30 April 2018

பூனைகளுக்கு மணிகளைக் கட்டுவது யார்?

உள்ளுராட்சித் தேர்தல் முடிந்து, இப்பொழுது தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் வழிநடத்தலில் உள்ளுராட்சி சபைகள் ஒருவாறு இயங்கத் தொடங்கியுள்ளன. இந்தச் சபைகளின் இயங்கு தன்மை எப்படி இருக்கப்போகிறது என்பது பதிலற்று எழுந்திருக்கும் கேள்வி. இந்தக் கேள்விக்கான விடையைக் காண்பது எளிதானதல்ல.

ஏனெனில் உள்ளுராட்சி சபைத்தேர்தல் மட்டுமல்ல, சபைகளில் ஆட்சியை அமைப்பதும் பெரும் நெருக்கடிகள், போட்டிகள், சமர்களின் மத்தியிலேயே நடந்தது. தேர்தலின் போது நடந்த அத்தனை களேபரங்களும் சபைகளில் ஆட்சியை அமைப்பதிலும் நடந்தன. அதாவது சபைகளைக் கைப்பற்றுவதற்கான சமர் அல்லது போட்டிகள் எல்லோரும் அறியக் கூடியவகையில் அமர்க்களமாகவே நடந்தன. 

அதாவது “தேர்தல் சமர்” அல்லது “தேர்தல் போட்டி”களுக்கு நிகராக “ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான சமர்” அல்லது அடுத்த கட்டப்போட்டி நடந்தது. இதனால் இதற்கான போட்டி, சபைகளில் வைத்தே முன்னெடுக்கப்பட்டிருந்தது.  

பொதுவாக தேர்தலில் வெற்றியடையும் தரப்பு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வது வழமை. ஆனால், இங்கே அவ்வாறு நடக்கவில்லை. உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் எந்தத் தரப்புக்கும் பெரும்பான்மையைக் கொடுத்திருக்கவில்லை. இதனால் ஆட்சி அதிகாரத்தை இலகுவாக அமைக்கக்கூடிய சூழல் ஒருவருக்குமே ஏற்படவில்லை. இன்னொரு சமருக்கு – போட்டிக்கு - முகம் கொடுத்தே ஆட்சியமைக்க வேண்டியதாயிற்று. 

இந்த அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போட்டிகள் தேர்தல்கால நடைமுறைகளைப் போல மிகக் கீழ்த்தரமான முறையிலேயே பல இடங்களிலும் நிகழ்ந்தேறின. அதையும் விடக் கீழ்த்தரமானது, சபைகளைக் கைப்பற்றிய பிறகு விடுகின்ற கதைகளும் சொல்லப்படுகின்ற நியாயங்களுமாகும். 

“கூட்டுச் சேரவே முடியாது, அவர்களுடன் கதை, பேச்சுக்கே இடமில்லை” என்ற கட்சிகளிடமெல்லாம் படியிறங்கிப்போய், கால்களைப் பிடித்துக் கெஞ்சியும், கையைப்பிடித்து இறைஞ்சியும் இரகசியப் பேச்சுகள் நடந்தன. ஆதரவு கோரப்பட்டது. 

யாழ்ப்பாண மாநகரசபை, சாவகச்சேரி, பருத்தித்துறை நகரசபை போன்ற பலசபைகளில் ஆட்சி அமைப்பதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் ஈ.பி.டி.பியுடன் பேசியது பகிரங்கமான சங்கதி. 

இதை மாவை சேனாதிராஜாவே ஒப்புக்கொண்டிருந்தார். 

சபைகளை அமைத்த பிறகு இப்பொழுது வேறு விதமாகக் கதை விடப்படுகிறது. “ஈ.பி.டி.பியுடன் நாம் பேசவேயில்லை. அப்படிப் பேசியிருந்தால் அதற்கான ஆதரங்களை அவர்கள் காட்டட்டும் பார்க்கலாம். அப்படிப் பேச்சுவார்த்தைகளை நடத்தக் கூடிய அளவுக்கு ஈ.பி.டி.பி ஒன்றும் பெரிய கட்சியோ கவனிக்கக் கூடிய தரப்போ இல்லை” எனச் சுமந்திரன் கூறுகிறார். இதைப்போல இனி வெற்றி பெற்ற ஒவ்வொருவரும் கதைகளை மாற்றப்போகிறார்கள். கயிறு விடப்போகிறார்கள். 

“ஆற்றைக் கடக்கும் வரைதான் அண்ணன் தம்பி. அதுக்குப் பிறகு நீ யாரோ நான் யாரோ” என்ற விதமாக. ஆனாலும் உண்மையோ சுடரும் அனற் துண்டாக எப்போதும் உறங்காதிருக்கும்.

கிளிநொச்சியில் கரைச்சிப் பிரதேச சபையின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் குமாரசாமி தர்மராஜின் வீடு தேடிச் சென்றார் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன். அதைப்போல பளை - பச்சிலைப்பள்ளியில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் நகுலேஸ்வரன் வீட்டுக்குப்போய், நகுலனின் கைகளைப் பிடித்துக் கால்களில் வீழ்ந்து ஆதரவு கோரினார். இவையெல்லாம் பகிரங்கமான சம்பவங்கள்.

வவுனியா நகரசபையை தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ் கைப்பற்றியுள்ளது. இது யாருமே எதிர்பார்த்திருக்காத ஒன்று. இதற்கான அது ஐ.தே.க, சு.க, ஈ.பி.டி.பி போன்றவற்றின் ஆதரவைப் பெற்றது.

யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டி.பியின் ஆதரவைக் கூட்டமைப்பினர் பெற்றதை விமர்சித்திருந்த சுரேஸ் பிரேமச்சந்திரன், வவுனியாவில் அதைப் பெற்றார். கூட்டமைப்புச் செய்ததையே செய்தார். 

இதைப்போல ஒவ்வொரு இடத்திலும் இரகசியப் பேச்சுகளும் சமரசங்களும் ஆதரவு கோருதல்களும் தாராளமாக நடந்தன. கிழக்கிலும் இவ்வாறு பல கதைகளும் காட்சிகளுமுண்டு. தமிழ்த்தரப்பில் மட்டுமல்ல, முஸ்லிம் கட்சிகளும் இவ்வாறான தயைகோரலிலும் பேரம் பேசுதல்களிலும் ஈடுபட்டிருக்கின்றன.

“அரசியலில் இதெல்லாம் சகஜம், சாதாரணமப்பா” என்று சொல்லி, இவற்றை நாம் கடந்து சென்று விட முற்படக் கூடாது. ஏனென்றால், இது ஒரு அரசியல் பண்பாடு பற்றிய, அரசியல் நெறிமுறை பற்றிய பிரச்சினை. மக்களுக்கான அரசியலை முன்னெடுப்போர் அதைப் பகிரங்கமாகச் செய்ய வேண்டும். பகிரமாகச் சொல்ல வேண்டும். அதற்கான துணிச்சலைக் கொண்டிருக்க வேண்டும். அரசியல் என்பதே துணிகரமான ஒரு நடவடிக்கைதான்.

அப்படிச் செய்யவில்லை என்றால், தாம் செய்கின்றவற்றை நேர்மையான முறையில் வெளிப்படுத்துவதற்குத் தயங்குகிறார்கள் என்றால், அங்கே “கள்ளத்தனமே” நிறைந்திருக்கிறது. அதனுடைய உண்மையான வடிவம், அயோக்கியத்தனமாகும். 

“எல்லாவற்றையும் மக்களுக்கு விலாவாரியாகச் சொல்லிக் கொண்டிருக்க முடியாது“ என்று யாரும் சப்பைக் கட்டு நியாயத்தை இந்த இடத்தில் சொல்ல முற்படக்கூடும். அது தவறு. மக்களுக்கு ஒரு உண்மையை, ஒரு நியாயத்தைச் சொல்ல முடியாத சூழல் நிலவுகிறது என்றால், அந்த அரசியல் பிழையான முறையில் உள்ளது என்றே அர்த்தமாகும். ஆகவே இதை நாம் அனுமதிப்பது தவறு. 

தேவையைப் பெறுவதற்காக எவ்வளவு தூரத்துக்கும் கீழிறங்குவது. காரியம் முடிந்ததும் உதவியவரைக் கை விடுவது மட்டுமல்ல பழித்துரைக்க முற்படுவதெல்லாம் நாகரீகக் கேடாகும். இதனுடைய நேரடி அர்த்தம், இன்பத்தையும் மகிழ்ச்சியையும் பெறுவதற்காக இரகசியமாக ஒருத்தியுடன் கூடி விட்டு, பிறகு பொதுவெளியில் அந்தப் பெண்ணை “தாசி” என்று அம்பலப்படுத்துவதேயாகும். இது எவ்வளவு கேவலமான செயல்? எவ்வளவு தவறான சிந்தனை? ஆனால், இதுவே இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. 

இத்தகைய செயலின் மூலம் ஏனைய அரசியல் தரப்பினரை முட்டாள்களாக்குவது மட்டுமல்ல, மக்களையும் “இழிச்சவாயர்கள்” என்று  கருத முற்படுகிறார்கள். அப்படிக் கருதத் தொடங்கினால், மக்களுக்கு எதைப் பற்றியும் எப்படியும் சொல்லலாம். எதையும் செய்யலாம். எதையும் செய்யாது விடலாம் என்ற எண்ணம் வளர்ந்து விடும். ஏற்கனவே அவ்வாறான ஒரு நிலைதான் இன்றைய இந்த அரசியல்வாதிகளிடம் உள்ளது. இதை மேலும் அவர்கள் வளர்க்க முற்படுகிறார்கள். 

கீழ்த்தரமாக அரசியலைச் செய்ய முற்பட்டால் இவ்வாறுதான் இவர்கள் கீழான வகையில் பேச வேண்டும். கீழ்த்தரமாகச் சிந்திக்க வேண்டியிருக்கும். அரசியல் மாண்பை விட்டு அரசியல் சேற்றிலேயே உழல வேண்டும். 

இது மேலும் மேலும் நெருக்கடிகளையே உண்டாக்கும். 

அரசியல் தெரிவுகளை மக்கள் தமது வாழ்க்கைத் தேவை, சிந்தனை வெளிப்பாடு, கடந்த கால அனுபவம், எதிர்கால நோக்கு போன்றவற்றின் அடிப்படையிலேயே மேற்கொள்ள விரும்புகிறார்கள். ஆனால், இதைத் திசை திருப்பியே பெரும்பாலான கட்சிகளின் அரசியல் (தேர்தல்கால) பரப்புரைகள் நடக்கின்றன. இதற்காக அவை பொய்களை தாராளமாக அள்ளி வீசுகின்றன. எதிர்த்தரப்புகளை மோசமான முறையில், தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி மிகக் கீழ்த்தரமாக வசைக்கின்றன. பொய்யான அரசியல் பிம்பம், மது, பணம், போலிச் சமூகப் பணி போன்றவற்றின் மூலம் வெற்றியைப் பெறுவதற்குத் துடிக்கின்றன. இதற்கு அனுசரணையாக ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் படித்த சமூகத்தினரும் சேர்ந்திருக்கின்றனர் என்பது கவலைக்குரியது. இவர்கள் எல்லாம் முறையான கேள்விகளை எழுப்புவார்களாக இருந்தால், இந்த அரசியல் கோமாளிகள் எல்லாம் இப்படிக் கண்டபடி கதைக்கவும் கதை விடவும் முடியுமா?

இதுவரை நடந்தது உள்ளுராட்சித் தேர்தலும் சபைகளைக் கைப்பற்றுவதும் மட்டும்தான். இனி இந்தச் சபைகள் நான்கு ஆண்டு காலம் இந்தத் தலைமைத்துவத்தின் கீழ் செயற்பட வேண்டும். ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக அனுசரணையைக் கேட்டதை விடவும் கீழிறங்கிச் சமரசம் செய்தால்தான் சபைகளைத் தொடர்ந்து தளம்பல் இல்லாமல் இயக்க முடியும். இல்லையென்றால், சபைகள் அமர்க்களம், சமர்க்களம் என்று பெரும் போர்க்களமாகவே மாறும். அப்படி மாறினால் சபைகளின் மூலமாகச் செய்யப்பட வேண்டிய மக்கள் பணிகள் எதுவும் நடக்காது. ஒரு கட்டத்தில் சபைகளே இயங்க முடியாத நிலை ஏற்படும். 

அத்தகைய ஒரு நிலையை நோக்கியே சமகால அரசியல் சென்று கொண்டிருக்கிறது. பாராளுமன்றத்திலும் நெருக்கடி. அங்கும் அரசியற் கொந்தளிப்புகளும் நம்பிக்கையில்லாப் பிரேரணைகளும் அமைச்சரவை மாற்றங்களும் ஸ்திரமற்ற நிலையுமே தொடர்கிறது. மாகாணசபைகளில் வட மாகாணசபை செயலிழந்து விட்டது. பேரளவிலேயே அதனுடைய அடையாளம் மிஞ்சியுள்ளது. உள்ளுராட்சி சபைகள் கூடத் தேறுகிற மாதிரித் தெரியவில்லை. யாழ்ப்பாண மாநகர முதல்வர் தன்னிச்சையாகவும் அதிகார மேலாதிக்கத்தோடும் செயற்படுகிறார் என்று எதிர்த்தரப்பினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்கள். 

இதனுடைய அடுத்த கட்டம், எதிர்கால வளர்ச்சி எப்படி அமையப்போகிறது? அதை வழிப்படுத்தும் பொறுப்பை சமூகம் எப்படிக் கையேற்கப்போகிறது? என்பதைப்பொறுத்தே எல்லாம் அமையும். 

அல்லது வழமையைப்போல எல்லாவற்றுக்கும் எல்லாச் சந்தர்ப்பத்திலும் நழுவல் போக்கைப் பின்பற்றுவதைப்போல இதிலும் அதே நடைமுறையைத்தான் தமிழ்ச்சமூகத்தினர் பின்பற்றப்போகிறார்களா? 


கருணாகரன்


நன்றி தேனீ

No comments:

Post a Comment