மனிதப்பேரவலம் யுத்த நிறுத்தம் ஜனநாயம் அரசியல் தீர்வு
ஏப்ரல் 12ம் திகதி நள்ளிரவு புதுவருட பிறப்புடன் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட தாக்குதல் தவிர்ப்பு நடவடிக்கை வன்னியில் பதினேழு ச.கி.மீ பரப்பளவினுள் அகப்பட்டிருக்கும் மக்களை மாபெரும் மனித பேரவலத்திலிருந்து, உயிராபத்திலிருந்து மீட்பதற்கான நடவடிக்கையின் முதல் அடிவைப்பு எனலாம்
உலகின் மானிட நெஞ்சங்களை, இதயமுள்ளவர்களை சற்று மன ஆறுதல் செய்கிறது. புலிகளால் பணயம் வைக்கப்பட்டிருக்கும் இம் மக்கள் சிறிதளவேனும் தம்மை ஆசுவாசிப்படுத்திக் கொள்ள வழிசமைத்திருக்கிறது.
நேற்றுவரை இந்த மக்களின் தலைவிதி ஊசலாடிக்கொண்டிருந்தது. இந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு தனது தரப்பில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட இந்த தற்காலிக யுத்த தவிர்ப்பு பாராட்டப்பட வேண்டியது.
இதுவொரு நம்பிக்கைதரும் ஆரம்பமாகும். ஆனால் இது நீடித்து நிலவ வேண்டும் என்பதே மானிடத்தின் பிரார்த்தனையாகும்.
இந்த இரண்டு லட்சம் மக்களையும் பாதுகாப்பது இலங்கை அரசினதும், சர்வதேசத்தினதும் தேசிய சர்வதேசிய கடமையாகும். பத்து வருடங்களுக்கு முன்னர் ருவாண்டாவில் டுட்சி இன மக்களுக்கு நேர்ந்த கதி இந்த மக்களுக்கு நேர்ந்து விடுமோ என்ற அச்சமும், பதைப்பும் நேற்றுவரை இருந்து வந்தது.
ஆனால் தமிழ்-சிங்கள புத்தாண்டு நாட்களில் இத்தகைய ஒரு மனிதாபிமான முயற்சி ஒரு மாபெரும் மனித பேரவலத்தை தவிர்க்கும் முயற்சி எடுக்கப்பட்டிருப்பதையிட்டு அதற்காக அயராது பாடுபட்டவர்களை நாம் சிரந்தாழ்ந்து வாழ்த்த வேண்டும்.
இந்தியா தொடக்கம் ஐரோப்பிய யூனியன், இங்கிலாந்து, அமெரிக்கா, சர்வதேச மனித உரிமை கண்காணிப்புக்குழு உள்ளிட்ட மனித உரிமை அமைப்புக்கள் ஐ.நா சபை வரை எடுத்துக் கொண்ட முயற்சிகளை நாம் இங்கு நன்றியறிதலுடன் நினைவுகூர வேண்டும்.
ஐ.நா வின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்கள் இது நல்லதொரு ஆரம்பம். இந்த யுத்த தவிர்ப்பு நீடித்து நிலவ வேண்டும் என்று விநயமாக வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் மில்லி பேண் அவர்களும் இரண்டு நாட்களின் பின்னர் இந்த யுத்த நிறுத்தம் கைவிடப்படக் கூடாது தொடரப்பட வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.
இந்தியாவின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் இந்தியாவின் முயற்சியிலேயே ஐ.நா சபை உள்ளிட்ட அமைப்புக்கள் மற்றும் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளும் இங்கு யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தின என்றும் தெரிவித்திருந்தார்.
புலிகள் ஒத்துழைத்தால் இந்த யுத்த நிறுத்தத்தை இன்னும் பல நாட்களுக்கு நீடிப்பதற்கு இலங்கை அரசாங்கத்தை ஒப்புக்கொள்ள செய்ய முடியும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் புலிகள் இந்த யுத்த நிறுத்தம் ஆரம்பித்த கையோடு ஒன்றுக்கொன்று முரண்பட்ட வகையில் தமது இணையத் தளங்களில் இந்த யுத்த நிறுத்தம் ஆரம்பித்ததன் பின்னர் மக்கள் கொல்லப்பட்டதாக பிரச்சாரம் செய்தார்கள். புலிகளின் ஒரு இணையம் முப்பதுக்கு மேற்பட்ட மக்கள் பல மணித்தியாலங்கள் நடந்த எறிகணை வீச்சில் கொல்லப்பட்டதாகவும், இன்னொரு இணையத்தில் 280 இற்கு மேறபட்ட மக்கள் கொல்லப்பட்டதாகவும் சமகாலத்தில் செய்தி வெளியிட்டார்கள்.
சாவு வியாபாரிகளான புலிகளும், புலிகளின் முகவர்களும் இந்த இரண்டு நாள் யுத்த தவிர்ப்பு கால அவகாசத்திலும் மக்கள் பெருமளவு சாக வேண்டும் (புலி தலைமையை தவிர) அது தமது பிரச்சாரத்திற்கு உலகளாவிய வசூலுக்கு அது உதவ வேண்டும் என்று நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு, இந்த சில மணி நேரங்களில் கூட அலைந்து திரிவதை அவதானிக்க முடிகிறது.
அவர்களின் வரலாற்றுத் துரோகத்தின் விளைவாக ஏற்கனவே அவர்கள் அடைந்துள்ள இராணுவ ரீதியான வீழ்ச்சியுடன் தற்போதைய தற்காலிக யுத்த தவிர்ப்பு என்பது அரசியல் ரீதியாக புலியிசத்தின் சவப்பெட்டியில் இறுதி ஆணி அடிப்பதாக அமைகிறது என்றால் அது மிகையல்ல.
இந்த யுத்த தவிர்ப்பு முயற்சி உலகளாவிய அளவில் அங்கீகரிக்கப்பட்டும் வரவேற்கப்பட்டுள்ள நிலையில் இது கபட அரசின் நாடகமென்றும் உலக நாடுகளை ஏமாற்றும் கண்துடைப்பு நடவடிக்கை என்றும் விசனப்பட்டிருக்கிறார்கள்.
இங்கு பிரச்சினை என்னவென்றால் இரண்டு லட்சம் மக்களை காப்பதற்கான ஒரு தருணத்திற்கு ஒத்துழைக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை மறுதலிப்;;;பது என்பது தாம் உலக சமூகத்தின் முன் அம்பலப்படுவதாக அமையும் என்பதே இப்போது புலிகளின் சங்கடமாகும்.
“இந்த யுத்த தவிர்ப்பு ஸ்ரீலங்கா அரசு விரும்புவது போல் அது இராணுவ நலன்களை பிரதிபலிப்பதாக இருக்கக் கூடாது மாறாக மனிதாபிமான நோக்கம் கொண்டதாகவும் தமிழரின் தேசிய இன பிரச்சினைக்கு நிரந்தரமாக தீர்வு தேடக்கூடிய அரசியல் நோக்கம் கொண்டதாகவும் அமைய வேண்டும்.”
“அதேவேளை அனைத்துலக அனுசரணையுடன் கூடிய ஒரு போர் நிறுத்தமே ஆக்கபூர்வமானதும், பயனள்ளதாகவும் இருக்குமென்று “
என புலிகள் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
எப்போதும் புலிகள் தமது இராணுவ வலிமை பற்றியே பிரலாபித்து வந்திருக்கிறார்கள். இப்போது அரசியல் உரிமைகள், மனிதாபிமானம் பற்றி பேசுவது எம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.
புலிகளின் வரலாற்றில் மனிதாபிமானம் என்ற சொல்லுக்கோ, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், ஜனநாயகம் என்ற பதங்களுக்கோ எந்த அர்த்தமும் இல்லை.
ஆனால் இப்போது இராணுவ, அரசியல் ரீதியில் பொருள் பொதிந்த ஒரு நிரந்தர போர்நிறுத்தம் தேவை என்கிறார்கள்.
இந்த வாக்கியம் கவனமாக ஆராயப்பட வேண்டும். அதாவது தமது ஏகபிரதிநிதித்துவ நப்பாசைகளையும், நாலு படையும், தற்கொலை குண்டுகளும் சகோதர அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களையும், தலைவர்களையும் கொல்லும் திறனும், சகோதர சமூகங்களின் மீது கொலை வெறி தாக்குதல்களையும் நடத்தும் தமது பழைய காலாவதியான கனவுகளுடன் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக தாம் பேச்சுவார்த்தைகளில் பங்குபற்ற வேண்டுமென்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதனை சர்வதேச சமூகம் ஏற்படுத்தித் தர வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்.
பாவம் அவர்கள். தங்களுக்கு என்ன நேர்ந்திருக்கிறது என்பது இன்னும் அவர்களுக்குப் புரியவில்லை.
முதலில் அவர்கள் மக்களை விடுவிக்கட்டும். அவர்கள் தாம் விரும்பும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கான அடிப்படை உரிமையை அங்கீகரிக்கட்டும்.
தம்மை தக்க வைப்பதற்காக இரண்டு லட்சம் மக்களை பணயமாக வைத்திருக்கும் அயோக்கியத்தனம் உலகில் வேறு எங்கும் நிகழாதது. முதலில் மக்களை விடுவிப்பது அதனை அவர்கள் செய்யட்டும்.
முடிந்தால் நிரந்தரமான வன்முறை கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி இடும் விதமாகவும் ஜனநாயக சூழலொன்றை ஏற்படுத்துவதற்காகவும், அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்காகவும், ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு வரட்டும்.
அவ்வாறு வரும் போது ஏகபிரதிநிதித்துவ அகங்காரங்களை களைந்து விட்டு வரட்டும்.
தமிழ் மக்களுக்கு மாறுபட்ட அரசியல் கருத்துக்களுடனான அரசியல் தலைமைத்துவங்கள் இருக்கிறது என்பதையும் கூட்டு தலைமைத்துவத்தையும் ஏற்றுக்கொள்ளட்டும்.
புலிகள் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமது முகவர் அமைப்பு, ஒட்டுமொத்த தமிழர்களும் புலிகளுக்காக உடன்கட்டை ஏற கடமைப்பட்டவர்கள் என்ற பத்தாம்பசலி தனத்திலிருந்து வெளியே வரட்டும்.
சகோதர சமூகங்களுக்கு எதிராக, சகோதர அரசியல் ஸ்தாபனங்களுக்கு எதிராக இழைத்த குற்றங்களுக்காக அவர்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கட்டும்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களின் படுகொலை தொடர்பாக சட்டத்தின் பிடியிலிருந்து தலைமறைவாக இருப்பவர்கள் அதனை எதிர்கொள்ளட்டும்.
இவற்றையெல்லாம் விட்டுவிட்டு பாசாங்காக வார்த்தை அலங்காரங்களுக்குள் புகுந்து கொண்டு சர்வதேச மாஃபியா பாணியை மிஞ்சிய செயற்பாடுகள் உள்ளுரிலும் சரி உலகளாவியளவிலும் சரி தமிழ் மக்களுக்கு பெரும் இன்னல்களையும், தீங்குகளையும் ஏற்படுத்துவதாகவே அமையும்.
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நேர்மையற்ற, வஞ்சகமான அணுகுமுறைகள் உலகளாவியளவில் தமிழ் மக்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
உள்ளுரில் தமிழர்களை கௌரவமாக, சுயமரியாதையுடன் புலிகள் வாழவிடவில்லை. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண கிடைத்த வாராது வந்துற்ற சந்தர்ப்பங்களையெல்லாம் அவர்கள் சீர்குலைத்தார்கள்.
இப்போது உலகளாவியளவில் புலம் பெயர் தமிழர்களின் வயிற்றில் நெருப்பை அள்ளிக் கொட்டும் வேலையை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.
உள்ளுரில் அவர்கள் பார்த்தீனியம் விஷச் செடிகள் போல் பரவவிட்ட வன்முறை கலாச்சாரம் பல்வேறு வடிவங்களில் பல்வேறு பிரகிருதிகளால் எட்டு வயது சிறுமியைக் கூட கொல்லும் அளவிற்கும், காணாமல் போதல், பிஸ்டல் குழு கொலைகள் போன்றன இவர்களது பாசறையில் வளர்ந்தவர்கள்தான் இவற்றை செய்கிறார்கள்.
இதேபோல் இன்று உலகளாவிய அளவிலும் வன்முறை பரவி வருகிறது. தமிழகத்தில் பழம் பெரும் காங்கிரஸ் கட்சியின் காரியாலயம் சத்தியமூர்த்தி பவன் தாக்கப்பட்டதில் புலிகளின் வன்முறை சாயல் பிரதிபலித்தது.
நோர்வேயிலுள்ள இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்டதில் அது மேலும் துலக்கமாகியிருக்கிறது.
லண்டனில் இந்திய தூதரகத்துக்கு முன்னால் அமைந்திருந்த நவ இந்தியாவின் சிற்பி ஜவஹர்லால் நேரு அவர்களின் உருவச்சிலை தகர்க்கப்பட்டதிலும்,
தற்போது சுவிஸ்லாந்திலுள்ள இந்திய தூதரகம் தாக்கப்பட்டிருக்கிறது. இந்தியா உலகளாவியளவில் மரியாதைக்கும் செல்வாக்கிற்கும் உரிய நாடு. அகிம்சை போராட்டத்தின் பிறப்பிடம். உலக மக்கள் மத்தியில் இந்தியா மீது மிகுந்த மரியாதை உண்டு. இந்திய மக்களின் மனங்கவர்ந்த தலைவரான சோனியாகாந்தி அவர்களை இழிவுபடுத்தும் விதமாக குரூரமான சித்திரங்களையும், உலகளாவியளவில் பிரச்சாரம் செய்கிறார்கள். கொலை அச்சுறுத்தல் விடுகிறார்கள்.
இவை ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகளின் மக்கள் மத்தியில் மிகுந்த சினத்தையும், அருவருப்பையும், விசனத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்தும்.
இதைவிட புலம் பெயர்ந்த தளத்தில் வசூல் மிரட்டல்கள், வாள் வீச்சுக்கள், புலம் பெயர்ந்த தமிழர்களின் பல்வேறு ஜனநாயக நடவடிக்கைகள் மீதான அச்சுறுத்தல் என பல நூற்றுக்கணக்கான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இப்போதும் நிகழ்கின்றன.
புலம் பெயர் தமிழ் மக்களின் இளைய தலைமுறையினர் மத்தியில் வன்முறை உணர்வுகள் விதைக்கப்படுகின்றன.
ஐரோப்பியர்களோ, வட அமெரிக்கர்களோ தமது ஜனநாயக வாழ்க்கை முறை மீது மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தலாகவே இவற்றை கருதுவர். புலி பாசிசத்தை தூக்கிப் பிடிப்பது என்பது புலம் பெயர் தமிழர்களுக்கும் அவர்களின் எதிர்கால சந்ததிக்கு விபரீதங்களை ஏற்படுத்துவதாகவே அமையும்.
1990ம் ஆண்டு தோழர் பத்மநாபா உட்பட 13 தோழர்கள் சென்னை மண்ணில் படுகொலை செய்யப்பட்ட நிகழ்ச்சி, பாரதத்தின் பெருமை மிகு இளம் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களின் படுகொலையும் கடந்துவந்த 18 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய மக்கள் மத்தியிலும் தமிழக மக்கள் மத்தியிலும் மிகுந்த எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது.
அதேபோல் 15 ஆண்டுகளுக்கு முன் பிரான்சில் ஜனநாகவாதியும் ஆவணச்சேகரிபபில் ஈடுபட்டிருந்தவருமான சபாலிங்கம் அவர்களின் படுகொலையையும் அங்குள்ள ஜனநாகவாதிகள் கண்ணியமான மனிதவாழ்வின் மீது நம்பிக்கை கொண்டோர் எவரும் மறந்திருக்கமாட்டார்கள்.
புலி பாசிசத்தின் உலகளாவிய வன்முறை அரசியல் என்பது தமிழர்களுக்கு உலகளாவிய அளவில் நண்பர்கள் இல்லாத சமூகமாக மாற்றிவிடும். இது இப்போது தெரியத் தொடங்கியுள்ளது. இதை ஒரு எச்சரிக்கையாகவே கூறிக்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஜனநாயகம், மனித உரிமை பற்றிய பிரக்ஞை உள்ள நாடுகளில் ஈழத் தமிழர்கள் ஒரு சுமை தமது வாழ்வியல் நெறிமுறைகளுக்கு அச்சுறுத்தல் என்ற நிலை ஏற்படும் முன்னர் தெரிந்தோ தெரியாமலோ புலிகளை ஆதரிக்கும் மக்கள் புலிகளைத் துறந்து விடுவதே அவர்களது அவர்களின் எதிர்கால சந்ததிக்கும் நல்லது.
புலிகள் தம்மை மாற்றிக் கொண்டால் அதுவே பெரிய விடயம். ஆனால் ஒரு பாசிச இயக்கம் தன்மை மாற்றிக்கொள்ளவதில்லை என்பதுதான் வரலாறு.
புலிகளின் பாசிசம் தமிழ் மக்களின் பிரச்சினையின் ஒரு பகுதியே.
ஆனால் 60 வருடங்களாக தமிழ் மக்களின் மனதில் காயங்கள் இருக்கின்றன. பௌத்த சிங்கள பேரினவாதம் அதுவும் ஒருவித பாசிச மனோநிலைதான். இந்த நாட்டின் சிறுபான்மை மக்களின் உரிமைகளை மறுதலித்து வந்திருக்கிறது. இந்த நாடு பௌத்த சிங்களவர்களுக்கானது ஏனைய சிறுபான்மை இனத்தவர்கள் இந்த பௌத்த சிங்கள மேலாதிக்கத்தை அணுசரித்துத்தான் வாழ வேண்டும் என்ற கருத்தை பல்வேறு துறைகளிலும் நிறுவனமயப்படுத்தி வந்திருக்கிறது. தமிழர்களோ, முஸ்லீம்களோ, மலையகத் தமிழர்களோ தமது அலுவல்களை தாமே பார்த்துக் கொள்வதற்கான அற்ப சொற்ப கட்டமைப்புக்களை கூட இந்த பௌத்த சிங்கள மேலாண்மை சிந்தனை ஜீரணித்துக் கொள்வதில்லை.
தமிழ் மக்களில் பல்லாயிரக் கணக்கானோர் உயிரிழந்து உடைமைகளை இழந்து குடும்பத் தலைவர்களை இழந்து விதவைகளாகி ஊனமுற்ற நிலையிலும் கூட தமிழர்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்று யாரும் கூறினால் வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கிறார்கள்.
புலி பாசிசம் கடந்த 30 ஆண்டுகளில் இந்த பேரினவாதம் வலுவடைவதற்கு உதவி செய்தருக்கிறதே தவிர வேறெதையும் ஆக்கப+ர்வமாகப் பிரசவிக்கவில்லை. இந்த இருவகைப்பட்ட அதிதீவிரவாத போக்குகளும் ஒன்றையொன்று போசித்து வந்திருக்கின்றன.
அண்மையில் இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் தமிழ் பேசும் மக்களுக்கென இலங்கையில் இரண்டோ மூன்று மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டுமென்று தெரிவித்திருந்தார்.
அவர் தமிழர்களுக்கு தனிநாட்டை பரிந்துரைக்கிறார் என்று இங்கு ஜே.வி.பி தனது இணைய தளத்தில் தலைப்பு செய்தி கொடுத்திருந்தது.
இந்த நாட்டில் சிறுபான்மை சமூகங்கள் மீது திணிப்பாக அல்லாமல் ஆக்கிரமிப்பாக அல்லாமல் அவர்கள் இந்த நாட்டின் சிங்கள மக்களுக்கு நிகர் சமானமாக பிரஜைகள் என ஏற்றுக்கொள்ளாதவரை அதற்குரிய கட்டமைப்புக்கள் உருவாகாத வரை இந்த நாடு உண்மையான இலங்கையர் தேசமாக பரிணமிக்காது.
சமகால நிலைமைகளை ஓட்டி இந்து பத்திரிகை எழுதிய ஆசிரிய தலையங்கத்தில் சமஷ்டி முறையை அண்மித்ததான ஒரு தீர்வு கிட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தது. இங்கு ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவும் ஒரு நிலையான, நிரந்தரமான ஆக்கபூர்வமான அரசியல் தீர்வுகளை இந்த நாட்டின் பல்வேறு சமூகங்கள் தொடர்பில் மேற்கொள்வதற்காகவே அமைக்கப்பட்டது. அதன் நோக்கங்கள் எய்தப்பட வேண்டும்.
தி. ஸ்ரீதரன்
No comments:
Post a Comment