சரணடையும் புலிகளுக்கு புனர்வாழ்வு - ஜனாதிபதி
புலிகள் சரணடையும் பட்சத்தில் அவர்களுக்குப் புனர்வாழ்வளித்து நாட்டுக்குப் பலன் தரக்கூடிய பிரஜைகளாக்குவதே தனது நோக்கம். இது நடை முறைச் சாத்தியமான காரியம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரிமாளிகையில் இடம் பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்கத்தின் மேல் மாகாணப் பட்டதாரிகள் மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
பிரபாகரனுக்கு எதிராகப் பாதுகாப்பு வலயத்திலிருந்து மக்கள் வெளியேறி வரத் தொடங்கி விட்டதால் எஞ்சியுள்ள புலிகள் சரணடைய வேண்டும். இல்லாவிட்டால் ஒன்றில் சண்டையிட்டு மடிய வேண்டும். அல்லது சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
யுத்த நிறுத்தம் பற்றியோ தாக்குதல் இடைநிறுத்தம் குறித்தோ எம்மோடு பேசுவதில் பலனில்லை. நாம் ஏற்கனவே 72 மணிநேர கால அவகாசம் வழங்கினோம். அதற்குப் பிறகு 42 மணிநேர அவகாசம் வழங்கினோம். அவர்களுக்கு (புலிகளுக்கு) போதியளவு கால அவகாசம் வழங்கியுள்ளோம். நீங்கள், புலிகளின் தலைவருக்கு கூறி ஒரு மணி நேர கால அவகாசம் அல்ல அரைமணி நேர கால அவகாசம் பெற்றுக்கொடுங்கள். புலிகளின் பிடியில் சிக்குண்டுள்ள அப்பாவி மக்கள் பாதுகாப்பான பிரதேசங்களுக்கு வந்துசேர அக்கால அவகாசமே போதும். ஏன்றார்
புலிகளால் பாதுகாப்பு வலயத்தினுள் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளவர்களில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி சிவிலியன்கள் கழுத்தளவு தண்ணீரில் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் நேற்று நண்பகலாகும் போது பாதுகாப்புப் பிரதேசங்களுக்கு வந்து சேர்ந்தனர். இவர்களோடு தற்கொலை புலிகளும் வந்து தங்களை வெடிக்க வைத்து அப்பாவி மக்களைப் படுகொலை செய்தனர்; காயப்படுத்தினர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஹெலிகொப்டர்கள் மூலம் ஆஸ்பத்திரிகளுக்கு எடுத்து வரப்பட்டுள்ளனர். பிரபாகரனுக்கு எதிராக மக்கள் பாதுகாப்பு பிரதேசங்களை நோக்கி வரத் தொடங்கி விட்டனர். உலக வரலாற்றில் புலிகளால் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள பாரியளவு அப்பாவி மக்களை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை எமது படையினர் வெற்றிகரமாக முன்னெடுக்கின்றனர் என்றார்.
No comments:
Post a Comment