ஜெனரல் சரத் பொன்சேகா தனது நியாயங்களை எழுத்து, வாய்மூலமாக முன் வைக்கலாம் - ஜெனரல் பிரசாத்
இராணுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா தனது தரப்பு நியாயங்களை எழுத்து மூலமாகவோ அல்லது வாய்மூலமாகவோ இல்லையேல் சட்டத்தரணிகள் மூலமாகவோ இராணுவ நீதிமன்றத்தில் முன்வைக்கலாம் என்று இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவிற்கு எதிராக சாட்சிகளை முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைளில் இராணுவமும் பாதுகாப்பு அமைச்சும் ஈடுபட்டுள்ளன. அதற்கு பின்னரே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றார். மேலும் அவர் தெரிவிக்கையில்
ஜெனரல் பொன்சேகா மீதான குற்றச்சாட்டுக்கள் மற்றும் முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு அதன்பிரகாரம் தயாரிக்கப்படும் குற்றப்பத்திரிகை தேவையான சட்ட நடவடிக்கைகளுக்காக இராணுவ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
ஜெனரல் பொன்சேகாவின் கைதானது இராணுவ ஒழுங்குவிதிகள் மற்றும் சட்டத்திட்டங்களுக்கமைய எடுக்கப்பட்டதேயன்றி எந்தவொரு அரசியல் சூழலுக்காகவும் மேற்கொள்ளப்பட்டதல்ல.
இராணுவ சட்டத்தின் 57(01)ஆவது சரத்துக்கமையவே ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இராணுவ சேவையில் ஈடுபட்டிருக்கும் காலப்பகுதியில் ஒருவர் குற்றங்களைப் புரிந்திருப்பின் அதன்பின்னரான ஆறு மாத காலப்பகுதிக்குள் அதாவது அவர் ஓய்வு பெற்றிருந்த போதிலும் அவரை இராணுவ சட்டத்துக்கமைய கைது செய்ய முடியும் என்றார்.
No comments:
Post a Comment