22 July 2017

மனோநிலை மாற வேண்டும்.

நாட்டில் மீண்டும் அரசியல் நெருக்கடிகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. சிங்கள பௌத்த மேலாண்மைத்தனம் பகிரங்கமாக மேலெழத்தொடங்கியுள்ளது. சில இடங்களில் மிக வெளிப்படையாகவே பிக்குகள் முஸ்லிம்களின் மீதும் தமிழர்களின் மீதும் தங்களுடைய சண்டித்தனத்தைக் காட்ட முற்பட்டுள்ளனர். சிங்கள பௌத்த அமைப்புகளும் சிங்கள இனவாதிகளும் அரசியல்வாதிகளில் ஒரு தொகுதியினரும் ஏனைய இனங்களை நோக்கி எச்சரிக்கைகளை விடுத்து வருவது அதிகரித்துள்ளது. பலரும் குறிப்பிட்டு வருவதைப்போல யுத்த வெற்றியானது சிங்கள பௌத்த மனோநிலையை இவ்வாறு ஆக்கியுள்ளது என்றே படுகிறது. இதனால் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் பதற்றமடையத் தொடங்கியுள்ளன.
இந்தப்போக்கின் உச்சமாக, அரசியலமைப்புத்திருத்தத்திற்கு மகாநாயக்க தேரர்களின் ஒத்துழையாமை அல்லது மறுப்பு இருக்கிறது. அந்த மறுப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்க முடியாத நிலையில் தேரர்களின் கால்களில் வீழ்ந்து கிடக்கின்றனர் தலைவர்கள். பன்மைச் சமூகங்களுக்குப் பொருத்தமான முறையில் ஆட்சியையும் சட்டங்களையும் அரசியல் சாசனங்களையும் கொண்டிருக்க வேண்டிய நாட்டில் ஒரு இனத்துக்கும் ஒரு மதத்திற்கும் முன்னுரிமை அளிக்கும் போக்கே வலுப்பெற்று வருகிறது. இது நிச்சயமாக இனவிரோத நடவடிக்கையே.
இத்தகைய இனவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பதற்கும் நாட்டின் தலைமைப்பீடத்திடம் எத்தகைய அக்கறைகளும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவேதான் இனங்களை நெருக்கடிக்குள்ளாக்கி, நாட்டைக் கலவரச் சூழலுக்குள் தள்ளிவிடும் இந்தப் போக்குக்கு எதிராக அரசாங்கத் தரப்பிலிருந்து எத்தகைய சட்ட நடவடிக்கைகளும் கட்டுப்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை. தவிர, இந்த அபாயப் போக்கைக் கண்டித்தும் எதிர்த்தும் சிங்களச் சமூகத்திலிருந்து குறிப்பிடத்தக்களவுக்கு எதிர்ப்புக் குரல்களும் எதிர்நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரியவில்லை. ஆனால், அந்தப் பொறுப்பு சிங்களச் சமூகத்திற்குண்டு.
ஆட்சி அதிகாரத்தை சிங்கள பௌத்த மேலாதிக்க சக்திகளே வைத்திருக்கின்றன. நாட்டில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்களாகவும் இவர்களே உள்ளனர். ஆகவே மிகப்பொறுப்பாகவும் கண்ணியமாகவும் நடந்து கொள்ள வேண்டிய பொறுப்பு சிங்களத் தரப்பினருக்கே அதிகமாக உண்டு. ஆனால், இந்தப் பொறுப்பை உணர்ந்து சிங்களத் தரப்புச் செயற்படுவதாகத் தெரியவில்லை.
தீய சக்திகள் நாட்டை நெருக்கடிக்குள்ளாக்கும்போது, அதைக் கண்டும் காணாதிருக்கிறது சிங்களச் சமூகம். ஒரு செயல் நீதியற்றது என்று தெரிந்து கொண்டே அதைப்பற்றிப் பொருட்படுத்தாமல் விடுவது அல்லது கண்டும் காணாமல் விட்டு விடுவது எவ்வளவு பெரிய குறைபாடு? அது பெருந்தீ்ங்கை விளைவிக்கக்கூடியது என்ற வரலாற்று அனுபவத்தையும் அறிவையும் தெரிந்து கொண்டே புறக்கணிப்பது எவ்வளவு அநீதியானது? ஆனால், என்ன செய்ய முடியும்? என்ற கேள்வியைக் கேட்பதைத் தவிர்த்து.
ஆகவே வரலாறு முன்னோக்கி நகர்வதற்குப் பதிலாக பின்னோக்கித் திரும்பியுள்ளது என்றே கொள்ள வேண்டியுள்ளது. பின்னோக்கித் திரும்பும் வரலாறு என்பது நாட்டுக்கும் மக்களுக்கும் நெருக்கடிகளையே கொடுக்கும். அது மீண்டும் இருண்ட யுகங்களையே உருவாக்கும். இப்பபொழுது ஏறக்குறைய அப்படியான ஒரு நிலைதான் காணப்படுகிறது. 
கடந்த காலத்தில் இன முரண்கள் இந்த நாட்டை எப்படி அழிவுக்குக் கொண்டு சென்றன என்பதை யாருக்கும் விளக்க வேண்டியதில்லை. முப்பது ஆண்டுகால யுத்தத்தின் படிப்பினைகள் அதைத் தெளிவாகச் சொல்லும். யுத்தமும் இனப்பகைமையும் அதனால் ஏற்பட்ட இடைவெளிகளும் வெளிச்சக்திகளின் தலையீட்டுக்கு எவ்வாறெல்லாம் இடமளித்தன என்பதையும் விளக்க வேண்டியதில்லை. அவையும் செழிப்பான வரலாற்று அனுபவங்களாக உள்ளன. இந்த அவலக்காலத்தில் யார் யாருடைய கால்களையெல்லாம் பிடிக்க வேண்டியிருந்தது என்பதை ஒரு கணம் கண்களை மூடி யோசித்தால் புதிய ஞானம் பிறக்கும்.
ஆனால், இலங்கைச் சமூகத்தினரிடம் ஒரு பெரிய உளவியற் சிக்கல் அல்லது உளக்குறைபாடு உள்ளது. அவர்கள் தங்களுக்குள் இணக்கம் காணமாட்டார்கள். தங்களுக்குள் ஒருவரை ஒருவர் நேசிக்கவும் புரிந்து கொள்ளவும் இணங்கி வாழவும் தயாரில்லை. பதிலாகப் பிறரின் கால்களில் வீழத் தயாராக இருக்கின்றனர். இது எவ்வளவு பெரிய முட்டாள்தனமாகும்.
கடந்த 30 ஆண்டுகால இலங்கை அரசியல் என்பது வெளிச்சக்திகளின் நேரடியான, மறைமுகமான தலையீட்டுக்கும் அழுத்தங்களுக்குமே இடமளித்தது. இன்னும் இந்த நிலையிலிருந்து நாடு மீளவில்லை. அதனால், நாடு இன்றும் சுயாதீனமாக இயங்க முடியாத  நிலையிலேயே இருக்கிறது. கடன்சுமை ஒரு புறம். பொருளாதார நெருக்கடிகள் இன்னொரு புறம். மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுகள். வேலையில்லாப் பிரச்சினை எனத் தீர்க்கப்படாத பிரச்சினைகள் ஏராளம். இதைவிட அரசியல் ரீதியான வல்லாதிக்க நாடுகளின் அழுத்தங்கள்... என ஆயிரமாயிரம் சிக்கல்களுக்குள் சிக்குண்டிருக்கிறது நாடு.
