09 April 2009

உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்த சட்டமூலம்

வடக்கில் உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான முன்னோடி நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளதாகவும், இதற்கான பாராளுமன்ற அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக உரிய சட்டமூலமத் எதிர்வரும் 20-04-2009 பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் மாகாணசபைகள், உள்ளுராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். யுத்த சூழ்நிலை காரணமாக வடக்கில் இத் தேர்தலை நடத்த முடியாமல் போய்விட்டது என்றார். வடக்கில் மக்களுக்கான அரசாங்கத்தின் சேவைகள் சகல மக்களுக்கும் சென்றடையும் வகையில் நிர்வாகங்களை செயற்படுத்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் பெரிதும் உதவும் என்பதால் முதலில் இத் தேர்தலை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்

வவுனியா- கொழும்பு கடுகதி ரயில் சேவை

கடந்த ஒரு மாதமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – வவுனியாவுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து சேவை நேற்றுமுதல் (08-04-2009) மீண்டும் சேவையில் ஈடுபட்டன. தினமும் காலை 5.45 மணிக்கு கோட்டையிலிருந்து புறப்பட்டு 11 மணிக்கு வவுனியா வந்தடையும். பகல் ஒரு மணிக்கு வவுனியாவிலிருந்து புறப்படும் இந்த ரயில் மதவாச்சியில் நிறுத்தப்பட்டு பயணிகள் சோதனையிடப்பட்ட பின்னர் மாலை 3.45 க்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்தை சென்றடையும். மதவாச்சி, அநுராதபுரம், மாகோ, குருநாகல் போன்ற முக்கிய நிலையங்களில் மாத்திரம் நிறுத்தப்படும். முதலாம் வகுப்பு 700 ரூபாவும் இரண்டாம் வகுப்பு ஆசன ஒதுக்கீடு 500 ரூபாவும், 2ம் வகுப்பு சாதாரணம் 450 ரூபாவும், 3ம் வகுப்பு 270 ரூபா இதுவே கட்டண விபரமாகும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த ரயில் சேவையை நடத்துவதற்கு பாதுகாப்புத்தரப்பினர் அனுமதி வழங்கியதையடுத்தே இச் சேவை நடைபெறுகிறது.

உடன் சரணடையுமாறு புலிகளுக்கு அறிவிப்பு

புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுத் சரணடையுமாறும் சிவிலியன்களை விடுவிக்குமாறும் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள புலிகள் இயக்கத்தினருக்கு இராணுவத்தினர் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர். அதேவேளை புலிகளின் பிடியில் அகப்பட்டிருக்கும் மக்களை பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேறி வருமாறு கேட்டுக் கொண்டனர். எவ்வாறெனினும், தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்பதாக, பாதுகாப்பு வலயத்திலிருந்து பெருமளவான பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருவார்களென அதிகாரிகள் மட்டத்தில் எதிர்பார்க்கப்படு கிறது

காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் சமீபத்தில் மக்கள் மீளக் குடியேறியுள்ள உறுகாமம் பிரதேச குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையில் காணாமற் போனதாகக் கருதப்பட்ட மீனவரான முகமது உசனார்(48) ஊறுகாமம் சடலமாக நேற்று 08-04-2009 மீட்கப்பட்டார்

No comments:

Post a Comment