09 April 2009


வன்னியின் துயரம்

வன்னியில் 17 ச.கி.மீ பரப்பளவினுள் அகப்பட்டிருக்கும் சுமார் ஒன்றரை லட்சம் தொடக்கம் இரண்டு லடசம் வரையிலான மக்கள் மிகப் பெரிய மனித அழிவு அபாயத்தினுள் வைக்கப்பட்டிருக்கிறார்கள். மிகச் சிறிய புதுமாத்தளன் நிலப்பரப்பில் உவர் தரையில் தண்ணீருக்கும், உணவிற்கும் அல்லாடிக்கொண்டு எந்த கணமும் மரணத்தை எதிர்நோக்கிக்கொண்டு அவர்கள் வாழ்கிறார்கள்.

இந்த மக்கள் பாதுகாக்கப்படுவது யுத்தத்தைவிட முக்கியமான விடயம். இந்த மக்களை மனித கேடயங்களாக வைத்திருக்கும் புலிகள் அவர்களை தமது ஆயுதங்கள் போல் பாவிக்கிறார்கள். மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கான உரிமையை மறுத்திருக்கிறார்கள். மக்களின் மரணங்களில் தமது உலகளாவிய பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்.

ஐ.நா சபையும் ஐரோப்பிய யூனியன், சர்வதேச மன்னிப்புச்சபை மனித உரிமை கண்காணிப்பகம் போன்ற அமைப்புக்களும் இங்கிலாந்து,அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளும் மனித கேடயங்களாக வைத்திருக்கும் இம் மக்களை விடுவிக்குமாறு அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றடைய அனுமதிக்குமாறு விநயமாக இறைஞ்சி கேட்டிருந்தும் புலிகள் அதற்கு உடன்படவில்லை.

ஐ.நா சபையின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் ஹோம்ஸ் அவர்கள் புலிகளுக்கு மக்களின் நலன்களில் உண்மையான அக்கறை இருக்குமானால் அவர்கள் தாம் விரும்பும் இடத்திற்கு செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். ஆனால் புலிகள் பரந்த வன்னி நிலப்பரப்பில் வாழ்ந்த மக்களை 17 ச.கி.மீ சுற்றளவிலான புதுமாத்தளன் வரை சுருக்கிச் சென்றிருக்கிறார்கள்.

இது மக்களின் உயிருடன் நடத்தும் ஒரு பாசிச விபரீத விளையாட்டு. கடந்து வந்த 30 வருடங்களில் மக்களின் வாழ்க்கையில் ஆக்கபூர்வமான மாற்றங்கள் நிகழ கிடைத்த சந்தர்ப்பங்களையெல்லாம் சீர்குலைத்து தங்களைத் தாங்களே நிர்வகிக்கக்கூடிய அதிகாரப்பகிர்விற்கான சந்தர்ப்பங்களையும் தமிழ் மக்களுக்கு கிட்டவிடாமல் செய்தார்கள்.
உள்ளுரிலும், புலம் பெயர்ந்த தமிழர்களிடமும் இருந்த வளங்களில் கணிசமானதை பயன்படுத்தி புலிகள் தமிழ் சமுதாயத்திற்கு பெரும் நாசம் விளைவித்திருக்கிறார்கள். புலிகளில் இருந்தும், சகோதர இயக்கங்களில் இருந்தும் கொல்லப்பட்ட இளைஞர் யுவதிகளின் ஆத்மாக்களுக்கு இவர்களால் பதில் சொல்ல முடியுமா? இடையறாத யுத்த சூழ்நிலையில் கடந்த 30 வருடங்களில் கொல்லப்பட்ட மக்களின் இரத்தக் காணிக்கைக்கு இவர்களிடமுள்ள பதில்தான் என்ன?

உண்மை என்னவென்றால் கேள்விக்கிடமற்ற எமது அதிகாரம். அகங்காரமான அதிகாரம். அதன்கீழ் தமிழ் மக்களை வைத்திருப்பதும் ஏனைய சகோதர சமூகங்களான சிங்கள, முஸ்லீம் சமூகங்களை அச்சுறுத்துவதும்தான் இதுவரை காலமும் அவர்களின் பணியாக இருந்திருக்கிறது.

யுத்த தர்மீக நெறிமுறைகளுக்கு முரணாக ஒரு சுதந்திர போராட்ட விதிமுறைகளுக்கு முரணாக அத்தனைவிதமான காட்டுமிராண்டி தாக்குதல்களையும் அவர்கள் பிரயோகித்திருக்கிறார்கள்.

இதற்காக தமிழ் மக்களுக்கு பேரினவாதிகளால் பிரச்சினை இல்லை என்றாகிவிடாது. தமிழ் மக்களுக்கு ஓர் அரசியல் பிரச்சினை இல்லை என்றாகிவிடாது. புலிகள் இந்த பிரச்சினையின் ஒரு பகுதியினர் ஆகியதால் இனப்பிரச்சினைக்கு ஆக்கபூர்வமாக தீர்வு காண்பதில் சிக்கல்கள் உருவாகின.

பேரினவாதமும் புலிகளை சொல்லியே தமிழ் மக்களுக்கு தீர்வு காண்பதை தள்ளி போடுவதற்கும் தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய சட்டபூர்வமான அதிகாரங்களில் எச்சசொச்சத்தை பறித்தெடுப்பதிலும் முனைப்பாக நின்றது.

‘ஏரிகிற வீட்டில் கொள்ளி பிடுங்குவது இலாபம்” என்பது போல் கடந்துவந்த கால்நூற்றாண்டு சரித்திரத்தில் நடந்தேறி வந்துள்ளன.

புலிகளுடைய பிரச்சினைதான் பிரச்சினை தமிழ் மக்களுக்கு வேறு எந்தப் பிரச்சினையும் இல்லையென்ற தோற்றப்பாடு பேரினவாதிகளால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் இந்த நாட்டில் இரண்டாந்தர பிரஜைகளாக பாரபட்சமாக நடத்தப்பட்டிருக்கிறார்கள். நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.. தேசிய சமூக வாழ்விலிருந்து அந்நியப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இதேபோன்ற பிரச்சினைகளை மலையக தமிழ் மக்களும், முஸ்லீம் மக்களும் அனுபவிக்கிறார்கள்.

இந்தியாவில் பஞ்சாபியர்களும், மராட்டியர்களும், கன்னடரும், தமிழரும், வங்காள மக்களும் தாம் இந்தியர் என்ற பெருமைபடுவது போல் நாம் இலங்கைர் என்று அனைத்து சமூகமும் பெருமைபடுவதற்கான சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். மக்களின் 60 வருடங்களுக்கு மேலான மனக்காயங்கள் ஆற்றப்பட வேண்டும்.

நாம் இந்த நாட்டின் சுதந்திர பிரஜைகள் என்று வாழத்தக்கவாறு நிலைமைகள் உருவாக்கப்பட வேண்டும். தலைநிமிர்ந்து வாழ்வதற்கான நிலைமைகள் ஏற்பட வேண்டும்.
சமகால உலக வரலாற்றில் காணப்படாத அளவு தொகையினர் அண்மையில் வன்னிப் பகுதியில் காயமடைந்துள்ளார்கள், ஊனமுற்றுள்ளார்கள். இந்த மக்கள் வாழ்வின் மீது வெறுப்பு கொண்டிருக்கிறார்கள். யுதத்தின் கொடூர வலி அவர்களை மிக மோசமாக பாதித்துள்ளது. அவர்கள் தன்னம்பிக்கையை பெறுவதற்கான எழுந்து நிற்பதற்கான நிலைமைகள் உருவாக்கப்பட வேண்டும்.

வாழ்நாள் பூராவும் பேணி பாதுகாக்கப்பட வேண்டிய மற்றவர்களை சார்ந்து வாழ வேண்டிய மக்கள் இருக்கிறார்க்ள். அவர்கள் வீதிககு வரக்கூடாது. கௌரவமான வாழ்வொன்று அவர்களுக்கு நிரந்தரமாக அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும். அவர்கள் எமது சமூகத்தின் செல்லப் பிள்ளைகள் என்ற உணர்வுடன் நாம் பணியாற்ற வேண்டும்
வன்முறை கலாச்சாரம் அடியோடு ஒழிக்கப்பட்டு ஜனநாயக அரசில் சூழ்நிலை, குறிப்பாக வடக்கு கிழக்கிலும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
தி.ஸ்ரீதரன்

No comments:

Post a Comment