வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்குபுலம் பெயர்ந்தோரின் பங்களிப்பு அவசியம்- பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு ஸ்ரீதரன் நேர் கண்டவர்: பி. வீரசிங்கம்
30 வருடகால ஆயுதப் போர் முடிவுக்கு வந்து ஜனநாயக ரீதியிலான செயற்படுவதற்கான சூழலில் வடக்கில் நிலைமைகள் எப்படியிருக்கின்றன?
உண்மையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக துரதிஷ்டம் எமது சமூகத்தில் நீடித்தது. மக்கள் தமக்கிடையிலேயோ அல்லது மக்களும் அரசியல் கட்சிகளுமோ, பேசுவது என்ற நிலவரம் இருக்கவில்லை. கூட்டம் கூடுவது, கருத்தரங்கு நடத்துவது மிகவும் அரிதாகவே காணப்பட்டது. மக்கள் கோவிலுக்குப் போவதைத்தவிர வேறு எதையும் பெரிதாக செய்வதற்கான சூழல் இருக்கவில்லை. 20ஆண்டுகளுக்குப் பின்னர் இன்றைக்கு குறிப்பிடத்தகுந்த ஆயுத அச்சுறுத்தல் இல்லாது மக்களுடன் பேசக் கூடிய நிலை உருவாகியிருக்கிறது.
மக்கள் மத்தியில் கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம். கலந்துரையாடல் என்பது எமது சமூகத்தில் இல்லாது போனதன் விளைவே, கடந்த 30 வருடங்களில் நிகழ்ந்த இழப்புகளுக்கும் அழிகளுக்கும் துயரங்களுக்கும் காரணமாயின. எமக்கு பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அவற்றை உரியமுறையில் பயன்படுத்தாமல் போனதற்கான காரணம் மக்கள் மத்தியில் அதைப்பற்றி சரி பிழை என கலந்துரையாடுவதற்கோ, கலந்துரையாடி அதற்கு தீர்வு காண்பதற்கான இடைவெளி இல்லாமல் போனது. இந்த வகையில் தற்போது உருவாகியிருக்கின்ற இந்த சூழல் குறிப்பிடத்தக்க அம்சம் என்றுதான் நினைக்கின்றேன்.
மக்களின் உணர்வலைகள் எப்படியிருக்கிறது?
மக்கள் பாரியளவு எதிர்பார்ப்புகளுடன் இருக்கிறார்கள். அவர்களது மனம் மிகவும் மோசமாக காயப்பட்டிருக்கிறது. 30 வருடத்தில் சுமார் ஒரு லட்சம் பேர்வரை செத்திருக்கிறார்கள். 35,000 இளைஞர்களும், யுவதிகளும் பலியாகியிருக்கிறார்கள். பெரும் சொத்தழிவுகள். அவற்றை நாம் கற்பனை பண்ணிப் பார்க்கவும் முடியாது. உறவுகள் சிதறுண்டு பிரிந்திருக்கின்றன. வவுனியா, யாழ்ப்பாணம் மட்டக்களப்பு, இந்தியாவில் மண்டபம் மற்றும் ஏனைய முகாம்களில் இருக்கின்றனர்.
வன்னி மக்கள் பற்றிய நியாயமான கவலை யாழ்ப்பாண மாநகர சபை, வவுனியா நகரசபை எல்லைகளுக்குள் இருப்பவர்களாகவும் சரி பொதுவாகவே யாழ்ப்பாணம் வவுனியா மக்களின் மனங்களை ஆக்கிரமித்திருக்கின்றது. அந்த மக்கள் சுயமரியாதையாக சுதந்திரமாக தங்கள் இடங்களில் வாழ வேண்டும். தங்களுக்கு ஏதோ ஓர் விதமான அரசியல் அதிகாரம் உரிமை வழங்கப்பட்டிருக்கிறது என்று கருதக்கூடிய விதமாக நிலவரம் ஏற்பட வேண்டும். மற்றது தமிழ் கட்சிகள் எல்லாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
யாழ். மாநகரசபை வட்டத்தில் வாழும் மக்கள் பல பற்றாக்குறைகளுடன்தான் வாழ்கின்றார்கள். தங்கள் சீவியத்தைக் கொண்டு நடத்துவதற்கு மின்சாரம் இல்லாது, மலசலகூடம் இல்லாது சிலருக்கு இருக்க வீடில்லை. இருக்கின்ற வீடுகளுக்கு கூரையில்லை. பக்கங்களை மறைப்பதற்குரிய வசதிகள் இல்லை. பொருட்கள் இல்லாது மிகவும் கஷ்டமான வாழ்க்கை வாழ்கின்றார்கள். அவர்களுக்கு ஒரு ஏக்கம் இருக்கிறது. சமாதானம் வர வேண்டும். இயல்பு வாழ்க்கை திரும்ப வேண்டும். இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் இடங்களுக்கு மீண்டும் செல்ல வேண்டும். படிப்படியாக காப்பரண்கள், சோதனைச் சாவடிகள் இல்லாதவொரு காலம் வர வேண்டும். சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதே. தொழில் இன்மை பெரிய பிரச்சினை. தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். அவர்களுடைய பிள்ளைகள் கற்க வேண்டும். பல எதிர்பார்ப்புகள் மக்களுக்கு இருக்கின்றன. உண்மையாக வடக்கு கிழக்குக்கு பிரத்தியேகமாக அதைச் செய்ய வேண்டும்.
தற்போதைய யாழ் மாநகரசபைத் தேர்தல் தொடர்பில் உங்களது கருத்தென்ன?
தேர்தல் என்பது எங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. மிக நீண்டகாலத்துக்கு பின்பு நாங்கள் மக்களை சந்திக்கக் கூடியதாகவுள்ளது. எமக்கு மகிழ்ச்சியாகவும் அவர்களின் இன்ப துன்பங்களில் கலந்து கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது. அதுவொரு முக்கியமான அம்சம் என்றே கருதுகிறோம். பாரியளவு வன்முறைகள் எதுவும் இல்லை. மக்கள் சுதந்திரமாகக் கதைக்கக் கூடிய விரும்பியவர்களுக்கு வாக்களிக்கக் கூடிய, சரி பிழைகளை சுட்டிக்காட்டக் கூடிய இயக்கங்கள், கட்சிகள் மற்றும் அரசாங்கம் விடும் பிழைகளை சொல்லுகிற நிலை வரவேண்டும்.
நிறையப் பேர் வேலை வாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள். உண்மையாக வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்த வேண்டுமானால் தொழிற்துறைகளை மேம்படுத்த வேண்டும். கடந்த 30 வருடமாக எந்த அபிவிருத்தியும் நடக்கவில்லை. அரசாங்கம் இந்த விடயங்களைச் செய்ய வேண்டும். இந்தியாவும் உள்ளக கட்டமைப்பை ஏற்படுத்துவது தொடக்கம் வன்னியில் 5000 வீடுகள் கட்டிக்கொடுப்பது கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் தொடர்கின்றன. இந்திய வைத்திய குழுவினர் இதுவரை 13,000 பெருக்கு, வைத்தியம் செய்துள்ளனர்.
ஒருமனித உரிமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் வடக்கு கிழக்கில் அபிவிருத்தியில் புலம்பெயர்ந்த தமிழர்கள் இணைந்துகொள்ள வேண்டும். அவர்கள் சேர்த்து வைத்திருக்கின்ற நிதி ஐரோப்பாவிலோ, வட அமெரிக்காவிலோ முதலீடு செய்வதற்கு போதியதல்ல. அந்த பணத்தை இங்கு முதலீடு செய்வதன் மூலம் நிறைய பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்க முடியும். அவர்களுடைய அனுபவங்களும், இவர்களுடைய திறமைகளும் சங்கமிக்கும் போது மொழி அறிவு உலக அறிவு என்பனவும் பலப்படும். அவ்வாறும் வரும் வேளை எமது பல்கலைக் கழகங்களில் பணியாற்றுவதற்கு நிறைய ஆசிரியர்கள், பேராசிரியர்கள் இங்கு வந்து சேர்வதற்கு சாத்தியங்கள் உள்ளன. பொருளாதார வல்லுனர்கள் உட்பட சகல துறைகளிலும் நாங்கள் முன்னேறலாம். இதற்கு அரசியல் அதிகாரப் பகிர்வும் ஜனநாயக அடித்தளமும் தேவையானதாகும். இதைத்தான் தேர்தலில் நாங்கள் சொல்கிறோம். இதுவரை நகரங்களில் காரியாலங்களை வைத்துக் கொண்டு மக்களை சந்திக்க முடியாத நிலவரம் இருந்தது. நாங்களும் அபாயங்களை எதிர்கொண்டு மக்களை சந்திக்க வேண்டியிருந்தது. இப்போது எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. மக்களோடு வேலை செய்யக்கூடிய, அவர்களுடைய இன்ப துன்பத்தில் பங்கெடுக்கக் கூடிய அவர்களும் சாதாரண மனிதர்களாக தொழிலை செய்து கொண்டு செயற்படக் கூடிய சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது.
தேர்தல் கள நிலவரம் எப்படியிருக்கிறது?
உண்மையில் மக்களுக்கு தேர்தல் பற்றிய ஈடுபாடு இருக்கவில்லை. நேர்மையாக சொன்னால் இன்றுவரைக்கும் அந்த ஈடுபாடு இல்லை. ஏனென்றால் அவர்களுக்கு ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன. உறவுகள் முகாம்களில் இருக்கின்றன. அதைவிட அன்றாட பிரச்சினைகள் இருந்தாலும் தேர்தலில் நாங்கள் பங்குபற்றாமல் இருக்க முடியாது. ஏனென்றால் மாநகரசபை, நகரசபை என்பது மக்களின் அன்றாட ஜீவாதார தேவைகள் சம்பந்தப்பட்டவை. எல்லாம் அதற்குள்தான் செய்ய வேண்டியுள்ளது. கழிவறை, சாக்கடை, பிரச்சினையாக இருந்தால் என்ன கடைகள், நகர்ப்புறங்கள் சுத்தமாக இருக்கவும், வீதிகள் செப்பனிடவும் சிறு வீடமைப்புகள், சுற்றாடல் பாதுகாப்பு, சிறுவர் பூங்கா, வாசிகசாலை பெண்களுக்குரிய மருத்துவ நிலையங்களாக இருந்தால் என்ன இதற்கெல்லாம் உள்ளூரில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இருக்க வேண்டும். அத்துடன் அந்தந்த தேர்தல் என்பது ஜனநாயகத்தின் முக்கிய கூறு. அந்த வகையில் இந்தத் தேர்தல் மக்கள் மத்தியில் ஒரு கலகலப்பை உண்டாக்குவது மாத்திரமல்ல அவர்களுடைய ஊரிலிருந்து பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு போவதனூடாக மேற்படி சிறு பிரச்சினை களுக்குத் தீர்வு காண முடியும் என்று நாங்கள் கருதுகிறோம்.
அந்த வகையில் அது முக்கியமான விடயம். எமது சமூகத்தில் தேர்தல்களை, நிராகரிப்பது, மறுதலிப்பது போன்ற கருத்துக்களே இருந்தன. மக்களுக்கும் ஒரு முகம், அடையாளம் வருகிறது. அதற்கப்பால் அவர்களுடைய மனதில் இருக்கக் கூடிய விடயங்களையும் புரிந்து கொள்ள வேண்டும்.
தேர்தலுக்குப் பின்னரும் இந்நிலை தொடருமா?
தேர்தலுக்குப் பிறகும் நிச்சயமாக நாம் ஏனையவர்களை தாக்குவது போன்றவற்றை செய்வதில்லை. எதிர்காலத்திலும் இந்த ஒற்றுமைக்கான முயற்சியை தொடரப் போகிறோம். கோரிக்கைகளை வலியுறுத்தும் போது முக்கியமான இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாகவும் குறிப்பாக வன்னி மக்கள் எதிர்நோக்குகின்ற கஷ்டங்களில் இருந்து அவர்கள் தங்களுடைய இடத்தில் குடியேற்றப்பட்டு பாதுகாப்பாகவும், கௌரவமா கவும், சுயமரியாதை யாகவும் வாழ்வதற்கு ஏற்படுத்துவது தொடர்பாகவும் குறைந்த பட்சம் நாங்கள் ஐக்கியப்பட வேண்டும். எங்களிடம் வெறுபட்ட அபிப்பிராயங்கள் இருக்கலாம். இந்த விடயத்துக்கு எங்களை நாங்கள் அர்ப்பணிப்போம். அதற்காக தொடர்ந்து நாங்கள் செயற்படுவோம்.
தமிழ் கட்சிகள் ஒன்றாக இணைந்து செயற்படாத நிலையில் எதிர்காலத்தில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு விடயத்தில் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்க முடியுமென கருதுகியர்கள்?
கேட்கிற கேள்வி ஒரு கசப்பான உண்மை தான். என்னவென்றால் எங்களுக்குள் ஒற்றுமை என்பது ஒரு சருக்கு மரம் ஏறுவது போன்றது. நாங்கள் மூன்று கட்சிகள் பத்மநாபா ஈ. பி. ஆர். எல். எப். , த. வி.கூ. புளொட் இணைந்து சுமார் நான்கு வருடங்களாக செயற்பட்டு வருகின்றோம்.
அதற்குள் குறிப்பிடத் தகுந்தளவு பயன்களை அல்லது மக்கள் சார்பான விடயங்களை சொல்லியிருக்கின்றோம். நாங்கள் இலங்கை அரசுடன் தீர்வு தொடர்பாக பேசும் போதும் மக்கள் விடயம் சம்பந்தமாக இந்தியாவுடன் பேசும் ஒற்றுமை எங்களுக்கு பெருமளவு உதவியிருக்கிறது. குறைந்தபட்சம் மூன்று கட்சிகளும் இணைந்து செயற்பட்டிருக்கிறோம். எனினும் இது போதியதல்ல. இதைவிட விரிவாக நாங்கள் கட்டியெழுப்ப வேண்டும். இன்னும் வௌ;வேறு கட்சிகளுக்கிடையே உறவுகளை ஏற்படுத்த முடியுமா என பார்க்க வேண்டும். மேலும் பாரம்பரியமான இடதுசாரி கட்சிகளுடன் உறவுகளை ஏற்படுத்தி சமூகத்தின் வௌ;வேறு பிரச்சினைகள், தொழிலாளர்கள் பிரச்சினை சாதிப் பிரச்சினை. பெண்கள் பிரச்சினை சமூகத்தின் தேசிய பிரச்சினைகள் உட்பட எல்லா பிரச்சினைகளையும் கையாளும் விதமான பண்பாட்டை கட்டியெழுப்ப வேண்டும். பரந்தளவிலான ஒரு ஐக்கியத்தை கட்டியெழுப்ப வேண்டும் தமிழ் கட்சிகளுக்கிடையில் இது கஷ்டமான விடயம்.
ஒரு உருளைக்கிழங்கு மூடை மாதிரி. நெல்லிக்காய் மூடை மாதிரி இது...
நன்றி - தினகரன் வாரமஞ்சரி
No comments:
Post a Comment