13 August 2009

தேர்தல் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் இரு மனுக்கள் தாக்கல்

அரசியல் கட்சிகளை அங்கீகரிப்பது தொடர்பில் தற்போது நடைமுறையில் இருக்கும் பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்திலுள்ள பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு சபைக்குப் புதிதாக சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இரண்டு நேற்று புதன்கிழமை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 6 ஆம் திகதியன்று பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்கவினால் முதலாம் வாசிப்புக்கென பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட “பாராளுமன்றத் தேர்தல்கள் (திருத்தம்) 1981 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்” எனும் பெயரிலான திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராகவே இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இரண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தற்போது நடைமுறையிலிருக்கும் 1981 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தில் கட்சிகளை அங்கீகரிப்பது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான பிரிவுகளுக்கு திருத்தங்களைக் கொண்டுவரும் பொருட்டே அரசாங்கத்தினால் இந்த திருத்தச் சட்டமூலம் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

எனினும் இந்தச் திருத்தச் சட்டமூலமானது அரசியலமைப்பின் பிரகாரமான அடிப்படை உரிமைகளை மீறுவதற்காக அமைத்திருப்பதால் அதை சாதாரண சட்டமூலங்களைப் போல நிறைவேற்றாமல் அதை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையென்றும் அத்துடன் இந்த சட்டமூலம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்தி மக்களின் கருத்து பெறப்படவேண்டுமென்றும் நிபந்தனை விதிக்குமாறு கோரியே சட்டமா அதிபரை பிரதிவாதியாக குறிப்பிட்டு இவ்விரு அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.

அரசியலமைப்பின் 121 ஆவது உறுப்புரையின் பிரகாரம் மனு தாக்கல் செய்யப்பட்டு மூன்று வாரகாலப் பகுதிக்குள் விசாரித்து உயர் நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட வேண்டுமென்பதுடன், அக்காலப்பகுதிக்குள் உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் சபைக்கு அறிவிக்கப்படவில்லையெனில் குறித்த சட்டமூலத்தை 2ஆம் வாசிப்புக்கான நடவடிக்கைகளுக்கு எடுத்துக்கொள்ள முடியாதென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment