14 December 2018

பெரும்பான்மையினரின் உரிமைகளை மட்டும் பாதுகாப்பது ஜனநாயகமல்ல

பெரும்பான்மை ஆதரவு, சிறுபான்மை ஆதரவு என்ற சொற்பதங்கள் இன்று காலம் கடந்தவை ஆகியுள்ளன. சர்வதேச சட்ட சொற்பதங்களின் பட்டியலில் இவை பெறுமதி இழந்த பதங்களாகவே கணிக்கப்படுகின்றன.
ஜனநாயகம் என்பது யாருக்காக? பெரும்பான்மையினருக்கா, இல்லை சிறுபான்மையினருக்கா? அல்லது இரண்டு தரப்பினருக்குமா என்று சர்வதேச சட்டவல்லுனர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
பெரும்பான்மை அதிகாரம் அல்லது பெரும்பான்மையினரின் உரிமைகளை பாதுகாத்துக் கொண்டு சிறுபான்மையினரின் உரிமைகளை அப்பட்டமாக மீறுவது ஜனநாயகம் அல்ல.
பெரும்பான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பது என்பது சிறுபான்மையினரின் உரிமைகளை மிதிப்பது அல்ல. சிறு தப்பபிப்பிராயத்துடன் கூடிய ஜனநாயகம் என்பது அனைவருக்குமானதாகும். அபிவிருத்தி, முன்னேற்றம், சமாதானம் மற்றும் நீதி ஆகியவை அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்வதே ஜனநாயகமாகும்.
ஜனநாயகம் என்ற பெயரிலும் அரசியலமைப்பு என்ற பதத்திலும் இலங்கை அண்மையில் எதிர்கொண்ட மோசமான விளைவுகளைப் பார்க்கும் போது பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருந்தும் ஒரு கட்சி வெறுமனே பார்வையாளராகவே பாராளுமன்றத்தில் இருக்க வேண்டியிருந்தது.
அனைத்து ஆளும் கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகளுடன்தான் மக்களைச் சந்திக்கின்றன. அந்த தேர்தல் வாக்குறுதிகள் மக்களை மகிழ்ச்சியாகவும் சமாதானத்துடனும் வாழ வைக்கும் வகையில் அமைவதால் மக்கள் அக்கட்சிக்கு வாக்களிக்கின்றனர். ஜனநாயகத்தின் மீது மதிப்பு வைத்து மக்கள் இவ்வாறு அக்கட்சிக்கு வாக்களித்த போதும், குறிப்பிட்ட அக்கட்சி உறுப்பினர்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதுடன் கட்சித் தாவல்களிலும் ஈடுபட்டு அக்கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்கின்றனர்.
மற்றொரு கட்சிக்கு மாறுவதற்கு அவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கிடைக்கிறது. அவர்கள் மகிழ்ச்சியில் திளைக்க, அவர்களுக்கு வாக்களித்த மக்களோ ஏமாந்த சோணகிரியாகி விடுகின்றனர். இப்படிப் பார்க்கும் போது பாராளுமன்றம் ஒரு அதியுயர் பீடம் என்று கூற முடியுமா? ஆனால் பாராளுமன்றம் ஒரு அதியுயர் பீடமாக அமையலாம். அவ்வாறான சந்தர்ப்பத்தில் அது எவ்வாறு அமையும்?
பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்டு அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தம்மை தெரிவு செய்த மக்களின் உண்மையான அபிலாஷைகளின்படி நடந்து கொள்வார்களேயானால் பாராளுமன்றம் அதியுயர் பீடமாக அமையும் என்று கூறலாம்.
நாட்டின் பொருளாதாரம், கலாசாரம் மற்றும் விஞ்ஞானபூர்வ முன்னேற்றத்தை பாராளுமன்றம் சிறப்பாக நிர்வகிக்குமேயானால் அதனை அதியுயர் பீடம் என்று கூற முடியும்.
ஒட்டுமொத்தமாக மக்கள் பயன்பெறும் வகையிலான சட்டங்களை இயற்றி, சட்டத்தின் ஆட்சியை நீதித்துறையின் எந்தவொரு இடையீடும் இன்றி பேண முடிந்தால் பாராளுமன்றத்தை ஒரு அதியுயர் பீடம் என்று கூறலாம்.
பாரிய திட்டங்களின் போது ஊழல் மோசடிகளில் ஈடுபடுவோர் மற்றும் வங்கி செயற்பாடுகளின்போது மோசடி மற்றும் திருட்டுகளில் ஈடுபட்டு நாட்டின் பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துவோரை கைது செய்ய சட்ட நடவடிக்கைகளை எடுப்பதுடன் அவ்வாறு ஊழல் மோசடி மூலம் இழந்த சொத்தை மீளப் பெற பாராளுமன்றம் நடவடிக்கை எடுக்குமாயின் அதனை அதியுயர் பீடம் என்று கூறலாம்.
அப்பாவி மக்கள் வரியாகச் செலுத்தும் பணத்தை அதிக அளவு வீண் விரயம் செய்யாமல், செல்வச் செழிப்பு வாழ்க்கையை தவிர்த்து, சாதாரண வாழ்க்கையில் ஈடுபட பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வருவார்களாயின் பாராளுமன்றத்தை அதியுயர் பீடம் என்று கூறலாம்.
பெரும்பாலான ஆசிய நாடுகளில் தேர்தலில் தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கடமைகளையும் பொறுப்புகளையும் மறந்து விடுகின்றனர். பொதுச் சொத்தை திருடுவதும், தங்கள் சொத்தை அதிகரித்துக் கொள்ள முயற்சிப்பதும் அவர்களுக்கு முக்கியமாகி விடுகின்றன. பாரிய அபிவிருத்தித் திட்டங்களில் கிடைக்கும் கமிஷன், பொதுச் சொத்துக்களை வெளிநாட்டினருக்கு விற்பது, தேவையற்ற பொருட்களை இறக்குமதி செய்வது, அதன் மூலம் கமிஷன் பணத்தை சேர்ப்பது பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகளாக மாறி விடுகின்றன.
ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களுக்கு சேவையாற்றுவதை விட தமது குடும்பத்துக்கு சேவையாற்றும் இந்த வழக்கம் எங்கள் நாட்டில் மட்டுமன்றி ஆசியாவின் பல நாடுகளிலும் உள்ளது. எனவே பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் என்பது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அல்ல. அது நாட்டின் மக்களுக்காகவேயாகும் என்பதனை பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்திற் கொள்ள வேண்டும். அதுமட்டுமன்றி அதன் பிரகாரம் செயற்படவும் வேண்டும். அதன் மூலமே அவர்கள் பாராளுமன்றத்தை அதியுயர் பீடமாக மாற்றலாம்.
மக்களுக்கு நன்மை ஏற்படாவிட்டால், அவர்களது அபிலாஷைகள் தவறாக பிரதிபலிக்கப்பட்டால், அவர்களது நம்பிக்கை சிதறடிக்கப்பட்டால், அவர்களது வாக்களிப்புத் தெரிவும் பிழையாக அமைந்துவிட்டால், அவர்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கிய அந்த சட்டத்தை அவர்கள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
சி.ஜி. இலங்ககூன்
(DAILY NEWS)

No comments:

Post a Comment