அர்த்தமுள்ள ஒரு சரியான அரசியல் தீர்வினை முன்வைப்பதற்கு இந்திய அரசாங்கம் முழுமையான அழுத்தம் கொடுக்க வேண்டும்- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி
இன்றுகாலை இந்திய இல்லத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு.வீ.ஆனந்தசங்கரி,புளொட் தலைவர் திரு. த.சித்தார்த்தன், பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் பொதுச்செயலர் திரு.ரி.சிறீதரன் ஆகியோர் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு.எம்.கே.நாராயணன், இந்திய வெளியுறவுச்செயலர் திரு. சிவ்சங்கர்மேனன் ஆகியோரைச் சந்தித்துள்ளனர். இவர்களுடன் இந்திய உயர் ஸ்தானிகர் திரு.அலோக் பிரசாத், இந்திய உயர்ஸ்தானிகராலய அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் சியாம் ஆகியோர் உடனிருந்தனர். இந்த சந்திப்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில், இடம்பெயர்ந்த மக்கள் தங்களுடைய வீடுகளில் கூடியவிரைவில் குடியமர்த்தப்படல் வேண்டும் என்ற கோரிக்கையுடன், வடகிழக்கில் மீண்டும் சரியான ஜனநாயகமும், பன்முகத்தன்மையும் நிலைநிறுத்தப்பட வேண்டும்,வன்முறைக் கலாச்சாரம் முற்றாக முடிவுக்குக் கொண்டுவரப்படுதல் வேண்டும் எனவும் வலியுறுத்தினர். அத்துடன் அர்த்தமுள்ள ஒரு சரியான அரசியல் தீர்வினை முன்வைப்பதற்கு இந்திய அரசாங்கம் முழுமையான அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். அத்துடன் தீவிரமான புலி அங்கத்தவர்களை தவிர்ந்த மற்றைய அனைத்துப் புலி உறுப்பினர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு அவர்கள் சாதாரண வாழ்க்கைக்கு திரும்புவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும், தீவிரமான புலி அங்கத்தவர்களை புனர்வாழ்வு நிலையங்களில் வைத்து அவர்களை மீளவும் வன்முறையற்ற சமூகத்திற்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். அத்துடன் நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கின்ற ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை. அவர்களுக்கான தடுப்பூசிகள், கர்ப்பிணித் தாய்மார் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான சத்துணவுகள் என்பன உடனடியாக வழங்கப்பட வேண்டும். மற்றும் சுத்தமான குடிநீர் வழங்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினர்.
அதற்கு இந்தியத் தரப்பிலிருந்து பதிலளிக்கப்பட்டபோது, இடம்பெயர்ந்த மக்களை 180 நாட்களுக்குள் குடியமர்த்துவதற்கான முழுமையான நடவடிக்கைகளை எடுப்பதாக இலங்கை அரசாங்கம் தங்களுக்கு உறுதி அளித்திருப்பதாகவும்,அவ்வாறான சந்தர்ப்பத்தில் அப்பிரதேசங்களுக்கான பாடசாலைகள், வீதிகள் உட்பட்ட அனைத்து உட்கட்டுமாணங்களையும் ஏற்படுத்தித் தருவதற்கான உதவிகளை வழங்க இந்திய அரசு தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.மற்றைய அனைத்து விடயங்களையும் அவதானமாக கேட்டறிந்துகொண்ட இந்தியத் தரப்பினர், சத்துணவுகள், ஐந்து வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி போன்ற விடயங்களை இந்திய நடமாடும் வைத்தியசாலை வவுனியாவில் அமைக்கப்பட்டவுடன் ஆரம்பிக்கப்படுமென தெரிவித்தனர். மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள், ஆர்வலர்கள், தொண்டர் நிறுவனங்கள் நலன்புரி நிலையங்களுக்குச் சென்று அங்குள்ள குறைநிறைகளை அறிந்துவரவும், உதவிகளை செய்யவும் அனுமதி வழங்க வேண்டுமென்றும், மதவாச்சியில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தி கேட்டபோது, இது விடயமாக அரசின் கவனத்திற்கு கொண்டுவருவதாக இந்தியத் தூதுக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அரசியல் தீர்வு தொடர்பான அழுத்தங்களை இந்தியா ஏற்கனவே ஆரம்பித்துள்ளாகவும் சுட்டிக்காட்டினர். அத்துடன் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில்தங்கியுள்ள இளைஞர், யுவதிகள் மத்தியில் உயர்கல்விக்கு தகுதியானவர்களுக்கு இந்தியாவில் உயர்கல்வி கற்க விசேட அடிப்டையில் புலமைப்பரிசில் பெற்றுக் கொடுக்கப்படல் வேண்டுமெனவிடுத்த வேண்டுகோளை இந்தியத் தரப்பு ஏற்றுக்கொண்டு, அதற்கான நடவடிக்கைகளை விரைவில் எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பாக த.சித்தார்த்தன் விடுத்துள்ள பத்திரிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment