
இந்திய வெளியுறவுச் செயலர் நாளை இலங்கை வருகை
இலங்கையின் முன்னாள் இந்திய தூதுவரும், தற்போதைய இந்தியாவின் வெளியுறவுச் செயலாளருமான நிருபமா ராவ் இரண்டு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை சனிக்கிழமை கொழும்பு வருகின்றார்.
இந்தியாவின் வெளியுறவுச் செயலர் பதவியை ஏற்றபின்னர் அவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவாகும்.
பொதுத் தேர்தல் காலத்தில் அவரின் விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றை, அதிகாரப் பரவலாக்கல் யோசனைத் திட்டம் ஒன்றை முன்வைக்குமாறு கொழும்புக்கு புதுடில்லி அழுத்தம் கொடுத்து வருகையில், இந்தியத் தூதுவரின் கொழும்பு வருகை இடம்பெறுகின்றமை முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.
இந்திய வெளிவிவகாரச் செயலரின் வருகை வழமையான இரு தரப்பு பரஸ்பர நலன் நோக்கிய உறவாடல் தொடர்பானதே என அதிகாரிகள் மட்டத்தில் கூறப்பட்டது.
எனினும், இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் தீர்க்கமான சில கொள்கை முடிவுகள் குறித்து, பொதுத் தேர்தலுக்கு முன்னர் அரசு கோடிகாட்ட வேண்டும் எனப் புதுடில்லி கருதுகிறது. புதுடில்லியின் இந்த நிலைப்பாட்டை நிருபமா ராவ் தனது விஜயத்தின் போது இங்குள்ள அதிகார வர்க்கத்திடம் அழுத்தம், திருத்தமாகத் தெரியப்படுத்துவார் என இந்தியத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment