20 October 2016

சிவசேனையின் உருவாக்கம் ஸ்ரீலங்கா தமிழ் அரசியலில் ஒரு பிற்போக்குத்தனமான முயற்சி

ஸ்ரீலங்காவிலுள்ள தமிழ் இந்துக்களை ஏனைய மதக் குழுக்களிலிருந்து பாதுகாத்தல், மற்றும் தமிழ் சமூகத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் ஆதிக்கம் செலுத்திவரும் அந்தஸ்துக்கு ஈடாக இந்துக்களுக்கு உரிய இடத்தை உத்தரவாதப்படுத்துதல் என்று சபதம் மேற்கொண்டு அந்த நோக்கத்துடன் இந்து அரசியற் குழுவான சிவசேனை உருவாக்கப்பட்டிருப்பதை, ஸ்ரீலங்கா தமிழ் அரசியலில் ஒரு பிற்போக்குத்தனமான வளர்ச்சி என்று அவதானிகளால் கருதப்படுகிறது.
மூத்த பத்தி எழுத்தாளரான டி.பி.எஸ்.ஜெயராஜ், இதனை தமிழ் அரசியலில் ஸ்ரீலங்கா சுதந்திரம் பெற்றதின் பின் முதல் மூன்று தசாப்தங்களாக இருந்து வந்த மதங்களுக்கு இடையேயான பிரிவினை நிலைக்கு திரும்பவும் கொண்டு செல்லும் ஒரு முயற்சியாகப் பார்க்கிறார். 1970 பாராளுமன்றத் தேர்தலில் காங்கேசன்துறையில் ஒரு ஆச்சாரமான இந்துசமயத்தவரான சி.சுந்தரலிங்கம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிறீஸ்தவ தலைவரான சாமூவேல்.ஜே.வி.செல்வாயநாகத்துடன் போட்டியிட்டபோது, சிலுவை மற்றும் சூலம் இவை இரண்டில் ஒன்றை தெரிவு செய்யும்படி வாக்காளர்களைக் கேட்டுக்கொண்ட நிகழ்ச்சியை ஜெயராஜ் நினைவுபடுத்துகிறார். ஆனால் பெருமளவு மதச்சார்பற்ற தமிழர்கள் எதையுமே தெரிவுசெய்யாமல் மதச்சார்பற்ற பெடரல் கட்சியின் கிறீஸ்தவ தலைவரான செல்வநாயகத்துக்கு வாக்களித்தார்கள்.
தமிழர்கள் பொதுவாக வகுப்புவாத முறையீடுகளை நிராகரித்து, அல்பிரட் துரையப்பா, சி.எக்ஸ்.மார்ட்டின் மற்றும் ஜோசப் பரராஜசிங்கம் போன்ற பல கிறீஸ்தவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளார்கள் என ஜெயராஜ் தெரிவித்தார்.
1983 முதல் 2009 வரையான போர்க்குண சகாப்தத்தில், மதச்சார்பற்ற தமிழ் புலிகள் மதச் சார்பான நிலைகள் தமிழ் மக்களை பிரிப்பதற்கு இடம் கொடுக்கவில்லை. உண்மையில் கத்தோலிக்கர்கள் தமிழ் இயக்கங்களில் முன்னர் செய்துவந்த ஜனநாயகக் கட்டத்தைப் போல எல்.ரீ.ரீ.ஈ யின் கீழும் முக்கியமான பாத்திரத்தை வகித்தார்கள்.
ஆனால் 2009 மே மாதம் ஏற்பட்ட இராணுவத் தோல்வி ஏற்பட்ட கணம் முதல் தமிழ் புலிகளின் ஆதிக்கத்தை தழுவிய கட்டுப்பாடு முடிவடைந்தது, மத பிரிவுகள் அரசியல் அணிதிரட்டலின் கருவிகளில் ஒன்றாகத் தோன்ற ஆரம்பித்தன. முந்தைய நாட்களில் காட்டப்பட்ட செல்வநாயகத்தின் முக்கியமான எதிர்ப்பினைப்போல, இன்றைய நாட்களில் இலங்கை தமிழரசுக் கட்சியினது எம். ஆபிரகாம் சுமந்திரன் ஒரு பகுதி தமிழ் இந்துக்கள்மீது தலையாய எதிர்ப்பினைக் காட்டியுள்ளார். சிவசேனை சுமந்திரனை இலக்கு வைப்பது ஆச்சரியமாக இல்லை.
இந்து என்கிற அடையாளத்துடன் வலம் வருவது முன்பு ஸ்ரீலங்கா தமிழ் அரசியலில் ஒரு பகுதியாக இருக்கவில்லை, அது இனிமேலும் விலக்கப்பட்ட ஒன்றாக இருக்கப் போவதில்லை. வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஒரு ஆச்சாரமான இந்துவுக்கு உரிய அனைத்து சின்னங்களையும் அணிந்துகொண்டுள்ளதுடன் மற்றும் தனது பேச்சுக்களை ஒரு சமஸ்கிருத சுலோகத்துடன் ஆரம்பிக்கும் ஒரு வழக்கத்தையும் கொண்டுள்ளார். அவர் மேலும் ஸ்ரீலங்கா மற்றும் இந்தியாவில் உள்ள இந்து சமய நிறுவனங்களுடன் நெருங்கிய தொடர்பையும் கொண்டுள்ளார். சுவராஸ்யமாக அவர் தழிரசுக் கட்சியில் எதிர்ப்பை வெளியிடும் முக்கியமானவரான சுமந்திரன் மீது ஆத்திரப்பட்டு அவருடன் ஒரு போரையும் நடத்தி வருகிறார்.
ஸ்ரீலங்கா தமிழ் சமூகத்தில் உள்ள சாதி ஏற்றத்தாழ்வுகள் மற்றும் சமூக அநீதிகளை தமிழ் தலைவர்கள் கண்காணிக்க வேண்டும் என விரும்பும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், இந்து சமூகத்தில் காணப்படும் உள்ளகப் பிரச்சினைகளை புறக்கணித்து வெளி அச்சுறுத்தல்களில் கவனம் செலுத்தும் சிவசேனையின் முடிவு, ஸ்ரீலங்கா இந்து சமூகத்தில் காணப்படும் நீண்டகால பழமையான அநீதிகள் தொடருவதற்கே வழிவகுக்கும் என நம்புகிறார்.
பொருளாதார மற்றும் சமூக ஆர்வலரான அகிலன் கதிர்காமர், மகாராஷ்டிராவின் போராளிகளான சிவசேனாவுக்கு பிறகு இந்த வகையான சிவசேனை மாதிரிகள் “கட்டுப்படுத்த முடியாதவையாக ஆக முடியும்” என்கிறார். ஆனால் மனித உரிமை மீறல்களை காலவாரியாக வரிசைப்படுத்தியுள்ள ராஜன் கூல், இனவாதத்தை உட்புகுத்த முயன்று தோல்வியுற்ற முந்தைய முயற்சிகளைப்போலவே சிவசேனையும் தோல்வியடையும் என நம்புகிறார். முகநூலில் வெளியிடப்பட்ட கருத்து ஒன்றில் மும்பையில் உள்ள தமிழர்களை கடுமையாக தாக்குவதன் மூலம் இந்திய சிவசேனா தன் அரசியல் களத்தை ஆரம்பித்ததை இந்த சிவசேனை தலைவர்கள் அறிவார்களா என்று ஒரு கேள்வி எழுப்பப் பட்டுள்ளது.
திருகோணமலை பசுமை இயக்கத்தை சேர்ந்த திருநாவுக்கரசு கோபகன் போன்ற சிலர், சிவசேனையின் உருவாக்கத்தில் இந்தியாவின் கரங்கள் இருப்பதாகப் பார்க்கிறார்கள். “இந்தியா திரும்பவும் ஸ்ரீலங்காவின் வடபகுதி தமிழ் அரசியலை, அரசியல்மயமாக வடிவமைக்க முயற்சி செய்கிறது” என்று தனது முகநூல் பதிவு ஒன்றில் கோபகன் குறிப்பிட்டுள்ளார். சிவசேனை ஆரம்பத்தில் இந்தியாவிடம் இருந்து நிதிகளை பெறும் தனது நோக்கத்தை மறைத்து வைக்கவில்லை. சிவசேனை நிறுவனர்களில் ஒருவரான பாராளுமன்ற அங்கத்தவரான எஸ்.யோகேஸ்வரன் விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்புக்கு மிகவும் நெருக்கமானவர்.
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

நன்றி- தேனீ இணையம்

No comments:

Post a Comment