உள்ளுராட்சி திருத்தச் சட்டமூலத்தினை நிராகரிக்க கோரும் பிரேரணைமட்டக்களப்பு மாநகர சபை ஏகமனதாக தீர்மானம்
தலைமையுரை:- மதிப்புக்குரிய முதல்வர் சிவகீத்தா பிரபாகரன் அவர்கள் உரையாற்றும் போது கௌரவ பிரதி முதல்வர் அவர்களே, கௌரவ உறுப்பினர்களே அன்பின் உத்தியோகத்தர்களே, உங்கள் அனைவருக்கும் எனது இனிய காலை வணங்கங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் மலர்ந்திருக்கும் “விரோதி” புத்தாண்டு அனைவரது வாழ்விலும் சாந்தியையும், சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வர வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்து எனது இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைய பொதுக் கூட்டத்திற்கு தவிர்க்க முடியாத காரணத்தினால் தன்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்பதை ஆணையாளர் எனக்கு அறியத் தந்துள்ளார் என்பதை சபைக்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.
இன்றைய எமது அமர்வின் நிகழ்ச்சி நிரலில் முக்கியமான ஓர் அம்சம் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளது. அதன் அவசியம் கருதி அவ்விடயத்தினை பிற விடயப் பகுதியினுள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளாது எமது கடந்த கூட்டங்களின் கூட்டறிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படுவதற்கு முன் அதனை நாம் சபையின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வது பொருத்தம் என்று கருதுகின்றேன். இது தொடர்பில் எனது கருத்துக்களை இச் சபையின் மேலான கவனத்திற்கு முன் வைக்கின்றேன்.
இவ்விடயம் யாதெனில் எமது கௌரவ உறுப்பினர் நாகூர்கான் றம்ழான் அவர்களால் “உள்ளுராட்சி திருத்தச் சட்டமூலத்தினை நிராகரிக்க கோரும் பிரேரணை” என்ற தலைப்பில் முன் வைக்கப்பட்டிருக்கும் பிரேரணையாகும். இன்று இவ் விடயமானது எமது சிறுபான்மை சமூகத்தில் அரசியலில் பாரிய தாக்கம் செலுத்தும் காரணியாக அமைந்துள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவினால் உள்ளுராட்சி அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) என்ற தலைப்பில் நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக இந்த சட்டமூலம் முன் வைக்கப்பட்டது. அதன் பின்னர் இந்த சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் முடிவினை அறிவித்த உயர் நீதிமன்றம் நாடாளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் இருந்து இதனை உடனடியாக நீக்குமாறும் தேவையாயின் மாகாண சபைகளின் அனுமதியை பெற்று பின்பு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் தெரிவித்திருந்தது. இதேவேளை இந்த சட்டமூலம் அனைத்து மாகாண சபைகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டால் மட்டுமே நாடாளுமன்றத்திற்கு கொண்டு வர முடியும் என்றும் ஒரு மாகாணசபை நிராகரி;த்தால்கூட இதனை நிறைவேற்ற முடியாதென்பதுமே நியதியாகும். இன்று இந்த நிர்ணயிக்கும் சக்தியாக எமது கிழக்கு மகாணசபை விளங்குகின்றது.
குறிப்பிட்ட இந்த உள்ளுராட்சி அதகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்ட மூலமானது அமுல்படுத்தப்படுமாயின் சிறுபான்மை சமூகம் பின்வரும் பாதிப்புக்களை எதிர்நோக்க வேண்டிவரும் என் அரசியல் ஆய்வாளர்கள் ஆணித்தரமாக கருத்தைத் தெரிவித்தனர்.
1. இந்தத் திருத்தச் சட்டத்தின் கீழ் ஒரு பிரதேச சபைத் தேர்தல் நடாத்தப்படுமாயின் 70 சத வீதமான உறுப்பினர்கள வட்டார ரீதியாக அதாவது தொகுதி வாரியாகவும் 30 சத வீதமான மக்கள் விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்யப்படுவர். இவ்வாறான முறையில் நடாத்தப்படும் உள்ளுராட்சி தேர்தலில் நிச்சயமாக சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவம் குறைவடையும்.
2. இரண்டாவது வட்டார எல்லைகள் தொடர்பான திருத்தம் மற்றும் புதிய வட்டார எல்லைகளை தீர்மானிக்கும் பொறுப்புக்கள் என்பவற்றை அமைச்சர் ஒருவருக்கே இந்தத் தேர்தல் திருத்தச் சட்டத்தின் மூலம் வழங்குகின்றது. இதற்கு அமைய வட்டார எல்லைகளைத் தீர்மானிக்கும் பூரண அதிகாரம் அந்த அமைச்சருக்கு வழங்கப்படும். இவ்வாறு மேற்படி தீர்மானத்தை மேற்கொள்ள நியமிக்கப்படும் அமைச்சர் ஒரு கட்சியை சேர்ந்தவராகவே இருப்பார். இப் பொறுப்பானது பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஒரு அமைச்சருக்கே வழங்கப்படும் என்றும் அவர் எவ்வளவு தூரம் சிறுபான்மை மக்களின் நலன் பாதிக்காதவாறு வட்டார எல்லைகளை மீளமைப்பார் என்ற சந்தேகம் வெளியிடப்படுகின்றது. அதாவது தமிழர் அல்லது முஸ்லீம்கள வாழக்கூடிய ஒரு சிறு பிரதேசத்தினை ஒட்டியதாவே சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசம் ஒன்றில் வட்டார எல்லைகள் மீளமைக்கும் வகையில் அவை பல பிரிவுகளாக பரிக்கப்பட்டு (உதாரணமாக வட்டாரம்-1, வட்டாரம்-2,வட்டாரம்-3) அவற்றின் சில வட்டாரங்கள் குறிப்பிட்ட தமிழ் அல்லது முஸ்லீம் பிரதேசத்துடன் இணைக்கப்பட்டால் அங்கு சிறுபான்மை இன மக்களின் பெரும்பான்மை பலம் இழக்கப்படுவது தவிர்க்க முடியாது போகும். இதன் வாயிலாக சிறுபான்மை மக்களின் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதித்துவத்தின் அதிகரித்த உண்ணிக்கை இல்லாதொழிக்கப்படும். எல்லை நிர்ணய சபை ஒன்றினை அமைத்து அதன் ஊடாக பொது மக்களின் ஆலோசனைகள் பெறப்பட்டு மக்களின் பங்களிப்புடன் எல்லைகள் தீர்மானிக்கப்படும் பாரம்பரியம் இச் சட்டமூலத்தின் பறிக்கப்படுகின்றது.
3. மூன்றாவது பாதிப்பு யாதெனில் முன்னாள் அமைச்சர் மர்ஹ_ம் எம்.எச்.எம் அஷ்ரப் ஜனாதிபதி பிரேமதாசாவிடம் வாதாடி நீக்கிக் கொண்ட 12.5 வீத வெட்டுப் புள்ளியும் இந்த உள்ளுர் அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்ட மூலத்தினால்;; மீண்டும் சேர்க்கப்படுகின்றது.
மேற்கூறப்பட்ட மூன்றும் சிறுபான்மை சமூகத்தின் அரசியலி;ல் எதிர் மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் காரணிகளாக அரசியல்அவதானிகளால் இனம் காணப்பட்டுள்ளன. இந்த சட்டமூலம் அமுல்படுத்தப்படுமாயின் இனங்களுக்கிடையே நிலவும் பரஸ்பர புரிந்துணர்வையும் ஒற்றுமையையும் குழி தோண்டி புதைக்கப்படும் என்று பலராலும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
நாளை கிழக்கு மாகாணசபை இந்த சட்டமூலம் தொடர்பில் என்ன தீர்மானத்தை மேற்கொள்ள போகின்றது என்று முழு இலங்கையுமே ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. சிறந்த முதலமைச்சரையும், சிறந்த உறுப்பினர்களையும் கொண்டுள்ள எமது கிழக்கு மாகாண சகை விவேகமான முடிவினை எடுப்பார்கள் என்பது பலரதும் திட நம்பிக்கையாகும். இத் தருணத்தில் எமது தமிழ் பேசும் சமூகத்துடன் தொடர்புபட்ட ஒவ்வொரு விடயத்திலும் கட்சி அரசியலுக்கு அப்பால் நின்று குரல் கொடுத்தும் செயற்பட்டு வரும் எமது இந்த மேலான மாநகர சபையானது இவ்விடயம் தொடர்பில் விரிவாக பரிசீலித்து ஆழமாக சிந்தித்து எமது சிறுபான்மை மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு குந்தகம் விளைவிக்காதவாறு ஒரு சிறந்த விவேகமான முடிவினை எடுக்க வேண்டிய கடமைபாட்டில் உள்ளது. தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளாக அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மேலான சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நாம் நிச்சயமாக இவ் விடயம் தொடர்பில் அவர்களது நலன் பாதிக்காத வகையில் ஒரு தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பில் உள்ளோம் என்பதையும் நாம் இன்று இது தொடர்பில் எடுக்கும் தீர்மானம் நாம் மறைந்த பின்னும் சரி, எமது ஆட்சிக்காலத்தின் பின்பும் சரி எமது மக்களின் அரசியல் உரிமைக்கும் அபிலாசைகளுக்கும் விட்டுச் செல்லும் படிக்கல்லாக இருக்க வேண்டுமே அன்றி இருண்ட பக்கங்களைக் கொண்ட வரலாற்று வடுவாக இருக்கக் கூடாது என்பதையும் இந்த கௌரவமான சபையின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். இந்த சபையானது ஓர் விவேகமான தீர்மானத்தை மேற்கொள்ளும் என்ற பூரண நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது.
4. கௌரவ நாகூர்கான் றம்ழான் மாநகரசபை உறுப்பினர் அவர்களின் பிரேரணை மேற்படி சபையில் அவர்களால் வாசிக்கப்பட்டது.
உள்ளுராட்சி திருத்தச் சட்ட மூலத்தினை நிராகரிக்க கோரும் பிரேரணை
16-04-2009 ஆம் திகதி இடம்பெறும் சபை கூட்டத்தின் போது இப் பிரேரணையை முன் வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு அன்பாக கேட்டுக் கொள்கின்றேன்.
உள்ளுராட்சி அதிகார சபைகள் (விஷேட ஏற்பாடுகள்) திருத்தச்சட்ட மூலத்தினை அரசாங்கம் நிறைவேற்றுவதற்காக கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரத்தினை பெற்றுக்கொள்ளும் பொருட்டு எதிர்வரும் 17-04-2009 ஆம் திகதி இ.டம் பெறவிருக்கும் கிழக்கு மாகாண சபையின் அமர்வின் போது இவ்விடயம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட ஏற்பாடாகி இருக்கிறது. குறித்த திருத்தச் சட்ட மூலம் சிறுபான்மையினர்களுக்கு ஏற்படுத்தப்பட போகும் பாதிப்புக்களை கவனத்திற்கொண்டு கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் அனைவரும் ஆளும் தரப்பு எதிர்தரப்பு என்ற வேறுபாட்டிற்கு அப்பால் திருத்தச் சட்ட மூலத்தினை நிராகரிக்க வேண்டும்.
உள்ளுராட்சி மாற்றங்களை கட்டுப்படுத்துகின்ற சகல அதிகாரங்களும் 100 வீதம் மாகாண சபைக்கு அதிகாரப் பகிர்வின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரமாக இருக்கின்ற இன்றைய நிலையை மாற்றியமைத்து எதிர்காலத்தில் உள்ளுராட்சி மாற்றங்களை செய்கின்ற அனைத்து அரசியல் அதிகாரங்களையும் மத்திய அரசாங்கத்தின் கீழ் அல்லது அமைச்சரின் கீழ் கொண்டு வருவதற்காக அரசு மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை சிறுபான்மையினரின் அரசியல் அதிகாரங்களை திட்டமிட்டு பறிக்கின்ற செயற்பாடாகும்.
இச் சட்டம் மூலம் முன்னைய வட்டாரத் தேர்தல் முறையை புதுப்பிக்கின்ற வகையில் அமைந்துள்ளதால் சிங்கள பகுதிகளில் சிறுபான்மையிராக வசிக்கும் தமிழ், முஸ்லீம் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் முற்றுமுழுதாக இல்லாமல் போகும் அல்லது வெகுவாக குறைந்து விடும் அபாயம் ஏற்படும் தெற்கில் சிறுபான்மையாக வாழுகின்ற தமிழ் முஸ்லீம் மக்களின் அரசியல் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கட்டாயமாக கடமையும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையாக வாழுகின்ற தமிழ் முஸ்லீம் மக்களாகிய நாம் இச் சட்ட மூலத்தினை நிராகரிப்பதன்; மூலமே தங்கியிருக்கின்றது. இந்த நடவடிக்கை மூலமே தெற்கில் உள்ள எமது சிறுபான்மை சகோதரர்களின் அரசியல் உரிமைகளை பாதுகாக்க முடியும்.
மற்றும் இச்சட்டமூலம் உள்ளுராட்சி வட்டாரங்களில் எல்லைகளைத் தீர்மானிக்கின்ற அல்லது வரையறுக்கின்ற முழு அதிகாரங்களும் அமைச்சின் கீழ் கொண்டு வரப்டுகின்றது. சிறுபான்மையினருக்கு பாரிய அளவிலாக பாதிப்பும் அபாயமும் எதிர்காலத்தில் காத்திருக்கின்றது. இதற்கு கடந்த கால வரலாறுகள் சான்று பயில்கின்றது. உதாரணமாக மகோயா, கிராந்துருக்கோட்டை, பதியத்தலாவ போன்ற பகுதிகள் அம்பாறை மாவட்டத்துடன் இணைத்து அம்பாறை மாவட்ட தமிழ் முஸ்லீம்களை சிறுபான்மையாக மாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையாகும்.
அது மாத்திரமின்றி தேர்தல் வாக்களிப்பில் கடந்த காலத்தில் நடைமுறையிலிருந்த 12.5 வீதம் வெட்டுப்புள்ளியினைக் கொண்டு எமது சிறுபான்மையினரின் அரசியல் அதிகாரங்களை மட்டுப்படுத்தியிருந்த போதும் எமது ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவரும் மாமனிதருமான மர்ஹ_ம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா அவர்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் 12.5 வீதமாக இருந்த வெட்டுப்புள்ள வீதத்தினை 5 வீதமாக குறைத்து சிறுபான்மையினரின் அரசியல் அந்தஸ்த்தினை ஸ்திரப்படுத்தினார். அவ்வாறு பெறப்பட்ட சிறுபான்மையினரின் அரசியல் அதிகாரங்களையும் அரசு இன்று திட்டமிட்டு பறித்தெடுப்பதாக மேற்கொள்ளும் இந்த சட்ட மூலத்தினை சிறுபான்மையிராகிய நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
யுத்தம் ஓய்ந்து சமாதானத்தின் மூலம் சிறுபான்மையினர் தங்களது பிரதேசங்களை தாங்களே ஆளும் ஒரு அரசியல் அதிகாரத்தினை பெரும்பான்மை சமூகம் வழங்கும் அல்லது முன் வைக்கும் என சிறுபான்மை சமூகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இத் தருணத்தில் இருக்கின்றதாக கூறப்படும் ஒரு சில அரசியல் அதிகாரங்களையும் தட்டிப்பறிக்கின்ற அல்லது இல்லாதொழிக்கின்ற செயற்பாடாகவே இத் திருத்தச் சட்ட மூலத்தினை நாம் நோக்க வேண்டியுள்ளது என்பதனை இச் சபைக்கு சுட்டிக்காட்டுவதோடு 13வது அரசியல் திருத்தச் சட்டத்தின் மூல் மாகாண சபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை கூட இன்னும் முழுமையாக மாகாண சபைக்கு வழங்காமல் மத்திய அரசு தனது அதிகார ஆளுகைக்குள் வைத்துக் கொண்டு கிழக்கில் மத்திய அரசின் ஆதிக்கமே முழுமையாக செயற்படுத்தப்படுகின்ற தற்போதைய சூழ்நிiலையில் மாகாண சபைக்கு இன்னும் அதன் அதிகாரங்களை மத்திய அரசிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கு முடியாமல் கிழக்கு மாகாண அமைச்சர்களும், உறுப்பினர்களும் பல்வேறு பத்திரிகை அறிக்கைகளையும் விடுவதோடு சொல்லிக்கொண்டும் இருப்பதை நாம் அவதானிக்க முடிகின்றது. இந்த நிலையில் இந்தத் திருத்தச் சட்ட மூலத்தினை சிறுபான்மையினராகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிராகரிக்க வேண்டும் அத்தோடு எதிர்வரும் 14-04-2009 ஆம் திகதி இடம் பெறவிருக்கும் மாகாணசபை அமர்வின் போது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் குறித்த திருத்தச் சட்ட மூலத்தினை நிராகரிக்கக் கோரி எமது சபையினால் தீhமானமொன்றினை ஏகமனதாக நிறைவேற்றி மாகாண சபைக்கு அனுப்பி வைக்க வேண்டுமென இச் சபையில் ஒரு பிரேரணையாக இதனை நான் முன் மொழிகின்றேன்.
1. கௌரவ பெனடிக்ற் தனபாலசிங்கம் அவர்கள் சபையோர் அனைவருக்கும் தமது காலை வணக்கத்தையும், புதுவருட வாழ்த்துக்களையும் தெரிவித்து தம்;மை சபைக்கு அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் தொடர்ந்து உரையாற்றும் போது கௌரவ நாகூர்கான் றம்ழான் அவர்களால் கொண்டுவரப்பட்ட பிரேரணையானது உள்ளுராட்சி திருத்தச் சட்ட மூலத்தை எதிர்த்துக் கொண்டுவரப்பட்ட பிரேரரணயாகும்.. இந்தச் சட்ட மூலத்தின் மூலம் ஏற்கனவே கௌரவ ஜனாதிபதி பிரேமதாசா அவர்களால் கொண்டுவரப்பட்ட வெட்டுப்புள்ளி 12.5 வீதம் இதன் மூலம் இல்லாதொழிக்கப்படுகின்றது. சிறுபான்மை கட்சிகளின் கோரிக்கைகளும், வேண்டுகோள்களும் முன்னாள் அமைச்சர் கௌரவ அஷ்ரப் அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. இந்த திருத்தச் சட்ட மூலம் உள்ளுராட்சி அமைச்சரினால் முன் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பாக கௌரவ முதல்வர் அவர்கள் கூறியது போல சகல மாகாண சபைகளாலும் அங்கீகரித்தால்தான் இதனை நிறைவேற்றலாம், ஒரு சபை எதிர்த்தாலும் இதனை நிறைவேற்ற முடியாது. ஏனைய மாகாண சபைகள் ஏற்றுக்கொண்டாலும் கிழக்கு மாகாணசபை ஏற்றுக்கொள்ளக் கூடாது. மேற்கிலும் தெற்கிலும், மலையகத்திலும் தமிழ், முஸ்லீம் மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் துண்டு துண்டாக பிரிந்து வாழ்கின்றனர். இந்த சட்ட மூலத்தின் படி எதிர்காலத்தில் இவர்களின் பிரதிநிதித்துவம் பறிபோகலாம் நாம் தமிழ் இனமாக இருந்தாலும் முஸ்லீம் இனமாக இருந்தாலும் எமது பிரதிநிதித்துவத்தை விட்டுக்கொடுக்க முடியாது. எனவே ஏப்ரல் 17ம் தகதி கிழக்கு மாகாண சபைகள் கொண்டுவரப்படும் இந்த சட்ட மூலம் தொடர்பான பிரேரணை மாகாணசபைகள் மட்டத்தில் தோற்கடிக்கப்பட்டால் எமது பிரதிநிதித்துவம் பறிபோகும் எனவே இந்தப் பிரேரணையினை ஆதரித்து வழி மொழிவதுடன் கட்சி பேதமின்றி அனைத்து உறுப்பினர்களும் இந்தப் பிரேரணையினை ஆதரிப்பதோடு உள்ளுராட்சி தீருத்தச் சட்ட மூலத்தினை கிழக்கு மாகாணசபை எதிர்த்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டு தமது உரையினை நிறைவு செய்தார்.
2. கௌரவ கந்தையா அருமைலிங்கம் அவர்கள் சபையோருக்கு தமது வணக்கத்தினை தெரிவித்து தம்மை அறிமுகம் செய்து உரையாற்றும் போது கௌரவ என். கே.றம்ழான் அவர்களின் பிரேரணை தொடர்பில் ஒரு சில கருத்துக்களை தெரிவிக்க விரும்புகின்றேன். இந்த பிரேரணையில் உள்ள விடயங்கள் தொடர்பாக சில கருத்துக்களை கௌரவ உறுப்பினர் தனபாலசிங்கம் அவர்கள் தெரிவித்துள்ளார். இலங்கை-இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டு வடக்கு கிழக்கு மாகாணசபை ஏற்படுத்தப்பட்டது. அதில் நானும் அங்கத்தவராக இருந்தேன். அப்போது அரசியல் யாப்பில் 13வது திருத்தச் சட்டத்தில் அமுல்படுத்துமாறு மாகாணசபை மூலம் தீர்மானம் மேற்கொண்டும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. தற்போது இந்தச் சட்ட மூலத்தை நிறைவேற்றுவதால் எமது வடக்கு கிழக்கு மாகாண சபை எமது சிறுபான்மை மக்களின் அக்கறை காட்டும் ஒரு சபையாக இருக்குமானால் இந்த உள்ளுராட்சி சட்டமூலத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும். எனவே மேலான இந்த சபையில் இதனை ஒரு தீர்மானமாக ஏற்றுக் கொண்டு கிழக்கு மாகாணசபை நிர்வாகத்திற்கு இதனை அனுப்புவதன் மூலம் சிறுபான்மையின மக்களுக்கு நன்றியுடையவர்களாக நாம் இருப்போம். எனவே இந்தப் பிரேரணையினை முன்வைத்த கௌரவ நாகூர்கான் றம்ழான் அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
3. கௌரவ வெலிங்டன் ராஜேந்திர பிரசாத் அவர்கள் அனைவருக்கும் வணக்கத்தை தெரிவித்து தம்மை சபைக்கு அறிமுகம் செய்து உரையாற்றும் போது அரசாங்கத்தினால் கொண்டு வரப்படவுள்ள இச் சட்டமூலம் தொடர்பாக முன் வைக்கப்பட்டுள்ள பிரேரணை சம்பந்தமாக நாம் அரசாங்க கட்சி என்றாலும் இதனை ஒட்டுமொத்தமாக எதிர்க்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். காரணம் இந்த விடயம் சிறுபான்மை மக்களின் அபிலாசைகள் சார்ந்த விடயம் இதனை நாம் எதிர்க்க வேண்டிய ஒரு சூழ்நிலையில் உள்ளோம். எனவே இந்த பிரேரணையினை நான் ஆதரிக்கின்றேன் எனத் தெரிவித்தார்.
4. கௌரவ மகேந்திரமூர்த்தி சதேந்திரன் அவர்கள் அனைவருக்கும் தமது வணக்கத்தை தெரிவித்து தம்மை சபைக்கு அறிமுகம் செய்து உரையாற்றும் போது அரசினால் கொண்டுவரப்பட்ட உள்ளுராட்சி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் தொடர்பாக எனக்கு முன்பு பேசியவர்கள் பல கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இதில் சில விடயங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியனவாக இருந்தாலும், சில விடயங்கள் சிறுபான்மை இன மக்களின் நலனுக்காக குறிப்பாக 15இ, 22இ, 06 இ பக்கங்களில் கூறப்பட்ட விடயங்களில் பாதிப்புக்கள் உள்ளன. இவை மாகாண சபையால் தீர்மானிக்க வேண்டிய விடயங்கள் இதனை மத்திய அரசு தீர்மானித்துள்ளது. எனவே எமது உரிமைகள் பறிபோவதை நாம் ஆதரிக்க முடியாது. நாம் வடக்கு கிழக்கு மாகாண சபையை ஸ்தாபித்த ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி என்ற வகையில் மாகாணசபை அரசுக்குரிய அதிகாரங்களில், மத்திய அரசு தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதை எமது மாநகர சபையில் உள்ள அனைத்து ஆளும் கட்சி எதிர்கட்சி உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டு இப் பிரேரணையினை கிழக்கு மாகாண சபைக்கு அனுப்ப வேண்டுமென கோரிக்கை விடுப்பதுடன் இதற்கு ஆதரவாக நாளை நடைபெறும் கிழக்கு மாகாணசைப அமர்வில் இச் சட்டமூலத்தை மாகாண சபையின் அனைத்து உறுப்பினர்களும் இணைந்து நிராகரிக்க வேண்டுமென முன் மொழிவதுடன் இத் தீர்மானத்தை ஆதரிக்கின்றேன் எனத தெரிவித்தார்.
5. கௌரவ ராஜநாதன் பிரபாகரன் அவர்கள் அனைவருக்கும் தமது வணக்கத்தை தெரிவித்து தம்மை அறிமுகம் செய்து உரையாற்றும் போது நாளை மத்திய அரசினால் கொண்டுவரப்படவுள்ள சட்டமூலம் மட்டக்களப்பிலுள்ள சிறுபான்மையின மக்களை மட்டுமல்ல அகில இலங்கை ரீதியில் வாழும் தமிழ், முஸ்லீம் மக்களை பாதிக்கும் ஒரு விடயம். இதனால் இவர்களின் இருப்பிடம், பாரம்பரியம், சூழல் போன்றவை பறிபோகும நிலை ஏற்படும். இதனை நாம் எதிர்க்க வேண்டும். இந்தப் பிரேரணையினை முன் வைத்துள்ளதன்படி தமிழ் மக்களின் விமோசனத்திற்கான ஒரு வரப்பிரசாதமாகும். இந்தப் பிரேரணையினை நான் வரவேற்கின்றேன். எனவே எமது மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதற்கு நாம் உடந்தையாக இருக்க முடியாது. ஈரோஸ் அமைப்பின் தலைவர் என்ற வகையிலும் மாநாகர சபை உறுப்பினர் என்ற வகையிலும் இந்தப் பிரேரணையை ஆதரிக்கின்றேன் எனத் தெரிவித்தார்.
6. கௌரவ பிரதி முதல்வர் ஆபிரகாம் ஜோர்ஜ்பிள்ளை அவர்கள் அனைவருக்கும் தமது வணக்கத்தை தெரிவித்து தம்மை அறிமுகம் செய்து உரையாற்றும் போது இலங்கை 1948ம் ஆண்டு பிரித்தானியரிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்பு நடைபெற்ற பல சட்டமூலங்களை நாம் அறிவோம். அன்று தனிச்சிங்கள சட்டம் கொண்டு வரப்பட்டது. பின் பல்கலைகழக தரப்படுத்தல் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது. இதனால் தமிழ் சிங்கள மக்களிடையே இருந்த நல்லுறவு பிரிக்கப்பட்டது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கென சர்வகட்சி மாநாடு நடைபெற்றுவரும் இவ்வேளையில் சிறுபான்மையினரை பாதிக்கும் சட்ட மூலத்தை அமுல்படுத்துவது அர்த்தமற்ற ஒன்றாகும். இந்த நாட்டில் சகல இனத்தவர்களும் சமத்துவத்துடன் வாழ வேண்டும் எனும் கோட்பாட்டில்தான் நாட்டிற்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. பேரினவாத சக்திகளால் தமிழ் சிங்கள மக்களின் நல்லுறவுகள் பாதிக்கப்படுவது கவலைக்குரிய விடயமாகும். இதனை நாம் எதிர்க்க வேண்டும். இதன்படி இப் பிரேரணையினை நான் ஆதரிக்கின்றேன் எனத தெரிவித்தார்.
7. கௌரவ கந்தசாமி தவராசா அவர்கள் அனைவருக்கும் தமது வணக்கத்தை தெரிவித்து தம்மை அறிமுகம் செய்து உரையாற்றும் போது எமது தமிழ் பேசும் சிறுபான்மை மக்களின் வரலாற்றை எடுத்துக் கொண்டால் சிறுபான்மை சமூகத்திற்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. சுதந்திரம் வழங்கப்படவில்லை. நாம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மூலமாக அரசுக்கு ஆதரவு வழங்கிக் கொண்டு இருக்கும் இவ் வேளையில் வரலாற்று ரீதியிலான ஒரு சட்டமூலத்தை கொண்டு வந்து எமது மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை நாம் எதிர்க்கின்றோம். இந்தச் சபை சிறுபான்மை மக்களின் நலனுக்காக இந்த விடயத்தை உடனடியாக மாகாண சபைக்கும் உரிய உத்தியோகத்தர்களுக்கும் அனுப்ப வேண்டும் எனத் தெரிவிப்பதோடு இந்தப் பிரேரணையினை ஆதரிக்கின்றேன் எனத் தெரிவித்தார்.
8. கௌரவ தெய்வநாயகம் வீரசிங்கம் சத்தியநாதன் அவர்கள் அனைவருக்கும் தமது வணக்கத்தை தெரிவித்து தம்மை அறிமுகம் செய்து உரையாற்றும் போது நாளை கொண்டுவரப்படவுள்ள உள்ளுராட்சி திருத்தச் சட்ட மூலத்தை எதிர்ப்பதற்காக கௌரவ நாகூர்கான் றம்ழான் அவர்களால் கொண்டு வந்த பிரேரணையினை ஆதரித்து நான் உரையாற்றுகின்றேன். வடக்கு கிழக்கு மாகாணசபை கலைந்து கிழக்கு மாகாணசபை ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் முடியாத நிலையில் கொண்டுவரப்படவுள்ள இந்தச் சட்டமூலம் மூலம் எமது பாரம்பரிய பிரதிநிதித்துவபம் பறிபோகும் என்பதோடு எமது சமுதாயத்தை குழிதோண்டி புதைக்கும் நிலைக்கு நாம் தள்ளப்படுவோம் எனவே இந்தப் பிரேரணையினை நான் ஆதரிக்கின்றேன். எனத் தெரிவித்தார்.
9. கௌரவ ராஜநாதன் பிரபாகரன் அவர்கள் உரையாற்றும் போது இந்த பிரேரணையினை இன்று ஆதரிப்பதுடன் நாளை மாகாண சபையில் கொண்டு வரப்படும் பிரேரணையினை எதிர்த்து சபையில் இருந்து வெளிநடப்பு செய்வதென்று தெரிவித்தார்.
10. மதிப்புக்குரிய முதல்வர் அவர்கள் தெரிவிக்கும் போது இது விடயமாக எனது தலைமை உரையில் குறிப்பிட்டது போல் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன அவர்களால் கொண்டுவரப்பட்ட திருத்தச் சட்டமூலம் எங்களது தமிழ் மக்கள் பாதிப்படைவார்கள் என்பதை உறுப்பினர்கள் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். இச் சபையானது தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக அநீதி இழைக்கப்படும் சந்தர்ப்பத்திலெல்லாம் குரல் கொடுத்து வந்திருக்கிறது. எதிர்காலத்திலும் இவ்வாறே குரல் கொடுக்கும்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளாகிய நாம் கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் எமது மக்களின் அபிவிருத்திக்காக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளியாகி அதன் சின்னத்தில் போட்டியிட்டிருந்தோம். இருப்பினும் எமது தமிழ் பேசும் மக்களுக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த செயற்பாடுகளானாலும் அவற்றிற்கு எதிராக குரல் கொடுப்பதோடு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஒரே குடும்பமாக இருக்கும் நாம் அரசினால் பல தவறுகள் இழைக்கப்படும் போது அதனை சுட்டிக்காட்ட வேண்டிய பாரிய பொறுப்பும் எமக்குண்டு. எனவே இப் பிரேரணையினை ஏகமனதாக சபையால் ஏற்றுக்கொள்ளலாம் எனத்தெரிவித்தார்.
11. கௌரவ கந்தையா அருமைலிங்கம் அவர்கள் தெரிவிக்கும் போது பிரேரணையினை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதன் பேரில் இந்த தீர்மானத்தை மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண உறுப்பினர் ஆகியோருக்கு அனுப்புவதுடன் நாளை மாகாண சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ள இச் சட்டமூலப் பிரேரணையினை எதிர்த்து நான் சபையில் இருந்து வெளிநடப்பு செய்கின்றேன். இதற்கு சகல உறுப்பினர்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். இதன்படி சபை ஒத்தி வைக்கப்பட்டு சபையில் இருந்து முதல்வர், பிரதி முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இத்துடன் சபை மு.ப 11.55 மணிக்கு கலைந்தது.
திருமதி முதல்வர் சிவகீத்தா பிரபாகரன்
மாநகரமுதல்வர்,
மாநகரசபை
மட்டக்களப்பு
16-04-2009
No comments:
Post a Comment