றைத் தெரிவு செய்வதற்கான சிறப்பான உரிமையை ஜனநாயகம் வழங்கியிருக்கிறது. அவ்வாறான ஜனநாயகத்தின் வாயிலாகவே உலகில் இன்னும் நீதியும் நேர்மையும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
பிரிட்டிஷ் காலனித்துவத்திலிருந்து விடுதலை பெற்ற பின்னர் ஜனநாயகம் வேகமாக வளர்ச்சி பெற்ற நாடுகளில் இலங்கையையும் முக்கியமானதாகக் குறிப்பிடலாம். போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகிய ஐரோப்பிய தேசத்தவர்களால் எமது நாடு சுமார் நான்கரை நூற்றாண்டு காலம் அடிமைப்படுத்தப்பட்டிருந்த போதிலும், 1948ம் ஆண்டு சுதந்திரம் பெற்றதன் பின்னர் இலங்கையின் ஜனநாயக வளர்ச்சி மிகவும் அபாரமானது.
இங்கிலாந்தினால் எமது நாடு சுமார் ஒன்றரை நூற்றாண்டு காலம் அடிமைப்படுத்தப்பட்டிருந்த போதிலும், சுதந்திரத்தை நோக்கிய இறுதிக் காலப் பகுதியில் பிரிட்டிஷார் எமக்குக் கற்றுத் தந்த ஜனநாயக விழுமியங்கள் ஏராளம். ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட பாராளுமன்ற ஆட்சி முறையுடன், மனித உரிமைகளையும் அரசியலமைப்பின் ஊடாக அவர்கள் கற்றுத் தந்திருக்கிறார்கள்.
சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாறு 1948ம் ஆண்டு காலப் பகுதியிலிருந்து ஆரம்பமாகின்றது. பல்கட்சி அரசியலுக்கு நாம் பழக்கப்பட்டுப் போயிருக்கிறோம். இலங்கையின் அரசியல்
வரலாற்றில் அரசியல் போட்டாபோட்டிகள் தீவிரமாக இடம்பெற்றிருக்கின்றன. அவ்வப்போது ஓரிரு கிளர்ச்சிகளையும் எமது நாடு சந்தித்து வந்துள்ளது.
ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்வதற்காக அரசியல் தலைவர்கள் குறுக்கு வழிகளைப் பயன்படுத்திய சந்தர்ப்பங்களும் இல்லாமலில்லை. எத்தனையோ அனுபவங்களை இந்நாடு சந்தித்துள்ள போதிலும், பதவியிலுள்ள அரசாங்கமொன்று ஜனநாயகத்தையும் சட்டதிட்டங்களையும் காலின் கீழ்போட்டு மிதித்தபடி தான்தோன்றித்தனமான முறையில் ஆட்சியை நடத்திய அனுபவத்தை முதன்முதலாக முன்னைய ஆட்சிக் காலத்திலேயே இந்நாடு சந்தித்திருக்கிறது.
ஜனநாயகமும் சட்டதிட்டங்களும் அலட்சியம் செய்யப்பட்டதனால் உள்நாட்டில் நெருக்கடிகளும் மக்கள் மத்தியில் அரசாங்கம் மீதான அவநம்பிக்கையும் ஏற்பட்டமை ஒருபுறமிருக்க, சர்வதேச அரங்கிலும் எமது நாடு வெறுப்பாகவே நோக்கப்பட்டது. மனித உரிமைகளையும் ஜனநாயகத்தையும் மிக மோசமாக மீறுகின்ற நாடாக சர்வதேச அரங்கில் இலங்கை முதன் முதலாக முத்திரை குத்தப்பட்ட காலப் பகுதி அதுதான்.
முன்னைய ஆட்சி முறையின் விளைவாக எமது மக்கள் மறைமுகமாகவேனும் ஏராளமான பின்னடைவுகளைச் சந்திக்க நேர்ந்தது. உலகப் பொதுமன்றமான ஐக்கிய நாடுகள் சபை இலங்கை மீது தொடர்ச்சியாக பிரயோகித்து வந்த நெருக்குதல்களுக்கெல்லாம் காரணம் முன்னைய ஆட்சியின் அராஜகங்களே என்பது மக்களுக்குப் புரியாததல்ல.
உலகப் பொதுமன்றங்களின் எச்சரிக்கைகளைக் கூட அன்றைய ஆட்சியாளர்கள் பொருட்படுத்தியதில்லை. உலகையே எதிர்த்து நிற்கக் கூடிய வல்லரசு நாடாக தென்னிலங்கை மக்கள் மத்தியில் இலங்கையை சித்தரித்துக் காண்பித்தபடி ஒரு தசாப்த காலம் நாட்டின் கீர்த்தியை அவர்கள் சீர்குலைத்திருக்கின்றனர்.
ஊழல், முறைகேடு, சட்ட மீறல்கள், அரச வளங்களின் துஷ்பிரயோகம், குடும்ப ஆதிக்கம், மனித உரிமை மீறல்கள், இனவாதம் என்றெல்லாம் கடந்த கால ஆட்சியில் இடம்பெற்ற அராஜகப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. முன்னைய ஆட்சித் தலைவர்கள் ஜனநாயகத்தின் பாதிப்பு குறித்து என்றுமே கவலை கொண்டதில்லை. அதிகாரத்திலிருக்கும் அரசாங்கமானது நாட்டு மக்களை எவ்விதத்திலும் ஆட்சி புரியலாமென்பதே அவர்களது சித்தாந்தமாக இருந்தது.
அன்றைய அத்தனை அராஜகங்களையும் குழு தோண்டிப் புதைக்கும் வகையில் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒரு வருடமும் எட்டு மாதங்களும் சென்றிருக்கின்றன. கடந்த வருடம் ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலையடுத்து ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் விளைவாக, ஓகஸ்ட் மாதத்தில் எமது நாடு பொதுத் தேர்தலைச் சந்தித்தது. அத்தேர்தலில் மக்கள் தமது ஆணையை மீண்டும் உறுதி செய்திருக்கின்றனர். ராஜபக்ஷக்களின் ஆட்சி முறைமை நாட்டுக்கு ஒவ்வாதது என்பதே அந்த தெளிவான தீர்ப்பு ஆகும்.
இலங்கையின் வரலாற்றைப் பொறுத்தவரை எதிரும்புதிருமான இரண்டு தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைப்பதென்பது அபூர்வமான சரித்திர நிகழ்வு. இத்தகைய ஒன்றிணைவானது நாகரிகமான அரசியல் கலாசாரத்துக்கான பாதையையும் திறந்து விட்டிருக்கிறது. பொதுத் தேர்தல் நடைபெற்று ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது. ‘அரசுக்காகவே மக்கள்’ என்ற நிலைமையிலிருந்து எமது நாடு விடுபட்டு ‘மக்களுக்காகவே அரசு’ என்ற யதார்த்தம் இப்போது வெளிப்பட்டு நிற்கிறது.
ஜனநாயகத்தின் உண்மையான பெறுமானத்தை இப்போதுதான் எமது மக்கள் அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர். மனித உரிமைகளுக்கும் மக்களின் அபிலாஷைகளுக்கும் மதிப்பளிக்கின்ற நாகரிகமான கலாசாரமொன்று நாட்டில் நீண்ட காலத்தின் பின்னர் தோற்றம் பெற்றிருக்கிறது. அச்சுறுத்தல்கள் இன்று இல்லை. ஊழல் மோசடி, முறைகேடுகள், மனித உரிமை மீறல்கள், நீதித்துறை மீதான அலட்சியம் என்பதெல்லாம் இன்று மறைந்தோடி விட்டன.
முன்னைய ஆட்சியாளர்கள் ஏற்படுத்திய கடன் சுமையின் விளைவுகளால் இன்றைய அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியை மாத்திரம் சீர்தூக்கிப் பார்ப்பது முக்கியமல்ல. நாட்டில் உண்மையான ஜனநாயகம் தோற்றம் பெற்றதுதான் இங்கு பிரதானம்.
அராஜகத்தன்மை மேலோங்கிய நாடுகளில் ஒருபோதுமே அமைதியும் நல்லிணக்கமும் ஏற்பட்டதில்லை. நாட்டின் உண்மையான முன்னேற்றம் ஜனநாயகத்தை அத்திவாரமாகக் கொண்டே கட்டப்படுகிறது. இன்றைய அரசாங்கமானது ஜனநாயகப் புரட்சியின் வாயிலாகக் கட்டப்பட்டதெனக் கூறுவதே பொருத்தம்.
எஸ். பாண்டியன்
தினகரன்

No comments:

Post a Comment