இலங்கை பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து தமிழ் மக்களுக்கெதிரான ஒதுக்கல்களும், பாகுபாடுகளும் அவர்கள் மீதான மேலாதிக்கச் சிந்தனையும் பெரும்பான்மை வாதத்துடன் கட்டம் கட்டமாக வெளிப்படத் தொடங்கி வளர்ச்சியடைந்து வந்தன. குறிப்பாக இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமை பறிப்பு, தமிழ் பேசும் மக்கள் செறிவாக வாழும் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றம் என்பவற்றின் ஊடாக இந்நடவடிக்கைகள் ஆரம்பமாகின. இதன் விளைவாக 1956, 1958, 1961, 1977, 1983 ஆகிய வருடங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
1956 இல் தொடங்கி 1970 கள் வரையும் தமிழ் தலைமைகள் தமிழ் பேசும் மக்களுக்கெதிரான ஒதுக்கல்களுக்கும், வன்முறைகளுக்கும் எதிராக ஜனநாயக வழியில் சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்து வந்தன. இருந்தும் அப்போராட்டங்களுக்கு நியாயமான முறையில் தீர்வுகளை பெற்றுக் கொடுக்கத் தவறிய ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கெதிரான சந்தேகங்களும் ஐயங்களும் வளர்ச்சியடைய வழி செய்தனர்.
அதேநேரம் இந்த ஒதுக்கல்கள், வன்முறைகள் காரணமாக பல தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். அவர்களது கோடிக்கணக்கான பெறுமதியான சொத்து செல்வங்களும் அழிக்கப்பட்டு வந்தன. அத்தோடு இவ்வன்முறைகளின் போது தமிழ் மக்கள் தமிழ் இருப்பிடங்களை விட்டு உள்நாட்டுக்குள் இடத்திற்கு இடம் இடம்பெயர்ந்து சென்றதோடு, வெளிநாடுகளையும் நோக்கி புலம்பெயரவும் தொடங்கினர்.
இவை இவ்வாறு இடம்பெற்றுக் கொண்டிருந்த சூழலில் ஜனநாயகப் போராட்டத்தில் நம்பிக்கையிழந்த தமிழ் இளைஞர்கள் ஆயுதங்கள் மீது நம்பிக்கை வைத்தனர். இதனூடாக அவர்கள் ஆயுதப் போராட்டத்தினுள் தள்ளப்பட்டனர். இதன் விளைவாகத் தமிழ் மக்களின் இடம்பெயர்வும், புலம்பெயர்வும் மேலும் அதிகரித்தன. ஏனெனில் உடல் ரீதியில் தீங்குகளை ஏற்படுத்தும் வன்முறைகள் பெரும்பாலான தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து செல்லக் காரணமாக அமைந்தது.
இவ்வாறு புலம்பெயர்ந்து சென்ற தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் தாம் தஞ்சமடைந்துள்ள நாடுகளின் ஊடாக இலங்கையின் மீது அழுத்தம் தெரிவிக்கவும் ஒரு கட்டத்தில் அவர்களது புலம் பெயர்வு உதவி செய்தது. என்றாலும் புலம் பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் பலர் அந்தந்த நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளனர். இன்னுமொரு தொகுதியினர் குடியுரிமை பெறாத நிலையில் உள்ளனர். ஆனால் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் பெரும் பகுதியினர் அந்தந்த நாடுகளில் வளமானவர்களாக வாழ்கின்றனர். இந்த பின்னணியில் யுத்தம் முடிவுற்றதைத் தொடர்ந்து நாட்டைக் கட்டியெழுப்ப புலம்பெயர்ந்த தமிழர்கள் முன்வர வேண்டும் என்றும் அவர்களைத் தாய்நாட்டுக்கு திரும்புமாறும் கடந்த ஆட்சியாளர்கள் அழைப்பு விடுத்தனர்.
அந்த அழைப்பில் நம்பிக்கை வைத்து பலர் தாயகம் திரும்பினர். ஆனால் அவர்களில் சிலர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலும், நாட்டுக்குள் வருகை தந்த பின்னரும் முகம் கொடுத்த அசௌகரியங்கள் புலம் பெயர்ந்த தமிழர்களின் வருகைக்கு தடைக் கல்லாக அமைந்தது. அவர்கள் கடந்த ஆட்சியாளர்களின் அழைப்பில் நம்பிக்கை இழந்தனர். அத்தோடு அவர்களது வருகை தடைப்பட்டது.
என்றாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்ததும் புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களை தாயகம் திரும்புமாறு அழைப்பு விடுத்தார். அத்துடன் நல்லாட்சி அரசாங்கமும் நம்பிக்கை அளிக்கும் வகையில் நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றது. இந்த பின்புலத்தில் புலம்பெயர்ந்த பல தமிழர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். மேலும் ஒரு தொகுதியினர் தாயகம் வந்து சென்றுள்ளனர். என்றாலும் இந்நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பாகுபாடுகள் மற்றும் சிறுபான்மையினர் தொடர்பில் நிலவும் பார்வை என்பன அவ்வளவு திருப்திகரமானதாக இல்லை என்பதாக அவர்கள் கருதுகின்றனர்.
இவ்வாறான சூழ்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நேற்றுமுன்தினம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தேர்வுநர்களை பதிவு செய்தல் தொடர்பான விசேட சட்ட மூலத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அந்த உரையில் அவர் முக்கிய செய்தி ஒன்றை அரசாங்கத்துக்கும் நாட்டுக்கும் முன்வைத்திருக்கிறார்.
அதாவது, 'நாட்டில் மோதல்களும், வன்முறைகளும் மீண்டும் இடம்பெறாது என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்தினால் நாட்டை விட்டு வெளியேறிச் சென்ற தமிழ் மக்களில் பலர் தாயகம் திரும்பத் தயாராக உள்ளனர் 'என்று குறிப்பிட்டார். இது ஒரு ஆரோக்கியமான அறிவிப்பு. எவரும் அச்சம் பீதியில்லாத ஜனநாயக சுதந்திர சூழலில் வாழ்வதற்குத்தான் விரும்புவர். அதுதான் நவீன யுகத்தின் நியதி. இன்றைய நவீன யுகத்தில் இன, மத, மொழி, நிற ரீதியிலான பாரபட்சங்களையும் ஒதுக்கங்களையும் அற்ப இலாபம் தேட முயற்சிப்பவர்களைத் தவிர எவரும் விரும்புவதில்லை.
இவ்வாறான பேதங்களை பாவித்து அற்ப இலாபம் தேட விரும்புவர்களுக்கு நாட்டின் சுபீட்சமோ, விமோசனமோ குறித்து அக்கறையில்லை என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் எதனை வலியுறுத்துகின்றாரோ அதனையே எல்லா சிறுபான்மையினரும் எதிர்பார்க்கின்றனர். அதுவே நாட்டின் விமோசனத்திற்கும் சுபீட்சத்திற்கும் வழிவகுக்கும். இன, மத, மொழி ரீதியிலான ஒதுக்கங்களும் பாரபட்சங்களும் ஒருபோதும் நாட்டை முன்னேற்ற உதவாது. இதற்கு முன்னேற்றமடைந்துள்ள பல நாடுகள் நல்ல எடுத்துக்காட்டு.
நன்றி- தினகரன் - ஆசிரியர் தலையங்கம்
No comments:
Post a Comment