09 May 2018

எங்கள் வீட்டிலும் யாரும் இறந்தால் எங்கட அப்பாவையம் விடச்சொல்லி எல்லோரும் கேட்பினம், போராட்டங்களும் செய்வினம்

எங்கள் வீட்டிலும் யாரும் இறந்தால் எங்கட அப்பாவையம் விடச்சொல்லி எல்லோரும் கேட்பினம், போராட்டங்களும் செய்வினம் - அரசியல் கைதியின் மகள் கம்சா

எங்கட வீட்டையம் யாரும்  இறந்தால்  சிறையில் இருக்கின்ற என்ற அப்பாவையும் விடச்சொல்லி எல்லோரும் கேட்பினம், போராட்டம் எல்லா செய்வினம் என்ன மாமா என்றால் அரசியல் கைதியின் மகளான சதீஸ்குமார் கம்சா. 

வைத்தியசாலை வாகனத்தில் வெடி மருந்துகொண்டு சென்றார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டணை விதிக்கப்பட்ட செல்லையா சதீஸ்குமார் என்வரின் பதினான்கு வயதான மகளே தனது தந்தை விடுதலையாகி வெளியே வரவேண்டும் மிகப்பெரிய  ஏக்கத்தின் வெளிப்படாக தனது  உணர்வுகளை வெளிப்படுத்தினாள்.

2008-01-28 ஆம் திகதி வவுனியா தேக்கவத்தை எனும் இடத்தில் அப்பாவை கைது செய்தனர்.அப்பா செலுத்திச் சென்ற வாகனத்தில் சி4 வெடிமருந்து கொஞ்சம் இருந்ததாக  காட்டி அப்பா கைது செய்யப்பட்டார். இந்தக் காலப்பகுதியில் ஓமந்தைச்  சோதனைச்சாவடியில் மிக கடுமையாக சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுமாம் எனவே ஓமந்தை சோதனைச் சாவடியில் அப்பா செலுத்தி சென்ற வாகனம் மிக கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாம்; அப்போது கண்டுபிடிக்கப்படாத வெடி மருந்து எப்படி தேக்கவத்தை பகுதியில் வாகனத்தில் இருந்தது  என்பதுதான் தெரியவில்லை. இந்தக் குற்றத்திற்காகவே அப்பாவுக்கு ஆயுள் தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.

இயக்கத்தில் (விடுதலைப்புலிகள்) இருந்த நிறைய போராளிகள், பொறுப்பாளர்கள் எல்லோரும் இன்றைக்கு தடுப்புக்குச்சென்று வெளியில்  வந்துவிட்டனர். தளபதியாக  இருந்தவர்கள் எல்லாம் வெளியில் இருக்கின்ற போது எனது  அப்பா போன்று சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டணை வழங்க வேண்டும்.என்ற கம்சாவின் கேள்விக்கு பதில்  இல்லாத நாம் தொடர்ந்தும் அவளுடன் உரையாடினோம்;.

அப்பா கைது செய்யப்படும் போது எனக்கு நான்கு வயது தற்போது 14 வயது இத்தனை வருடங்களும் நான் அப்பாவை கம்பிகளுக்கு பின்னாள் பார்த்திருக்கிறேன். எல்லா பிள்ளைகளும் போன்று அப்பாக்களுடன் சந்தோசமாக இருக்க வேண்டிய வயதில் எனக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை. எனக்கு விபரம் புரியாத அந்த நான்கு வயது வரை என்னை அப்பா எப்படியெல்லாம் பாசத்தோடு வளர்த்திருக்கின்றார் என்பதனை அம்மாவும் ஊராக்களும் சொல்லிக் கேட்கும் போது கண்ணீர் வரும்.  அதற்கு பிறகு  அப்பாவுடன்  எப்படியெல்லாம்  இருக்க வேண்டும் என ஏங்கிய காலத்தில் அப்பா அருகில் இல்லை. ஆனந்தசுதாகரன் மாமாவின் பிள்ளைகள் போன்றே நானும் என்னை போன்றே நிறைய பிள்ளைகளும் இருக்கின்றார்கள். நாங்கள் என்ன பாவம் செய்தோம் என்றே தெரியவில்லை. யுத்தம் எல்லாம் முடிந்துவிட்டது இனி நாட்டில் பிரச்சினை  இல்லை என்று இருக்கின்ற போது ஏன் என்னுடைய அப்பாவையும்  அவர் போன்று சிறைகளில்   வாடுகின்ற எல்லேரையும் இந்த அரசாங்கம் மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தால் என்ன? என  மறுபடியும் ஒரு கேள்வியை எழு;பியவள்  தொடர்ந்தும் பேசினாள்

