12 February 2010

இறுதிக் கட்டப் போரில் 40 ஆயிரம் மக்கள் கொலை : கோர்டன் வைஸ்

இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதலின் இறுதிக் கட்டத்தில் சுமார் 40 ஆயிரம் பொதுமக்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என இலங்கைக்கான ஐ.நா வின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் இலங்கை அரசை சர்வதேச யுத்தக் குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று அவுஸ்திரேலியாவின் ஏ.பி.சி. செய்திச் சேவைக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்ததாக வீரகேசரி இணையம் தெரிவித்துள்ளது. மேலும் அந்த இணையச் செய்தியில்

"சுமார் 10 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரையிலான பொதுமக்கள் ஜனவரிக்கும் மே மாதத்திற்கும் இடையில் பலியாகினர் என நான் கேள்விப்பட்டேன். பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்த நம்பகத்தன்மை மிக்க வட்டாரங்களே இதனைத் தெரிவித்தன.

பொதுமக்கள் பாதுகாக்கப்படுவார்கள் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்கு இலங்கை அரசு தொடர்ச்சியாக இக் காலப் பகுதியில் உறுதியளித்து வந்தது.

பொதுமக்களுக்கு எவ்வித உயிரிழப்பும் ஏற்படாது, இதுவே பல வருடங்களாக இலங்கை இராணுவத்தின் பாரம்பரியமாகவும், வழிகாட்டும் கொள்கையாகவும் உள்ளது.

பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்காக கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படமாட்டா என்றெல்லாம் இலங்கை அரசு தெரிவித்து வந்தது.

எனினும், கொல்லப்பட்டவர்கள் என நான் கருதும் பொதுமக்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளும்போது நிலைமை வேறு மாதிரியாக இருந்தது புலனாகின்றது.

கனரக ஆயுதங்களே பயன்படுத்தப்பட்டன

சகல விதமான ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டன. துப்பாக்கிகள் போன்ற சிறிய ஆயுதங்கள் முதல் மோட்டார்கள், ஆட்டிலறிகள் முதலிய கனரக ஆயுதங்கள் வரை விடுதலைப் புலிகளின் நிலைகளைத் தகர்ப்பதற்குப் பயன்படுத்தப்பட்டன.

பொதுமக்கள் குறித்து போதிய கவனம் எடுக்கப்படவில்லை. இலங்கை அரசு தெரிவித்த பல விடயங்கள் பொய்யானவை. சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் நோக்கமுடையவையாகவே அவை காணப்பட்டன.

அரசு தனது நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகப் போர் முனையில் சிக்கியிருந்த மக்களின் எண்ணிக்கையை வேண்டுமென்றே குறைத்துக் கூறியது என அரச அதிகாரி ஒருவரே ஏற்றுக்கொண்டிருந்தார்.

விடுதலைப்புலிகளும் மக்களைத் தமது கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வெளியேறுவதைத் தடுக்க முயன்றனர்.

இலங்கை அரசை சர்வதேச விசாரணைக்குட்படுத்த வேண்டும்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment