பொதுவான கேள்விகளுக்கு முன்னாள் வடக்கு கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் அ. வரதராஜப்பெருமாளின்
பதில்கள் (பகுதி -1)
பிரபாகரன் கொல்லப்பட்ட செய்தியை நீங்கள் நம்புகிறீர்களா? நிச்சயமாக! அதில் சந்தேகப்படுவதற்கான எந்தக் காரணங்களுமில்லை. இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர், இராணுவத் தளபதி ஆகிய அனைவரும் பிரபாகரன் கொல்லப்பட்டதை சந்தேகத்திடமின்றி உலகுக்கு அறிவிக்கிறார்கள், பிரபாகரனின் இறந்த உடலின் படங்கள் சந்தேகத்திற்கிடமின்றி அனைத்து ஊடகங்களிலும் காட்டப்படுகின்றன. பத்து ஆண்டுகளுக்கு மேலாக பிரபாகரனுக்கு அடுத்த புலித்தலைவராக இருந்த கருணாவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வரை புலிகளின் இராணுவக் கமாண்டர்களில் ஒருவராக இருந்த தயா மாஸ்டரும் சிறி லங்கா இராணுவத்துக்கு பிரபாகரனின் உடலைக் காட்டி அது பிரபாகரன்தான் என்கிறார்கள்;. இவை எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷ தானே நேரடியாக பிரபாகரன் கொல்லப்பட்ட செய்தியை இந்தியப் பிரதமருக்கு அறிவித்தாக இந்திய வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்;.இந்தச் சந்தேகம் எழுவதற்கு முதற்காரணமாக இருந்தவர் கே.பி எனப்படும் பத்மநாதன். அவர் பிரபாகரனின் மிக நம்பிக்கைக்குரியவர். கடைசிவரை பிரபாகரன் பத்மநாதனோடுதான் தொடர்பில் இருந்திருக்கிறார். அந்தப் பத்மநாதனும் இப்போது பிரபாகரன் கொல்லப்பட்டதை ஒப்புக் கொண்டிருக்கிறார். இவ்வளவுக்கும் பின்னரும் பிரபாகரன் கொல்லப்படவில்லை என்று ஒருவன் சொன்னால் அவன் ஏமாற்றுக்காரனாக இருக்க வேண்டும். அப்படிச் சொல்லப்படுவதை நம்புபவர்கள் ஏமாளிகளாக இருக்க வேண்டும்.அப்படியானால் புலிப்பிரமுகர்கள் எதற்காக பிரபாகரன் கொல்லப்படவில்லை உயிரோடுதான் இருக்கிறார் என்று கூற வேண்டும்?பிரபாகரன் உயிரோடுதான் - நலமாகத்தான் இருப்பதாக புலிப் பிரமுகர்கள் பிரச்சாரம் செய்வதற்கு அவர்களின் சுயநலன்கள் சார்ந்த பல விடயங்கள் உள்ளதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதுபற்றி ஒரு சிறு நீண்ட விளக்கம் வேண்டும். புலியை அண்டியும் புலியை வைத்து தெண்டியும் புலியைக் காட்டி வெருட்டியும் புலியின் அணைப்பில் சுரண்டியும் புலி உறுப்பினர்களின் சாவை வியாபாரமாக்கியும் வாழும் ஒரு சமூக விரோதக் கூட்டம் உலகம் முமுவதுவும் பரவிக் கிடக்கிறது. புலியின் இருப்பில்த்தான்; அதன் வாழ்வே இருக்கின்றது.பிரபாகரன் இல்லாமல் புலி என்று ஓர் அமைப்பு இருக்க முடியாது. பிரபாகரன் உட்பட புலிக்கட்டமைப்பு முற்றாக அழிக்கப்பட்டு விட்டது. ஆனாலும், புலியின் பிரச்சார அமைப்புக்களும்,புலியின் பணம் திரட்டும் அமைப்புக்களும்,புலியின் பினாமிகளும்,புலியின் சர்வதேச கள்ளக்கடத்தல் அமைப்புக்களும்,புலியின் நூற்றுக்கணக்கான அடிபிடி, எடுபிடிகளும் இன்னமும் உலகம் பூராவும் பரந்து கிடக்கின்றன. இவற்றின் வாழ்வாதாரமும் அரசியல் இருப்பும் சமூக சண்டித்தனமும் வெருட்டிப் பிடுங்கும் தொழிலும் புலிப்பயங்கரவாதத்தின் இருப்பு இல்லாமல் தொடர்ந்து நடக்க முடியாது. இவர்கள் பிரபாகரனும் ஏனைய அனைத்து பிரதானமான புலித் தலைவர்களும் கொல்லப்பட்டதைக் கூறி ஒப்பாரி வைத்து செத்தவீடு கொண்டாட விரும்பமாட்டார்கள். அவ்வாறு புலிப் பிரமுகர்கள் செய்தால் ஒரு சில நாட்களுக்குள்ளேயே பரந்துபட்ட தமிழ் மக்கள் அவர்களை மறந்துவிட்டு, பயப்படாமல் சுதந்திரமாக தமக்கான அடுத்த கட்டத்தைத் தேடுவதற்குத் தொடங்கி விடுவார்கள். இதனால் புலியின் பெயரில் மக்களிடம் மிரட்டி பணம் திரட்ட முடியாது இதனால் புலியின் பெயரில் அவ்வாறு திரட்டுவதில் கமிஷன் அடித்து சீவித்தவர்களுக்கு வருமான நட்டம் ஏற்படும்:வெளிநாடுகளில் நூற்றுக்கணக்கான கோவில் பினாமிகளுக்கு புலிகளின் பெயரில் தண்டிய பணத்தில் அடித்த கமிஷன் இழப்பு: புலிகளின் உதவியுடன் வெளிநாடுகளில் சில்லறைக் கடைகள், றேடியோக்கள், பத்திரிகைகள் நடத்தி வந்தோருக்கு லாபமிழப்பு:புலிகளுக்கு அடியாட்களாக இருந்து உடல் உழைப்பு இல்லாமலே சீவித்துப் பழகிப் போன பல நூற்றுக்கணக்கான சண்டியர்களுக்கு தொழில் இழப்பு:மக்களுக்குரிய நிவாரணப் பணத்தை கொள்ளையடித்து புலிகளுக்குப் பங்கு கொடுத்து தாங்களும் சட்டைப் பைகளை நிரப்பிக் கொண்ட பல அரச நிர்வாகிகளுக்கு ஊழல் இழப்பு வரி செலுத்தாமல் விலைக் கட்டுப்பாடு இல்லாமல் லஞ்சம் மட்டுமே கொடுத்துவிட்டு கொள்ளை லாபம் உழைத்து கோடீஸ்வரர்கள் ஆன பல உள்ளுர்க் கடை வியாபாரிகளுக்கு இனி வரி செலுத்த வேண்டுமே கட்டுப்பாட்டு விலைகளுக்குள் வியாபாரம் செய்ய வேண்டுமே என்ற கவலைதமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதிகள் சிலருக்கு இனியென்ன அரசியல் செய்வது, இனியெங்கிருந்து பொற்கிளி வரும் என்ற கவலைபடங்களற்றுப் போயிருக்கும் சில தமிழ் சினிமாக்காரர்களுக்கு இனி யார் தருவார் மூலதனம் என்ற பிரச்சினை.இப்படியாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் ஒரு சமூகக் கூட்டத்துக்கு பிரபாகரன் சாகாவரம் பெற்றிருக்க வேண்டும் என்ற தேவை இருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.புலி அமைப்பு மீண்டும் பழையபடி உயிர் பெற்றெழுமா?சாத்தியமே இல்லை. ஒரு சில நூற்றுக்கணக்கான ஆயுதம் தாங்கிய புலி உறுப்பினர்கள் காடுகளில் தப்பி சிறு சிறு குழுக்களாக இப்போதும் அலைந்து வருகிறார்கள். குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் காட்டுப் பகுதிகளிலேயே உள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருபதுக்கு உட்பட்ட எண்ணிக்கையிலும், ஐம்பது பேரளவில் வன்னிப் பகுதியிலும் உள்ளனர் எனக் கணிப்பிடப்படுகிறது. இவர்கள் நீண்டகாலம் இப்படியே தப்பியிருப்பது சாத்தியம் இல்லை. காரணங்கள் பல:நாட்டில் புலிகளின் தலைமை முற்றாக அழிக்கப்பட்டு விட்டது. எனவே எஞ்சியிருப்பவர்களுக்குத் தலைமை எதுவும் இல்லை. அவர்கள் இனி பணத்துக்காக கொள்ளையடித்தால் அல்லது யாரையும் கடத்தினால் பொதுமக்களால் எதிர்க்கப்படுவார்கள் - காட்டிக் கொடுக்கப்படுவார்கள்.இவ்வளவுதூரம் புலித்தலைமை அழிக்கப்பட்டதன் பின்னர் தொடர்ந்து சிரமங்களையும் உயி;ர் இழப்புக்களையும் தாங்கும் மனோபலம் அவர்களிடம் இருக்கமாட்டாதுபுதிதாக இனி இளைஞர்களை அவர்கள் திரட்ட முடியாது.இழக்கும் ஆயுதங்கள் மற்றும் ரவைகளுக்கு ஈடு கிடைக்காது.எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களோடு இருந்து இப்போது அரசிடம் பிடிபட்டுள்ள அவர்களது சகாக்களும் தலைவர்களும் அவர்களைக் காட்டிக் கொடுப்பதிலும் அவர்கள் பற்றிய முழுத் தகவல்களைத் தெரிவப்பதிலும் மிகத் தீவிரமாக அரச படைகளுக்கு ஒத்துழைக்கின்றனர். கே.பி எனப்படும் பத்மநாதன் மட்டும்தான் இதுவரை உயிர் தப்பியிருக்கும் ஒரேயோரு புலித் தலைவன். கே.பி தான் இப்போது புலிகளின் சர்வதேச பேச்சாளர் எனப்படும் எஸ்.பத்மநாதன். புலி அமைப்புக்கு மீண்டும் உயிர் கொடுப்பதாயின் அது கே.பி யால் மட்டுமேதான் சாத்தியமாக வேண்டும்;. கே.பி யால் முடியுமா?கே.பி என்பவர் ஆயுதக் கடத்தல் மற்றும் போதை மருந்துக் கடத்தல்களுக்காக சர்வதேச பொலிஸ் அமைப்பால் தேடப்பட்டுவரும் ஒரு சர்வதேசக் குற்றவாளி. உலகில் ஆயுதக் கள்ளக்கடத்தல் அமைப்புக்கள் எதுவும் உலக வல்லரசுகள் எதனதும் கட்டுபாடுகளுக்கும் தொடர்புகளுக்கும் மீறிய சக்திகளல்ல. புலி அமைப்பு வலுவாக உள்ளவரை சர்வதேச சமூகமும் புலிகளை அழிப்பது பற்றி ஒரு குழப்பமான நிலைப்பாட்டையே கொண்டிருந்தது. இதனால் பத்மநாதனும் தப்பியிருக்க முடிந்தது. இனிநிலைமை அவ்வாறிருக்காது. உலக வல்லரசு நாடுகளுக்கும் அவற்றின் கூட்டாளிகளுக்கும் புலியின் கொல்லும் வல்லமையைப் பயன்படுத்திக் கொள்வது ஏதோவொரு வகையில அவ்வப்போது தேவைப்பட்டது. உலக ஆயுத உற்பத்தி மற்றும் ஆயுதக் கடத்தல் சக்திகளுக்கும் பத்மநாதனைக் காப்பாற்றி வைத்திருக்க வேண்டிய வியாபாரத் தேவை இதுவரை இருந்தது. ஊரில் புலி அழிக்கப்பட்ட நிலையில் பத்மநாதனைக காப்பாற்றி வைத்திருக்க வேண்டிய தேவை எவருக்கும் இனி இருக்க மாட்டாது. இனி அந்நிய அரசுகள் இலங்கை அரசுடனான தமது நல்லுறவை குறைந்தபட்சமாகவேனும் தக்க வைத்துக் கொள்ளவே முயற்சிக்கும். அதில் பத்மநாதன் பலிக்கடாவாவதே நடக்கும். பத்மநாதன் தாய்லாந்து மற்றும் மலேசியாவின் கண்ணிவலைக்குள் இருப்பதை இலங்கை அரசு நன்கு அறியும். பல நூறு மில்லியன் டொலர்கள் பெறுமதி வாய்ந்த பணமும் சொத்துக்களும் உலகம் முழுவதுவும் புலிப் பினாமிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. பிரபாகரனும் பொட்டனும் தமது கொலை மிரட்டலால் அனைத்தையும் இதுவரை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இப்போது அவற்றைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடும் அவாவில் சில முக்கிய சர்வதேசப் புலிப் பிரமுகர்கள் பிரபாகரனை உயிரோடு காட்டி அந்தரப்பட்டு ஓடித் திரிகிறார்கள்;. இந்தச் சுருட்டல் முயற்சியில் பத்மநாதனும் பரபரப்புப்பட்டுத் திரிவது தெரிகிறது. பத்மநாதனின் இந்தப் பரபரப்பானது சிறி லங்கா அரச உறவுகளின் சர்வதேச வலையில் அவரை வீழ்த்தும் வாய்ப்புக்ளையே அதிகரிக்கும். கொண்டது மாறாக போதுமென தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பத்மநாதன் தன் குடும்ப விவகாரங்களோடு அடங்கிவிட்டால் இருக்கும் வேறுயாரும் பெயரளவில் தன்னும் புலிகளுக்கு தலைமை கொடுக்கும் நிலைமையில்லைமொத்தத்தில் எஞ்சியிருக்கும் புலிகளுக்கு• தலைமையில்லை• மனோபலமில்லை• பணபலமில்லை• இழந்து போகும் குண்டுகளை ஈடுகட்ட வழிகளில்லை• பிடிபட்டிருக்கும் புலிகள் எஞ்சியிருக்கும் புலிகளை காட்டிக் கொடுத்து முடிப்பர்; • தமிழ் தேசியக் கூட்டமைப்பு செத்த புலிகளைப் பாவிக்கும் ஆனால் இருக்கும் புலிகளைக் காப்பாற்றாது• இதுவரை உயிர்களைக் கொடுத்த புலிகளல்லாதோர் இனி புலிகளின் மயிர்களைக் கூட தப்புவதற்கு விடமாட்டார்.• கடந்த இரண்டு ஆண்டுகளில் புலிகளின் எல்லைகளை இஞ்சி இஞ்சாக அளந்து வைத்திருக்கும் இலங்கை இராணுவத்தை இருக்கும் புலிகள் உச்சுவது கடினத்திலும் கடினம்.வானளாவிய புலிகளென மூழியலங்காரப் பொய்ப் பந்தல்தான் தம்மை இதுவரை மூடிநின்றதென்ற உண்மையை ஈழத் தமிழர்கள் இனி ஐயமின்றிக் காண்பார்கள். (உரிய ஒரு தடியை உருவி விட்டால் உதிர்ந்து கொட்டும் பந்தலே மூழியலங்காரப் பந்தல்)-
பொன்னாலைப் பெருமான்-(இன்னும் வரும்…)
நன்றி – சூத்திரம்
No comments:
Post a Comment