15 April 2009

உள்ளுர் அதிகார சபைகள் சட்டமூலமும் சிறுபான்மை இன பிரதிநிதித்துவமும்

வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுறும் தறுவாயிலிருப்பதாக் கூறப்படும் இந்த வேளையில் தென்னிலங்கையிலிருந்து தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கும் உரிமைகளுக்கும் எதிரான பேரினவாதிகளின் குரல்கள் மீண்டும் மேலோங்கத் தொடங்கியுள்ளன.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வாகக் கூறப்படும் அதிகாரப் பகிர்வுத் திட்டத்துக்கு எதிரான கருத்துக்கள் இன்று தென்னிலங்கையில்; எழத் தொடங்கி விட்டன.
இந்த விடயத்தில் மக்கள் விடுதலை முன்னணி(ஜே.வி.பி) வழமை போல் முதலிடத்திலேயே உள்ளது. இவர்கள் சிறுபான்மை மக்கள் தொடர்பில் ஒரு போதுமே சார்புக் கொள்கையினையோ கருத்துக்களையோ கொண்டவர்களல்லர் என்பது தெரிந்த விடயம்.

யுத்தத்தில் வெற்றி பெற்றால் எல்லாம் சரியாகிவிடும் என்ற கற்பனைவாத நம்பிக்கையில் மூச்சுவிடும் இவர்கள், இலங்கை தமிழ் மக்கள் பிரச்சினையின் வரலாறு தெரியாதவர்களாகப் பாலர் போதினி பாட புத்தகம் படிக்கும் பாலர்களாகவே இன்றும் செயற்படுகிறார்கள் அல்லது நடிக்கிறார்கள் என்றே கூற வேண்டும்.

இது போன்றே தமிழ் மக்கள் பிரச்சினை தொடர்பில் ஹெல உறுமயவும் தனது இனவாத நிலைப்பாட்டை அப்பட்டமாகத் தெரிவித்துள்ளதுடன் வடக்கில் இராணுவத்தினரால் கைப்பற்றப்படும் பிரதேசங்களில் பௌத்த அகழ்வாராய்ச்சியிலும் கண்டு பிடிப்பிலுமே காலத்தை கடத்தி வருகிறது.

கிழக்கில் தொப்பிகல (குடும்பிமலை) வடக்கில் கிளிநொச்சி போன்ற பகுதிகள் கைப்பற்றப்பட்டவுடன் முதலில் அவர்கள் பௌத்த மதத் தடயங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு, இந்தப் பிரதேசத்தின் சில பகுதிகள் சிங்களவர்களின் பாரம்பரியப் பிரதேசங்களென நிரூபிக்கும் வலிந்தெடுத்த ஆதாரங்களை சமர்ப்பித்தனர். ஆனால் புத்தி ஜீவிகளான சில சிங்கள மக்கள் இவர்களின் இந்த கண்டுபிடிப்புக்களுக்கு துணை போகாமையையும் இங்கு நாம் குறிப்பிட்டேயாக வேண்டும்.

புதுகுடியிருப்புக்கான பௌத்த புராதன ஆராய்ச்சியை கொழும்பிலிருந்து மேற்கொள்ளும் பணியில் ஹெல உறுமய ஈடுபட்டுள்ளது.

புதுகுடியிருப்பு என்பது ராஜரட்ட இராச்சியம் வீழ்ச்சியடைவதற்கு முன்னர் காணப்பட்ட பண்டைய கால நகரம். இதனை மீட்டமை தொடர்பில் படையினருக்கு கௌரவமளிக்க வேண்டும். என்று ஜாதிக ஹெல உறுமய தலைவர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்து விட்டார். இவரின் இந்த கண்டு பிடிப்புக் கூட இனவாதத்தைத் தம்முடன் ஒட்டிக்கொள்ளாத அனைத்து இன மக்களாலும் நிராகரிக்கப்படும் என்பதும் உண்மையே.

இது இவ்வாறிருக்க இரண்டுடன் மூன்றென்ற நிலையில் இன்றைய அரசாங்கமும் சிறுபான்மை மக்களுக்குப் பாரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய சில சட்டங்களை, சட்டத் திருத்த மூலங்களை நாடாளுமன்றத்தின் ஊடாக நிறைவேற்ற முயற்சித்து வருகிறது.

இவ்வாறான சட்டங்களில் ஒன்றுதான் உள்ளுர் அதிகார சபைகள் (விஷேட ஏற்பாடுகள்) சட்ட மூலம் மாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மேலும் பறிக்கும் வகையிலும் உள்ளுராட்சி சபைகளில் சிறுபான்மை இன மக்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் நோக்குடனும் பெரும் தேசிய கடும் போக்காளர்களால் உருவாக்கப்பட்டதே இந்த சட்டமூலமாகும். இது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் பாதிக்கப்படப் போவது தமிழர்களும், முஸ்லீம்களுமே. அதிலும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் வாழும் சிறுபான்மை இன மக்களே விசேடமாக பெரும்பான்மை இன மக்கள் வாழும் பகுதிகளை எல்லைப் புறமாக கொண்ட பிரதேசங்களில் வாழும் தமிழர்களும், முஸ்லீம்களும்தான் இதன் பாதிப்பை முற்றாக உணர்வர்.

கடந்த டிசம்பர் மாதம் அமைச்சர் தினேஷ் குணவர்த்தனாவினால் அவசர அவசரமாக நாடாளுமன்ற அங்கீகாரத்துக்காக முன் வைக்கப்பட்ட இந்த சட்டமூலத்துக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சியும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கின் முடிவை அறிவித்த உயர் நீதிமன்றம் நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்திலிருந்து இதனை உடனடியாக நீக்குமாறும் தேவையாயின் மாகாண சபைகளின் அனுமதியை பெற்ற பின்பு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் தெரிவித்திருந்தது.
இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் உள்ளுர் அதிகார சபைகள் (விஷேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தை அங்கீகரிப்பதா இல்லையா என்பது குறித்த விவாதம் இந்த மாதம் 07ம் திகதி கிழக்கு மாகாண சபையில் ஆராயப்படவிருந்த போதும் அது எதிர்வரும் 17ம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டது. இந்தச் சட்டமூலம் அனைத்து மாகாண சபைகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டால் மட்டுமே நாடாளுமன்றத்துக்கு கொண்டுவர முடியுமென்றும் ஒரு மாகாணசபை நிராகரித்தால் கூட இதனை நிறைவேற்ற முடியாதென்பதுமே நியதியாகும்.

கிழக்கு மாகாணசபை தவிர்ந்த ஏனைய மாகாணசபைகள் சிங்களவர்களை முதலமைச்சர்களாகக் கொண்டிருப்பதாலும் சிங்கள மக்கள் நலன்சார் சட்டமாக இது இருப்பதன் காரணமாகவும் கட்சி அரசியலுக்கு அப்பால் நின்று இந்தச் சட்டமூலத்துக்கு அவை தமது பூரண ஆதரவை நிச்சயம் வழங்கத்தான் போகின்றன. ஆனால் கிழக்கு மாகாணசபை இதனை நிராகரித்தால் அதனைச் சட்ட மூலமாக்க முடியாது. இந்த நிலையில் கிழக்கு மாகாணசபை இது தொடர்பில் எதிர்வரும் 17ம் திகதி என்ன முடிவை எடுக்கப் போகிறதென்பதே இன்றைய கேள்வி.

குறிப்பிட்ட இந்த உள்ளுர் அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலமானது சிறுபான்மை மக்களுக்கு எவ்வாறான பாதிப்புக்களை ஏற்படுத்துமென்பதனை நாம் இங்கு ஆராய்வதும் பொருத்தமானதே

இந்தத் திருத்தச் சட்டத்தின் கீழ் ஒரு பிரதேச சபைத் தேர்தல் நடத்தப்படுமாயின் 70 சதவீதமான உறுப்பினர்கள் (வட்டார தொகுதிவாரியாகவும் 30 சத வீதமான மக்கள் விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்யப்படுவர். இவ்வாறான முறையின் கீழ் நடத்தப்படும் உள்ளுராட்சித் தேர்தலில் நிச்சயமாக சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவம் குறைவடையுமென்பதனை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

மேலும் வட்டார எல்லைகள் தொடர்பான திருத்தம் மற்றும் புதிய வட்டார எல்லைகளைத் தீர்மானிக்கும் பொறுப்புக்கள் என்பனவற்றை அமைச்சர் ஒருவருக்கே இந்தத் தேர்தல் சட்டத் திருத்தத்தின் மூலம் வழங்குகிறது. இதன்படி வட்டார எல்லைகளை திருத்தியமைக்கும் பூரண அதிகாரம் அந்த அமைச்சருக்கு வழங்கப்படும். இவ்வாறு இந்த விவகாரத்துக்குப் பொறுப்பாக நியமிக்கப்படும் தனி நபரான அமைச்சர் ஒரு கட்சியைச் சேர்ந்தவராகவே இருப்பார். அதுவும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவருக்கே இந்த அமைச்சுப் பொறுப்பும் நிச்சயம் வழங்கப்படும். இந்த நிலையில் அவர் சிறுபான்மை மக்கள் நலன்கள் பாதிக்கப்படாத வகையில் வட்டார எல்லைகளை மீளமைப்பாரா என்பதும் சந்தேகமே.

தமிழர் அல்லது முஸ்லீம்கள் வாழக்கூடிய ஒரு சிறு பிரதேசத்தினையொட்டியதான சிங்கள மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசமொன்றின் வட்டார எல்லைகளை மீளமைக்கும் வகையில் அவை பல பிரிவுகளாகப் பரிக்கப்பட்டு (உதாரணமாக வட்டாரம்-01, வட்டாரம்-02, வட்டாரம்-03) அவற்றின் சில வட்டாரங்கள் குறிப்பிட்ட தமிழ் அல்லது முஸ்லீம் பிரதேசத்துடன் இணைக்கப்பட்டால் அங்கு சிறுபான்மை மக்களின் பெரும்பான்மை பலம் இழக்கப்படுவது தவிர்க்க முடியாது போகும். இதன் மூலம் சிறுபான்மை மக்களின் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதித்துவத்தின் அதிகரித்த எண்ணிக்கைக்கு சாவு மணி அடிக்கப்படுகிறது.
எல்லை நிர்ணய சபையொன்றினை அமைத்து அதன் ஊடாக பொது மக்களின் ஆலோசனைகள் பெறப்பட்டு மக்களின் பங்களிப்புடன் எல்லைகள் தீர்மானிக்கப்படும் பாரம்பரியம் இச் சட்டமூலத்தில் திட்டமிட்டுப் பறிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டத்துடன் சில சிங்கள பிரதேசங்களை இணைத்து அங்கு திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுவியும் கரும்புச் செய்கை கல்லோயாத் திட்டமென்ற பேரில் சிங்கள மக்களைக் குடியேற்றியும் தமிழ் பேசும் மக்களின் பெரும்பான்மை பலத்தை இந்த மாவட்டத்தில் இழக்கச் செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சதி நடவடிக்கைகளையும் நாம் இந்தச் சந்தர்ப்பத்தில் மறந்துவிட முடியாது. அத்துடன் சிறுபான்மையின மக்களின உரிமைகளை கிள்ளியெடுக்கும் வகையில் ஆக்கப்பட்டுள்ள இந்த சட்டமூலமானது இனங்களுக்கிடையிலான பரஸ்பர புரிந்துணர்வுக்கும் நச்சு விதையையே தூவும் என்றும் எதிர்பார்க்கலாம்.

இது புறமிருக்க முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம் அஷ்ரப் ஜனாதிபதி பிரேமதாசாவிடம் வாதாடி நீக்கிக்கொண்ட 12.5 வீத வெட்டுப் புள்ளிக்கும் இந்த உள்ளுர் அதிகார சபைகள் (விஷேட ஏற்பாடுகள்) சட்ட மூத்தில் இந்த 12.5 வெட்டுப்புள்ளி முறையானது மீண்டும் சேர்க்கப்படுகிறது.

இவ்வாறு சிறுபான்மை மக்களின் உள்ளுராட்சிமன்ற பிரதிநிதித்துவத்தை குறைக்கும் வகையில் திட்டமிட்டு ஆக்கப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்தை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்ற முடிவை எடுக்கக்கூடிய ஒரு சக்தியாக இன்று இருப்பது கிழக்கு மாகாண சபையாகும். இன்றைய கிழக்கு மாகாணசபை ஆளுங்கட்சியின் கீழ் செயற்படுவதால் இந்த விடயத்தில் அரசுக்கு சாதகமான தீர்மானத்தை மேற்கொள்ளுமா அல்லது தமிழ் பேசும் மக்கள் நலன் கருதி கட்சி அரசியலுக்கு அப்பால் நின்று செயற்பட்டு குறிப்பிட்ட சட்டமூலத்தை நிராகரிக்குமா என்பது எதிர்வரும் 17ம் திகதி தெரியவரும்.

இதேவேளை கிழக்கு மாகாண சபையால் இந்தச் சட்டத்திருத்தம் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அதற்கான அங்கீகாரத்தை பெறும் வகையில் நாடாளுமன்றத்தில் இது சமர்ப்பிக்கப்படும் போது தமிழ், முஸ்லீம் எம்.பிக்கள் அதற்கு ஆதரவு வழங்கி அரசுக்கு சாமரம் வீசி பன்னீர் தெளித்து கடுங் கோட்பாட்டாளர்களின் மேலுமொரு துரோகத்தனத்துக்கு துணை போவார்களா? அல்லது தம்மை தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய தமிழ் பேசும் மக்கள் நலன் கருதி ஒற்றுமையாகச் செயற்பட்டு கட்சி அரசியலுக்கு அப்பால் இவர்களும் சென்று சட்டமூலத்துக்குச் சாவுமணி அடித்து தமது ஒற்றுமையையும் பலத்தையும் காட்டுவார்களா என்பதே இன்றைய கேள்விகள்.

மலையகத்தைப் பொறுத்தவரையிலும் இந்த சட்டமூலமானது தனது தீ நாக்கை பெரிதாக நீட்டத்தான் போகிறது. மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுததும் தமிழ் எம்.பிக்களின் மக்கள் பிரதிநிதித்துவம் எவ்வாறானது என்பதனை இந்தச் சட்டமூலம் தொடர்பில் அவர்கள் எடுக்கக்கூடிய முடிவே இனங்காட்டும்.

யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் அரசாங்கம் விரைவாக உள்ளுராட்சித் தேர்தலொன்றை நடத்தவுள்ளது. அதுவும் உள்ளுர் அதிகார சபைகள் (விஷேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தின் கீழ் நடத்தப்படுவதனையே அரசு இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதொன்று.

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
வீரகேசரி (12-04-2009)

No comments:

Post a Comment