11 April 2009


வன்னி மக்களை காப்பதே இன்றைய முதன்மையான பணி

வன்னியில் எந்த கணமும் மரணத்தை எதிர்நோக்கிக் கொண்டு அதனை அனுபவித்துக் கொண்டும், காயமடைந்து கொண்டும் பாரிய மன அழுத்தங்களுக்கு உள்ளாகி கொண்டும் வாழும் மக்களை பாதுகாப்பதில் இன்று மற்றைய எல்லாவற்றையும் விட முக்கியமான பிரச்சினையாகும்.

சமகாலத்தில் உலக மானிடம் எதிர்நோக்கிய மனிதாபிமான சவால்களில் இது மிக பாரியதாகும். பீரங்கிகளின் பேரொலிகளுக்கு நடுவே அவர்கள் உணவு தண்ணீர், மருந்துக்காக போராட வேண்டியிருக்கிறது.

சுமார் இரண்டு லட்சம் மக்கள் தாம் பாதுகாப்பாக வாழலாம் என கருதும் இடத்திற்கு செல்லும் உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது.

புலிகள் தமது தற்கொலை குண்டுதாரிகள், தமது பீரங்கிகள், தமது விமானங்கள் போலவே இந்த மக்களையும் ஆயுதங்களாக பயன்படுத்துகிறார்கள். இந்த மக்களின் நாளாந்த மரணங்களை தமது இருப்புக்கான பிரச்சாரத்திற்கு உலகளாவிய அளவில் அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
இந்த மக்கள் மீது எந்தவித அனுதாபமும் இல்லாமல் பிரபாகரன் எமது தேசிய தலைவர், புலிகள்தான் தமிழர்களின் ஏகபிரதிநிதிகள், தமிழீழம்தான் எங்கள் ஒரே தாகம் என்று பிரச்சாரம் பண்ணுகிறார்கள்.

தமிழர்கள் வாழ்ந்தாலென்ன செத்தாலென்ன புலிகளின் கற்பனை ராச்சியம் அத்தனை பயங்கரவாத கட்டமைப்புக்களுடனும் இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்.
மறுபுறம் புலிகளின் பாசிசத்தை தோற்கடிப்பதில் அரசு கணிசமான தூரம் சென்றிருந்தாலும் மக்களை பாதுகாப்பதிலும் அவர்களுக்கு நம்பிக்கைதரும் விதமாக காரியங்கள் ஆற்றுவதற்கு வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கிறது.

முதலாவதாக பல்லாயிரக் கணக்கானவர்கள் ஊனமடைந்திருக்கிறார்கள். அவர்களுக்குரிய வைத்திய வசதிகள் அவர்களது மனநிலையை தெம்பூட்டும் நம்பிக்கைகளை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஊனமுற்றவர்கள் இந்த சமூகத்தில் மனிதர்களாக தன்னம்பிக்கையுடன் வாழ்வதற்கான அனைத்து கட்டமைப்புக்களும் உருவாக்கப்பட வேண்டும். ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகளை விட இது முன்னுரிமை பெறும் விடயமாகும். காயமடைந்தவர்களின் உற்றமும் சுற்றமும் இவர்களுக்கு அனுசரணையாக வைத்தியசாலைக்கு வந்து செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.

அவர்களின் துயரம் சாதாரணமானதல்ல. உற்ற சுற்றத்தை இழந்திருக்கிறார்கள். உயிருடன் இருக்கும் உறவுகளை பிரிந்திருக்கிறார்கள். அனைத்து சொத்துக்களையும், வீடு மனைகளையும் இழந்திருக்கிறார்கள். இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதைவிட மோசமான நிலையில்தான் அவர்கள் இருக்கிறார்கள்.

இவர்கள் எமது சமூகத்தின் செல்ல பிள்ளைகளாக பராமரிக்கப்பட வேண்டும். அரசியல் கட்சிகள், சமூக பிரக்ஞை கொண்ட அமைப்புக்கள் உலகளாவியளவில் வாழும் எமது உறவுகள் இவர்களுக்கு உதவும் சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்.

இதேபோல்தான் அகதி முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு அந்த வாழ்க்கை நிரந்தரம் என்று ஆகிவிடாமல் அவர்கள் சொந்த இடங்களுக்கு சென்று வாழ்வதற்கான ஏற்பாடுகள் இப்போதே ஆரம்பிக்கப்பட வேண்டும். ஒரு சமூகமாக வாழ்வதற்கான உரிமை அவர்களின் நடமாடும் சுதந்திரம், பிள்ளைகளின் கல்வி, தொழில் வேறு ஜீவாதார நடவடிக்கைகள் இங்கு முக்கியமானவை. சமூகத்தை முற்றுமுழுதாக பலவீனப்படுத்தும் விதமாக எழுந்து நிற்க முடியாத சூழ்நிலைகளுக்கு இட்டுச் செல்வதாக நடவடிக்கைகள் அமைந்து விட்டன. ஏற்கனவே புலி பாசிசம் தமிழ் சமூகத்தை கடந்த கால் நூற்றாண்டுகளாக பலவீனப்படுத்தி வந்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக நடைபிணங்களாக வாழும் நிலைக்கு இட்டுச் செல்ல முடியாது.

இந்த மக்களுக்கு உதவுவதில் ஜனநாயகம் கடைபிடிக்கப்பட வேண்டும். ஜனநாயக, சமூக அரசியல் சக்திகள் ஆர்வலர்கள் இந்த மக்களுக்கு உதவும் விதமாக சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். சர்வதேசமும், அரசும் உதவுவது ஒருபுறமிருக்க இது ஜனநாயக நாடொன்றில் இயல்பாகவே தொழிற்பட வேண்டியதாகும்.

உறவுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் மக்கள் இணைந்து வாழ ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

அவர்களின் நடமாடும் சுதந்திரம் சொந்த இருப்பிடங்களுக்கு செல்வதற்கான உரிமை என்பன உறுதிப்படுத்தப்படுவதும், பாதுகாக்கப்படுவதும் அவசியமாகிறது.

அவர்களை அந்நியர்கள் போல் சந்தேக பேர்வழிகள் போல் நடாத்த முடியாது.
இதேவேளை தமது பிராந்தியத்தில் தமிழர்கள் தாமே தமது அலுவல்களை பார்க்கிறார்கள் என்று திருப்திப்படுமளவிற்கு மனதளவில் உணர்வுகள் ஏற்படுமளவிற்கு அரசியல் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அவ்வாறே முஸ்லீம் மக்களுக்கும் மலையக மக்களுக்கும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இது பல்லினங்களின் தேசம் என்பது நடைமுறையில் ஸ்தாபிக்கப்பட வேண்டும். அவ்வாறு ஸ்தாபிக்கப்படுகையில் இங்கு எத்தகைய வன்முறைகளுக்கும் இடமிருக்கப் போவதில்லை.
இன்று வன்னியில் அகப்பட்டிருக்கும் மக்கள் இந் நாட்டின் மக்கள் என்ற உந்துதல் உணர்வுடன் காரியங்கள் ஆற்றப்பட வேண்டும். மற்றவர்கள் செய்யாத பரோபகாரத்தை நாம் செய்கிறோம் என வேறு நாடுகளில் நடக்கும் சம்பவங்களுடன் இதனை ஒப்பிட கூடாது. எமது மக்கள் எம்மில் ஒரு பகுதியினர் என்ற உணர்வுடன் இந்த மனிதப் பேரவலத்தை முடிவுக்குக் கொண்டுவர முயல வேண்டும்.


தி. ஸ்ரீதரன்

No comments:

Post a Comment