சிறிசேன - ராஜபக்ஸ கூட்டணி ஜனநாயகக் கொள்கைகள் மற்றும் பன்மைத் தன்மைக்காக சவால் செய்யப்பட வேண்டும்
கடந்த இரண்டு வார காலமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாராளுமன்றம் இடையே தோன்றியுள்ள ஒரு சுமுகமற்ற நிலை காரணமாக அதிகரித்து வரும் அரசியல் நெருக்கடிக்கு ஸ்ரீலங்கா சாட்சியாகியுள்ளது. அதிர்ச்சியூட்டும் மற்றும் ஜனநாயகமற்ற ஒரு நியமனமாக மகிந்த ராஜபக்ஸவைப் பிரதமராக நியமித்த பிறகு, பாராளுமன்றத்தை இடைநிறுத்தி பின்னர் அதைக் கலைப்பதாக நவம்பர் 9ந்திகதி அறிவித்து உடனடியாக பொதுத் தேர்தல் நடத்துவதாக திரு. சிறிசேன அறிவித்தார்.
நீதிமன்றத்தின் தலையீடு
குறிப்பிடத்தக்க வகையில், உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் கலைக்கப்படுவதை வரும் டிசம்பர் 7ந்திகதி வரை இடைநிறுத்தியுள்ளது. அதேவேளை அதிகாரப் போராட்டம் தொடருகிறது, 2015 ஜனவரியில் இடம்பெற்ற ஜனநாயக ஆட்சி மாற்றத்தின்; பயனாக, திரு. சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்காவின் அரசாங்க நிறுவனங்கள், நிறைவேற்று ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருந்த சர்வாதிகார அதிகார சக்தியை வன்மையாக எதிர்த்தன.
பின்திரும்பிப் பார்க்கும்போது, 2015ல் இடம்பெற்ற ஸ்ரீலங்காவின் தாராளவாத ஜனநாயக மாற்றம் மிகவும் நன்மையானது என்பது உண்மை, குறிப்பாக சர்வாதிகார ஜனரஞ்சக ஆட்சிகள் உலகெங்கிலும் படிப்படியாக எழுச்சிபெற்று வந்த சமயத்தில், திரு. ராஜபக்ஸ இரண்டு தவணைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிறைவேற்று ஜனாதிபதியின் பதவிக் காலத்துக்கான தடையை நீக்கியது உட்பட நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்தினார், பின்னர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை பதவி நீக்கும் குற்றவியல் பிரேரணையை தந்திரமாகக் கொண்டுவந்து நிறைவேற்றினார், அரசியல் சக்திகளின் ஒரு பரந்த அணியினரின் ஆதரவோடு ராஜபக்ஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டார். சீனச் சார்பான ராஜபக்ஸவை வெளியேற்றியதன் மூலம் ஸ்ரீலங்காவுக்கு கிடைத்த ஜனநாயக வெற்றி, பதிலுக்கு மேற்கு, இந்தியா, மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஆறுதலையும் மற்றும் வெளிநாட்டு உறவுகளை ஒழுங்கமைக்கவும் உதவியது.
இப்படியான சூழலில் திரு. சிறிசேன, திரு ராஜபக்ஸவுடன் திரும்பவும் இணைந்து இந்து சமுத்திரத்தில் சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா என்பன ஸ்ரீலங்காவில் தலையிட்டு அதிகார விளையாட்டினை மீள்பரிசீலனை செய்வதற்கு இடமளித்துள்ளார். இத்தகைய சோம்பேறித்தனமான முடிவு, நீண்டகால மற்றும் தவறான நவதாராண்மைக் கொள்கைகள் காரணமான அரசியல் விளைவுகளையும் மற்றும் அரசியல் - பொருளாதார மாற்றங்களையும் கருத்தில் கொள்ளத் தவறிவிட்டது. மேலும் அபிவிருத்திகளை குறுகிய பூகோள அரசியல் பூதக்கண்ணாடி வழியாகப் பார்க்கும் சர்வதேச ஊடகங்களின் வெறிக்கு தீனியும் போட்டுள்ளன, சிறிசேன - ராஜபக்ஸ முகாம் சொல்வது என்னவென்றால், பதவி நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்காவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி கடந்த சில வருடங்களாக ஸ்ரீலங்காவின் சொத்துக்களை சீனா மற்றும் இந்தியாவுக்கு விற்பனை செய்ததோடு, சிங்கப்பூர் உடன் ஒரு சுதந்திர வர்த்தக உடன்படிக்கையையும் மேற்கொண்டுள்ளது, இது ஸ்ரீலங்காவின் இறையாண்மைக்கு குழி பறித்துள்ளதுடன் ஒரு பொருளாதார நெருக்கடியையும் தூண்டிவிட்டுள்ளது என்று.
சித்தாந்த ஆதாயங்கள்
சிறிது காலமாக ராஜபக்ஸ விசுவாசிகள் சர்வதேசத் தலையீடு ஏற்படலாம் என்கிற அச்சத்தை தூண்டி வருகின்றனர் - அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இந்த வெளிநாட்டு அச்சம் அணிதிரட்டப்பட்டு வருகிறது. 2015ல் சிறிசேன கோரிக்கை வைத்தது தனது பிரதான சாதனை, 10 வருடகால ராஜபக்ஸவின் ஆட்சியினால் துண்டிக்கப்பட்டுள்ள உலகளாவிய உறவுகளை மீளக் கட்டியெழுப்புவதுதான் என்று. ஆனால் இன்றோ திரு.சிறிசேன கடுமையான தேசியவாதிகளிடம் உரத்த குரலில் எதிரொலிப்பது சர்வதேச நிகழ்ச்சித் திட்டத்தில் இருந்து ஸ்ரீலங்காவை பாதுகாப்பது பற்றி.
ஐதேக மேற்கத்தைய நட்புறவில் ஏகபோக உரிமை பாராட்டுவதுடன் வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் கொண்டு வருகிறது. திரு. ராஜபக்ஸ திரும்பவும் வருவாரானால் சர்வதேசத்திலிருந்து தனிமைப்படுத்தப் படுவதுடன் வெளிநாட்டு உதவிகளும் நிறுத்தப்படும் என்று ஒரு தோற்றத்துக்கு அது வர்ணம் தீட்டி வருகிறது, ஆனால் அதன் சொந்தக் கொள்கைகள் நாட்டை எப்படி வழிநடத்தப் போகிறது என்பதை அது பிரதிபலிக்கவில்லை.
இந்தப் போக்கு தமிழ் அரசியலில் வித்தியாசமாக உள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள குறுகிய நோக்குடைய தமிழ் தேசியவாதிகள் மற்றும் தமிழ் புலம் பெயர்ந்தவர்கள் மேற்குக்கு விரோதமான அரசாங்கத்தின் தோற்றம், சர்வதேசத்தின் கண்டனம் அணிதிரள்வதற்கான ஒரு வாய்ப்பு என்று கருதுகிறார்கள். அவர்கள் உள்நாட்டு யதார்த்தங்கள் மற்றும் அரசியல் இயக்கவியல் என்பனவற்றைப் புறக்கணித்து வெளிநாட்டு தலையீடு ஏற்படும் என்று தொடர்ந்து கனவு காண்கிறார்கள்.
இந்த வெளிநாட்டுத் தலையீடு பற்றிய அச்சம் மற்றும் வெளிநாட்டு ஆதரவு பற்றிய நம்பிக்கை என்பன சித்தாந்த சூழ்ச்சிக்கு அதிகம் வழிவகுக்கின்றன. உண்மையில், தேசிய அரசியல், அதிகார ஒருங்கிணைப்பு மற்றும் வெளிநாட்டவர்களுடன் பேச்சுவார்த்தை என்பனதான் ஸ்ரீலங்காவின் சர்வதேச உறவுகளைத் தீர்மானிக்கின்றன.
வெளிநாட்டு சக்திகள் பற்றிய ஸ்ரீலங்காவின் பதட்டம் - 1980ன் இந்திய தோல்வியைத் தவிர - அபூர்வமாகவே தண்டனை நடவடிக்கைகள் மற்றும் சேதம் உண்டாக்கும் பொருளாதாரத் தடைகளுக்கு வழி வகுக்கும். இருப்பினும் மோதல்போக்கான சொல்லாட்சி வெகுஜனங்களின் ஆதரவை அணிதிரட்டுவதற்கு தேசியவாத அரசாங்கங்களுக்கு உதவும்.
சர்வதேச அழுத்தங்கள்.
ஒரு தசாப்தமாக தொடரும் நாட்டின் யுத்தகால துஷ்பிரயோகங்கள் பற்றிய நடவடிக்கை ஐநா மனித உரிமைகள் பேரவையில் உள்ள ஒரு வழக்கு என்பது சுட்டிக்காட்டத் தக்கது. சீனா மற்றும் ஈரான் என்பனவற்றின் பக்கச்சார்பான திரு. ராஜபக்ஸவை சிக்கவைப்பதற்கு அமெரிக்கா பிரேரணைகளை கொண்டுவந்தபோது, அவர் ஜெனிவாவில் அரசியல் ரீதியாகப் பெற்ற கண்டனங்கள், உள்நாட்டில், சர்வதேச மிரட்டல்களுக்கு அஞ்சாமல் யுத்த வீரர்களைப் பாதுகாக்கிறார் என்கிற பெயரைப் பெறுவதற்கு அவருக்கு உதவியது. ஸ்ரீலங்காவின் சீரழிவுக்கு கொடுப்பனவுகளின் மீதி மற்றும் வெளிநாட்டுக் கடன் பிரச்சினைகள் என்பனவும் கூட ஏற்புடைய காரணிகள் ஆகும். அதேவேளை சீனாவின் கடன் பொறி பற்றி அதிகம் பேசப்படுகிறது, உண்மையில் ஸ்ரீலங்காவின் வெளிநாட்டுக் கடன்களில் சீனாவின் பங்கு 10 விகிதம் மட்டுமே.
இறையான்மை கடன் பத்திரங்கள் உட்பட 40 விகிதத்துக்கு கிட்டவான வெளிநாட்டுக் கடன்கள், சர்வதேசச் சந்தையில் இருந்து பெறப்பட்டவை ஆகும், இவற்றில் முன்னெப்போதும் இல்லாதவாறு 4.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான கடன் கொடுப்பனவுகள் அடுத்த வருடம் கொடுக்க வேண்டியவை ஆகும். சர்வதேச நாணய நிதியம் 2016ம் ஆண்டு ஸ்ரீலங்காவுடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கை காரணமாக அதன் நிலைப்பாடு மற்றும் ஸ்ரீலங்கா மீதான மதிப்பீட்டு முகவர்களின் அழுத்தங்கள் என்பன கடன் நெருக்கடிகளை உயர்த்துவதற்கான முக்கிய காரணிகள் ஆகும். இறுதியாக, அத்தகைய முதலீடுகளின் பாய்ச்சல்கள் இராஜதந்திர உறவுகளுடன் தொடர்பற்றவை, ஆனால் தேசிய ஸ்திரத்தன்மை, வலிமை, வரவு செலவு திட்ட வெட்டுக்கள் மற்றும் கடன் திருப்பிச் செலுத்துதல் என்பனவற்றை உறுதிப்படுத்துதல் உட்படவுள்ள அரசியல் விருப்பம் என்பனவற்றில் தங்கியுள்ளன.
முந்திய தடவை அதிகாரத்தில் இருந்தபோது திரு.ராஜபக்ஸ ஒரு கொடூரமான யுத்தத்தின் பின்னர் சர்வதேச பொருளாதார தனிமைப் படுத்துதலை முரட்டுத்தனம் என அழைத்தார். மேற்கத்தைய எதிர்ப்புகளுக்கு மாறாக சர்வாதிகார ஸ்திரத்தன்மையுடன் செயற்பட்டார், உலக சந்தை மற்றும் உலக வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து கடன் பெறுவது போன்றவற்றில் சிறிது பிரச்சினைகள் அவருக்கு இருந்தன, மற்றும் அந்த விடயத்தில் சர்வதேச நாணய நிதியம் உதவிக்கு வந்தது.
நவ தாராளவாத நெருக்கடி
ஸ்ரீலங்காவின் பொருளாதாரத்துக்கு உலகளாவிய சக்திகளின் எதிர்ப்பு இல்லை. எனினும் எந்தவொரு உலகளாவிய சக்தியின் கருவியின் நகர்வுக்கு மாறாக தீவு தேசத்துக்கு என்ன பிரச்சினைகள் இருந்தாலும் அது உலகளாவிய பொருளாதார ஒழுங்குகளுக்கு ஏற்ப மாற்றமடைகிறது. அதிகரித்து வரும் பாதுகாப்பு காரணங்களினால் சரிவடையும் உலகளாவிய வர்த்தகம் காரணமாக ஏற்றுமதி தொடர்பான முன்னேற்றங்கள் முடக்கப்படும்; சாத்தியம் உள்ளது, மற்றும் இந்த யதார்த்தம் ஐதேக வின் கீழ் இருந்தாலும் சரி முன்னர் ராஜபக்சவின் கீழ் இருந்தாலும் சரி நவ தாராளவாத கொள்கை வகுப்பாளர்களிடமிருந்து முற்றாகத் தப்பிவிட்டது.
அடுத்ததாக அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் எனப்படும் மத்திய வங்கி சில வருடங்களாக வளரும் சந்தைகளில் இருந்து மேற்கத்தைய முதலீடுகள் பெரு நகரங்களுக்குத் திரும்புவதன் காரணமாக மூலதனம் பறப்பதைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப் படாததின் விளைவாக வட்டி விகிதத்தை அதிகரிக்கத் தயாராகி வருகின்றன.
சில மாதங்களுக்கு முன்னர் பொருளாதார நிலமைகள் சீரழிந்ததின் காரணமாக அரசியல் பிரச்சினைகள் அதிகரித்தன என்பது தற்செயல் நிகழ்வு அல்ல. உண்மையில் கொடுப்பனவுகள் மீதி பற்றிய பிரச்சினைகள் அதிகரித்ததின் காரணமாகவே இறக்குமதிகள் மீதான கட்டுப்பாடுகள் - ஸ்ரீலங்காவின் பொருளாதார நிறுவனங்களுக்கு தடைவிதிப்பு - என்பன உண்டானது, மற்றும் மூலதனப் பாய்ச்சல்களைக் கட்டுப்படுத்துவதைப் பற்றிக்கூட ஆலோசனைகள் மேற்கொள்ளப் பட்டன. ஒருமுறை பொருளாதார நெருக்கடி அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது, குறிப்பாக நீண்டகால வரட்சியான சூழ்நிலையின்போது, கிராமப்புற பொருளாதாரத்தைப் புறக்கணித்தது தொடர்பாக நீண்ட காலமாக புகையும் கவலைகள் முன்கொண்டு வரப்பட்டன. விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியத்தைக் கட்டுப்படுத்தவது, எரிபொருளின் சந்தை விலையைத் தீர்மானிக்கும்; கொள்கைகள் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்ற அரசியல் வீழ்ச்சிகள் அரசாங்கத்தைச் சட்டபூர்வமற்றதாக்கின.
சர்வாதிகார ஜனரஞ்சகம்
நவதாராளவாதத்துக்கு எதிரான பின்னடைவு 2008 உலகளாவிய பொருளாதார நெருக்கடியுடன் முன்னோக்கி வந்ததுடன், உலகளாவிய அரசியலை சரி செய்வதற்கு சர்வாதிகார ஜனரஞ்சக ஆட்சிகள் எழுச்சி பெற்றது ஸ்ரீலங்காவையும் பாதிப்புக்கு உட்படுத்தியது. திரு. மகிந்த ராஜபக்ஸ போன்ற வலிமையான மனிதத் தலைவர் அபாயகரமான எழுச்சி பெற்றதின் காரணமாக வெளிச் சக்திகளின் சூழ்ச்சிகளால் எதுவும் செய்ய முடியவில்லை. மாறாக ராஜபக்ஸவின் பிரபலமான முறையிலான அரசியல் நிலைப்பாடு, நவ தாராளவாத நெருக்கடிகளின் சுழற்சிகளினால் மக்களை முறையாக இடஒதுக்கீடு செய்வதின் மூலம் வடிவமைக்கப்பட்டது.
அதே வேளை வர்த்தக தாரளமயமாக்கல், மருத்துவக் கல்வியை தனியார்மயப்படுத்தல், இறையாண்மைப் பத்திரங்களை விற்பனை செய்தல் மற்றும் கொழு;பில் அமையவுள்ள சர்ச்சைக்குரிய துறைமுக நகரம் மற்றும் சர்வதேச நிதி மையம் உட்பட, ஸ்ரீலங்காவின் அநேகமான நவ தாராளவாதக் கொள்கைகள் ராஜபக்ஸ அரசாங்கத்தின் உற்பத்திகளே ஆகும், இன்று ராஜபக்ஸ முகாம் இறையாண்மை மீது நவதாராளவாதம் மேற்கொள்ளும்; தாக்குதலில் இருந்து ஸ்ரீலங்காவைக் காப்பாற்றும்படி கோரிக்கை வைக்கிறார்கள். அதேவேளை திரு.விக்கிரமசிங்கா சுதந்திரச் சந்தை மற்றும் நிதி முதலீடு போன்ற அதே பொருள்கொண்ட பல்வேறு வடிவங்களிலான திரு. ராஜபக்ஸவின் பொருளாதாரக் கண்ணோட்டத்தை மேம்படுத்த முயற்சிப்பது வெட்கம் கெட்ட செயல்.
இவை ஜனநாயகப் பார்வையுள்ள நம்பகரமான பொருளாதார மாற்றீடுகள், அவை ஜனரஞ்சக சர்வாதிகாரத்தை நோக்கிய சாய்வைத் தடுத்து நிறுத்தும். இந்த நெருக்கடியான நேரத்தில் சர்வதேச நலன்களின் பரவலான சொற்பொழிவுகள் அத்தகைய மாற்றீடுகளைத் திசை திருப்பி விட்டன. ஐதேக மற்றும் அதன் கூட்டணி என்பனவற்றை அவற்றின் பொருளாதாரப் பெருந்தவறுகளுக்காகவும் மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை நீக்குவது உட்பட அரசியலமைப்பு ரீதியான ஒரு அரசியல் தீர்வு காணப்படாததுக்காக சவாலுக்கு உட்படுத்த வேண்டும். சிறிசேன - ராஜபக்ஸ கூட்டணி; யுத்த வெற்றி மற்றும் சிங்கள பௌத்த பெரும்பான்மையினரின் அணிதிரட்டலுடன்கூடிய சர்வதேசச்சதி என்பனவற்றை வைத்து திரும்பவும் இயங்குவதற்கான வாய்ப்பு உள்ளது, ஜனநாயகக் கொள்கைகள் மற்றும் பன்மைத்தன்மை என்பனவற்றை அடிப்படையாக வைத்து இவர்களையும் சவாலுக்கு உட்படுத்த வேண்டும். ஸ்ரீலங்காவில் விவாதமானது தனிநபர்களுக்;கு மட்டுப்படுத்தப் பட்டுள்ளது, ஊழல் மற்றும் பூகோள அரசியல் தேவைகள் என்பனவற்றையும் ஜனநாயக மாற்றம்; மற்றும் பொருளாதார நீதி போன்ற சக்திவாய்ந்த கோரிக்கைகளை பொதுமக்களிடம் முன்வைக்க வேண்டும். இல்லையெனில் பாராளுமன்றம் மற்றும் நீதிமன்றம் எனபனவற்றால்; வழங்கப்படும் பாதுகாப்பு என்கிற மெல்லிய சுவர் உடைந்து சிதறிவிடும், மற்றும் ஆழமாகும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் என்பன சர்வாதிகார ஒருங்கிணைப்புக்கு வழிவகுத்துவிடும்.
(அகிலன் கதிர்காமர் ஸ்ரீலங்கா, யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டியங்கும் ஒரு அரசியல் பொருளாதார நிபுணர் ஆவார்.
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
No comments:
Post a Comment