11 February 2010

ஆட்சி மாற்றம் வேண்டியவர்கள் ஒட்டுத் துணியையும் (!!!) உருவிவிட்டனர்

இலங்கையின் ஆறாவது ஜனாதிபதித் தேர்தல் சில சிறிய அசம்பாவிதங்களுடன் நடந்து முடிந்திருப்பினும் தேர்தல் மோசடிகள் பெரும்பாலும் தவிர்க்கப்பட்ட தேர்தலாகவும் இத்தேர்தல் அமைந்திருப்பதை பலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அத்துடன் தேர்தல் முடிவுகள் பற்றி பரபரப்பாகப் பேசப்பட்டபோதிலும் மகிந்த ராஜபக்ஷ தேர்தலில் மிகப்பெரிய வேற்றியை அடைந்துள்ளார்.

சிங்கள மக்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காக யுத்த வெற்றிக் கதாநாயகர்கள் களம் இறங்கி போட்டியில் குதித்தனர் எனக் கூறப்பட்டாலும் சிங்கள மக்கள் உறுதியான தமக்கும் இலங்கைக்கும் தேவையான அவசியமான ஒரு தலைவரை தேர்ந்தெடுத்துள்ளனர்.

ஐக்கிய தேசியக்கட்சி தங்களுள் ஒரு வரை வேட்பாளராக நிறுத்தமுடியாத அளவுக்கு பலவீனமாக இருந்தது. அந்த நிலையில் மகிந்தராஜபக்சவிற்கும் சரத்பொன்சேகாவிற்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்த முனைந்தது ஐக்கியதேசியக்கட்சி. எனவேதான் சரத்பொன்சேகாவிற்கு பதவி ஆசையை ஊட்டி அவரை தேர்தல் களத்திலும் இறக்கியது. காலம் காலமாக மேற்குலக நாடுகளின் கைப்பிள்ளையாக இருப்பதனால் சரத்பொன்சேகாவையும் அமெரிக்காவுக்கு அனுப்பி அவர்களுடைய ஆசீர்வாதத்துடன் வெற்றி பெறலாம் எனத் தீர்மானித்தனர் ஐக்கியதேசியக் கட்சியினர்.

ரணில் விக்கிரமசிங்காவைப் பொறுத்தவரையில் அவர் மிக நரித்தனமான திட்டங்களைத் தீட்டுவதில் வல்லவர். ஒரு பக்கம் பிரபாகரனுடன் சிரித்து சிரித்துப் பேசி புலிகள் கப்பம் வேண்டுவதையும், மாற்றுக் கருத்தாளர்களை, கல்விமான்களை, புத்திஜீவிகளை எல்லாம் கொன்று குவிக்கும் போதும் கண்டும் காணாமல் இருந்தார். மறுபக்கம் கருணாவைப் பிரித்து புலிகளை பலவீனப்படுத்தியதிலும் பெரும் வெற்றியைக் கண்டார் ரணில் அவர்கள். ஆனால் அதே போன்று மகிந்தவுக்கும், சரத்துக்குமான பிளவைப் பெரிதாக்கி மகிந்த குடும்பத்தை அடியோடு அழிக்க முனைந்த ‘ரெக்னிக்’ சிங்கள மக்களால் முறியடிக்கப்பட்டுள்ளது.

நடைபெற்ற சுனாமியைக் காரணம் காட்டியும், யுத்தத்தைக் காரணம் காட்டியும் மேற்குலக அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கையை தமது நிரந்தர வசிப்பிடமாக்க முனைகின்றனர். அவர்களின் பிரதான முயற்சியாக இருப்பது இலங்கையில் மேற்குலக விசுவாசம் கொண்ட அரசை நிறுவவேண்டும் என்பதே. அவர்கள் எப்போதும் இல்லாதவாறு இம்முறை தமது பொருளாதார பலத்தைக் கொண்டு மகிந்த அரசை தோற்கடிக்க முற்பட்டாலும் வடக்கிலும் கிழக்கிலும் அவர்களது திட்டம் பலித்தது. ஆனால் சிங்கள மக்கள் மத்தியில் அவர்களது திட்டம் நிறைவேறவில்லை.

தமிழ் மக்களின் ‘தமிழ் தேசிய’ அரசியல் தலைமைகள் மற்றும் பத்திரிகைகள் வானொலிகள், இணையத் தளங்கள் போன்ற அனைத்து மீடியாக்களும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு சரத்பொன்சேகாவை ஆதரித்தனர். தமது ஆதரவிற்காக அவர்கள் உதிர்த்த தத்துவம் என்னவென்றால். ‘ஆட்சி மாற்றம்’ ‘ஊழல்’ ‘குடும்ப ஆட்சி’ (மீண்டும் யுத்தம் தொடங்குவதற்காகன கொள்கைகளும் அதில் அடங்கியிருந்தது) என்பதேயாகும். இவர்களது பொன்னான தத்துவத்தை மண்ணாக்காமல் அப்படியே ஏந்திக் கொண்டுபோய் சரத்பொன்சேகாவிற்கு வாக்குகளாக கொட்டிவிட்டனர் ‘எமது தமிழ்த் தேசியப் பெருமக்கள்’

தொழிலாளர்களுக்கு பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு, ஊழல் அற்ற ஆட்சி போன்றவற்றைப் பேசியதோடு, சரத் பொன்சேகாவும், ஐக்கியதேசியக் கட்சியும் கோடிக்கணக்கில் பேரம் பேசி பல அரசியல் பிரமுகர்களையும் விலைக்கி வாங்கி தமது தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்து வந்தனர்.எவ்வளவுதான் சலுகைகளை சரத்பொன்சேகா அறிவத்த போதிலும் இலங்கையில் மீண்டும் பிரிவினைவாதமும், யுத்தமும் நடைபெறாது எனும் உத்தரவாதத்தை சரத்பொன்சேகாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சிங்கள மக்களால் கண்டு கொள்ள முடியாதிருந்தது.


தேசிய ஒருமைப்பாடு, கிராமிய அபிவிருத்தி, யுத்தமற்ற தேசம் போன்ற தேசியக் கட்டுமானக்களுக்கான வலுவான ஒரு தலைமையையே பெரும்பான்மையான சிங்கள மக்கள் வேண்டி நின்றார்கள். அதுவே அவர்களது தீர்ப்பாகவும் அமைந்தது.
எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை தமது பாரம்பரிய பேணுகையான ‘மதில் மேல் பூனை’ யாகவே இருந்தார்கள். ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு தாம் ஆதரவு அளிப்பது எனும் தீர்மானம் எடுப்பதற்கே வக்கற்றுப்போன கூட்டம். அவர்களது மேற்குலக சார்பு அரசியல் மோகமானது ஐக்கியது சியக்கட்சியுடனேயே தான் அவர்களை இணைக்கும் என்பதை நாம் ஏற்கனவே அறிந்து கொண்டது தான். ஆனால் தாம் மக்களின் கருத்துக்காக காத்திருப்பது போல் பாசாங்கு வேற காட்டித் திரிந்தார்கள்.


2009 மே 18 வரை பிரபாகரனின் பார்வை தம்மீது படிந்திருப்பதில் பேரின்பம் கொண்டிருந்த பாசிச அடிவருடிகள். பிரபாகரனின் பெயர் ஒலிக்கும் திசைகள் பார்த்து கைகட்டி வாய்பொத்தி நின்ற கூட்டம். இன்று ஆளுக்கொரு திசையில் ஜனநாயகம் பேசிக்கொண்டு அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டனர். இதில் குறிப்பாக சம்பந்தன்… , மானிட நேசத்தையே முதன்மையாகப் போற்றிய பத்மநாபாவை பிரபாகரன் ஒரு முறைதான் கொலை செய்தான். ஆனால் நாபாவை ஒவ்வொரு நாளும் கொலை செய்து கொண்டிருக்கிற சுரேஸ் பிரேமச்சந்திரன் என இவர்களே இன்றும் புலிப் பினாமிகளாகவே பவனிவந்து கொண்டிருக்கின்றார்கள்.

மேற்படி இரு நபர்களுமே இன்று புலம் பெயர் மக்களின் தமிழ்த் தேசியக் கனவுகளை நிறைவேற்றும் இரட்சகர்களாகவும் அவதரித்துள்ளார்கள். தமிழ்த் தேசியத்தின் பெயரில் முப்பது வருடங்களுக்கு மேலாக ஜனநாயகக் கருத்தியலை அழித்த ஆயுதப் போராட்டம் இன்று முடிவடைந்திருப்பதென்னவோ உண்மைதான். ஆனால் கடந்த 30 வருடங்களாக குருதியில் தோய்ந்து வாழ்ந்த சமூகத்தின் அனுபவங்களை இத் தேர்தலில் நாம் கண்டுகொள்ள முடியாதிருப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. தமிழ் வாக்குகளை நியாயமான வகையில் பயன்படுத்த தமிழ்த் அரசியல் தலைமகளும், இதில் மகிந்தவுக்கு ஆதரவளித்த தமிழ் கட்சிகள் உட்பட தமிழ் ஊடகங்களும் மிகப்பெரிய தடையாகவே இருந்து வந்ததையும் நாம் காணக்கூடியதாகவே இருந்தது.

மிகவும் பிற்போக்கான தலைமை, தூரநோக்கற்ற பார்வை, சர்வதேச அரசியல் சூழலை புரிந்து கொள்ளாமை, அயல் நாட்டு உறவுகளை பேணுகின்ற பக்குவமின்மை, மேற்குல மாயை போன்ற தன்மைகளே தமிழ் மக்களின் பல்வேறு மேம்பாட்டு அம்சங்களுக்கும் தடையாக உள்ளது. சிங்கள அரசோ, சிங்கள மக்களோ தமிழ் மக்களுக்கும் அவர்கள் மேம்பாட்டிற்கும் தடையாக உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பெரும்பான்மை தமிழர் இன்று வாக்களித்த அவலத்தைக் கொண்டு நாம் இதை நிறுவ முடியும்.
சிங்களப் பேரினவாதம் எனச் சொல்லிச் சொல்லி சிங்கள மக்களுடனும், முஸ்லிம் மக்களுடனும் தமிழ் மக்களை இணைந்து வாழ-பழக விடாமல் தொடர்ச்சியாகவே பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். இதில் அரசியல் வாதிகள், வரட்டுப் புத்திஜீவிகள் எனப் பலர் அடங்குவர். தமிழ் மக்களின் இப்போக்கானது மே 18-2009 க்குப் பின்னரும் நீங்கிடாமல் வேர்கொண்டிருப்பது மிகக் கவலைக்குரிய விடயமாகவே உள்ளது.

இலங்கையில் நடை பெறுகின்ற எந்த ஜனாதிபதித் தேர்தலாக இருந்தாலும் சிறுபான்மை இனமக்கள்தான் தீர்மானிக்கும் சக்திகளாக இருந்து வந்துள்ளார்கள் என்கின்ற நிலைப்பாடு தமிழ் மக்கள் மத்தியில் இறுமாப்பாக இருந்தது. அதைக் கொண்டு நாம் அரசியல் பேரம் பேசலாம் எனும் கருத்தியலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற இனவாதக் கட்சிகளிடம் இருந்தது.ஆனால் தற்போது நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளானது அவ்வாறான எண்ணக் கருத்தியலை முறியடித்து விட்டது.
வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு மற்றும் முஸ்லிம் என பல்வேறு இன மக்களுடனும் நல்லுறவைப் பேணி ஒரு பன்முகத் தன்மை கொண்ட ஒரு தமிழ்த் தலைமை இருந்திருக்குமானால் பல்வேறு சாத்தியப் பாடுகளுக்கான வாய்ப்புகள் இருந்திருக்கும்.மாறாக மிகவும் பிற்போக்கான, பன்முகத்தன்மையற்ற, ஜனநாயகமற்ற, தலைமைகளை நாம் தொடர்ந்தும் பாதுகாத்துவருவோமாயின் தமிழ் மக்கள் எதிர்காலம் கேள்விக் குறியாகவே தெடாரும்.

வரும் காலங்களிலாவது தமிழ் மக்கள் எவ்வாறு சிந்தித்து செயல்படவேண்டும் என்பதை பொறுப்புள்ள தலைமைகள் மக்கள் முன் விவாதித்து உரையாடவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற பிற்போக்கு வாத தலைமைகளை முற்று முழுதாக நிராகரித்தாக வேண்டும். மாறாக எதிர்காலத்தில் முற்போக்கு தன்மைகொண்ட புதிய தலைமுறையினரை உருவாக்கவேண்டியது அவசியமானதும், அவசரமான பணிகளாகவும் உள்ளது.

தேவதாசன்

நன்றி- தூ

No comments:

Post a Comment