இருந்தாலும்கூட இந்தத் தாற்பரியத்தைப் புரிந்து கொண்டு நாட்டுக்குப் பொருத்தமாகச் சிந்திப்பதற்குப் பல தரப்பிலும் ஆர்வங்கள் ஏற்படவில்லை. குறிப்பாக அரசியல் தலைவர்கள், மதத்தலைவர்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், அரசியல் மற்றும் சமூகச் சிந்தனையாளர்கள், ஜனநாயக விரும்பிகள், சமூக அமைப்பினர் என எல்லாத்தரப்பினரிடத்திலும் ஒரு சோம்பல்தனம் அல்லது அக்கறையீனம் காணப்படுகிறது. இன்றைய உலக ஒழுங்கு, உலகமயமாதலின் நெருக்கடி இப்படித்தான் மனிதர்களைச் சூழலிலிருந்தும் சமூக அக்கறையிலிருந்தும் வரலாற்றிலிருந்தும் பிடுங்கி எடுத்துத் தனியாக வைத்திருக்கும். அது எதைப்பற்றியும் சிந்திப்பதற்கு இடமளிக்காது என யாரும் இந்த இடத்தில் வாதங்களை முன்வைக்கலாம். அப்படியென்றால், இனவாதிகள் செயற்படுவதற்கு நேரமும் வாழ்க்கை அமைப்பும் சூழலும் உண்டே. அதை எதிர்த்தும் மறுத்தும் செயற்படத்தான் வாய்ப்புகளும் வசதிகளும் இல்லையா?
மிகப் பயங்கரனமான ஒரு காலகட்டத்தை இப்போதுதான் கடந்து வந்திருக்கிறோம். இன்னும் அந்தப் பயங்கரமான காலத்தின் இரத்தப் பிசுபிசுப்பும் கண்ணீர்ப் பெருக்கும் மாறிவிடவில்லை. அந்தப் பயங்கரமான காலகட்டம் எதனால் ஏற்பட்டது? எப்படி ஏற்பட்டது? என்பதைப் புரிந்து கொண்டால், இன்னும் நாங்கள் பிறத்தியாரின் தலையீட்டுக்கும் நெருக்கடிகளுக்கும் உள்ளாகிக் கொண்டிருக்கிறோம் என்பதை விளங்கிக் கொண்டால், நாட்டில் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முடியாமல் தவிக்க வேண்டிய அவலத்தை உணர்ந்து கொண்டால் அர்த்தமேயில்லாத இனமுரண்களில் தொங்கிக் கொண்டிருக்க வேண்டி வராது.
உண்மையில் இலங்கைச் சமூகங்கள் இனரீதியான உளச் சிக்கல்களுக்குள்ளாகியுள்ளன. முடிவற்ற சிக்கலாகவே இது மாறிச் செல்லும் அபாயமே காணப்படுகிறது. இன அடையாள அரசியல், இன அடையாளக் கட்சிகள், இனரீதியாகச் சிந்திக்கும் அரசியற் பண்பாடு, இனரீதியான செயற்பாடுகள் என்று எல்லாமே இனரீதியானதாக இருக்குமானால் அதன் முடிவு போட்டி, குரோதம், மோதல், அழிவு, துயரம் என்பதாகவே இருக்கும். இதற்கு வேறு வாய்பாடுகள் கிடையாது.
எனவேதான் இன முரண்பாடுகள் உள்ள இடங்களில் எல்லாம் தலைவர்கள் மகத்தானவர்களாகச் செயற்பட வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தாம் ஒரு இனத்தின், ஒரு தரப்பு மக்களின் பிரதிநிதி என்று சிந்திக்காமல் தேசிய அளவிலான, அனைத்துப் பிரிவு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர் என்று சிந்திக்க வேணும். மண்டேலா கறுப்பினத் தலைவரோ பிரதிநிதியோ இல்லை. அவர் ஆபிரிக்கத் தலைவர். காந்தி இந்துக்களின் தலைவரோ பிரதிநியோ இல்லை. அல்லது குஜராத்தியர்களுக்காக மட்டும் போராடியவரும் இல்லை. அவர் முழு இந்தியாவுக்குமான தலைவர். அப்படிப் பொதுவாகத் தம்மை நிலைநிறுத்திபடியால்தான் அவர்கள் அந்த நாடுகளின் தலைவர்களாக மட்டுமல்ல, உலகத்தலைவர்களாகவும் கொள்ளப்பட்டனர். கொண்டாடப்படுகின்றனர்.
இலங்கையில் ஆட்சி அதிகாரத்துக்கு வருவோரும் சரி, இருப்போரும் சரி, இருந்தவர்களும் சரி அனைவருமே தாம் சிங்கள பௌத்தத் தரப்பிற்கு விசுவாசமாக இருந்தால் போதும் என்று மட்டும் சிந்திக்கிறார்கள். சிங்கள பௌத்தத்தைப் பாதுகாத்தால் போதும் எனக் கருதுகிறார்கள். இது ஒரு காவற்காரன் வேலை மட்டுமே. தலைமைத்துவத்துக்குரிய பண்பல்ல.
ஆனால், இது பின்னவீனத்துவக் காலம். பின் நவீனத்துவக் காலம் என்பது பன்மைத்துவத்துக்கும் மற்றமைகளுக்கும் இடமளிக்கும் புதிய தொரு சூழலில் காலமாகும். இந்தக் காலமானது உலகம் முழுவதிலும் புதிய வாழ்க்கை முறையை, புதிய அரசியல் முறைகளை, புதிய சிந்தனையை, புதிய பண்பாட்டினை, புதிய அணுகுமுறைகளை, கூடி வாழ்தலை, அனைவருக்கும் இடமளித்தலை, அனைத்தையும் சமனிலையில் கொள்வதை வலியுறுத்துவதாகும். இதுவே இன்றைய உலக ஒழுங்கும் அறிவியல் வளர்ச்சியுமாகும். அறிவியல் வளர்ச்சி என்பது இயல்பின்  விதி. இயல்பின் விதியே பரிணாம வளர்ச்சியின் அடிப்படை. இதை மறுக்கும்தோறும் காயங்களும் வலியும் இரத்தப்பெருக்குமே ஏற்படும்.
ஆகவே இன்றைய உலக ஒழுங்கிற்கும் இன்றைய இலங்கைக்கும் பொருத்தமான சிந்னையும் செயற்பாட்டு உழைப்புமே இப்போது தேவையாக உள்ளது. எல்லாவற்றுக்கும் அப்பால், தவறான பாரம்பரியச் சிந்தனை முறையைக் கடந்து, புதிதாகச் சிந்திக்கக்கூடிய துணிச்சல் தேவை. ஒரு படகோட்டிக்கு எப்போதும் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல் இருக்க வேணும். இல்லையென்றால், படகையும் ஆள முடியாது. கடலையும் ஆள முடியாது.
இன்று இலங்கையின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்கிரமசிங்கவும் திடமான முடிவுகளை எடுக்கத் துணிவது அவசியம். இந்த நாடு பன்மைத்துவத்துக்குரிய நாடு என்ற அடிப்படையில் செயற்படச் சிந்திப்பது இருவருடைய பொறுப்பாகும். அவர்கள் மட்டுமல்ல, அனைத்துச் சமூகங்களின் அரசியல் மற்றும் தலைமைத்துவச் சக்திகளும் பொறுப்புணர்வோடு சிந்தித்துச் செயற்படுவது கட்டாயமாகும். வரலாறு அதையே கோரி நிற்கிறது. ஆனால், வரலாற்றின் கோரிக்கைக்கு மாறாகவே பெரும்பாலான அரசியல் தலைமைகள் உள்ளன. ஆகவே இது தவறுகளின் பின்னே நடந்து கொண்டிருக்கும் தலைமைகளை வழிக்குக் கொண்டு வரவேண்டிய மக்கள் விழிப்புணர்வுக் காலமாகும். அதற்கேற்ற முறையில் மக்களை விழிப்புணர்வடைய வைக்கவேண்டிய சக்திகள் – அழுத்தக்குழுக்களும் செயற்பாட்டியக்கங்களும் - செயற்பட வேண்டும்.

-கருணாகரன்-

நன்றி- தேனீ 

No comments:

Post a Comment