16 August 2009

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான பிரக்ஞை பூர்வமான செயற்பாடுகள் இல்லை- தி.ஸ்ரீதரன்- பொதுச் செயலாளர் பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி.

கேள்வி:- நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தல்களில் வவுனியாவிலும், யாழ்ப்பாணத்திலும் உங்கள் கட்சி வெற்றி பெறவில்லை. இதற்கான காரணங்கள்?

பதில்:- கடந்த 20 வருடங்களுக்கு மேலாகவே எமது கருத்துக்களை, செயற்பாடுகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல முடியாத நிலை இருந்தது. ஜனநாயகம் இருக்கவில்லை. ஊடகங்களும் பக்கச் சார்பாகவே செயற்பட்டு வந்தன.

தற்போது அந்த நிலையில் மாற்றம் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. நாம் மக்கள் மத்தியில் வேலை செய்வதற்கு, கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு ஒன்றித்து வாழ்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. மாற்று ஊடகங்களின் செயற்பாட்டிற்கும் சாதகமான நிலை காணப்படுகின்றது.

எனினும் இவற்றை மேற்கொள்வதற்கு கால அவகாசம் தேவை. தேர்தல் அள்ளித் தெளித்த கோலத்தில் அவசர அவசரமாக நடத்தப்பட்டதால் எமக்கு பின்னடைவு ஏற்பட்டது. தவிர மக்கள் மிகவும் துன்பகரமான சூழ்நிலையில் இருக்கிறார்கள். உறவினர்கள் வவுனியா, யாழப்பாண முகாம்களில் அவதியுறும் போது இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான பிரக்ஞை பூர்வமான செயற்பாடுகள் இல்லாததாலும் விரக்தியடைந்த நிலையில் மக்களில் கணிசமான பகுதியினர் வாக்களிக்க முன்வரவில்லை.

கேள்வி:- மக்கள் உங்களை மறந்து விட்டார்கள், அல்லது மக்களை நீங்கள் மறந்து விட்டீர்கள். இது பற்றிய உங்கள் கருத்தென்ன?

பதில்:- காலவெள்ளத்தில் பல நினைவுகள் மக்களைவிட்டு அகன்று விடுகின்றன என்பது உண்மைதான். மலையளவு எழுந்த சுனாமி அலைகளாக மக்கள் பிரச்சினைகளைத் தலையில் சுமக்கும் போது எல்லாவற்றையும் மக்கள் தமது ஞாபகங்களில் வைத்திருக்க முடிவதில்லை. ஆனால் இது தற்காலிகமான நிலைதான். எமது மக்களின் அரசியல் உரிமைகளுக்காகவும் ஜனநாயகத்திற்காகவும்,எமது ஆயிரக்கணக்கான தோழர்கள் தமது வாழ்வை அர்ப்பணித்திருக்கிறார்கள். இது வரலாற்று உண்மை.

இணைந்த வடக்கு – கிழக்கில் ஒரு மாகாண அரசாங்கத்தை நிறுவியவர்கள் நாங்கள். சகோதரப் படுகொலைகளுக்கு எதிராக ஜனநாயகத்தை, ஐக்கியத்தை, வலியுறுத்தியவர்கள். சுமூகத்தின் நலிவுற்ற விளிம்பு நிலை மக்களின் குரலாக இருந்தவர்கள். சுகல சமூகங்களுடனும் சகோதரத்துவத்தையும், அண்டை நாட்டுடன் நட்புறவையும் நேசிப்பவர்கள் நாங்கள். எமது மக்கள் தொடர்பாக எமக்கு எழிலார்ந்த கனவுகள் உண்டு. சுதந்திர சமத்துவ, சகோதரத்துவ வாழ்வு எய்தப்பட வேண்டும் என்பதே அது. இங்கு மக்கள் எம்மை மறந்து விடுவதோ என்ற பேச்சுக்கே இடமில்லை. மகாகவி பாரதியின் வார்த்தைகளில் சொல்வதானால் “தேடிச்சோறு நிதம் தின்று சின்னஞ் சிறுகதைகள் பேசி வேடிக்கை மனிதரைப் போல்” நாம் வீழ்ந்து விட மாட்டோம். வரலாறு அதனை மெயப்பிக்கும்.

கேள்வி:- இந்த இரு உள்ளுராட்சி தேர்தல்களிலும் வாக்களிப்பு வீதம் குறைவாகவே காணப்பட்டத. இதற்கான காரணம் என்ன?

பதில்:- மக்களின் மனங்களில் ஆயிரம் காயங்கள், வேதனைகள். இந்த காயங்கள் ஆற்றப்படவில்லை. முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் அகதி வாழ்வு 60 ஆண்டுகளுக்கு மேலாக நிலவும் காணப்படவில்லை. வாழ்க்கை நேர்த்தியானதாக இல்லை. வாழ்க்கை சீரழிந்து போய்க்கிடக்கிறது.

தமது அலுவல்களை ஐக்கிய இலங்கைக்குள் தாமே பார்த்துக் கொள்ளும் விதமான அரசியல் தீர்வு, இடம்பெயர்;ந்த வன்னி மக்கள் சுயமரியாதை, கௌரவம், பாதுகாப்புடன் தமது சொந்த நிலங்களில் வாழ்வதற்கான நிலைமையை ஏற்படுத்துதல் வன்முறை கலாச்சாரத்தின் மிச்ச மீதிகள் அடியோடு ஒழிந்து பயத்திலிருந்து விடுபட்டு- பாதுகாப்பாக வாழ்வதற்கான நிலைமைகள் உறுதிப்படுத்துதல் போன்றவற்றினூடாகவே தேர்தல் போன்ற ஜனநாயக நடவடிக்கைகளில் மக்கள் பெருமளவில் கரிசனை செலுத்துவதற்கான நிலைமைகளை தோற்றுவிக்க முடியும்.

நன்றி – வீரகேசரி வார வெளியீடு

No comments:

Post a Comment