என்னுடைய அப்பாவை என்னுடன் சேர்த்துவிடுங்கள் என்று இந்த 14 வயதிறகுள்; நான் பலரின் காலில் விழுந்திருக்கிறேன் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன வடமாகாண முதலமைச்சர்,பாராளுமன்ற உறுப்பினர்களா சுமந்திரன், நாமல்ராஜபக்ஸ, பசில்ராஜபக்ஸ எம்பியாக இருந்த காலத்தில் அவருடைய காலில் இப்படி ஏராளமானவர்களின் காலில் விழுந்து வணங்கியிருக்கிறேன். பொது நிகழ்வுகளில் யாரேனும் அமைச்சர்கள், எம்பிமார் வருவார்கள் என அறிந்தால் அம்மா முதல் நாள் அழுதழுது கடிதம் எழுதுவார். பின்னர் என்னையும் கூட்டிக்கொண்டு அம்மா செல்வார் நிறைய பொது மக்கள் மத்தியில் நான் அந்த அரசியல்வாதிகளின் காலில் விழுந்து வணங்க அம்மா கடிதத்தை கொடுத்து அப்பாவை விடச்சொல்லி மன்றாடுவார்.  அப்பாவின் விடுதலைக்கா நாங்கள் எதனையும் செய்யத்தயாராக இருந்தோம். இதுவரை நானும் அம்மாவும் எடுத்த எல்லா முயற்சிகளும் தோற்றுப்போய்விட்டன. எந்த நன்மையும் ஏற்படவில்லை. நான் காலில் விழுந்ததனையும், அம்மா   கெஞ்சிக்கெண்டிருந்ததனையும், சிலர் அலட்சியாக தன்னுடைய உதவியாளரிடம் கடிதத்தை கொடுக்க சொல்விட்டு  எங்களை கண்டுகொள்ளாது அலட்சியமாக கடந்து சென்ற சம்பவங்களை இப்பொழுது கூட நினைக்கும் போது வேதனையும், விரக்தியும் ஏற்படுகிறது.  அப்பா கைது செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்ட காலம் தொடக்கம் அம்மா எழுதிய கடிதம் எண்ணில் அடங்காதது கடவுளுக்கு கூட கடிதம் எழுதும் வாய்ப்பு கிடைத்திருந்தால் என்னுடை அம்மா கடவுளுக்கும் கடிதம் எழுதியிருப்பார். பாவம் அம்மா எனக்காகவே  செயற்கையாக சிரித்து வாழ பழகிக்கொண்டார் இல்லை என்றால் என்னுடைய அம்மாவின் முகத்தில் சிரிப்பை காண முடியாது. என்னை படிப்பித்து ஒரு நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே அவர் தன்னை மாற்றிக்கொண்டார். இப்போது எனக்கு எனது அம்மாவும் அருகில் இல்லை. அப்பாவின் வழக்குக்காக பல இலட்சங்களை செலவு செய்துவிட்டோம். இப்போதும் கூட உயர் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்திருகின்றோம் அதற்கும் இலட்சங்கள் செலவாகும். இவற்றை எல்லாம் சமாளிப்பதற்காகவும் எனது படிப்புச் செலவுகளை பார்பதற்கும் அம்மா வெளிநாடு சென்று விட்டார்.நான் அம்மம்மாவுடன் வாழ்ந்து வருகிறேன்.

அப்பாவின் வழக்கை பொறுத்தவரையில் எனக்கு சட்டத்தரணிகள் மீதே அதிகம் கோபம் எனது அப்பா செலுத்தி சென்ற வைத்தியசாலை வாகனத்தில்  சிறிய அளவில் சி4 மருந்து இருந்ததாக சொல்லி கைது செய்யப்பட்ட வழக்கில்  ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது என்பது மிகப்பெரிய தண்டனையே. வவுனியா நீதிமன்றில் அப்பாவுக்கு 2011 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிபதிக்கும் எனது வயதில் ஒரு மகள் இருக்கின்றார் என்று சொல்கின்றார்கள். அப்பாவுக்கும் மகளும் இடையே உள்ள உறவு, எப்படி அவருக்கு புரியாது போய்விட்டது? அப்பா மகள் பாசம் எப்படி அவருக்கு விளங்காது போய்விட்டது? எல்லோரும் சொல்கின்றார்கள் இந்த வழக்குக்கு ஆயுள் தண்டனை மிகப்பெரிய தீர்ப்பு என்று. சொல்லியவாறே முகத்தை கையால் மூடிக்கொண்டு அழ தொடங்கினாள் கம்சா. சில வினாடிகள் அமைதியாக இருந்தவள்

நான் அப்பாவை சந்திக்கின்ற போதெல்லாம் அவரிடம்  கூறுவேன் நான் படித்து ஒரு சட்டத்தரணியாக வந்து உங்களை வெளியில் கொண்டுவருவேன் என்று. இப்போது அப்பாவுக்காகவே படிக்கின்றேன். எனக்கு இருக்கின்ற ஒரேயொரு ஆசை நான் அப்பா, அம்மா எல்லோரும் ஒன்றாக சேர்ந்து வாழவேண்டும் என்பதே. அது நிறைவேற வேண்டும் என்றே தினமும் கடவுளை வணங்கி வருகின்றேன். 

வடக்கு,கிழக்கு, மலையகம் என நாட்டில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்று சேர்ந்து அரசியல் கைதிகளின் விடயத்தில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தால் அரங்சாங்கம்  அவர்களை விடுதலை செய்வதற்கான வாய்ப்பு ஏற்படும் என அமைச்சர் சுவாமிநாதன்  அரசியல் கைதிகளை சந்தித்த போது சொல்லியிருக்கின்றார். இந்;தச் சந்திப்பில் அப்பாவும் இருந்திருக்கின்றார் எனத் தெரிவித்தவள் இவர்கள் எல்லோரும் ஒன்று சேருவார்களா மாமா? நான் என்ன செய்தால் இவர்கள் ஒன்றுசேர்ந்து அப்பா உட்பட எல்லா அரசியல் கைதிகளையும் விடுதலை  செய்ய குரல் கொடுப்பார்கள் என மறுபடியும் கேள்வியை முன்வைத்த கம்சாவுக்கு என்னிடம் எந்த பதிலும் இல்லை.மீண்டும் சில வினாடிகள் அமைதியாக இருந்தோம்.

அந்த  அமைதியை குழப்பியவளாக எப்பொழுது கைதிகள் தினம் வரும் என்று காத்திருப்பேன் ஏன்னென்றால் அன்றுதான் அப்பாவின் அருகில் அவரது மடியில் இருந்தோ, அப்பாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தோ பேசுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும்.  ஏனைய நாட்களில் அப்பாவை சந்திக்க சென்றால் கம்பிகள் எங்கள் இருவரையும் இணைய விடாது தடுத்து நிற்கும். இதனை  தவிர ஆறு மாத்திற்கு அப்பா இருக்கின்ற புதிய மகசீன் சிறைசாலைக்கு அப்பாவுக்கு எந்த பொருட்களும் கொடுக்காது, நாங்கள் எவவருமே சென்று பார்க்காது விட்டால் அப்பா விண்ணப்பித்து யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு வர முடியும் அப்படி வருகின்ற போது அவருக்கு பிடித்த உணவுப்பொருட்களை தினமும் செய்துகொண்டு சென்று பார்த்து வருவோம். ஒரு கிழமைக்கு இவ்வாறு பார்க்க முடியும்;. இதற்காவே ஆறு மாதத்திற்கு அப்பாவை சென்று பார்க்காமலே இருப்போம். என்றாள்.

ஒரு தடவை அப்பாவை பார்க்க சென்ற போது அவர் சேட் போடாமல்  வந்து விட்டார் அப்போது அவரின் முதுகு மற்றும் ஏனைய இடங்களை பார்த்த போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது வயரால் அடித்தது போன்று நிறைய அடையாளங்கள் இது என்ன என்று கேட்ட போது  ஒன்றுமில்லை என்று மறைக்க முற்பட்டார் அப்பா  ஆனால் நான் விடவில்லை  இது என்னவென்று சொல்லுங்கோ என்று வற்புறுதிய போது சொன்னார் விசாரணை காலத்தில் தனக்கு ஏற்பட்ட சித்திரவதைகள் பற்றி. மிக மோசமான, கொடூரமான  சித்திரவதைகளுக்கு அப்பா உட்பட்டிருக்கின்றார். எனக் கூறிவிட்டு ஆழ ஆரம்பித்த கம்சா இப்போது  ஒரு நிம்மதியான விடயம் என்னவென்றால் எந்த சித்திரவதையும்  இல்லை என்றாள்.

ஆனால் ஒரு தடவை கொழும்பு பெரிய ஆஸ்பத்திருக்கு  அப்பாவை சுகயீனம் காரணமாக கொண்டு சென்ற போது கை மற்றும் கால்களை சங்கிலியாள் கட்டியே கொண்டு சென்றுள்ளனர். அங்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  போதும் அவ்வாறே சங்கிலியாள் கட்டப்பட்ட வைத்திருக்கின்றார்கள்  இதன் போது ஏனைய நோயாளிகள் மற்றும் நோயாளிகளை பார்க்க வருகின்றவர்கள் அனைவரும் அப்பாவை ஒரு மாதிரி பார்த்து செல்வார்களாம் இது அப்பாவை பெரிதும் பாதித்திருக்கிறது. இதனை விட மலசல கூடத்திற்கு சென்றால்  அங்கு அப்பாவை உள்ளேவிட்டுவிட்டு கதவினை அரைவாசிக்கு திறந்து வைத்திருப்பார்களாம் உள்ளே இருப்பது வெளியே அவ்வழியாக சென்று வருபர்களுக்கு எல்லாம்  தெரியுமாம்  எனக்குறிப்பிட்டவள் மீண்டும் அழ ஆரம்பித்தவள் என்னுடைய அப்பா இப்படியெல்லாம் எவ்வளவு கொடுமைகளை  அனுபவித்து வருகின்றார். இது ஏன்  எங்களுடைய  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளங்கவில்லை,  அமைச்சர் சுவாமிநாதன் சொன்னமாதிரி இவர்கள் ஒன்று சேர்ந்தால் இந்தக் கொடுமைகளிலிருந்து என்னுடைய அப்பா உட்பட பலர் விடுதலையாகி வருவார்கள்தானே என்றாள்.

அழுகையை நிறுத்திக்கொண்டு  மேலும் தொடர்ந்த அவள் சிறைக்குள் இருந்த படியே அப்பா நான்கு நூல்களை எழுதிவெளியிட்டுள்ளார் அதன் மூலம் கிடைத்த பணத்தில் எனக்கும் பாடசாலைக்குரிய கற்றல் உபகரணங்களை ஆசையோடு வாங்கி தந்தவர். அது அப்பாவுக்கு பெரிய சந்தோசம். எனக் கூறியவள் புது வருட பிறப்புக்கு பின்னர் அப்பாவின் இராசிபலனும் நல்லா இருப்பதாக அப்பப்மாவும் சொன்னார் என்றாள். 

இறுதியாக எல்லோரிடமும்; ஒரு கோரிக்கையை விடுத்தாள் ஆதாவது  பெரிய பெரிய  குற்றங்கள் செய்தவர்களை எல்லாம் வெளியில் விட்டுவிட்ட அரசாங்கம் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட  எனது அப்பா மற்றும் ஏனையவர்களை மன்னித்துவிடுதலை செய்ய வேண்டும், என்றும். அதற்காக எல்லா தமிழ்  எம்பிமாரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாள்.

ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளான கனிரதன்,சங்கீதா  மற்றும் சதீஸ்கமாரின் மகளான கம்சா போன்று ஏக்கங்களோடு வாழுகின்ற  பிள்ளைகளின் உணர்வுகளை இந்த அரசு புரிந்துகொள்ளுமா? அதற்கு முன் எங்களுடைய தமிழ் தலைமைகள் இதனை புரிந்துகொள்வார்களா?  காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

மு.தமிழ்ச்செல்வன்


நன்றி- தேனீ

No comments:

Post a Comment