17 May 2009

இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் விரைவாக மீளக்குடியமர்த்தப்பட வேண்டும் - பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் பொதுச் செயலாளர்

இடம்பெயர்ந்த அனைத்து மக்களையும் இயன்றவரை துரிதமாக அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றப்படப்பட வேண்டும். 2 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதை சாதாரணமாக கருத முடியாது


கேள்வி: வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் வந்துள்ள மக்களை அவர்களது சொந்த இடங்களில் விரைவாக மீளக்குடியமர்த்துவது அவசியமாகிறது. ஆனால், இராணுவத்தினரால் மீட்கப்பட்ட பகுதிகளில் அதிகளவில் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாகவும் அவை முழுமையாக அகற்றப்பட்டு மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே இவர்களைக் குடியேற்ற முடியுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது நீண்ட காலத்தை எடுக்கும். இது தொடர்பாக உங்கள் கருத்து?

பதில்: மக்களை முகாம்களில் வைத்துக் கொண்டிருப்பது முக்கிய விடயமல்ல..இடம்பெயர்ந்த அனைத்து மக்களையும் எவ்வளவு துரிதமாக அவர்களது சொந்த இடங்களில் குடியேற்ற முடியுமோ அதனையே செய்ய வேண்டும். மீள் குடியேற்றத்துக்கே முன்னுரிமை வழங்க வேண்டும். இடைத்தங்கல் முகாம்களிலும் நலன்புரி நிலையங்களிலும் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அல்ல. சுமார் இரண்டு இலட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இரண்டு இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட சில நாடுகள் கூட உலகத்தில் உள்ளன. ஆகவே நாம் இந்த எண்ணிக்கையை இலகுவாக கணக்கில் கொள்ள முடியாது. இந்தப் பெருந்தொகையான மக்கள் ஒரு முகாம் வாழ்க்கையை வாழ்தல், அவர்கள் நடமாட்டம் தொடர்ந்து கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருத்தல் என்பன அவர்களை முழுமையாக பல வழிகளிலும் பாதிப்படையச் செய்யும். கலாசார ரீதியாக பல பிரச்சினைகளுக்கு அவர்கள் முகங்கொடுக்க நேரிடும். பொருளாதார ரீதியாகவும் அவர்கள் பிரச்சினைகளை எதிர்நோக்குவர். இவ்வாறானதொரு நிலை அவர்கள் மத்தியில் தன் நம்பிக்கையீனத்தையே நிச்சயம் தோற்றுவிக்கும். ஆகவே அவர்களை எவ்வளவு விரைவாக மீளக் குடியமர்த்த முடியுமோ அதனை விரைவாக அரசாங்கம் செய்ய வேண்டும்.

கேள்வி: யுத்தத்தின் பின்னரான வடக்கு நிலவரம், மக்கள் நிலைப்பாடு எவ்வாறு அமைய வேண்டுமென நீங்கள் நி;னைக்கிறீர்கள்?

பதில்: நிச்சயமாக, மக்கள் குடியேற்றப்பட்டதும் தாம் தொடர்ந்தும் இராணுவச் சூழலில் அதாவது இராணுவ உடை தரித்தவர்கள் மத்தியில்தான் தொடர்ந்தும் வாழ்கிறோம் என்ற எண்ணம் அந்த மக்கள் மத்தியில் எழாத வகையில் அரசாங்கம் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அதாவது அந்த மக்களின் சுதந்திரமான வாழ்க்கைக்கான நிலவரங்கள் கட்டியெழுப்பப்பட வேண்டும். தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் அவர்கள் சுமார் 30 வருடங்களாகக் காப்பரண்களிலும் இறங்கி, ஏறிப் போகுதல் என்ற ஒரு நிலையிலுமே வாழ்ந்து வருகின்றனர். எதிர்காலத்தில்; இப்படியான வாழ்க்கை நிலை நிச்சயமாக ஏற்படாது என நினைக்கிறேன். ஆகவே அந்த மக்களின் சுதந்திரமான வாழ்க்கைக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் உலக தராதரத்தில் மக்கள் சாதாரணமாக எவ்வாறு வாழ்கிறார்களோ அவ்வாறானதொரு சூழலை வடபகுதி மக்களுக்கும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
இந்த வாழ்க்கை முறையுடன் வடக்கில் ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஓர் இடைவெளியும் ஏற்படுத்தப்பட வேண்டும். காரணம், துரதிர்ஷ்டவசமாக இலங்கையின் தமிழ்த் தலைமைத்துவங்கள் நிறையவே அழிக்கப்பட்டுள்ளன. அதில் புலிகளுக்கும் பங்கு உண்டு. இதன் காரணமாக ஏற்பட்டுள்ள தலைமைத்துவ இடைவெளியை நிரப்பும் வகையில் இப்போதுள்ள தமிழ் மக்கள் தரப்பிலிருந்து தூரதிருஷ்டிமிக்க ஆற்றலும் வீரியமும் உள்ள தமிழத்; தலைமைகள் தோன்றக் கூடியதாக ஒரு ஜனநாயக இடைவெளி அங்கு உருவாக்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் கருத்தாடல்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும். அதாவது, வேறான கருத்துகள், கருத்தரங்குகள், பேச்சுகள் அபிப்பிராயங்கள் உருவாகுவதற்கான சுதந்திரம் அந்த மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

அதிகாரப் பகிர்வு தொடர்பாக எந்த அளவில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் இடம்பெற்றன? வடக்கு,கிழக்கு தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் கோயல்களைத் தவிர வேறு எங்கும் அவர்கள் செல்வதே இல்லை. பொதுக்கூட்டங்களை கருத்தரங்குகளை ஏற்பாடு செய்வதோ அல்லது அவற்றில் பங்கு கொள்வதோ அரசியல் விவகாரங்களைப் பேசுவதோ இந்த மக்களைப் பொறுத்த வரையில் ஆபத்தான விடயங்களாகி விட்டன. ஆகவே எதிர்காலத்தில் இந்தப் பிரதேசங்களில் நூறு கருத்துகள் வரவேண்டும், வௌ;வேறு சமூக அரசியல் கட்சிகள் அதாவது இடதுசாரிக் கட்சிகளினது செயற்பாடுகளுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து. வன்முறைக் கலாசாரத்தினால் மாசடைந்து போயுள்ள வடக்கு மாகாணத்தின் சூழல் சுத்திகரிக்கப்பட வேண்டும்.

இங்கு முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விடயமென்றால் வடமாகாணத்தில் ஒரு சில கட்சிகள் என்று இல்லாமல் அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் சுதந்திரமான செயற்பாடுகளுக்கும் இடமளிக்கப்பட வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் கூட ஒரு பகுதியினர் ஜனநாயக உணர்வுள்ளவர்களாக இருக்கிறார்கள். தமிழ் அகதிகளைக் கடந்த 25 வருடங்களுக்கு மேலாகப் பராமரித்து வரும் சந்திரஹாசன் போன்றவர்கள் இருக்கிறாhர்கள். முஸ்லிம் தலைமைகள் உள்ளன. இவர்கள் அனைவரும் வடக்கில் ஜனநாயக அரசியலை முன் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். அதேவேளை, ஏனைய கட்சிகளின் ஜனநாயக அரசியலை, உரிமைகளைத் தடுக்கும் வகையில் ஒருவரை ஒருவர் படுகொலை செய்யும் பிஸ்டல் கலாசாரம் முற்றாக ஒழிக்கப்படுதல் அவசியம். மனித உரிமை ஜனநாயமே இங்கு அடித்தளமாக அமைய வேண்டும்.

சமூக பொருளாதார வளர்ச்சியானது சர்வாதிகாரச் சூழலில் ஏற்படத்தப்படுவதில்லை.மக்களின் ஜனநாயக சுதந்திரத்துடன் சேர்ந்ததாகவே அது ஏற்படுத்தப்பட வேண்டும். மேலும், வடமாகாணத்தில் பரிய பொருளாதார மீள்கட்டுமாணப் பணிகள் மேற்கொள்ளப்படலும் இன்றி அமையாதது. இவற்றினை மேற்கொள்ளும் வகையில் வடக்கில் அதிகாரக் கட்டமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.

கேள்வி: வடக்கில் மாகாண சபைத் தேர்தலை நடத்தி மாகாண சபை முறையிலான நிர்வாகத்தை ஏற்படுத்தினால் தமிழ் மக்கள் பிரச்சினைகளெல்லாம் தீர்ந்து விடும்தானே?

பதில்: கிழக்கு மாகாண சபை நிர்வாகம் இன்று தனது அதிகாரம் தொடர்பாக குறைபட்ட நிலையிலேயே செயற்படுகிறது. காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் 13 ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தும் அவை வழங்கப்படவில்லை. அத்துடன் 13 ஆவது திருத்தச் சட்ட மூலத்திலுள்ள பல விடயங்களே இல்லாமல் போகக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சட்ட மூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை பறிக்கக் கூடியதான அல்லது கரைத்து, ஐதாக்கக் கூடியதான சூழ்நிலையே இன்று நிலவுகிறது. ஆகவே இவ்வாறானதொரு நிலை ஏற்படக் கூடாது 13 ஆவது திருத்தச் சட்டமூலம் மேலும் செறிவூட்டப்பட வேண்டும். இதற்கு மேலாக சர்வகட்சிப் பிரதிநிகள் குழுவும் அமைக்கப்ட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. நூற்றுக்கு மேற்பட்ட தடவைகள் கூடி பல விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்துள்ளது. இந்தச் சர்வக் கட்சிக் குழுவை நாம் பலவீமான, வலது குறைந்த அல்லது கையாளாகாத குழுவென்று கூறி மட்டம் தட்டிவிட முடியாது. இந்தக் குழுவில் பல்வேறு கட்சிகள் இணைந்து தங்களது பங்களிப்பைச் செய்துள்ளன. ஆகவே, சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் ஏற்றுக் கொண்டு செலுமைப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

கேள்வி: உங்கள் தலைவரான வரதராஜப் பெருமாள் வடகிழக்கு மாகாண சபை முதலைமைச்சராகவிருந்த போது 13 ஆவது திருத்தச் சட்ட மூலத்தின் கீழ் குறித்துரைக்கப்பட்ட அதிகாரங்களைத்தன்னும் சரியான முறையில் மத்திய அரசு தர மறுகக்கிறதென்று கூறி பத்தொன்பது அம்சக் கேரிக்கையை முன்வைத்து ஈழப்பிரகடனம் செய்தாரே?

பதில்: ஆம், உண்மைதான். 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழான அனைத்து அதிகாரங்களும் முறையாக வழங்கப்படுவதுடன் அதற்கு மேலாகவும் தமிழ் மக்கள் தம்மைத் தாமே ஆளக் கூடிய வகையில் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். 19 அம்சக் கோரிக்கையும் அதனைத்தான் வலியுறுத்துகிறது.

கேள்வி: இன்றைய அரசாங்கமானது தமிழ் மக்களுக்கான உரிமைகளை முழமையாக வழங்க வேண்டுமென்ற நோக்கத்துடன் செற்பட்டு அதற்கு ஏற்ற வழி வகைகளைச் செய்தாலும் ஹெல உறுமய போன்ற பேரினவாதக் கட்சிகள் தடை போடுமே?

பதில்: இனிமேல் அது கஷ்டமான காரியம். தமிழ் மக்களுக்கான உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டுமென சர்வதேசமே இன்று ஒருமித்த குரலில் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த நிலையில் தமிழ் மக்களின் உரிமைகளை வழங்கமால் விடுவதோ அல்லது வழங்கப் போவதனை தடுப்பதோ அவர்களுக்குத்தான் அது பாரிய ஏமாற்றத்தைத் தரும். பல சிக்கல்களையும் ஏற்படுத்தும்.

கேள்வி: தமிழ் மக்களுக்கான உரிமைகள் அனைத்தினையும் தருகிறோம் என்ற ‘சொல் வாய்ப்பாட்டில’; சிங்கள அரசுகள் தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருந்தால் எதிர்காலத்தில் தமிழ் மக்கள் தரப்பிலிருந்;து இன்னுமொரு ஆயுதப் போராட்டம் உருவாகாதா?

பதில்: நிச்சயமாக வன்முறைக்கான களம் ஒன்று மீண்டும் உருவாகும். அவ்வாறானதொரு நிலை ஏற்படக் கூடாது. விரக்தி என்பது எவரையும் எங்கு கொண்டு சென்று விடுமெனக் கூற முடியாது. அப்படி ஏற்பட்டால் கூட அந்தப் போராட்டம் அஹிம்சை வழியில் அமைவதே சிறந்தது. இந்த நாட்டின் சட்டம், ஒழுங்குத் துறையானது ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியில் தமிழ் மக்கள் தொடர்பில் நடந்து கொண்ட முறையானது கோபங்களை உருவாக்கியதைனையும் நாம் மறந்து விடக்கூடாது.

பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தி. ஸ்ரீதரன் கேசரி வார வெளியீட்டுக்கு வழங்கிய நேர்காணல்

பேட்டி கண்டவர்- ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
நன்றி- வீரகேசரி

1 comment:

  1. நம்புங்கள் நாளை தமிழ் ஈழம் பிறக்கும் !!!
    தந்துதவுங்கள் பை நிறைய இன்று !!!!!!!
    நம்புங்கள் நாளை தமிழ் ஈழம் பிறக்கும்?????

    ReplyDelete