29 April 2009

பொதுமக்களின் பாதுகாப்பையும், மனிதாபிமான நிலைமைகளையும் கவனத்தில் எடுக்க வேண்டிய தருணம் இது- கார்ல் பில்ட்

சுவீடன் நாட்டு வெளியுறவு அமைச்சர் கார்ல் பில்ட் இலங்கை வருவதற்கு இலங்கை அரசு அனுமதி மறுத்ததையடுத்து இலங்கைக்கான தமது நாட்டுத் தூதுவரை சுவீடன் அரசு தமது நாட்டுக்கு திருப்பி அழைத்துள்ளது. அவ்வாறு அனுமதி மறுக்கவில்லை என இலங்கை அரசின் உயர் அதிகாரி ஒருவர் பி.பி.சி செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார். ஒரே சமயத்தில் பல உயர்மட்ட அதிகாரிகளின் விஜயங்களை தாங்கள் கையாள்வது கடினமான விடயம் என்றும் சுவிடிஸ் வெளியுறவு அமைச்சர் பிறிதொரு சமயத்தில் இலங்கைக்கு வரமுடியும் என்றார்.


இலங்கை அரசு தெரிவித்துள்ள கருத்தை நிராகரித்துள்ள கார்ல் பில்ட், அப்படி செல்லும் நோக்கம் தமக்கு இல்லை என்றும் இலங்கை அரசின் இந்த முடிவு ஒரு விசித்திரமானவொன்று என்று வர்ணித்துள்ள சுவிடிஸ் வெளியுறவு அமைச்சர், தாம் ஒன்றும் அந்த நாட்டுக்கு வரக்கூடாது என்று தடை விதிக்கப்பட்ட ஒரு நபர் அல்ல என்றார்


இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெறும் மோதலில் சிக்குண்டிருக்கும் பொதுமக்களின் நிலை குறித்து தாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும், அவர்களின் மனிதாபிமான நிலைமைள் குறித்து இலங்கை அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.


இது தொடர்பாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பிரிட்டன் பிரெஞ்சு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு தமது ஆதரவை அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகத்தின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து அதற்கேற்ப இலங்கை அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம் என வலியுறுத்தியுள்ள சுவீடனின்; வெளியுறவு அமைச்சர் இலங்கையிலுள்ள அனைத்து சமூகத்தினரும் தாம் இலங்கையர் என்கிற எண்ணம் ஏற்படும் வகையில் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அங்கு ஸ்திரத்தன்மை ஏற்படப் போவதில்லை என்றார்.


விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பு என்று வர்ணித்துள்ள கார்ள் பில்ட் அவர்கள், அவர்களை நசுக்கும் நடவடிக்கையை இலங்கை அரசு எடுத்துவரும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பையும், மனிதாபிமான நிலைமைகளையும் கவனத்தில் எடுக்க வேண்டிய தருணம் இது என்றும் கூறியுள்ளார். அரசியல் தீர்வு ஒன்றும் முன்வைக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment