முகாமிலிருப்பவர்களை விடுவிப்பது குறித்து ஆராய உயர்நீதிமன்றம் உத்தரவு
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவிலுள்ள முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிலர் தங்களது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்டதைத் தொடர்ந்து அங்கிருந்து அவர்கள் வெளியேறுவதற்கான சந்தர்ப்பங்கள் தொடர்பாக ஆராயுமாறு உயர்நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு நேற்று 17-06-2009 அறிவித்துள்ளது. இந்த அடிப்படை உரிமை மீறல் தொடர்பான மனுவில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் யாழ். மாவட்ட முன்னாள் இராணுவ கட்டளைத் தளபதி, மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் உட்பட சிலரது பெயர்கள் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அவசரகாலச் சட்டத்தின் கீழ் இந்த முகாம்களில் இடம்பெயர்ந்த மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் அவர்களது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக இந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கான சந்தர்ப்பம் மற்றும் சுதந்திரமாக தொழில் செய்வதற்கான சந்தர்ப்பங்கள் மறுக்கப்பட்டுள்ளதாலும் அவர்களது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment