பொது மக்களின் நடமாட்ட சுதந்திரத்தை உறுதி செய்து, பாதுகாப்பான பிரதேசங்களுக்கு வரவழைக்கலாம் - ஐரோப்பிய ஒன்றியம்
இலங்கை அரசு புதுவருடத்தை முன்னிட்டு அறிவித்த 48 மணி நேர மோதல் தவிர்ப்பு , நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. எனினும், இந்த மோதல் தவிர்ப்பை மேலும் அதிகரிப்பதன் ஊடாக, பொது மக்களின் நடமாட்ட சுதந்திரத்தை உறுதி செய்து, அவர்களைப் பாதுகாப்பான பிரதேசங்களுக்கு வரவழைக்கலாம் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்று வரும் மோதல்களினால் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் யுத்த நிறுத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டியது மிகவும் அத்தியாவசியமாகிறது.
இதற்கிடையில் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட தற்காலிக யுத்த நிறுத்தம் வரவேற்கத்தக்க ஒன்று. எனினும் 'நிரந்தர யுத்த நிறுத்தத்தை மேற்கொண்டு பேச்சுவார்த்தைக்கு வரத் தயார்' என்ற விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டையும் அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இரண்டு தரப்பினரும், சர்வதேச போரியல் நியமங்களை மதித்துத் தமது முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதேவேளை போர் நிறுத்த காலவேளையில் எவ்வித உதவிகளையும் மேற்கொள்ளத் தயார் என ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்பாட்டையும் தாம் வரவேற்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
No comments:
Post a Comment