02 September 2009

இலங்கையின் தேர்தல் சாக்கடை
தேர்தலுக்கான அரசியலும் அரசியலுக்கான தேர்தல்களும் - எஸ். மனோரஞ்சன்
பதவியில் இருக்கும் அரசாங்கம் வெற்றிபெறும் வாய்ப்பு இருக்கும்போதே தேர்தல்கள் நடத்தப்படுவதற்கான காலமும் நேரமும் தீர்மானிக்கப்படும் ஒரு விகடத்தனமான போக்கு இலங்கையில் நடைமுறைக்கு வந்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் எந்தத் தேர்தலையும் நடத்தலாம் என்னும் ஒரு நிலைமை தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த காலத்தில் இருந்து இதுவரை 8 தேர்தல்களை நடத்தியுள்ளது அதில் பெரும்பாலும் எல்லாவற்றிலும் அது வெற்றியும்கண்டுள்ளது.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு சபையானது தனது ஆட்சிக் காலத்தில் மக்களின் அபிவிருத்திக்கும் அவர்களின் நல்வாழ்விற்கும் என்ன செய்தது என்ன செய்யவில்லை என்பதை உரைத்துப் பார்க்கும் பரீட்சையாகவே சுதந்திரமான தேர்தல் ஒரு காலத்தில் இருந்தன. ஆனால் அது தற்போது தலைகீழாக மாறியுள்ளது. எப்படியாவது தேர்தல்களில் வென்று அதிகாரக் கதிரையை கைப்பற்றிவிட்டால் போதும் என்ற நிலையிலேயே அரசியல் இலங்கையில் செய்யப்படுகின்றது. உள்ளுராட்சி மற்றும் மாகாண மட்டத்தின் பிரதிநிதிகள் தேர்தல்களின் பின்னர் தவிர்க்க முடியாமல் அடிக்கடி தமது பிரதேச மக்களை சந்திக்க வேண்டும். எனவே அவர்கள் குறைந்தபட்சம் ஏதாவது அந்த மக்களுக்கு செய்தாக வேண்டும்.
ஆனால், தேசிய மட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு அந்தத் தலையிடியும்கூட கிடையாது. ஐந்து வருடத்திற்கு ஒருமுறை ஏதாவது சொல்லி பதவிக்கு வந்ததன் பின்னர் வசதியாக அவற்றை மறந்துவிடுவது மிக சகஜமான விடயமாக இலங்கையில் தற்போது கடைப்பிடிக்கப்படுகின்றது. எப்படியாவது பாராளுமன்றம் சென்று ஐந்து வருடங்கள் தாக்குப்பிடித்துவிட்டால் போதும் வாழ்க்கை முழுவதும் ஓய்வூதியமும் பல்வேறு வசதிகளையும் பெறக்கூடிய அரியதொரு தொழில் வாய்பாகவே மந்திரிப் பதவி பார்க்கப்படுகின்றது. ஒரு முறை பாராளுமன்ற உறுப்பினராகி அதன் வசதிகள் மற்றும் சுகங்களை அனுபவிப்பவர்கள் மறுமுறையும் அந்தப் பதவிக்காக கடைவாயில் எச்சில் ஒழுக எதையும் விட்டுக்கொடுக்க தயாராகி ஓடித் திரிவதன் இரகசியம் இதுதான்.
இன்று இலங்கையில் தேர்தல்களில் பங்குபற்றி பதவிக்கு வருவதற்காகவே அரசியல் களத்தில் குதிப்பது ஒருபக்க நடைமுறையாக உள்ளது. மறுபறம் மக்களுக்கு நலன் தருகிறதோ இல்லையோ தாம் செய்யும் அரசியலை தொடர்ந்து செய்வதற்கு வாய்ப்பாக இருப்பதற்காக தேர்தல்களை நடத்துவதும் நடைமுறையில் வந்துள்ளது. தமது கட்சி தோற்றுவிடும் என்று தெரிந்தால் தேர்தல்களை பின்போடுவதும் தாம் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு இருக்குமென்றால் உரிய காலத்திற்கு முன்னரே தேர்தல்களை நடத்துவதும் இன்று மக்கள் நையாண்டிசெய்யும் தேர்தல் நடைமுறையாக வந்துள்ளது. இத்தகைய பின்னணியில் தற்போது இலங்கையில் நடைபெறும் பெரும்பாலான தேர்தல்கள் வெறும் கோமாளித்தனமானவை என்றால் மிகையேதுமில்லை.
முழுமை http://www.thenee.com/html/030909-1.html
நன்றி- தேனீ

No comments:

Post a Comment