18 June 2009

யுத்த கால மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச ரீதியில் விசாரணை நடத்தப்பட வேண்டும் : மனித உரிமை கண்காணிப்பகம்

அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில், நாட்டில் பாரிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவை குறித்து சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தும் நோக்கில் ஜனாதிபதி ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணைகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளமை பாரதூரமான ஒரு நிலைமையாகும் என மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட யுத்தக்குற்றச் செயல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதென மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பிரதிப் பணிப்பாளர் எலாயன் பியர்சன் (நுடயiநெ Pநயசளழn) தெரிவித்துள்ளார்.
2006ஆம் ஆண்டு முதல் இடம்பெற்ற பல்வேறு பாரிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச மற்றும் உள்நாட்டு மனித உரிமை ஆர்வலர்கள் பல வழிகளில் அழுத்தம் கொடுத்திருந்தனர். இதன் காரணமாக முன்னாள் நீதவான் நிஷாங்க உதாலகம தலைமையில் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. எனினும், கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் மேற்படி விசாரணை குறித்த ஆணைக்குழுவின் பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளன. இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்ற போது இழைக்கப்பட்ட யுத்தக் குற்றச் செயல்கள் உள்ளிட்ட சகல மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாகவும் சர்வதேச ரீதியில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரச படையினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து சுயாதீனமான முறையிலான விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் மேலும் தெரிவித்துள்ளது- நன்றி வீரகேசரி

No comments:

Post a Comment