14 April 2009

புலிகள் மக்களை விடுவிக்க வேண்டும் அரசு யுத்த நிறுத்த கால அவகாசத்தை நீடிக்க வேண்டும்

இலங்கை அரசாங்கம் இரண்டு நாள் யுத்த நிறுத்தத்தை மேற்கொண்டும் புலிகள் அதற்கு சாதகமான முறையில் பதிலளிக்கவில்லை.

வன்னியில் புதுமாத்தளன் பகுதியிலுள்ள சுமார் இரண்டு லட்சம் மக்கள் மீது உண்மையான அக்கறை இருக்குமானால் மனித நேயம் இருக்குமானால் இவர்களில் ஒரு பகுதியினரையேனும் புலிகள் அரசு கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வர அனுமதித்து தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியிருக்க முடியும்.

ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை. வன்னி புதுமாத்தளில் சுமார் 17 ச.கி.மீ உட்பட்ட பகுதியில் பணயம் வைக்கப்பட்டிருக்கும் மக்களின் வாழ்வையும், மரணத்தையும் பிரச்சாரமாக்கி தமது இராணுவ அரசியல் நலன்களை (மக்களின் நலன் அல்ல) பாதுகாப்பதில் அல்லது தக்கவைப்பதிலேயே புலிகள் குறியாக இருக்கிறார்கள்.

சர்வதேச சமூகத்தினால் ஐ.நா, இந்தியா உட்பட அநேகமான நாடுகளால் வரவேற்கப்பட்ட இந்த கால அவகாசத்தை புலிகள் உதாசீனப்படுத்தியது அவர்களது உள் நோக்கம் என்ன என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளது. அதாவது வன்னியில் அகப்பட்டிருக்கும் மக்களின் தண்ணீர், உணவு, மருந்து தட்டுப்பாடும் அவர்களின் பட்டினி மரணமும் யுத்தத்தில் ஏற்படுகின்ற மரணங்களும் பிரபாகரனின் தலைமையிலான குழுவினரை பாதுகாப்பதற்கான கவசங்களாகவே புலி தலைமை கருதுகின்றது.

தவிர பல ஆயிரக்கணக்கான மக்களின் இறப்பு என்பது தமக்கு சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுத் தரும் எனவும் புலி தலைமை கருதுகின்றது.
புலிகள் மக்களை மனித கேடயங்களாக வைத்திருப்பது மாத்திரமல்லாமல் தப்பிச் செல்ல முனைபவர்களை சுடுகிறார்கள் என்பதை ஐ.நா, மற்றும் மனித உரிமை அமைப்புக்களும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

ஏற்கனவே இங்கு குறிப்பிட்டது போல இந்த மக்களை பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிப்பது தேசிய, சர்வதேசிய கடமை என்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்த வேண்டியிருக்கிறது.

காலதாமதம் என்பது பெருமளவு மக்களின் அநியாய உயிரிழப்பிற்கே வழிவகுக்கும். இந்த மக்கள் விடிவிக்கப்படுவதற்கான அனைத்து விதமான அழுத்தங்களும் புலிகளுக்கு கொடுக்கப்பட வேண்டும். அதேவேளை அரசாங்கத்தின் 48 மணிநேர யுத்த நிறுத்தத்தை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment