அரசியல் தீர்வு நகலில் ஜனாதிபதியின் யோசனைகளையும் உள்ளடக்க முடிவு- திஸ்ஸ விதாரண
சர்வகட்சி பிரதிநிதிகள் குழு தயாரித்துள்ள அரசியல் தீர்வு நகல் வரைவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைகளும் உள்ளடக்கப்படவுள்ளதாகவும், இதற்கென ஜனாதிபதியைச் சந்தித்து, தீர்வு நகல் வரைவு குறித்து விளக்கமளிக்கவுள்ளதாக குழுவின் தலைவர் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.ஜனாதிபதியைச் சந்தித்து அவரது ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டதன் பின்னர், மீண்டும் சர்வகட்சிப் பிரதி நிதிகள் கூடி ஆராய்வார்கள். அதனைத் தொடர்ந்து தீர்வு நகல் வரைவு, குழுவில் இடம்பெறும் அனைத்துக் கட்சிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றார். நகல் வரைவுக்கு கட்சிகள் அங்கீகாரம் வழங்கியதும், அவற்றின் பிரதிநிதிகள் தீர்வுத் திட்டத்தில் கைச்சாத்திடுவார்கள். அதன் பின்னரே, தீர்வு வரைவு ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் ஆவணமாகுமென்றார்.சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு தயாரி த்துள்ள தீர்வுத்திட்டம் நூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்டதாகும். அதனை ஜனாதிபதிக்கு விளக்கிக் கூற வேண்டும். இதனைப் புரிந்துகொள்ளாமல் ஊடகங்கள் செய்திகளைத் திரிபுபடுத்தி வெளியிட்டு வருவதாக அமைச்சர் விசனம் தெரிவித்தார். சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் 13 கட்சிகளின் பிரதி நிதிகள் பங்குபற்றித் தீர்வு தொடர்பில் தமது இணக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், தீர்வுத் திட்டத்தை கட்சி மட்டத்தில் ஆராய்ந்து அங்கீகரிக்க வேண்டும். அது வரை பிரதிநிதிகள் அதில் கையெழுத்திட முடியாது. அந்தப் பணியையும் பூர்த்தி செய்த பின்னர்தான் தீர்வுத் திட்டம் முழுமை பெறுமென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment