தேர்தல் திருத்தச் சட்டத்தின் சர்ச்சையான விடயங்களை நீக்க உடன்பாடு
அரசியல் கட்சிகளை அங்கீகரித்தல் உட்பட உத்தேச தேர்தல் திருத்தச் சட்ட மூலத்துக்கு முன்மொழியப்பட்டிருக்கும் சர்ச்சைக்குரிய பகுதிகளை முற்றாக நீக்குவதற்கு தேர்தல் சட்டதிருத்தம் தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக்குழு இணக்கப்பாடு கண்டுள்ளது. பாராளுமன்றக் கட்டிடத்தில் தெரிவுக்குழுத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் கூடியபோது அரசியல் கட்சிகளால் தெரிவிக்கப்பட்ட ஆட்சேபனைகளையடுத்து சர்ச்சைக்குரிய அம்சங்களை நீக்குவதற்கும் திருத்தச் சட்ட மூலத்தை புதிதாக தயாரித்து முன்வைப்பதற்கும் உடன்பாடு காணப்பட்டுள்ளது. இக் கூட்டத்தில் அமைச்சர்கள் டியூகுணசேகர, திஸ்ஸ விதாரண, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட மேலும் பலர் இச் சட்ட மூலத்தால் ஏற்படக் கூடிய பாதகங்களைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேற்படி திருத்தங்களை பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு சமர்ப்பிக்காமல் அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்பட்டதானது சம்பிரதாயத்தை மீறி திருத்தங்களை திணிப்பதாகவே காணப்படுவதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கடுமையாக விமர்சித்தார். இதே அடிப்படையில் அமைச்சர்கள் டியூகுணசேகர, திஸ்ஸ விதாரணவும் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
இதனைக் கருத்திலெடுத்த தெரிவுக்குழு சர்ச்சைக்குரிய பகுதிகளை முற்றாக நீக்கிவிடுவதற்கு உடன்பாடு காணப்பட்டது. அத்துடன், திருத்தங்கள் மீள வரையப்பட்டு புதிய சட்டமூலமாக தயாரித்து தெரிவுக்குழுவின் அங்கீகாரம் பெறப்பட்டதன் பின்னரே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென்ற யோசனையையும் தெரிவுக்குழு இணக்கம் கண்டுள்ளது. இன, சமய ரீதியிலான பெயர்களைக் கொண்டு புதிதாக கட்சிகளை அமைப்பதற்கே சட்டதிருத்தம் வரையப்பட்டதாகவும் ஏற்கனவே உள்ள கட்சிகளுக்கு பாதகம் ஏற்படப்போவதில்லை எனவும் தெரிவுக்குழுத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன சுட்டிக்காட்டியபோது அதனை கடுமையாக எதிர்த்த ரவூப் ஹக்கீம், டி.யூகுணசேகர, திஸ்ஸ விதாரண போன்றோர் அதன் பின்விளைவுகள் பாரதூரமானவையாக அமையலாமென விளக்கியதையடுத்து சர்ச்சைக்குரிய சகல புதிய திருத்தச் சட்ட மூல அறிக்கையை அடுத்த தெரிவுக்குழு கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறும் அதனை தெரிவுக்குழு அங்கீகரித்ததன் பின்னர் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதெனவும் இணக்கம் காணப்பட்டது.
No comments:
Post a Comment