புலிகளின் யுத்தத்தால் சீரழிந்து போன வடபகுதி நூலகங்கள் அரசால் புனரமைக்கப்படுகின்றன!
கடந்த 30 வருடங்களாக, புலிகள் தொடக்கி நடாத்திய அநியாய யுத்தத்தால், வடபகுதியில் அழிவுக்குள்ளாக்கப்பட்டிருந்த சுமார் 110 நூலகங்களை சீரமைக்கும் பணியை, ‘வடக்கின் வசந்தம்’ திட்டத்தின் கீழ், தேசிய நூலக மற்றும் ஆவணப்படுத்தும் சேவைகள் சபை ஆரம்பித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் வடபகுதியில் உள்ள நூலகங்களுக்கு, 40 லட்சம் ரூபா பெறுமதியான நூல்களை மேற்குறித்த சபை வழங்கவுள்ளது. அதன் முதற்கட்ட நடவடிக்கைகள் அண்மையில் வவுனியாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. அத்துடன் நூலகத்தில் பணி புரிபவர்களுக்கான பயற்சித் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.இதற்கான நடவடிக்கைகளை, சபையின் பணிப்பாளர் எம்.கே.வீரசிங்க மேற்கொண்டு வருகின்றார்.
வட பகுதித் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில், கல்வி என்பது கடந்த காலங்களில் அவர்களது ஜீவனோபாயத்துக்கான ஒரு பெரும் முதலீடாக இருந்து வந்துள்ளது. இன்றும் அந்த நிலையே நீடிக்கின்றது. அதனால், அதனுடன் இணைந்த நூலகத்துறையும் அவர்களைப் பொறுத்த வரையில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
ஆனால் 1981ல் நடைபெற்ற யாழ்.மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலின்; போது, தமிழ் மக்கள் அப்போதைய ஐ.தே.க அரசுக்கு எதிராக இருந்த காரணத்தால், அவ்வரசின் அமைச்சர்களான காமினி திஸநாயக்க, சிறில் மத்தியூ போன்றோர் தலைமையில் தென்னிலங்கையிலிருந்து கொண்டு வரப்பட்ட ஐ.தே.க காடையர்கள் மூலம், தென்னாசியாவின் பெரும் நூலகங்களில் ஒன்றாகவும், தமிழ் மக்களின் அரும் பெரும் சொத்தாகவும் இருந்த யாழ்ப்பாண பொது நூலகத்தை அன்றைய ஐ.தே.க அரசு எரித்து சாம்பராக்கியது. அதன் காரணமாக அங்கிருந்த சுமார் 1 லட்சம் வரையிலான அரிய பல நூல்கள் அக்கினிக்கு இரையாகின. பின்னர் இந்நூலகம் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தலைமையிலான பொதுசன ஐக்கிய முன்னணி ஆட்சிக்காலத்தில், தென்னிலங்கை மக்களின் நன்கொடைகளினதும், அரச உதவியினதும் பங்களிப்புடன் புனருத்தாரணம் செய்து பொது மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.
புனரமைக்கப்பட்ட நூலகத்தை, அப்போதைய யாழ்.மாநகரசபை முதல்வர் செல்லன் கந்தையன் தலைமையில, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி திறந்து வைக்கவிருந்தார். ஆனால் செல்லன் கந்தையன் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதனாலும், ஆனந்தசங்கரி தங்கள் எதிரி என்பதனாலும், யாழ். வேளாள மேட்டுக்குடி சமூகத்தினரின் பிரதிநிதிகளான புலிகள், அந்நிகழ்வை நடக்கவிடாது, நூலகத் திறப்பைப் பறித்துச் சென்று தடங்கல் ஏற்படுத்தினர். ஐ.தே.க அரசாங்கம் யாழ். நூலகத்தை எரித்து நாசப்படுத்தினார்கள் என்றால், புலிகள் பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கம் சிரமப்பட்டு புனரமைத்த நூலகத்தைத் திறக்கவிடாது இடையூறு விளைவித்தனர்.
புலிகளைப் பொறுத்தவரை, அவர்கள் தமிழ் மக்களின் கல்வியை அழித்ததில், சிங்களப் பேரினவாதிகள் கூட செய்யாத அளவுக்கு, பெரும் நாசங்களை விளைவித்தவர்கள் என்பது இரகசியமான ஒன்றல்ல. பல பாடசாலைகளை அவர்கள் தமது இராணுவ முகாம்களாகப் பயன்படுத்தியதும், பல பாடசாலைப் பிள்ளைகளை பலவந்தமாக தமது இயக்கத்திற்காகப் பிடித்துச் சென்று, இராணுவப் பயிற்சி கொடுத்து, யுத்த முனையில் இரையாக்கியதும் அனைவரும் அறிந்த விடயங்கள்.
அதுமாத்திரமின்றி, தமிழ் மக்களைப் பொறுத்த வரையில், அவர்கள் ஊருக்கு ஒரு நூலகமோ அல்லது வாசிகசாலையோ வைத்திருந்ததுடன், ஒவ்வொருவரும் தமது வீடுகளிலும் தமக்கென சிறிய அளவிலேனும் ஒரு நூலகத்தைக் கொண்டிருந்த பாரம்பரியத்தையும் கொண்டிருந்தவர்கள். அப்படி அவர்கள் வைத்திருந்த நூலகத்தைக் கூட புலிகளின் நடவடிக்கைகளால் அவர்கள் இழக்க வேண்டி வந்ததுதான் வரலாறு. 1995ம் ஆண்டு அக்டோபர் 30ம் திகதி, 2 மணி நேர அவகாசத்தில் வலிகாமம் மக்களை புலிகள் அவர்களது இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றிய போது, அவர்கள் தமது அத்தியாவசியப் பொருட்கள், சொத்துக்களை மட்டுமின்றி, தமது வீடுகளில் சிறுகச் சிறுக சேகரித்து வைத்திருந்த புத்தகச் செல்வங்களையும் இழக்க நேர்ந்தது.
ஆனால் அதேநேரத்தில், புலிகள் எந்த இராணுவத்தை தமிழர்களின் எதிரி என்று வர்ணித்தார்களோ, அதே இராணுவம் கடுமையான யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளைகளிலும் கூட, பல மில்லியன் ரூபா பெறுமதியான நூல்களை யாழ்.நூலகத்துக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. அதுமாத்திரமல்ல, புலிகளால் இலங்கைத் தமிழர்களின் விரோதியாக ஆக்கப்பட்ட, இந்திய மத்திய – தமிழக அரசுகள் கூட பல லட்சம் ரூபா பெறுமதியான நூல்களை யாழ்.நூலகத்துக்கு வருடாவருடம் வழங்கி வந்துள்ளன. அதுமட்டுமா, இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் காலஞ்சென்ற தலைவர் பீட்டர் கெனமன் (அவர் ஒரு பறங்கி இனத்தவர்), தனது வாழ்நாள் முழுவதும் சேகரித்து வைத்திருந்த அரிய பல நூல்களைக் கூட, அவர் காலமான பின்னர், அவரது சிங்கள துணைவியார், புனரமைக்கப்பட்ட யாழ்.பொது நூலகத்துக்தான் அனபளிப்பாக வழங்கினார் என்பதும் இங்கு நினைவு கூரத்தக்கது.
- வி.சின்னத்தம்பி (யாழ்ப்பாணம்)
நன்றி- தேனீ இணையம்
No comments:
Post a Comment