18 April 2010

தேர்தல் முடிவு சொல்கிறது…… வாழவும் மாட்டேன், வாழவும் விடமாட்டேன்

நடந்து முடிந்த தேர்தல் பலபேருக்கு பாடம், சிலபேருக்கு லாபம் மொத்தத்தில் மீண்டும் தமிழ் மக்களால் நடத்தி முடிக்கபட்ட ஒரு அவசரக்கோலம். மக்கள் தங்களுக்கு எது வேண்டும் என்பதை விட யாரை பழி தீர்க்க வேண்டுமென்பதில் வாக்குகளை சிதறடித்திருக்கிறாhர்கள். யாரை நம்பி தொலைப்பது என்ற ஆதங்கமா? அல்லது எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்ற விரக்தியா? அல்லது ஏ9 திறந்தாச்சு, எல்லா பொருட்களும் தாராளமாக கிடைக்கிது, வெளிநாட்டு காசில ஆட்டோவில் போய் மீன் இறைச்சி வாங்கி வந்து சாப்பிட்டு நிம்மதியா தூங்கிட்டா போதும் என்பதில் உள்ள திருப்தியா? என்ன காரணத்திற்க்காகவோ எண்பது வீத மக்கள் மௌனித்திருக்க குறுகிய கால நலனில் குறைந்த பட்ச சலுகைக்காக இன்னொரு வீத மக்கள் திருப்திப்பட்டுக்கொள்ள தன் இரண்டு கண்ணை இழந்தாவது எதிரியின் ஒரு கண்ணை குருடாக்கிய சந்தோஷத்துக்காக மிச்ச வீதங்கள் தங்கள் வரலாற்று கடமையை செய்து முடித்திருக்க தேர்தல் இனிதாய் நடந்தேறியது. வாக்களித்த மக்களும் சரி, வாக்களிக்காத மக்களும் சரி எவருமே தங்கள் வருங்காலத்தை பற்றி சிந்தித்தாய் தெரியவில்லை. வாக்களிக்காத மக்கள் ஒரு மாபெரும் தவறை தங்களுக்கு மட்டுமல்ல தங்கள் எதிர்கால சந்ததியினருக்கும் சேர்த்து செய்திருக்கிறார்கள். என்ன செய்வது அவர்கள் உள்ளக்கிடக்கையில் உள்ளது கோபமா? விரக்தியா? பயமா? சுயநலமா? அல்லது அலட்சியமா? எதுவென்று புரிந்து கொள்ள முடியாத வரைக்கும் அவர்களை விட்டுவிடுவதை தவிர வேறு என்ன செய்யமுடியும். இது மற்றவர்கள், பகட்டுக்கு பட்டாபிஷேகம் செய்தவர்கள்;. அதாவது ஈழமக்கள் ஜனநாயக முன்னணியின் கூட்டமைப்புக்கு வாக்களித்தவர்கள் இந்த கட்சியின் கொள்கையை பொறுத்தவரை வன்னியில் வேட்டு யாழில் கூட்டு அல்லது வன்னியில் தனித்(வீணை)தவில் யாழில் பச்சைக்(செடி)கொடி மொத்தத்தில் அமைச்சர் பதவியே நாடித்துடிப்பு. இடைக்கிடை தமிழ் மக்களுக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று அரசாங்கத்தின் அனுமதியுடன் சொல்லிக்கொள்வார்கள். மக்களும் அதை பெரிதாக எடுப்பதில்லை என்று இவர்களுக்கும் தெரியும். தமிழ் மக்களின் நிரந்தர தீர்வுக்கு இவர்கள் ஒரு தீர்வாக இருப்பார்கள் எனறு இவர்களை தேர்ந்தெடுத்த மக்களும் நினைத்திருக்கமாட்டார்கள் என்பதும் தெரியும். அப்படித்தான் அவர்கள் நினைத்திருந்தாலும் இவர்களால்தான் என்ன செய்யமுடியும்? அமைச்சர் பதவியை துறந்து விட்டு மகிந்தா! இதை நீ கட்டாயம் தந்துதான் ஆகவேண்டுமென்று அடம்பிடிப்பார்களா? ஆகக்கூடிய காரியமா இது? ஆனாலும் இவர்களை ஒரு விடயத்திற்க்காக போற்றலாம் அதாவது மகிந்தாவே ஏதாவது பரிதாபப்பட்டு தமிழ் மக்களுக்கு இதைத்தருகிறேன் என்று சொன்னால் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் போல சுயநலம் கருதி மறுக்கமாட்டார்கள். இது மற்றையது, ஒற்றையாய் அழைப்பதற்கு மன்னிக்கவும் மந்தைகளை மனிதர்கள் தேர்ந்தெடுப்பார்களா? என்ற சந்தேகத்தில் விளைந்தது. தமிழ் தேசியம் என்ற கூட்டமைப்பு, பல கட்சிகளிலிருந்த கொடூர குணம் படைத்தவர்களின் ஒன்றிணைந்த குழு. பிணக்குவியலை காரணம் காட்டி பணக்குவியலை சேர்த்துக்கொண்டவர்கள், மக்களின் அழுகுரலே இவர்களின் ஆதாயமான ஆதாரம், மக்கள் சொந்த வீடுகளை இழந்து தெரு வீதிக்கு வந்ததை கூக்குரலிட்டு சொல்லி தங்களுக்கு சில வீடுகளை சொந்தமாக்கி கொண்டவர்கள். மாறி மாறி வந்த சிங்கள அரசுகளால் தமிழ் பேசும் மக்களுக்கு அந்தந்த நேரத்தில் ஏதாவது கொடுக்க நினைத்திருந்தால் அதை புலிகள் சார்பாக தடுத்து நிறுத்திய சேவர்கள் மொத்தத்தில் புலிகளின் பினாமியாய் இருந்து தமிழ் பேசும் மக்களுக்கு சுனாமியாய் அழிவை தந்தவர்கள் இத்தனை செய்தும் இவர்கள் தான் எங்களுக்கு வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்பவர்களை ஒற்றையாய் அழைப்பதில் சத்தியமாய் தவறில்லை. இவர்களுக்கு வாக்களித்தவர்கள் பெலும்பாலும் புலி விசுவாசிகள் அவர்களை பொறுத்தவரை புலிகளை அழித்தவர்களையையும், புலிகளை எதிர்த்தவர்களையையும் இதன் மூலம் பழி வாங்கி முடித்த ஒரு சின்ன சந்தோசம். தாங்கள் இதுவரை காலம்வரை பட்ட துன்பங்களுக்கோ அல்லது அழிவுகளுக்கோ ஒரு முடிவாக அல்லது எதிர்கால அமைதியான, கௌரவமான ஒரு வாழ்வுக்கு தீர்வாகவோ இந்த தேர்தலை பயன்படுத்தவில்லை. இவர்களுக்கு வாக்களித்தன் மூலம் புலிகளை கௌரவப்படுத்தியதாக நினைத்துக்கொண்டு நிம்மதியடைந்ததோடு சரி. இவர்கள் வெகுவிரைவில் தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்வார்கள் என்பது நிச்சயம். புலிகளை எதிர்த்து வந்தவர்கள் மனித நேயம் காரணமாகத்தான் அவர்களுடன் முரண்பட்டுக்கொண்டார்கள், புலிகளின் கொலை அச்சுறுத்தலுக்கும் மத்தியில் தாங்கள் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து வருகிறார்கள். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரே கொள்கையையும் இலட்சியமும் பதவி மூலம் கிடைக்கும் பணம் அதற்காக அவர்கள் எதையும் விட்டுக்கொடுப்பார்கள் இதற்க்காகவே அன்று புலிகளிடம் கற்பை இழந்தவர்கள் நாளை சிங்கங்களிடம் சோரம் போவார்கள் என்பதே எதார்த்தம். இல்லவே இல்லை இவர்களால்தான் எங்கள் நீண்ட கால பிரச்சனைக்கு தீர்வை பெற்றுத்தரமுடியும் என்ற காரணத்தினால்தான் வாக்களித்தோம் என்று நீங்கள் கூற விரும்பினால் அது எத்தகைய தீர்வாக இருக்கமுடியும். புலிகளால் சொல்லப்பட்ட தமிழீழமா? சுயாட்சியா? மாகாணசபையா? மாவட்டசபையா? அல்லது மண்ணாங்கட்டியா? புலிகள் சார்பாக நீங்கள் இவர்களுக்கு வாக்களித்திருந்தால் புலிகளால் சொல்லப்பட்ட தமிழீழத்தை இவர்களால் பெற்றுத்தரமுடியும் என்று நம்புகின்றீர்களா? அது முடியாது என்று புலிகள் ஓரளவுக்கு பலமாக இருந்த போதே அவர்களுக்கு தெரியும். அது தெரிநதிருந்தும் புலிகள் உயிருக்கு மன்றாடிக்கொண்டிருந்த அந்த கடைசி நிமிடத்திலாவது இதை அவர்களிடம் சொல்லி சரணடையவைத்திருந்தால் இன்று சில ஆயிரக்கணக்கான புலிகளினது உயிரும், பொதுமக்களது உயிரும் காப்பாற்றப்பட்டிருப்பதோடு வெளிநாடுகளின் நெருக்குதலோடு; ஒரு தீர்வும் சாத்தியப்பட்டிருக்கும். ஆனால் இவர்கள் அதை செய்யவில்லை ஏனெனின் புலிகளின் அழிவை உண்மையிலேயே விரும்பியவர்கள் இவர்களே. சரி பழையதையை விட்டு விடுவோம் இன்று சுயாட்சியா, மாகாணசபையா, அல்லது பதின்மூன்றாவது திருத்தசட்டத்திற்கு மேலேயோ, கீழேயோ எதை பெறவேண்டுமானாலும் இவர்களுக்கு பக்கபலமாக இருக்கவேண்டியது பக்க நாடான இந்தியாவே! அதனுடனான உறுவுகளை புலிகளுக்காக பலநேரங்களில் சீரழித்தவர்கள் மறுபடியும் அதை சீராக்க முயற்சிப்பார்களா? புலிகளால் வெறுக்கபட்டதும், புலிகளை வெறுத்ததுமான இந்தியாவின் உதவியை புலிகளின் விசுவாசிகளின் வாக்ககளால் தெரிவு செய்யப்பட்ட இவர்கள் மனப்ப+ர்வமாக விரும்புவார்களா? தமிழ் பேசும் மக்களது பிரச்சனைக்கு உண்மையிலேயே ஒரு நிரந்தர தீர்வை விரும்பி நிற்பவர்கள் வருங்காலங்களில் இதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். எதையோ நம்பி இவர்களை தேர்ந்தெடுத்தவர்கள் உங்கள் பொறுப்பு இங்கே இத்துடன் முடியவில்லை தனிநாடு சாத்தியப்படாது என்பதை மனதில் கொண்டு சுயாட்சியோ மாகாணசபையோ அல்லது பதின்மூன்றாவது திருத்த சட்டத்திற்க்கு அப்பாலோ, இப்பாலோ இந்த பதினான்கு திருந்தாத ஜென்மங்களை அழைத்து செல்ல வேண்டிய கடமையை செய்து உங்களை புனிதமாக்கி கொள்ளுங்கள்.மெழுகுவர்த்தி உருகினால்தான் வெளிச்சம் தரமுடியும், நங்கூரம் தாழ்ந்தால்தான் கப்பலை நிலை நிறுத்தமுடியும். உங்களை ஊக்குவித்தவர்கள் எண்ணிக்கையில் சிறியவாகளாக இருந்தாலும் எண்ணங்களில் பெரியவர்கள். பகட்டும் பழி வாங்கலும் இன்று மேலோங்கி நிற்கலாம் ஆனால் உங்கள் தியாயங்கள் வீண்போகாது அதன் சக்திதான் மக்களின் மகிழ்ச்சியான வாழ்வுக்கான உந்துதல் துவண்டு விடாத உங்கள் மனமே மக்களின் கௌரவமான வாழ்வுக்கான உத்தரவாதம். உங்கள் வழிகளிலேயே தொடர்ந்து செல்லுங்கள் அங்கே தான் இறுதி வெற்றி காத்திருக்கிறது.

-மோகன்-

நன்றி- சூத்திரம்

No comments:

Post a Comment