23 June 2009

பிரச்சினைக்கு அதிகாரத்தை பகிர்ந்து தீர்வுகாண வேண்டும - திஸ்ஸ விதாரண

கடந்த காலங்களில் விட்ட பிழைகள் காரணமாக பல இடர்களைச் சந்திக்க நேர்ந்தது. அதன் மூலமாக உருவாக்கப்பட்ட பயங்கரவாதம், பிரிவினைவாதம் அழித்தொழிக்கப்பட்டு விட்டாலும் பிரச்சினை இருக்கின்றது. அந்த பிரச்சினைக்கு அதிகாரத்தை பகிர்ந்து தீர்வுகாண வேண்டும். இல்லையேல் பிரிவினைவாதமும், பயங்கரவாதமும் தலைதூக்கி மீண்டும் பிரபாகரன் உருவாகுவதை தவிர்க்க இயலாது என்று சர்வக்கட்சி ஆலோசனை குழுவின் தலைவரும் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
தனி இராச்சியம் தேவையில்லை என்றால் அதிகாரங்களை கொடுக்க வேண்டும். பாராளுமன்றம், மாகாண சபை, உள்ளூராட்சி சபை ஆகியவற்றுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டு கிராம சபை மீண்டும் உருவாக்கப்பட வேண்டும். சர்வகட்சி ஆலோசனைக்குழுவோ அல்லது நானோ நாட்டிற்கு எதனையும் ஊட்டவில்லை. பிரச்சினைக்கு மஹிந்த சிந்தனையின் மூலமாக தீர்வுகாண வேண்டும் என ஜனாதிபதி எனக்கு கொடுத்த பொறுப்பை மட்டுமே செய்து வருகின்றேன். அந்த யோசனை இன்னும் மூன்று மாதங்களுக்குள் தயாரிக்கப்படும் என்றார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் 22-06-2009 இல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவிக்கையில் தேசிய பிரச்சினைக்கு அரசியல் யோசனை ஒன்று முன்வைக்க வேண்டும் என்று மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் சகல இனங்களும் ஐக்கியப்படும் வகையில் ஒரு நாட்டிற்குள் தீர்வு காண்பதாக அமைய வேண்டும். ஜனாதிபதியின் இந்த எண்ணத்தின் அடிப்படையிலேயே யோசனை தயாரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
சர்வகட்சி ஆலோசனைக் குழுவில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் யாவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொதுவான தீர்மானத்திற்கு வந்துள்ளது. ஜனநாயக நாட்டில் அரசாங்கத்திற்குள் பிரச்சினை இருந்தால் அதனை அமைச்சரவை அல்லது பாராளுமன்ற குழுவின் ஊடாக தீர்க்க வேண்டும். சிலர் அந்த சம்பிரதாயங்களை மீறி வெளியில் சென்று பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர். அந்தளவிற்கு கீழ் செல்வதற்கு நான் தயாரில்லை.
ஜனநாயக நாட்டில் கருத்துக்களை முன்வைப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு. அதனடிப்படையிலேயே அவர்கள் கருத்துக்களை வெளியிட்டிருக்கக் கூடும். எனினும், இது சம்பிரதாயத்தை மீறும் செயலாகும். சர்வகட்சி ஆலோசனைக் குழு 120 கூட்டங்களை கூட்டியுள்ளது. ஒவ்வொரு கூட்டமும் சுமார் இரண்டரை மணித்தியாலம் அல்லது அதற்கு மேல் கூடியுள்ளது. கூட்டங்கள் தொடர்பான முழு விபரங்களும் ஹன்சார்ட் அறிக்கையாளர்களால் அறிக்கையிடப்பட்டுள்ளது.
சர்வகட்சி ஆலோசனைக் குழுவிற்கு வெளிநாடுகளின் தலையீடுகள் இருப்பதாக முன்வைக்கப்படும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், அக்குழுவில் மக்கள் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளே இருக்கின்றனர். எனவே, இந்த குழுவினால் முன்வைக்கப்படும் யோசனைகள் எனது கருத்தாக அமையாது. அது பொது கருத்தாகும்.
சர்வகட்சி ஆலோசனை குழுவுக்கு புறம்பாக பாராளுமன்றத்தில் தெரிவு குழு அமைக்க வேண்டும் என்ற யோசனையும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முன்வைக்கப்ட்டதாக அறிகின்றேன். எனினும், அதுதொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக தெரியவில்லை.
தேர்தல் முறைமையை மறுசீரமைப்பதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவில் கடந்த ஐந்து வருடங்களாக நானும் ஒரு உறுப்பினராக இருக்கின்றேன். எனினும், கடந்த மாதம் கூடப்பட்ட கூட்டத்தில் கூட பொது நிலைக்கு வர முடியவில்லை. இவ்வாறான நிலைமையா தேவைப்படுகிறது.
சர்வகட்சி ஆலோசனைக் குழுவில் அரச தரப்பில் 11 கட்சிகளும் எதிர்த் தரப்பில் இரண்டு கட்சிகளும் இருக்கின்றன. இக்கட்சிகளால் பொதுவான நிலைப்பாட்டிற்கு வரமுடிந்துள்ளது.
யோசனைகளை சமர்ப்பித்ததன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அழைப்பு விடுவேன். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்ளும் யோசனையை முன்வைப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது. மக்கள் விடுதலை முன்னணி, ஹெல உறுமய, மக்கள் ஐக்கிய முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நாம் அழைப்பு விடுவோம்.
ஜனாதிபதியின் அறிவிப்பின் பிரகாரம் ஐக்கியப்பட்டால் மட்டுமே நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்பதை சகலரும் நினைவில் வைத்திருக்க வேண்டும். பிரித்தானிய காலத்தில் ஆங்கில மொழி மட்டுமே ஆட்சி மொழியாக இருந்தது. அன்றைய காலத்தில் சிங்கள, தமிழ் மொழிகளுக்கு உரிமை வழங்கப்படவில்லை. வழக்குக் கூட ஆங்கிலத்திலேயே நடைபெற்றது.
இவ்வாறானதொரு நிலையிலேயே 1931ஆம் ஆண்டு சிங்கள, தமிழ், மொழிகளை பயன்படுத்த வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தோம். அந்த யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதேவேளை, 1956ஆம் ஆண்டு சிங்கள மொழி மட்டும் அரச கருமமொழியாக பிரகடனப்படுத்தப்பட்டது. இதன்மூலம் தேர்தல் பட்டியலை வைத்துக்கொண்டு தமிழர்கள் பச்சைப்பச்சையாக வெட்டிக்கொலைச் செய்யப்பட்டனர். இதனால், நம்பிக்கை களையப்பட்டு கோரிக்கையை முன்வைத்து இறுதியில் அந்த கோரிக்கை தனிநாட்டுக்கே வழிவகுத்தது.
தனி இராச்சியம் தேவையில்லை என்றால் அதிகாரங்களை கொடுக்க வேண்டும். பாராளுமன்றம், மாகாண சபை, உள்ளூராட்சி சபை ஆகியவற்றுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டு கிராம சபை மீண்டும் உருவாக்கப்பட வேண்டும்.
அதிகாரத்தைக் கொடுப்பதன் மூலமே கிராமங்களை அபிவிருத்தி செய்ய முடியும். ஒற்றையாட்சிக்குள் அதனை நடைமுறைப்படுத்தலாம் என்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்பதுடன் சர்வக்கட்சி ஆலோசனைக் குழுவின் யோசனையை இன்னும் மூன்று மாதங்களுக்குள் தயாரித்து முடித்து விடலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கடந்த காலங்களில் விட்ட பிழைகள் காரணமாக பல துக்கங்களை சந்திக்க நேர்ந்தது. பயங்கரவாதம், பிரிவினைவாதம் அழித்தொழிக்கப்பட்டு விட்டது. எனினும், பிரச்சினை இருக்கிறது. அந்த பிரச்சினைக்கு முகம்கொடுத்து தீர்வு காண வேண்டும். இல்லையேல் பிரிவினைவாதமும், பயங்கரவாதமும் தலைதூக்கி மீண்டும் பிரபாகரன் உருவாகுவதை தவிர்க்க இயலாது
நன்றி – வீரகேசரி

No comments:

Post a Comment