03 August 2018

இலங்கை - இந்திய ஒப்பந்தம், இலங்கையின் தலையெழுத்தை மாற்றியது

ஜூலை மாதத்துக்குள் இலங்கையின் இனப் பிரச்சினையின் வரலாற்றில், திருப்புமுனைகளாகக் கருதப்பட வேண்டிய இரண்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.   
1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் திகதி தொடக்கம், சுமார் ஒரு வார காலமாக நாட்டின் பல பகுதிகளில், தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்செயல்கள் அதில் ஒன்றாகும்.   
1987 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி, அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவுக்கும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தம் எனப் பரவலாக அழைக்கப்படும் ஒப்பந்தம் மற்றையதாகும்.   
மூன்று நாள்களுக்கு முன்னர், அதாவது கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த ஒப்பந்தத்துக்கு 31 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன.  
இவற்றை, இலங்கையின் இனப்பிரச்சினையின் வரலாற்றில் மட்டுமல்லாது, முழு நாட்டினது வரலாற்றிலும் திருப்பு முனைகளாகவே கருத வேண்டியுள்ளது. அவை அன்று இடம்பெறாவிட்டால், இன்று நாட்டின் நிலைமை என்னவாக இருக்கும் என்று ஊகித்துப் பார்த்தால், அவை உண்மையாகவே திருப்புமுனைகள் என்பது புலனாகும்.   
கறுப்பு ஜூலை என்றழைக்கப்படும், 1983 ஆம் ஆண்டு ஜூலைக் கலவரமானது, இலங்கை விவகாரங்களில் இந்தியாவின் நேரடித் தலையீட்டை வரவழைத்தது.   
இந்தச் சம்பவம் இடம்பெறாவிட்டாலும், அன்றைய இலங்கை அரசாங்கத்தின் சில கொள்கைகளால் இந்தியத் தலையீடு ஏற்படும் அபாயம் இருந்து வந்துள்ளது.   
ஏனெனில், அப்போதைய ஜனாதிபதி ஜெயவர்தன, அமெரிக்க, பாகிஸ்தான் சார்பான கொள்கைகளைக் கடைப்பிடித்து வந்தார். அமெரிக்காவுடன் பனிப்போரில் ஈடுபட்டிருந்த சோவியத் ஒன்றியத்துடன் அப்போது, இந்தியா இணைந்து செயற்பட்டு வந்தது.   
இந்த நிலையில்,ஜெயவர்தனவின் கொள்கை, பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தது. இதனால் இந்தியா, ஜெயவர்தனவுக்கு பாடமொன்றைக் கற்பிக்கத் தருணம் பார்த்துக் கொண்டு இருந்தது.   
ஜூலை இனக் கலவரம், இந்தியாவுக்கு அதற்கான வாய்ப்பை வெகுவாக ஏற்படுத்திக் கொடுத்தது. அன்று அந்தக் கலவரம் இடம்பெறாதிருந்தால், இந்தியத் தலையீடு சிலவேளை வேறு விதமாகத் தான் அமைந்திருக்கும். அது நாட்டின் வரலாற்றுப் பயணத்தை வேறு திசையில் திருப்பியிருக்கும்.   
இரண்டாவது, திருப்புமுனைச் சம்பவமான இலங்கை - இந்திய ஒப்பந்தம், நேரடியாகவே இந்தியாவுடன் தொடர்புடையது என்பது, அதன் பெயரிலேயே தெளிவாகிறது.   
ஒருவகையில், இதுவும் அமெரிக்கா - சோவியத் ஒன்றியம் ஆகிய நாடுகளிடையே, நிலவி வந்த பனிப்போரின் விளைவு என்றும் கூறலாம்.   
அதேவேளை, இலங்கையின் இனப்பிரச்சினை, இந்தியாவுக்கும் ஒரு பிரச்சினையாக மாறி வந்ததன் விளைவு என்றும் கூறலாம்.   
தமிழ்த் தலைவர்கள், குறிப்பாக தமிழ் ஆயுதக் குழுக்கள், அதிலும் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளால் இனப்பிரச்சினையைத் தீர்க்கும் விடயத்தில், நழுவவிடப்பட்ட ஒரு முக்கியமான சந்தர்ப்பம் என்றும் கூறலாம்.  
இலங்கை - இந்திய ஒப்பந்தமானது, பல தமிழ்த் தலைவர்கள் அன்று நினைத்ததைப் போல் இந்தியா, இலங்கைத் தமிழ் மக்கள் மீது கொண்ட பரிவின் காரணமாக, மேற்கொண்ட ஒரு நடவடிக்கையல்ல. அது, இந்தியா, தமது நலனைக் கருத்தில் கொண்டு மேற்கொண்ட நடவடிக்கையாகும்.   
மேலே கூறப்பட்டதைப் போல், ஒரு புறம் இந்தியாவுக்குத் தமது அணியான சோவியத் அணியின் சார்பில், இலங்கை அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தவும் தண்டிக்கவும் அவசியம் ஏற்பட்டு இருந்தது.   
மறுபுறத்தில் வடக்கு, கிழக்கில் அரச படைகளுக்கும் தமிழ் ஆயுதக் குழுக்களுக்கும் இடையே இடம்பெற்று வந்த மோதல்கள் காரணமாக, சுமார் ஓர் இலட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள், இந்தியாவுக்குச் சென்றிருந்தனர். இதன் காரணமாகத் தமிழ்நாடு, இலங்கையில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் கொதித்துக் கொண்டிருந்தது.    
இதனால், தமிழ்நாட்டின் தமிழ் உணர்வுகள், இந்திய மத்திய அரசாங்கத்துக்கு எதிராகத் திரும்பும் அபாயமும் அப்போது ஏற்பட்டு இருந்தது. இந்த இரண்டும்தான், இந்திய அரசாங்கம் அன்று, இலங்கை விவகாரத்தில் தலையிடுவதற்கான காரணங்களாக அமைந்தன.   
அதற்கு, இலங்கை அரசாங்கமும் துணை போனதாகவே கூற வேண்டும். இலங்கை மீதான தமது கட்டுப்பாட்டை, இந்தியா வைத்துக் கொண்டு, இலங்கையின் இனப்பிரச்சினை விடயத்தில், இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ் ஆயுதக் குழுக்களுக்கும் இடையே, ஓர் இணக்கப்பாட்டை ஏற்படுத்தவும் முயற்சி செய்தது. அதற்காகத் தான் இந்திய அரசாங்கம் 1985 ஆம் ஆண்டு, இரு சாராருக்கும் இடையே முதல் முதலில், பூட்டான் தலைநகர் திம்புவில் பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்தது.  
ஆனால், பேச்சுவார்த்தையின் போது, இலங்கை அரசாங்கமோ தமிழ்க் குழுக்களோ நேர்மையாக நடந்து கொள்ளவில்லை. அப்போது பெரும்பாலான தமிழ் ஆயுதக் குழுக்கள், மாக்ஸியத்தை ஏற்றுக் கொண்டு இருந்தமையால், மாக்ஸியத்தின்படி, தமிழ் மக்கள் ஒரு தனியான தேசிய இனம் என்பதையும் அந்த இனத்துக்குப் பிரிந்து செல்லும் உரிமை இருக்கிறது என்பதையும் நிரூபிப்பதே தமிழ்க் குழுக்களின் நோக்கமாக இருந்தது. அதனால்,  இலங்கை அரசாங்கத்தோடு எவ்வித இணக்கப்பாட்டையும் ஏற்படுத்திக் கொள்ள, அவை விரும்பவில்லை.  
ஜெயவர்தனவின் தலைமையிலான இலங்கை அரசாங்கமும், இந்திய நெருக்குவாரத்தின் காரணமாகப் பேச்சுவார்த்தைக்கு சென்றதேயல்லாமல், பேச்சுவார்த்தையின்போது, எவ்வித இணக்கப்பாட்டையும் அடைய வேண்டும் என்ற நோக்கம் அதற்கு இருக்கவில்லை.   
எனவே, ஆயுதக் குழுக்கள் ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டும் என்பதிலேயே, அரசாங்கப் பிரதிநிதிகள் உறுதியாக இருந்தனர். இந்த நிலைமை காரணமாகத் திம்புப் பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறவில்லை.  
ஆனால், இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தின் மீது செலுத்திய நெருக்குவாரத்தின் காரணமாக, 1986 ஆம் ஆண்டு அரசாங்கம், அரசியல் கட்சி மாநாடு என்ற பெயரில் சர்வகட்சி மாநாடொன்றைக் கூட்டியது.  
அதன்போதுதான், முதன்முதலில் இலங்கை அரசாங்கம் அதிகாரப் பரவலாக்கல் என்ற எண்ணக்கருவைக் கொள்கை ரீதியாக ஏற்றுக் கொண்டது.   
ஆனால், வடபகுதியில் போரும் தொடர்ந்தது. இதனால் தமிழ்நாடு கொந்தளித்துக் கொண்டே இருந்தது. எனவே, போரை நிறுத்த அல்லது தணிக்க, இந்தியா ஏதாவது செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. 
அதன்படி, போரை நிறுத்துமாறு அரசாங்கத்தை வற்புறுத்தும் வகையில், 1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நான்காம் திகதி, இந்தியா, இலங்கை அரசாங்கத்தின் அனுமதியின்றியே தமது கடற்படையினர் முலம், வடபகுதிக்கு உணவுப் பொருட்களை அனுப்பியது.   
இது இரண்டு நோக்கங்களைக் கொண்டதாக அமைந்தது. முதலாவதாக, இலங்கை அரசாங்கத்துக்கு விடுத்த எச்சரிக்கையாகும். மறுபுறத்தில், தமிழ்நாட்டைத் திருப்திப்படுத்தும் வகையிலான அச்சுறுத்தலாகவும் இருந்தது. எனினும், இலங்கைக் கடற்படையினர் அந்தக் கப்பல்களை, இலங்கைக் கடற்பிரதேசத்துக்குள் நுழைய இடமளிக்கவிலைலை. அவை திரும்பிச் சென்றன.  
ஆனால், ஓரிரு நாள்களில் இந்திய விமானங்கள், திடீரென யாழ்ப்பாண வான்பரப்பில்த் தோன்றி, உணவுப் பொட்டலங்களை ஆங்காங்கே போட்டுவிட்டுத் திரும்பிச் சென்றன. இது, தமிழ் மக்களுக்கு உணவு வழங்கும் தேவைக்காக செய்த காரியமல்ல; இலங்கை அரசாங்கத்துக்குச் சவால் விடுப்பதும், இலங்கை அரசாங்கத்தை மிரட்டுவதுமே அதன் நோக்கமாகியது.   
அது பலன் தந்தது. மாகாண சபைகளை உருவாக்கவும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் ‘தற்காலிகமாக’ இணைக்கவும் அந்த விடயங்கள் அடங்கிய ஓர் ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடவும் இலங்கை அரசாங்கம் இணங்கியது. 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட அந்த ஒப்பந்தம் தான் இலங்கை-இந்திய ஒப்பந்தம் ஆகும்.  
சுமார் 40 நாள்களுக்கு முன்னர், இந்திய உணவுக் கப்பல்கள் வடபகுதிக்கு வந்த போது, தமது கட்டுப்பாட்டில் இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர்களைக் கொண்டு, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தச் செய்த, அப்போதைய அமைச்சர் காமினி திஸாநாயக்கவே, இந்த ஒப்பந்தத்தை நியாயப்படுத்துவதில் முன்னணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  
வேலுபிள்ளை பிரபாகரனின் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, நிர்ப்பந்தத்தின் காரணமாக இந்த ஒப்பந்தத்தை ஆரம்பத்தில் ஏற்றுக் கொள்வதாகக் கூறினாலும், ஓரிரு வாரங்களிலேயே அவ்வமைப்பு அதற்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடத் தொடங்கியது.   
ஆனால், அதுவரை தனித் தமிழ் நாடொன்றுக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய ஏனைய தமிழ்க் குழுக்கள், இந்திய அதிகாரிகளின் முன்னிலையில் ஆயுதங்களை இலங்கை அரச அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டு, தனி நாட்டுக்கான போராட்டத்தையும் கைவிட்டன. அதன்படி, தமிழீழத்துக்கான போராட்டமும் ஆயுதப் போராட்டமும் புலிகளின் ஏகபோக உரிமையாக மாறியது.   
இந்த ஒப்பந்தத்தோடு, இலங்கையில் தனித்தமிழ் நாட்டுக்கான, இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் நின்றுவிட்டது. உண்மையிலேயே, அதற்கு முன்னரும் இந்தியா, இலங்கை அரசாங்கத்தை அச்சுறுத்தவும் கட்டுப்படுத்தவும் தமிழ் ஆயுதக் குழுக்களை பாவித்ததேயல்லாமல், இலங்கையில் பிரிவினையை ஆதரிக்கவில்லை.   
தாம் தொடர்ந்தும் இலங்கையில் தனித் தமிழ் நாட்டுக்கான போராட்டத்தை ஏற்றுக் கொள்வதில்லை என்பதை இந்தியா, அதற்கு அடுத்த ஆண்டில் வெளிப்படையாகவும் மிகத் தெளிவாகவும் கூறியது. அப்போதைய இந்திய வெளிவிவகாரச் செயலாளர் எஸ்.கே. சிங், இதை உத்தியோகபூர்வமாக வெளியிட்டார்.   
1988 ஆம் ஆண்டு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற சார்க் உச்சி மாநாட்டுக்காக சென்றிருந்த எஸ்.கே. சிங், அங்கு ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, இதைத் தெரிவித்தார்.   
தமிழ்நாட்டில் மற்றொரு தமிழ் ஈழத்தைக் காண விரும்பாததால், தமது அரசாங்கம் இலங்கையில் தனித் தமிழ்நாடு உருவாவதை ஏற்றுக் கொள்வதில்லை என அவர் கூறினார். புலிகளும் இந்தியாவைப் பகைத்துக் கொண்டு இருந்த நிலையில், இந்தியாவுக்கு மிக எளிதில் இந்த முடிவை அறிவிக்க முடியுமாக இருந்தது.   
இப்போது இந்தியா, அந்த ஒப்பந்தத்தைத் தொடர்நதும் வலியுறுத்துகிறதா என்ற கேள்வி எழுகிறது. ஒப்பந்தத்துக்கு 30 வருடங்கள் பூர்த்தியாகிய கடந்த வருடம், “தொடர்ந்தும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பை வலியுறுத்தவில்லை” என இந்தியா அறிவித்தமை அதையே சுட்டிக் காட்டுகிறது.   
கடந்த வருடம் பெப்ரவரி 18 ஆம் திகதி, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ். ஜெயசங்கர், அம்மாதம் 20 ஆம் திகதி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரனுடன் நடாத்திய பேச்சுவார்த்தையின் போதே, இக்கருத்தைத் தெரிவித்து இருந்தார். ‘இன்டியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை இச் செய்தியை வெளியிட்டு இருந்தது.  
இந்தியாவின் அதிகாரப் படிநிலைகளின் பிரகாரம், வெளியுறவுச் செயலாளரே வெளிநாட்டுக் கொள்கைக்குப் பொறுப்பான மிகவும் உயர்ந்த அதிகாரியாவார். அவர் ஒரு விடயத்தைப் பற்றிக் கொள்கை ரீதியான கருத்தொன்றை வெளியிடுவதாக இருந்தால், அதுவே இந்திய அரசாங்கத்தின் கொள்கையாக இருக்கும்.  
உண்மையிலேயே, ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்ட மூன்று தரப்பினராகிய, இந்திய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் தமிழ் ஆயுதக் குழுக்களும் ஒப்பந்தத்தில் அவரவருக்குரிய கடமைகளை நிறைவேற்றவில்லை.   
இந்தியா, தமிழ் ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களைக் களையத் தவறிவிட்டது. தமிழ் ஆயுதக் குழுக்களில் புலிகளும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. இலங்கை அரசாங்கம், சட்டத்தில் உள்ள அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்கவில்லை. எனவே, எவரும் எவரையும் எந்த விடயம் தொடர்பிலும் தார்மீக ரீதியில் வற்புறுத்த முடியாதநிலைமை பிற்காலத்தில் உருவாகியது.   
இலங்கையின் தலையெழுத்தை மாற்றிய போதிலும் உலக வல்லரசுகளிடையே பனிப்போர் மறைந்துள்ள நிலையில், இலங்கை - இந்திய ஒப்பந்தம் இப்போது ஏறத்தாழ செல்லுபடியற்றதாகி உள்ளது.  
-எம்.எஸ்.எம். ஐயூப்-
நன்றி- தமிழ் மிரர்

No comments:

Post a Comment